
நள்ளிரவு வானவில்! - 13
“ஸார், திஸ் இஸ் ஹைலி அன் ஃபார்ச்சு னேட்... ரிப்போர்ட் இப்படி வரும்னு நான் ஒரு பர்சன்ட்கூட எதிர்பார்க்கலை!”
கமிஷனர் ராஜகணேஷ் சொன்னதைக் கேட்டு, டி.ஜி.பி மோகன் பிரசாத் தன் தலையின் பரந்த வழுக்கையில் வலது உள்ளங்கையை வைத்தபடி ஆயாசமாக நாற்காலியில் சாய்ந்தார்.
“அது ஞானேஷோட அஸ்திதான்னு அவரோட ஃபாதர் பார்த்தசாரதிகிட்டே சொல்லிட்டீங்களா?”
“சொல்லலை ஸார்.”
“ஏன்... ரிப்போர்ட் வந்து ரெண்டு நாளாச்சு. சம்பந்தப்பட்டவங்ககிட்டே உண்மையைச் சொல்ல வேண்டியதுதானே!”

“ஸாரி ஸார்... மனசு வரலை. ஜட்ஜ் பார்த்தசாரதி ஏற்கெனவே மனைவியை இழந்தவர். இப்போ மகனும் உயிரோடு இல்லைனு தெரிய வரும்போது இடிஞ்சு போயிடுவார். அதான் உடனடியா சொல்ல மனசு வரலை. இன்வெஸ்டிகேஷன்ல இருக்கிற சில குழப்பமான கேள்விகளுக்குப் பதில் கிடைச்ச பிறகு, எப்படி சொல்லணுமோ அப்படி சொல்லிடலாம்னு இருக்கேன்.”
“அந்த ஹோட்டல் மானேஜர் புவனேந்திரன்கிட்டேயிருந்து ஏதாவது உருப்படியான தகவலைக் கறக்க முடிஞ்சுதா?”
“இல்ல ஸார்! பணத்துக்கு ஆசைப்பட்டு சி.சி.டி.வி. கேமராக்களில் பதிவாகியிருந்த ஞானேஷ் சம்பந்தப்பட்ட சம்பவங்களை டெலிட் பண்ணியிருக்கார் புவனேந்திரன்... அவ்வளவுதான். அந்த விஷயம் கேமிரா யூனிட் சூபர்வைஸரான கிறிஸ்டோபருக்குத் தெரிஞ்சுட்டதால தாக்கப்பட்டிருக்கார்.”
“டெலிட் செய்யப்பட்ட ஞானேஷ் சம்பந்தப்பட்ட காட்சிகளில் எது மாதிரியான பதிவுகள் இருந்ததா புவனேந்திரன் சொன்னார்?”
“ஹோட்டலோட பாரிலும் ரெஸ்டாரன்ட்டிலும் ஞானேஷ் காத்திருந்து சில பேரை மீட் பண்ணிப் பேசியிருக்கார். பாரில் பதிவான காட்சிகளில் ஞானேஷ் ரொம்பவும் எமோஷனலா இருந்திருக்கார்.”
“இது புவனேந்திரன் சொன்ன தகவல்களா?”
“ஆமாம் ஸார்...”
“கிறிஸ்டோபர் என்ன சொன்னார்?”
“அவரும் புவனேந்திரன் சொன்னதையேதான் சொன்னார். ஞானேஷ் அந்த ஹோட்டலில் ராத்திரி பத்து மணி வரைக்கும் இருந்துட்டு அதுக்குப் பின்னாடிதான் வெளியே போயிருக்கார்!”
“அதுக்கப்புறம் ஞானேஷ், தன் ஃப்ரெண்ட் மணிகண்டன் வீட்டுக்குத் திரும்பலையா?”
“திரும்பலை ஸார்!”
“ஸோ.... அந்த ராத்திரி நேரத்துலதான் ஞானேஷ் தீர்த்துக்கட்டப்பட்டு இருக்கணும். உடம்பு எரிக்கப்பட்டு அந்த அஸ்தியை ஒரு மண்சட்டியில் வெச்சு மீராவின் வீட்டு மொட்டை மாடியில் கொண்டு போய் வெச்சிருக்கணும்.”
“என்னோட கெஸ் வொர்க்கும் அதுதான் ஸார். பட், இந்த விஷயத்துல எனக்கொரு பெரிய சந்தேகமும் இருக்கு!”
“என்ன?”
“ஞானேஷை தீர்த்துக்கட்டி அவனோட உடம்பை எரிச்ச கொலையாளி, சாம்பலை எதுக்காக ஒரு மண்சட்டியில் போட்டு மீரா வீட்டு மொட்டை மாடியில் கொண்டு போய் வெக்கணும்? மீராவுக்கு போன் பண்ணின நபர், `ஞானேஷ் உன் வீட்டு மொட்டை மாடியில் உனக்காக வாட்டர் டேங்குக்குப் பக்கத்துல வெயிட் பண்ணிட்டிருக்கார்... போய்ப் பாரு’னு ஏன் சொல்லணும்?”
