மற்ற எபிசோடுகள்
Published:Updated:

என் டைரி- 346

பாதை மாறிய மகன்... பதறித் தவிக்கும் தாய்!

வமிருந்து பெற்ற மகன் என்பதால், ஊரே மெச்சும் அளவுக்குப் பெரிய பள்ளிக்கூடத்தில் சேர்த்துப் படிக்க வைக்கிறோம். வீட்டில் தனி அறை, லேப்டாப், இன்டர்நெட் கனெக்‌ஷன் என எல்லா வசதிகளையும் அவனுக்காக பார்த்துப் பார்த்து செய்து கொடுத்திருக்கிறோம்.

என் டைரி- 346

எங்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வது போல 7-ம் வகுப்பு வரை படிப்பில் படுசுட்டியாக இருந்தவன், 8-ம் வகுப்பு வந்த பிறகு மந்தமாக ஆரம்பித்துவிட்டான். மாலையில் தினமும் ஒரு மணி நேரமாவது விளையாடிக் கொண்டிருந்தவன், தற்போது விளையாடுவதற்காகக்கூட வெளியில் செல்லாமல், தன் அறையே கதி என கிடக்கிறான். காரணம் கேட்கும்போதெல்லாம் ’ஹோம்வொர்க் அதிகமா இருக்கு... ஸ்டடி பண்றேன் மம்மி’ எனச் சொல்லி, லேப்டாப் முன்பாகவே தவம் கிடக்க ஆரம்பித்துவிட்டான்.

’சின்ன வயது... வளர வளர மாறிவிடுவான்' என்ற நம்பிக்கையிலும், அதிகபட்ச அக்கறை எடுத்துக்கொள்வதாகவும் நினைத்து, அவனைத் தொந்தரவு செய்யாமல், பொறுத்தே இருந்தேன். ’விஷயம் எல்லைமீறிப் போகிறதோ...' என்று தோன்றினாலும், ’ச்சே சே... நம் மகன் அப்படி எதுவும் தப்பான வழிக்குப் போய்விட மாட்டான்' என்று தேற்றிக்கொண்டேன். ஆனால், ஒரு நாள் எதேச்சையாக அவனுடைய அறையில் நுழைந்தபோது நான் கண்ட காட்சிகள் என்னை அதிரவைத்தன.

’புராஜெக்ட் ரெடி பண்றேன்... டாக்கு மென்டரி ரெடி பண்றேன்' என்றெல்லாம் பொய் சொல்லி, இத்தனை நாட்களாக பார்க்க கூடாத வெப்சைட்டுகளைப் பார்த்து மனதை கெடுத்துக்கொண்டிருப்பது அப்போதுதான் தெரிந்தது. அதிர்ச்சியைத் தாங்க முடியாமல் கைநீட்டி அடித்தே விட்டேன். மீளாத துயரத்தில் அன்று முழுக்க அவனிடம் பேசாமல் அழுதுகொண்டிருந்தேன். இதைப் பார்த்தாவது திருந்துவான் என நினைத்தால், என் நம்பிக்கைதான் பொய்த்தது. மீண்டும் அதேமாதிரியான வெப்சைட்டுகளை தொடர்ந்து பார்த்துக்கொண்டிருந்ததால், நெட் கனெக்‌ஷனை துண்டித்துவிட்டேன்.

பிரச்னை இதோடு முடியவில்லை. தொடர்ந்து தனிமையிலேயே இருக்க ஆரம்பித்தவன், வீட்டிலிருக்கும் யாரிடமும் பேசாமல், முரட்டுத்தனமாக வேறு நடந்து கொள்கிறான். மனநல மருத்துவரிடம் அழைத்துப் போகலாம் என கணவரிடம் கூறியதை எப்படியோ தெரிந்துகொண்டவன், எங்கு அழைத்தாலும் வரமறுத்து அடம் பிடிக்கிறான். அவரோ, ’பிள்ளையை எந்த லட்சணத்துல வளர்த்திருக்கே’ என என்னை கடிந்துகொள்வதோடு, தன் வேலையில் கவனமாகிவிடுகிறார்.

இப்படியே போனால், அவனுடைய எதிர்காலம் என்னவாகுமோ என நினைத்து துடிக்கிறேன். அவனை மாற்றுவதற்கு வழி காட்டுங்கள் தோழிகளே!

- பெயர் வெளியிட விரும்பாத வாசகி

சிநேகிதிக்கு... சிநேகிதிக்கு...

