மற்ற எபிசோடுகள்
Published:Updated:

பிரியமான உமா!

ரிமோட் ரீட்டா

ன் டி.வியில் வீசிட்டிருந்த விகடன் டெலிவிஸ்டாஸின் 'தென்றல்’ முடிஞ்சதும், வாசகிகள்கிட்ட இருந்து, 'அட, முடிச்சுட்டாங்களே!’னு ஒரே வருத்தக் கடிதங்கள்!

பிரியமான உமா!

''அடுத்துதான், சினிமா தரத்துல, பிரமாதமா வலம் வர ஆரம்பிச்சுட்டா உங்க பிரியமானவள்!''னு சொன்னதும், ''அவதான் இப்போ எங்க டார்லிங் ரீட்டா. அந்த 'உமா’வை கொஞ்சம் பார்த்துச் சொல்லேன்!''னு சிலர் வேண்டுகோளும், சிலர் கட்டளையும் போட... ரீட்டாவோட வண்டி நின்றது, பிரவீணா முன்னாடி! இதாம்ப்பா உமாவோட நெஜப்பேரு!

'வெல்கம் டு தமிழ் சின்னத்திரை பிரவீணா மேம்!'

'ஹலோ ரீட்டா, எப்படி இருக்கி?'

'இருக்கி...யா? ஓ... தமிழ் கொஞ்சம் பிரச்னையோ?'

'ஆமா ரீட்டா! இப்பதான் கொஞ்சம் கொஞ்சமா கத்துக்கறேன். ஆனா, நல்லா புரியும். அதனால நீ தமிழ்லயே பேசு!'

'நான் என்ன பேசப்போறேன்... நீங்க பேசறதைக் கேட்டுட்டு வரச்சொல்லித்தான் நம்ம ரசிகப் பெருமக்கள் அனுப்பியிருக்காங்க!''

'சொந்த ஊரு கேரளா. மலையாளம்  ஃபீல்டுல குழந்தை நட்சத்திரமா கேரியரை ஆரம்பிச்சேன். பிறகு மலையாளப் படங்கள்ல லீட் ரோல்ல நடிக்க ஆரம்பிச்சேன். 'அக்னி சாக்‌ஷி’, 'ஒரு பெண்ணும் ரெண்டாணும்’ படங்களுக்கு, கேரளா ஸ்டேட் ஃபிலிம் அவார்ட் வாங்கியிருக்கேன்!'

'சூப்பர்! அப்புறம் நீங்க நல்லா பாடுவீங்க, டான்ஸ் பண்ணுவீங்க, லீடிங் டப்பிங் ஆர்ட்டிஸ்ட்னு நிறையக் கேள்விப்பட்டேனே!'

பிரியமான உமா!

'ரீட்டா... ஓவர் பில்ட் அப் எல்லாம் கொடுத்துடாதம்மா! கர்னாடிக் மியூஸிக், டான்ஸ் கத்துக்கிட்டிருக்கேன். அவ்ளோதான். மலையாளத்துல நிறைய ஹீரோயின்களுக்கு நான் டப்பிங் பேசுவேன். அதுக்கு அவார்ட் எல்லாம்கூட வாங்கியிருக்கேன். மலையாள சீரியல்களிலும் நடிக்க ஆரம்பிச்சேன். அப்புறம் கல்யாணமாகிடுச்சு. கணவருக்கு துபாய்ல வேலை. ஸோ, ஃபிளைட் ஏறி துபாய் வாசம். ஒரு பெண் குழந்தை. ஹேப்பி லைஃப். வேற என்ன ரீட்டா?'

'அப்போ நான் கொடுத்தது எல்லாம் பில்ட் அப் இல்ல, உண்மைதான். சரி, தமிழ் சேனல் ஏரியாவுக்கு எப்படி?!'

'ரொம்ப நாளா தமிழ் சின்னத்திரை லீடிங் கம்பெனிகள்ல இருந்து நிறைய ஆஃபர்ஸ். நடிகை சுகுமாரி மேடம்கூட, 'தமிழ்ல நடிக்குறது கம்ஃபர்டபிளா இருக்கும்’னு சொல்லுவாங்க. மொழி தெரியாதுங்கிறதால தவிர்த்துட்டே இருந்தேன். ஒருநாள் 'பிரியமானவள்’ டைரக்டர் பாலபிரசாத் சார், எனக்கு கதை சொன்னார். ரொம்பப் பிடிச்சிருந்தது. இதுவரைக்கும் நான் பண்ணாத, நடிக்கறதுக்கு நிறைய ஸ்கோப் உள்ள கேரக்டர். சந்தோஷமா வந்துட்டேன்.

ஆனா, என் நண்பர்கள், உறவினர்கள் எல்லோரும், '30 ப்ளஸ் வயசுல இருந்துட்டு, கல்யாண வயசுல இருக்குற நாலு பசங்களுக்கு அம்மாவா நடிக்கிறியே?’னு திட்றாங்க. 'என்னைத் தமிழகமே கொண்டாடப் போகுது... அப்புறம் பாருங்க!’னு சொல்லியிருக்கேன். ஏன்னா, 'உமா’ கேரக்டர் அந்தளவுக்கு சென்ஸிபிளானது. நீயும் குறிச்சுக்கோ ரீட்டா... எல்லோருக்கும் 'உமா’வை ரொம்பப் பிடிக்கும்!'

இப்பவே பிடிச்சிருச்சு போங்க!

'பிரவீணாவை ஞாபகப்படுத்தாதீங்க!’