“கொலையாளி ஒரு சைக்கோ பேர்வழியா இருக்கலாம்!”
“நான் அப்படி நினைக்கலை ஸார்.”
“தென் வாட்?”
“இது ஒரு ஹைலி சோஃபிஸ்டிகேட்டட் க்ரைம் மாதிரி தெரியுது ஸார். ஞானேஷோட கொடூர முடிவு மீடியாக்கள் மூலமா வெளியே தெரியும்போது எதிரிகள் அதிர்ச்சி அடையணும்ங்கிறது கொலையாளி எண்ணமா இருக்கலாம்.”
“மீடியாக்களுக்கு இன்னமும் நீங்க விஷயத்தை தெரியப்படுத்தலை... இல்லையா?”
“ஆமா ஸார்! இப்போதைக்கு இது ஒரு ‘இன்-கேமரா’ இன்வெஸ்டிகேஷன்தான். ஞானேஷ் ஒரு சாதாரண நபர் கிடையாது. டெல்லியில் இருக்கிற மிகவும் பிரபலமான ‘ப்யூச்சர் மிராக்கிள்’ என்கிற மல்டி நேஷனல் ஐ.டி. கம்பெனியில் வைஸ் பிரசிடென்ட். இந்த சின்ன வயசிலேயே இவ்வளவு பெரிய ‘கீ போஸ்ட்’டில் இருக்கிறது ரேர் ஆஃப் த ரேரஸ்ட். இதுபற்றி ஞானேஷோட ஃபாதர்கிட்ட விசாரிச்சபோது அவர் சொன்ன ஒரு விஷயம் இந்த கேஸுக்கு உபயோகப்படலாம்னு நினைக்கிறேன் ஸார்.”
“அவர் என்ன சொன்னார்?”
“ஞானேஷ் இவ்வளவு சின்ன வயசுல ‘ப்யூச்சர் மிராக்கிள்’ கம்பெனியில் வைஸ் பிரசிடென்ட் போஸ்ட்டுக்கு வரக் காரணம், அவன் ஐ.டி. தொழில்நுட்பத்தில் கண்டுபிடிச்ச சிலவகையான சாஃப்ட்வேர்கள்தான்னு சொன்னார்.”
“ஞானேஷுக்கு கம்பெனியில் தரப்படுகிற அதிகப்படியான ‘இம்பார்ட்டன்ஸ்’ அங்கே வேலை செய்யற யாருக்காவது `புரொஃபஷனல் ஜெலஸி’யை உண்டாக்கி, இப்படியொரு கொலையில் போய் முடிய வாய்ப்பிருக்கா மிஸ்டர் ராஜகணேஷ்?”
“அந்தக் கோணத்திலும் விசாரணையை நடத்திக்கிட்டு இருக்கேன் ஸார்.”
“இட்ஸ் ஓ.கே... என்கொயரியைக் கொஞ்சம் “ஸ்பீட் அப்’ பண்ணுங்க. குற்றவாளியை ஒரு வாரத்துக்குள்ளே நெருங்கிட்டா பரவாயில்லை. இந்த விஷயத்தை ரொம்ப நாளைக்கு மீடியாகிட்டேயிருந்து மறைக்க முடியாது. எல்லாத்துக்கும் மேலா இது ரிடையர்ட் ஜட்ஜ் பார்த்தசாரதியின் சன்னோட மர்டர் கேஸ்.”
“எனக்கும் நிலைமை புரியுது ஸார்” - சொன்ன ராஜகணேஷ், டி.ஜி.பி-க்கு முன்பாக இருந்த ஃபைலை எடுத்துக்கொண்டு விடைபெற்று வெளியே வந்தார். வராந்தாவில் பாதிதூரம் நடந்திருப்பார்... செல்போன் அழைத்தது. எடுத்து யார் என்று பார்த்துவிட்டு சற்றே பதற்றத்தோடு இடது காதுக்கு ஒற்றினார்.
“சொல்லுங்க செந்தில்குமார்...”
“ஸார்.... நீங்க சந்தேகப்பட்டது சரிதான். நீங்க உடனே புறப்பட்டு அடையார் இந்திரா நகர் கார்ப்பரேஷன் பூங்காவுக்கு வாங்க. நான் மெயின் கேட்ல வெயிட் பண்ணிட்டிருக்கேன்.”
