ஓவியங்கள்: சேகர்
ஒவ்வொன்றுக்கும் பரிசு:

200
ஏழைகள் வயிற்றில் அடிக்காதீர்!

புகழ்பெற்ற ஒரு கோயிலுக்கு, குடும்பத்துடன் சமீபத்தில் சென்றிருந்தோம். சாமியை தரிசித்து வெளியே வரும்போது பக்தர்கள் பலர் ஓரிடத்தை நோக்கி வேகமாகச் சென்றனர். அன்னதான திட்டத்துக்கான டோக்கன் வாங்கச் செல்கிறார்கள் என்பதும், ஒரு நாளைக்கு 50 பேருக்கு மட்டுமே டோக்கன் வழங்கப்படும் என்பதால்தான் அப்படி ஓடுகிறார்கள் என்பதும் தெரியவந்தது. தமிழக அரசின் அன்னதானத் திட்டம் ஏழைகளுக்காக ஆரம்பிக்கப்பட்டது. ஆனால், பெரும்பாலும் பணக்கார, நடுத்தரக் குடும்பத்து பக்தர்களே அன்று டோக்கனை வாங்கினர். இதனால் பசியால் வாடும் ஏழைகளுக்கு உணவு கிடைக்காத நிலை ஏற்பட்டது.
புனிதமான இடத்திலாவது கொஞ்சம் ஈவு இரக்கத்துடன் நடந்துகொள்ளுங்களேன்... ப்ளீஸ்!
- எஸ்.சுப்பு, புதுக்கோட்டை
சுட்டிகளைப் படிக்கவைக்க வேண்டுமா?

என்னுடைய பேரன் யு.கே.ஜி. படிக்கிறான். தினமும் அந்த சுட்டிக்குப் பாடம் சொல்லித் தருவது மிகவும் கஷ்டமாக இருந்தது. இந்த நிலையில் என்னுடைய தோழியின் வீட்டுக்குச் சென்றிருந்தபோது, யு.கே.ஜி படிக்கும் தன் பேரன் நன்றாகப் படிப்பதாகவும், அவனுக்கு பாடம் சொல்லிக் கொடுக்க சூப்பர் ஐடியாவை தான் பின்பற்றுவதாகவும் தோழி கூறியதைக்கேட்டு வியந்து போனேன். ''அவனுக்கு முன்னால் ஒரு டேப்ரிக்கார்டரை வைத்து, அவன் படித்த பாடம் மற்றும் 'ரைம்ஸ்’களை சொல்ல வைத்து ரெக்கார்டு பண்ணி, அதை போட்டுக் காண்பிக்கும்போது தன்னுடைய குரலைக் கேட்டு ரசிப்பதால்... மீண்டும், மீண்டும் போட்டு கேட்கிறான். இதனால் பாடங்கள் மற்றும் 'ரைம்ஸ்கள்’ நன்றாக அவன் மனதில் பதிகின்றன. தினமும் மாலையில் பள்ளி விட்டு வந்தவுடன் அன்றைக்கு நடந்த பாடங்களைச் சொல்லி, டேப்பில் பதிவு செய்யுமாறு அவனே வற்புறுத்துகிறான்'' என்றாள் தோழி.
நானும் இந்த வழியைப் பின்பற்றினேன். என்ன ஆச்சர்யம்... என் பேரனும் இப்போது படிப்பில் மிகுந்த ஆர்வம் காட்டுகிறான். நீங்களும் முயற்சிக்கலாமே?
- ஆர்.பஞ்சவர்ணம், போளூர்
ஆன்லைனில் டிக்கெட் எடுப்பவரா நீங்கள்..?
சேலத்திலிருந்து சென்னைக்கு செல்வதற்காக எக்ஸ்பிரஸ் ரயிலில் ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்திருந்தேன். வெயிட்டிங் லிஸ்ட் 90 ஆக இருந்தது. 'ரயிலில் பயணம் செய்யும்போது டிக்கெட் பரிசோதகர் ஏதாவது ஒரு பெர்த் கொடுக்காமலா போயிடுவார்...’ என்ற அசட்டுத் தைரியத்தில் முன்பதிவு செய்துவிட்டேன்.

குறிப்பிட்ட அந்த நாளில் நான் பயணம் செய்யும்போது ஒரு ரிசர்வேஷன் கம்பார்ட்மென்ட்டில் ஏறி, டிக்கெட் பரிசோதகரிடம் என் ஆன்லைன் டிக்கெட்டைக் காண்பித்து எனக்கு ஒரு பெர்த் ஒதுக்குமாறு கேட்டேன். டிக்கெட்டை வாங்கிப் பார்த்த அவர், ''முதல்ல 700 ரூபாய் ஃபைனை எடுங்க. ஏன்னா, நீங்க பயணம் செஞ்சுட்டு இருக்கிறதே வித் அவுட் டிக்கெட்லதான்!'' என்றார். எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. பின்பு அவரே விளக்கினார். ”ஆன்லைன் டிக்கெட் வெயிட்டிங் லிஸ்ட்ல இருந்ததால், சார்ட் தயாராகும்போது டிக்கெட் கேன்சலாகி, உங்கள் டிக்கெட் தொகையும் உங்கள் பேங்க் அக்கவுன்ட்டில் ஆட்டோமேடிக்காக கிரெடிட் ஆகிவிடும். அதனால இந்த டிக்கெட் மதிப்பற்றதாக ஆகிவிடுகிறது'' என்றார்.
இனிமேல் ஆன்லைன் டிக்கெட் புக்கிங் பண்ணினால் உஷாரா இருங்க தோழிகளே!
- ஆர்.பத்மப்ரியா, சேலம்