அனுபவங்கள் பேசுகின்றன!
ஒவ்வொன்றுக்கும் பரிசு: 200
நோயாளியைப் பார்க்கச் செல்கிறீர்களா?

என் கணவரின் நண்பர், உடல் நலமின்றி மருத்துவமனையில் இருந்தார். அவரைப் பார்க்கச் செல்லும்போது பழங்களுடன் அவர் விரும்பிப் படிக்கும் பத்திரிகைகள் மற்றும் நூல்களை வாங்கிச் சென்றோம். அவர் மிகவும் மகிழ்ச்சியாக வாங்கிப் படித்ததோடு, பாராட்டவும் செய்தார்.
மருத்துவமனையில் தனியாக இருப்பவர்களுக்கு புத்தகம் நல்ல தோழனாக இருக்கும். அவர்களின் கஷ்டத்திலிருந்து கொஞ்சம் நிவாரணமும் அளிக்கும். இனி, புத்தகத்தோடு போவோமே... மருத்துவமனைக்கு!
- யோ.ஜெயந்தி, கோயம்புத்தூர்
வெட்கம் தவிர்!

என் உறவினரின் மகள், திருமணத்துக்கு சம்மதிக்காமல் இருந்தாள். பெற்றோர் எவ்வளவோ சொல்லியும் கேட்கவில்லை. என்னிடம் அவள் சகஜமாக மனம் விட்டுப் பேசுவாள். ஒருநாள் தனிமையில் இருக்கும்போது இதுகுறித்து கேட்டேன். நீண்ட தயக்கத்துக்குப் பிறகு வாய் திறந்தாள். இரவு தூக்கத்தில் அவளையும் அறியாமல் சிறுநீர் கழித்துவிடுவாளாம். திருமணத்துக்குப் பிறகு இந்த விஷயம் புகுந்த வீட்டுக்குத் தெரிந்தால் அசிங்கம் என்று பயந்துதான் திருமணமே வேண்டாம் என மறுத்திருக்கிறாள். இதை பெற்றோரிடம்கூட சொல்லத் தயங்கியிருக்கிறாள். பிறகு, பெற்றோரிடம் சொல்லி உரிய மருத்துவரைச் சந்தித்து சிகிச்சை எடுக்கச் சொன்னேன்.
இதுபோன்ற அந்தரங்கப் பிரச்னைகளை வெளியே சொல்ல வெட்கப்படுவதால் சிக்கல்தான் பெரிதாகும். யோசியுங்கள் பெண்களே!
- பஞ்சவர்ணம், போளூர்
'தேங்காய் திகீர்!’
நானும், யு.கே.ஜி படிக்கும் என் மகளும் கோயிலில் சாமி கும்பிட்டுக் கொண்டிருந்தபோது, ஒருவர் தேங்காய் உடைக்க, தேங்காய் சில்லொன்று என் மகளின் கண்ணில் பட்டுவிட்டது. வலி தாங்காமல் அழ ஆரம்பித்துவிட்டாள். உடனடியாக கண் மருத்துவரிடம் அழைத்துச் சென்றேன். கண்ணைப் பரிசோதித்த டாக்டர், "வெண்படலத்தில் பட்டதால் ஆபத்து ஒன்றுமில்லை. விழித்திரையில் பட்டிருந்தால் பார்வை பறிபோகக்கூடிய சூழ்நிலையும் ஏற்பட்டிருக்கும்'' எனக் கூறி மருந்துகளையும், மாத்திரைகளையும் எழுதிக் கொடுத்தார்.

இதுபோன்ற இடையூறுகளைத் தவிர்க்க... 'தேங்காய் உடைப்பதற்கு முன் எச்சரிக்கை செய்வது, தேங்காய் உடைக்கும்போது நாம் எச்சரிக்கை உணர்வுடன் இருப்பது, கோயில்களில் தேங்காய் உடைப்பதற்கென தனி இடத்தை ஒதுக்குவது’ ஆகிய விதிகளைப் பின்பற்ற வேண்டும் என பக்தர்களையும், கோயில் நிர்வாகங்களையும் வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்.
- பி.வசந்தி, சேலம்
ஓவியங்கள்: சேகர்