“இதோ, புறப்பட்டேன்!” - சொன்னவர், சில விநாடிகளில் மேஃப்ளவர் மரத்துக்குக் கீழே நின்றிருந்த ஜீப்புக்குள் ஏறினார். முன் இருக்கையில் உட்கார்ந்து அன்றைய காலை பேப்பரைப் புரட்டிப் பார்த்துக்கொண்டிருந்த டிரைவர், அவசரமாக மடித்துக்கொண்டே கேட்டார்.
“ஸார்... ஆபீஸுக்கா?”
“இல்லை... அடையார் இந்திரா நகர்ல கார்ப்பரேஷன் பார்க். வண்டி பறக்கணும்!”
டிரைவர், ஜீப்பைக் கிளப்பினார். ஜீப், ரோட்டுக்கு வந்ததும் உண்மையாகவே பறந்தது.
சரியாக இருபது நிமிடம்.
இந்திரா நகரின் மரங்கள் அடர்ந்த பகுதியில் இருந்த அந்த கார்ப்பரேஷன் பார்க்குக்குச் சற்றுத் தள்ளி ஜீப்பை நிறுத்திக்கொண்ட ராஜகணேஷ், கீழே இறங்கி நுழைவு வாயிலை நோக்கி நடந்தார். ஒரு மரத்துக்குப் பின் மறைவாக நின்றிருந்த க்யூ பிராஞ்ச்சை சேர்ந்த செந்தில்குமார், வேகமாக வெளிப்பட்டு விறைப்பாக சல்யூட் அடித்ததார்.
ராஜகணேஷ் குரலைத் தாழ்த்தினார்.
“என்ன... மீராவும் அந்த இளைஞனும் பார்க்குக்கு உள்ளே போனவங்க இன்னமும் வெளியே வரலையா?”
“வரலை ஸார்... இன்னமும் உள்ளே உட்கார்ந்து பேசிட்டுத்தான் இருக்காங்க.”
“மீரா, வீட்டை விட்டு எத்தனை மணிக்கு கிளம்பி வெளியே வந்தா?”
“ரெண்டு மணி நேரத்துக்கு முந்தி ஸார். அவளோட ஸ்கூட்டியை ஃபாலோ பண்ணினேன். மொதல்ல ஒரு பியூட்டி பார்லருக்குப் போனா, அப்புறம் வெல் ஃபிட்னஸ் என்கிற ஒரு டெய்லரிங் மார்ட்டுக் குப் போயிட்டு, இங்கே வந்தா. பார்க் வாசலிலேயே இளைஞர் ஒருத்தர் வெயிட் பண்ணிட்டிருந்தார். ரெண்டு பேரும் உள்ள போனாங்க. இப்ப மறைவிடத்துல உட்கார்ந்து பேசிட்டு இருக்காங்க!”
“வாங்க... போய் மடக்கிடுவோம்!”
இருவரும் உள்ளே போனார்கள்.
பெங்களூரு.
ரிதன்யா தன்னுடைய பெரிய விழிகளால் திவாகரையும் பூங்கொடியையும் மாறி மாறிப் பார்த்தாள்.
“எதையுமே புரியும்படியா பேசிடறது நல்லது. அது என்ன மந்திரக்கோல்?”
“கார்ல போகும்போது சொல்றோம்”
“நோ..! அது என்னன்னு இப்பவே எனக்குத் தெரிஞ்சாகணும். எதுவுமே முன்கூட்டியே தெரிஞ்சாத்தான் என்னால எச்சரிக்கையோடு செயல்பட முடியும். நீங்க நினைக்கிற மாதிரி அந்த யோகானந்தும், அவரோட சன்னும் சாமான்யப்பட்ட நபர்கள் இல்லை. நாம விடற மூச்சுக் காத்தை வெச்சே நாம் எதுக்காக வந்திருக்கோம்னு ஒரு நிமிஷ நேரத்துக்குள்ளே ஸ்கேன் பண்ணிடுவாங்க.”
“நீ அவங்களைப் பார்த்து ரொம்பவும் மிரண்டு போயிருக்கே. அதனாலதான் உனக்கு இந்த பயம்! இன்னிக்குக் காலையில் பத்து மணிக்கு ஒயிட்ஃபீல்டில் இருக்கிற ‘ப்ளஸன்ட் ஓஸன்’ ஸ்டார் ஹோட்டலில் அந்த ரெண்டு பேரும் உன்னைப் பார்த்து, உன் கையில் இருக்கிற மந்திரக்கோலைப் பார்த்து வேர்த்து விறுவிறுத்து உனக்கு முன்ன மண்டிபோட்டு உட்காரப் போறாங்க.”
ரிதன்யா எரிச்சலானாள்.
“இந்த ஓவர் ‘பில்ட் அப்’பெல்லாம் எனக்கு வேண்டாம். அது என்ன மந்திரக்கோல்... நான் மொதல்ல அதைப் பார்க்கணும்.”
