மற்ற எபிசோடுகள்
Published:Updated:

 கைகொடுக்கும் கிராஃப்ட்! - 9

பூந்தொட்டி பரவசம்!வே.கிருஷ்ணவேணி, படங்கள்: எம்.உசேன்

''பி.காம் வரை படிச்சிருந்தாலும்... சின்ன வயசுல இருந்தே ஆர்ட் மேல எனக்கு இருந்த ஆர்வம், வேற எந்த வேலைக்கும் என்னைப் போகவிடல. மூணு வருஷத்துக்கு முன்ன இந்த 'எக்ஸ்க்ளமேஷன் ஆர்ட் அண்ட் கிராஃப்ட்’ ஷோரூமை ஆரம்பிச்சேன். மனநிறைவும், வருமானமும் குறைவில்லாம கிடைக்கிறதால, இதிலேயே செட்டில் ஆயிட்டேன். கைவேலைப்பாடுகள் பயிற்சியும் எடுக்கிறேன். இதுவரைக்கும் கிட்டத்தட்ட 75 பேருக்கு வகுப்புகள் எடுத்திருக்கேன். இப்போ அவள் விகடன் மூலமா, ஆயிரக்கணக்கான தோழிகளுக்கு இந்த அழகான ஃபிளவர் பாட் செய்யக் கற்றுக்கொடுக்கப் போறேன்!''

 கைகொடுக்கும் கிராஃப்ட்! - 9

 தொய்வில்லாத தன் உற்சாகப் பேச்சுடன் செய்முறை விளக்கத்தில் குதித்தார், சென்னை, மயிலாப்பூர், அம்பிகா ராமச்சந்திரன்!  

தேவையான பொருட்கள்:

மண்ணால் ஆன ஃபிளவர் பாட் (வெள்ளை நிற பெயின்ட் அடித்த பாட் ரெடிமேடாகவும் கிடைக்கிறது. தேவைப்படும் நிறங்களில் வண்ணம் பூசிக்கொள்ளலாம்) - 1, கலர் மண் (ஃபேன்ஸி ஸ்டோர்களில் கிடைக்கும்)  விருப்பமான நிறங்களில், 3டி அவுட் லைனர், ஃபெவி கம், பென்சில், வொயிட் ஸ்டோன்ஸ், க்ளிட்டர் (விரும்பினால்).

செய்முறை:

படம் 1: முதலில் ஃபிளவர் பாட் மீது சுத்தமான, மிருதுவான துணியை வைத்து நன்கு துடையுங்கள். பிறகு, விருப்பமான டிசைன்களை பென்சிலால் வரையுங்கள்.

படம் 2: பென்சில் டிசைன்களுக்கு உள்ளே ஃபெவி கம் தடவவும்.

படம் 3: கம் தடவிய இடத்தில் விருப்பமான கலர் மண்ணைத் தூவி, நன்றாகப் பரப்பிவிடவும்.

படம் 4: இதேபோல எல்லா டிசைன்களிலும் கலர் மண் தூவிக்கொள்ளவும்.

படம் 5: 'பாட்’டின் கழுத்துப் பகுதியிலும் கலர் மண்ணை தூவவும்.

படம் 6: பாட் முழுவதும் கலர் மண் டெகரேஷன் முடிந்ததும், பென்சிலில் வரைந்த டிசைன்களில் 3டி அவுட்லைனர் கொடுக்கவும்.

படம் 7: 3டி அவுட்லைனர் சேரும் இடங்களிலும், விருப்பமான மற்ற இடங்களிலும் வொயிட் ஸ்டோன்களை ஃபெவி கம் கொண்டு ஒட்டவும். மினுமினுப்பு லுக் தர, கலர் க்ளிட்டரை மேலே தூவலாம்.

 கைகொடுக்கும் கிராஃப்ட்! - 9

இறுதியாக, பாட் மேல் ஒரு செயற்கை பூ மற்றும் சிறிது இலைகளை வைத்துவிடலாம்.

டிசைனை முடித்த அம்பிகா, எப்படி இருக்கிறது அலங்கரிக்கப்பட்ட இந்த மண் பூந்தொட்டி! இன்னும் இதில் பல வண்ண பெயின்ட், இலை, பூ வடிவங்கள்னு வரைந்து கற்பனைக்கு ஏற்ப அழகாக்கலாம். ஆரம்பத்துல உறவினர்கள், தோழிகள், நண்பர்களுக்கு இந்த பூந்தொட்டியைப் பரிசா கொடுத்து பாராட்டுகளைக் குவிச்ச பிறகு, அந்த ஊக்கத்தில் இதை விற்பனைக்கும் செய்து கொடுக்கலாம். விலையை... உங்களோட வேலைப்பாட்டைப் பொறுத்து 300 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை விலை நிர்ணயிக்கலாம்!'' என்று தட்டிக் கொடுத்தார்.

கிராஃப்ட் கிளாஸ் தொடரும்...