
நள்ளிரவு வானவில்! - 15
‘போலீஸ் பார்வையில் பட்டுட் டீங்களே?’ என்று சொல்லிக்கொண்டே மரத்தின் மறைவிலிருந்து ஒரு மினி சிரிப்போடு வெளிப்பட்ட கமிஷனர் ராஜகணேஷைப் பார்த்ததுமே, புல் தரையில் உட்கார்ந்திருந்த மீராவும் அந்த இளைஞனும் உறைந்து போனவர்களாய் ஸ்லோமோஷனில் எழுந்து நின்றார்கள். ஒருவரின் கையை மற்றவர் பற்றிக்கொண்டு வெளிறிப் போன முகங்களோடு பின்வாங்கினார்கள்.
ராஜகணேஷ் அவர்களுக்கு முன்பாக நின்றார்.
“ஸாரி! நீங்க ரெண்டு பேரும் உங்க காதலை வளர்க்கத் தீவிரமா திட்டம் தீட்டிக்கிட்டு இருக்கும்போது நான் வந்து டிஸ்டர்ப் பண்ணிட்டேன்...”
மீரா வெகுவாய் வியர்த்து வழிந்தாள். பொறியில் மாட்டிக்கொண்ட ஒரு எலியின் தவிப்பு கண்களில் தெரிந்தது.
“ஸ... ஸார்... அது வந்து...”
“ஒண்ணும் அவசரமில்லேம்மா... நிதானமா யோசனை பண்ணி நான் நம்பக்கூடிய அளவுக்கு ஒரு பொருத்தமான பொய்யைச் சொல்லு. நான் போயிடறேன்.”

மீரா தலை குனிந்து நின்றாள். ராஜகணேஷ் அதே கேலிச் சிரிப்போடு தொடர்ந்தார். “நான் என்னோட போலீஸ் சர்வீஸ்ல எத்தனையோ பசுத்தோல் போர்த்திய புலிகளைப் பார்த்திருக்கிறேன். இன்னிக்குத்தான் புலித்தோல் போர்த்திய பசுவைப் பார்க்கிறேன்.”
அதுவரைக்கும் ஒன்றும் பேசாமல் நின்றிருந்த அந்த இளைஞன் இப்போது தயக்கமான குரலில் இடைமறித்தான்.
“ஸார்... மீராவை ப்ளேம் பண்ணாதீங்க! ஞானேஷ் விஷயத்துல என்ன நடந்ததுன்னு தெரியாம நீங்கபாட்டுக்கு...”
அவன் சொல்லி முடிக்கவில்லை... ராஜகணேஷின் எஃகு போன்ற வலதுகை முஷ்டி இளைஞனின் தாடைப் பகுதியை நொறுக்க, அவனுடைய வாய்க்குள் ரத்தம் நிரம்பி வெளியே சில துளிகள் சிதறியது.
முகத்தை இரண்டு கைகளாலும் பொத்திக்கொண்டு வலி தாளாமல் மண்டியிட்டு உட்கார்ந்த அவனை உடன் வந்த போலீஸ் அதிகாரி செந்தில்குமார் சட்டை காலரைப் பிடித்து ஒரு உரித்த கோழியைப் போல் தூக்கி நிறுத்தி, தன் பங்குக்கு இளைஞனின் மார்பில் பூட்ஸ் காலால் எட்டி உதைத்தார்.
கிட்டத்தட்ட காற்றில் பறந்துபோய் ஒரு புதருக்குப் பக்கத்தில் மல்லாந்து விழுந்த அவனை நோக்கி “அன்வர்” என்று அலறியபடி ஓடினாள் மீரா.
ராஜகணேஷின் முகத்தில் திகைப்பு பரவியது. மீராவிடம் சட்டென்று திரும்பினார்.
“இப்ப... நீ என்ன பேர் சொன்னே, அன்வரா?”
“ஆ... ஆமா..!”
“நீ காதலிச்ச பையன் பேர் பிரணவ் தானே?”
“பொய் சொன்னேன் ஸார்.”
“எ... எ... என்னது... பொய் சொன்னியா?”