'பிரியமானவள்’ டைரக்டர் பாலபிரசாத், பேச்சிலேயே அவ்ளோ சிநேகம் சேர்க்கிறார்.

பிரியமான உமா!

'என்ன பாலா சார், நீங்க சமுத்திரக்கனி சாரோட சிஷ்யப்புள்ளனு கேள்விப்பட்டேன்...?'

'ரீட்டாவுக்கு தெரியாததா! அந்த அனுபவத்துலதான் டைரக்‌ஷன் ஃபீல்டுல தைரியமா நிக்க முடியுது. ஆனா, சின்னத்திரை எனக்கு புதுசில்ல ரீட்டா. ஏற்கெனவே 'அரசி’, 'ஆண்பாவம்’ சீரியல்கள் பண்ணியிருக்கேன். இது எனக்கு மூணாவது சீரியல். ஆனா, ரொம்ப ஃபிரெஷ்ஷா வேலை பார்க்குற மாதிரி இருக்கு. கதைக்களம் அப்படி அமைஞ்சிருக்கு.

லீட் ரோல் பண்ண, பிரவீணா மேடத்தை கேட்டதும், சந்தோஷமா 'ஓகே’ சொன்னாங்க. ஷூட்டிங் ஸ்பாட்ல, யாராச்சும் பிரவீணானு சொன்னா, 'இப்போ நான் உமாவா வாழ்ந்துட்டு இருக்கேன். பிரவீணாவை ஞாபகப்படுத்தாதீங்க!’னு ஜாலியா சொல்வாங்க. இந்த மாதிரி அர்ப்பணிப்புள்ள ஆர்ட்டிஸ்ட்டுகள் 'பிரியமானவள்’ டீம்ல நிறைஞ்சு இருக்காங்க. இந்தத் தெம்புலதான் தமிழ் மக்கள் மனசுல பிரதானமான இடத்தைப் பிடிக்க கடுமையா உழைச்சுட்டு இருக்கோம். நீயும் பார்த்துட்டு சொல்லு ரீட்டா!''

'கண்டிப்பா சக்சஸ்தான் சார், கலக்குங்க.'

வாசகிகள் விமர்சனம்

ஒவ்வொன்றுக்கும் பரிசு: ரூ.150

சலிப்பூட்டும் ஆங்கில மேதாவிகள்!

”விஜய் டி.வியில் ஒளிபரப்பாகும் 'நீயா? நானா?’ நிகழ்ச்சியில் பேசும் பெரும்பாலான பெண்களாட்டும், ஆண்களாகட்டும்... ஒரேயடியாக ஆங்கிலத்தில் பேசி, தங்களது மேதாவித்தனத்தை காட்டுவது ஆங்கிலம் தெரியாதவர்களுக்கு சலிப்பைத் தருவதோடு, நிகழ்ச்சியின் மெருகையும் குறைக்கிறது'' என்று ஆதங்கப்படுகிறார் திருநெல்வேலியில் இருந்து ஆர்.ஜெயலட்சுமி.

உயிரோட்ட கலை வளர்ப்போம்!

''சன் டி.வி. செய்தியில் அழிந்துவரும் தெருக்கூத்து கலை பற்றிய சிறப்புப் பார்வை ஒளிபரப்பானது. அதில், ’இன்றைய இளைய தலைமுறையினர் டி.வி., கம்ப்யூட்டர், செல்போன் என அதிக நேரம் செலவிட்டு மனஉளைச்சலுக்கு ஆளாகிறார்கள். அவர்கள் இதுபோன்ற உயிரோட்டமுள்ள தெருக்கூத்து கலைகளைப் பார்த்தால் மனதில் மகிழ்ச்சி ஏற்படும். அதுமட்டுமல்ல... நம்முடைய பாரம்பர்ய கலையும் அழியாமல் காக்கப்படும்’ என்று கூறியது சரியாகவே பட்டது. நம் வீட்டு விசேஷங்களில் கௌரவம் பார்க்காமல் தெருக்கூத்து நிகழ்ச்சிகளை நடத்தலாமே!'' என்று புது யோசனை தருகிறார் சிதம்பரம்,  கோவிலாம்பூண்டியில் இருந்து பி.கவிதா.

சொல்லி அடித்த கில்லி!

”அது ஒரு தொலைக்காட்சி விளம்பரம். அதில், தந்தையிடம், 'நீங்க இன்ஸ்பெக்டர்தானே?' என்று மகன் கேட்க, 'ஏ.சி.பி...’ என்று கம்பீரமாக மீசையைத் தடவியபடி 'பெரிய பெரிய திருடர்கள் எல்லாம் என்னைக் கண்டு நடுங்குவாங்க’ என்று சொல்வார் தந்தை. அதைக்கேட்ட அந்தச் சிறுவன், 'அப்படின்னா சின்னச் சின்ன கொசுக்கள் எல்லாம் உங்களைப்பார்த்து ஏன் நடுங்குறது இல்ல?’ என்று கலாய்க்க, 'கொசுக்கள் பயப்படும் குட்நைட் நீம் கொசுவர்த்திச்சுருள்தான் உண்மையான ஏ.சி.பி.’ என்று தந்தை ஒப்புக்கொள்வது ரசிக்கத்தக்க, சிரிக்கத்தக்க விளம்பரமாக உள்ளது. மக்களின் ரசனையைப் புரிந்துகொண்டு, சொல்லி அடித்த கில்லி இந்த விளம்பரம்!'' என்று பாராட்டுகிறார் சேலம், அம்மாப்பேட்டையில் இருந்து பி.சுமதி.