திவாகர், பூங்கொடியை ஏறிட்டான்.
“ரொம்பவும் அடம் பிடிக்கிறா... என்ன செய்யலாம்?”
“மந்திரக்கோலைக் காட்டிடலாம்.”
“போய்க் கொண்டா...”

பூங்கொடி தலையசைத்துவிட்டு உள்ளே போய் தன்னுடைய சூட்கேஸைத் திறந்து ஒரு சிறிய பாலீத்தீன் கவரை எடுத்து வந்தாள். ரிதன்யா அதை ஆச்சர்யமாகப் பார்த்துக்கொண்டு இருக்கும்போதே, பூங்கொடி அந்த கவரைப் பிரித்தாள். கவருக்குள்ளேயிருந்து ஒரு ஆரஞ்சு நிற காப்ஸ்யூல் வெளிப்பட்டது. திவாகர் அதைப் பார்த்துக்கொண்டே சொன்னான்.
‘’இதுதான் நீ கையோடு கொண்டு போகப் போகிற மந்திரக்கோல்.”
“ஏதோ மாத்திரை மாதிரி இருக்கு?”
“மாத்திரை வடிவில் இருக்கிற அப்டேட்டட் பென்ட்ரைவ்... கையில் வாங்கிப் பாரு!”
ரிதன்யா வாங்கிப் பார்த்தாள். ஒரு காப்ஸ்யூல் மாத்திரையைக் காட்டிலும் சற்றே பெரிதாக இருந்தது. ஆரஞ்சு நிற உடம்பில் மெல்லியதாய் கறுப்பு வரிகள்.
“இது எப்படி மந்திரக்கோல்?”
திவாகரின் உதட்டில் ஒரு சிறிய புன்னகை
“இந்த பென்ட்ரைவை யோகானந்த், ரூபேஷ் கிட்டே காட்டி ‘இனி பொறுப்பதில்லை’னு ஒரு வார்த்தை சொன்னா போதும் அந்த ரெண்டு ராஜநாகங்களும் ரெண்டு மண்புழுக்களாய் மாறி உனக்கு முன்ன நெளியும்.”
“என்னால நம்ப முடியலை... இந்த ‘பென்ட்ரைவ்’வுக்குள்ளே என்ன இருக்கு?”
“அது உனக்குத் தெரிய வேண்டியதில்லை. நீ அவங்களை அந்த ஹோட்டலில் மீட் பண்ணும்போது இந்த பென்ட்ரைவைக் காட்டி ‘இனி பொறுப்பதில்லை!’ என்கிற வார்த்தையை மட்டும் சொன்னா போதும்... அதுக்கப்புறம் நீ கேட்கிற கேள்விகளுக்கெல்லாம் ஒழுங்கா பதில் வரும்!”
“இந்த பென்ட்ரைவை அவங்க போட்டுப் பார்க்கணும்னு சொன்னா?”
“சொல்றது என்ன... அவங்க கண்டிப்பா போட்டுப் பார்ப்பாங்க... அதுக்கப்புறம் உனக்கு முன்ன உட்காரக்கூட யோசனை பண்ணுவாங்க.”
“அப்படி ஒரு பயம் அவங்களுக்கு இருக்கிறது உண்மையா இருந்தா, உங்கள்ல யாராவது ஒருத்தர் போய் இந்தப் பென்ட்ரைவைக் காட்டி ‘நள்ளிரவு வானவில்’ பற்றிய விஷயங்களைத் தெரிஞ்சுக்கலாமே?”
“அது எங்களுக்குத் தெரியாதா என்ன? இந்த ‘இனி பொறுப்பதில்லை’ பென்ட்ரைவ் மேட்டர் போலீஸ் வரைக்கும் போயிடுச்சு என்கிற உண்மை அந்த ரெண்டு பேருக்கும் தெரியவரும்போதுதான் நள்ளிரவு வானவில் பற்றிய உண்மைகள் வெளியே வரும். அது தவிர...’’
திவாகர் பேசிக்கொண்டிருக்கும்போதே வீட்டுக்கு வெளியே வாசலில் அந்த சத்தம் கேட்டது.
ஏதோ ஒரு வாகனத்தின் இரைச்சல்.
ரிதன்யா தனக்குப் பக்கத்தில் இருந்த ஜன்னலின் திரைச்சீலையை விலக்கி மெள்ள எட்டிப் பார்த்தாள்.
வாசலில் டாக்ஸி நின்றிருக்க, அவளுடைய கணவன் ஹரிகிருஷ்ணன் ஒரு பெரிய சூட்கேஸோடு இறங்கிக்கொண்டிருந்தான்.
- தொடரும்...
ராஜேஷ்குமார் ஓவியங்கள்: அரஸ்