வாயில் வழியும் ரத்தத்தோடு கீழே விழுந்து கிடந்த அன்வரைத் தூக்கி உட்கார்த்தி வைத்தபடியே ராஜகணேஷை ஏறிட்டாள் மீரா. கண்களில் நீர் மின்னியது.
“ஸ... ஸார்...! ரெண்டு நாளைக்கு முன்னாடி நீங்க உங்க ஆபீஸ்ல வெச்சு என்னோட ஃபேமிலி மெம்பர்ஸுக்கு முன்னாடி பேசும்போது என் காதல் விவகாரத்தை சொல்லும்படியாயிடுச்சு. வேற்று மதத்தைச் சேர்ந்த ஒருத்தரை நான் காதலிக்கிற விஷயம் வெளியே தெரிஞ்சா அம்மாவுக்கும் அப்பாவுக்கும் அதிர்ச்சியா இருக்கும்னுதான் ‘பிரணவ்’னு பேரை மாத்திச் சொன்னேன். இன்ஷூரன்ஸ் கம்பெனியில் ஃபீல்ட் ஆபீஸரா வேலை பார்க்கிறதாவும் பொய் சொன்னேன்.’’
“இவன் அன்வர்ங்கிறதும் பொய் இல்லையே?”
அன்வர் தன் உதட்டோரம் வழிந்த ரத்தத்தைக் கர்ச்சீஃப்பால் ஒற்றிக்கொண்டே தள்ளாடியபடியே எழுந்து நின்று, தன் சட்டை பாக்கெட்டில் கையை நுழைத்து தன்னுடைய ஐ.டி.கார்டை எடுத்து நீட்டினான். ராஜகணேஷ் அவனை ஒரு எரிச்சல் பார்வையால் நனைத்துக்கொண்டே கார்டை வாய்விட்டுப் படித்தார்.
“ஹெச்.அன்வர், எம்.எஸ்ஸி., கம்ப்யூட்டர் சயின்ஸ், ஹெச்.ஆர்.ஓ., ஃப்யூச்சர் மிராக்கிள், பயனீர் பீப்பிள் இன் எம்.என்.ஸி. சாஃப்ட்வேர்ஸ், ஸ்கை டச் டவர்ஸ், சாணக்யபுரி, டெல்லி.”
ராஜகணேஷ் படித்ததைக் கேட்டுவிட்டு செந்தில்குமாரின் புருவங்கள் சில மில்லிமீட்டர் களுக்கு வியப்பில் உயர்ந்தன. “ஸார்! ஞானேஷ் வேலை பார்த்த அதே டெல்லி ஃப்யூச்சர் மிராக்கிள் சாஃப்ட்வேர் கம்பெனியில்தான் இவனும் வேலை பார்த்திருக்கான்!”
ரத்தம் பரவிய பல்வரிசையோடு மெள்ளச் சிரித்தான் அன்வர். “இதுல பொய் சொல்ல என்ன ஸார் இருக்கு. நானும் ஞானேஷும் ஒரே கம்பெனியில்தான் வேலை பார்த்தோம். அவன் புராஜெக்ட்ஸ் க்ரூப் ஹெட். நான் ஹெச்.ஆர்.ஓ. அவனை மாதிரியான ஒரு டேலன்ட்டட் பர்சனை இந்த ஐ.டி. ஃபீல்ட் முழுவதும் தேடினாலும் பார்க்க முடியாது...”
“அதனால்தான் அவன் கொலை செய்யப் பட்டானா?”
“இருக்கலாம்.”
“இதோ பார் அன்வர்... போலீஸ் அடி எப்படியிருக்கும்ங்கிறதை நீ இப்போ சாம்பிள் பார்த்திருப்பே... இப்ப நீ பட்டது ரத்தம் வர்ற மாதிரியான அடி. கொஞ்ச நேரம் வலிக்கும். அப்புறம் வலி காணாமல் போயிடும். ஆனா, போலீஸ் லாக்கப்புக்குள்ளே போயிட்டா, ஒரு சொட்டு ரத்தம் வெளியே வராதபடிக்கு அடிப்போம். அந்த அடி வாங்கின பிறகு உனக்கு இருபத்து நாலு மணி நேரமும் மரணவலிதான். தூங்கும்போதுகூட அந்த வலி உனக்குத் தெரியும்” - ராஜகணேஷ் கோபக் குரலில் பேசிக்கொண்டிருக்கும்போதே பக்கவாட்டிலிருந்து மீராவின் குரல் கேட்டது.