என் டைரி  345-ன் சுருக்கம்

”கல்லூரியில் படிக்கும்போது, கல்ச்சுரல்ஸ் போன்ற நிகழ்ச்சிகளுக்கு செல்லுமிடங்களில் அறிமுகமாகும் நண்பர்கள், முகநூல் நண்பர்களானார்கள். இப்படி அறிமுகமான ஒருவன், என்னைக் காதலிப்பதாக சொல்ல,  'நண்பர்களாகவே தொடர்வோமே...’ என்றேன். அதன்படி நல்ல தோழனாகவே பழகினான். ஆனால், உள்ளுக்குள்ளேயே வஞ்சமாகவே இருந்தவன், எனக்குத் திருமண ஏற்பாடு நடந்த நிலையில், என்னுடைய முகநூல் பக்கத்தில் நான் பதிவேற்றியிருந்த படங்களை மார்ஃபிங் செய்து, தன்னுடன் இருப்பது போல மாற்றி, முகநூல் நண்பர்களுக்கும், எனக்கு நிச்சயமான மாப்பிள்ளைக்கும் அனுப்பிவிட்டான்.

என் டைரி- 346

'அது மார்ஃபிங் செய்யப்பட்டது' என்று எவ்வளவோ எடுத்துச் சொன்னபோதும், 'அது பொய்யானதாகவே இருந்தாலும்... எங்க சொந்தபந்தம் ஒவ்வொருத்தர்கிட்டயும் போய் இதைச் சொல்லிட்டா இருக்க முடியும்?' என்று சொல்லி கல்யாணத்தை நிறுத்திவிட்டனர். அந்தக் கயவனோ... 'உன் மேல் இருந்த காதலால் அப்படி செய்தேன். என்னை கல்யாணம் பண்ணிக்கோ...’ என்கிறான். அவன் மீது நடவடிக்கை எடுத்தால், சிக்கலாகிவிடுமோ என்று பயமாக இருக்கிறது. என்ன செய்வதென தெரியாமல் தவிக்கிறேன். தெளிவுகொடுங்கள் தோழிகளே!''

வாசகிகள் ரியாக்‌ஷன்

ஒவ்வொன்றுக்கும் பரிசு:

என் டைரி- 346

 100

மணமகன் அமைவான்!

இதுபோன்ற தயக்கமும், பயமும்தான் ஆண்களை சுலபமாக குற்றம் செய்ய வைக்கிறது. அச்சம் தவிர்த்து அவன் மேல் ஆதாரபூர்வமாக புகார் செய். இன்றைய விஞ்ஞான யுகத்தில் மார்ஃபிங், சூப்பர் இம்போஸ் என புகைப்படங்களில் விளையாட முடியும் என்பதால் இதை புரிந்து கொள்ளும் மணமகனும் உனக்கு அமைவான். புரொஸீட்!

- பி.ஹிமயா, திருச்சி

சட்டத்தை துணைக்கழையுங்கள்!

முகநூல் தொடர்பில் நன்மைகள் இருந்தாலும், தீமைகளும் உண்டென்பதற்கு தங்களது நிகழ்வும் ஒரு உதாரணம். தாங்களே குறிப்பிட்டதுபோல் இப்படியெல்லாம் நடக்கும் என்பதை எதிர்பார்க்கவில்லை. நடந்தது நடந்தவையாக இருக்கட்டும். தங்களுக்கு நிகழ்ந்ததை வெளிப்படையாகக் கூறி, இதற்கு உட்பட்டு சந்தேகம் கொள்ளாமல் மணக்க விரும்பும் ஒருவரை திருமணம் செய்யலாம். குற்றம்புரிந்தவனை சட்ட உதவியோடு அணுகுங்கள். அப்போதுதான் இது மற்றவர்களுக்கும் பாடமாக இருக்கும்.

- த.சாந்தி, திருவாரூர்

காலம் மாறும்... காத்திரு!

உன்னுடைய வினோத விளையாட்டு வினையாகி விட்டதே என்று கவலைப்படாதே. அந்தக் கயவனையும் மணக்காதே. நிச்சயம் செய்துவிட்டு மறுதலிக்கும் மாப்பிள்ளையும் உனக்கு ஏற்றவனல்ல. ஆண்டவரின் திட்டமே நிறைவேறும். நல்லதொரு மாப்பிள்ளை கிடைக்கும்வரை காத்திரு. காலம் மாறும்!

- கெசியா, கிராப்பட்டி