“எக்ஸ்க்யூஸ் மீ ஸார்...”
ராஜகணேஷ் திரும்பினார்.
“என்னம்மா... சொல்லு!”
“ஞானேஷ் கொலை செய்யப்பட்ட விஷயத்தில் என்னையும் அன்வரையும் நீங்க சந்தேகப்படறீங்களா..?”
“ஆமா...”
“நாங்க எதுக்காக அவரைக் கொலை பண்ணணும்?”
“அதையும் நீங்கதான் சொல்லணும்.”
“என்னையும் அன்வரையும் நீங்க கொலையாளிகளா உருவகப்படுத்திக்கிட்டு ஞானேஷோட மர்டர் கேஸை இன்வெஸ்டிகேட் பண்ணிட்டுப்போனா, அது உண்மையான குற்றவாளிக்குச் சாதகமாயிடும். அன்வரை அடிக்கிறதனாலயோ என்னை மிரட்டற மாதிரி பேசறதனாலயோ ஒரு சதவிகிதம்கூட உபயோகமில்லை.”
“இப்ப நீ என்ன சொல்ல வர்றே?”
“ஸார்! நான் என்னோட காதலைக் காப் பாத்திக்கிறதுக்காக அன்னிக்கு உங்ககிட்டே ஒரு பொய்யைச் சொன்னேன். நான் என் னோட வாழ்க்கையில் சொன்ன முதல் பொய்யும் அதுதான். கடைசி பொய்யும் அதுதான். ஞானேஷ் கொலை செய்யப்பட்ட விவகாரத்தை நீங்க டிபார்ட்மென்ட் மூலமா இன்வெஸ்டிகேட் பண்ணிட்டு இருக்கீங்க. ஆனா, நானும் அன்வரும் அதை வேற ஒரு கோணத் திலிருந்து டீல் பண்ணிட்டு இருக்கோம்.”
ராஜகணேஷ் சுவாரஸ்யமானார்.
“வேற ஒரு கோணமா?”
“யெஸ் ஸார்...” என்றபடி முன்னால் வந்தான் அன்வர். “ஞானேஷைக் கொலை பண்ணினது யார்னு எங்களுக்குத் தெரியாது. ஆனா, அவன் கொலை செய்யப்பட்டதற்கான காரணம் என்னவா இருக்கமுடியும்னு எங்களால சொல்ல முடியும்!”
ராஜகணேஷ் பதற்றமானார்.
“என்ன காரணம்... சொல்லு!”
“AMR.”
“அப்படீன்னா..?”
“எ மிட்நைட் ரெயின்போ.”
“புரியலை...”
“ஒரு நள்ளிரவு வானவில்!”
பெங்களூரு.
ஒயிட்ஃபீல்டின் சற்றேறக்குறைய மையப் பகுதியில் அந்த ‘ப்ளஸன்ட் ஓஷன்’ ஹோட்டல் சில ஏக்கர் பரப்பை விழுங்கிவிட்டு வெண்ணிறப் பூச்சில் ஒரு கோட்டையைப் போல் சில்வர் ஓக் மரங்களுக்கு நடுவில் உட்கார்ந்திருந்தது. காரை சற்றுத் தள்ளி நிறுத்திக் கொண்ட திவாகர் தனக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருந்த ரிதன்யாவிடம் திரும்பினான். “ரிதன்யா! நான் சொன்னதெல்லாம் ஞாபகம் இருக்கா?”
“இருக்கு!”
“சொல்லு பார்க்கலாம்...”
“நான் என்ன எல்.கே.ஜி. படிக்கிற குழந்தையா?
ஒரு தடவை சொன்னாலே எனக்குப் புரியும்!”
கையில் பிஸ்டலோடு காரின் பின் ஸீட்டில் உட்கார்ந்திருந்த பூங்கொடி ரிதன்யாவின் தலையை மெள்ளத் தட்டினாள். “ ‘இனி பொறுப்பதில்லை’ பென்ட்ரைவை பத்திரமா வெச்சுக்க. ரூம் நெம்பர் ‘ஃபைவ் நாட் ஒன்’ல யோகானந்தும் ‘ஃபைவ் நாட் டூ’ல ரூபேஷும் ஸ்டே பண்ணியிருக்காங்க. நீ போய் பார்க்க வேண்டியது யாரைத் தெரியுமா?”
“தெரியும்... யோகானந்தை...!” - ரிதன்யா எரிச்சலாக சொல்ல, பூங்கொடி தொடர்ந்தாள்... “நீ ஒரு போலீஸ்காரி. உனக்கு எதையும் நாங்க சொல்லிக் கொடுக்க வேண்டியது இல்லை. நீ இப்போ எப்படிப்பட்ட நிலைமையில் இருக்கேங்கிறதையும் ஞாபகம் வெச்சுக்க! உனக்கு ஒரு மணி நேர அவகாசம். அதுக்குள்ளே வேலையை வெற்றிகரமா முடிச்சுட்டு `நள்ளிரவு வானவில்’லோடு ஹோட்டலை விட்டு வெளியே வந்துடணும்.”
ரிதன்யா காரிலிருந்து இறங்கிக்கொண்டு ஹோட்டலின் காம்பவுண்ட் சுவர் ஓரமாக நடந்து, பிரதான கேட் வழியாக உள்ளே போனாள். செக்யூரிட்டி செல்லில் இருந்து வெளிப்பட்ட நீலநிற யூனிஃபார்ம் அணிந்த சென்ட்ரி ஒருவன் தயக்கமாக வழிமறிக்க, ரிதன்யா தன்னுடைய உத்யோக அட்டையைக் காட்டினாள். அவன் சற்றே மிரண்டு பின்வாங்கி பவ்யமாக சொன்னான்... ‘`யூ... ப்ளீஸ்... மேடம்!”
ரிதன்யா ஹோட்டலின் லானை ஒட்டி இருந்த காரிடாரில் நடந்து ராட்சஸ லஸ்தர் விளக்குகளின் வெளிச்சத்தில் குளியல் போட்டுக்கொண்டிருந்த ஒரு குட்டி மைதானம் போன்ற ரிசப்ஷன் ஹாலுக்குள் நுழைந்தாள். அரைவட்ட கண்ணாடி டேபிளுக்குப் பின்னால் மெழுகு பொம்மைகளாய் ரிசப்ஷனிஸ்ட் பெண்கள் மூன்று பேர் தெரிய, ஒருத்தி மட்டும் தன் உறுத் தாத பல் வரிசையைக் காட்டி ஒரு இன்ஸ் டன்ட் சிரிப்போடு ‘`குட் மார்னிங்” என்றாள்.
பதிலுக்கு ‘குட்மார்னிங்’ சொன்ன ரிதன்யா தெளிவான ஆங்கிலத்தில் அந்தப் பெண்ணிடம் குரலை வெகுவாய் தாழ்த்திக்கொண்டு கேட்டாள்...
``அறை எண் 501-ல் யார் தங்கியிருக்கிறார்கள்?”
அந்த ரிசப்ஷனிஸ்ட் பெண் சிரிப்பு மாறாமல் பேசினாள்.
“ஸாரி! நீங்கள் யார் என்பது தெரியாமல் எங்களுடைய வாடிக்கையாளரின் பெயரைச் சொல்ல எங்களுக்கு அனுமதியில்லை.”
ரிதன்யா தன்னுடைய உத்யோக அட்டையைக் காட்ட, அவளுடைய சிரிப்பு சட்டென்று காணாமல் போயிற்று.
“மேடம்! நீங்கள் போலீஸ்?”
‘’யெஸ்...”
“ஒன் மினிட் மேடம்” என்று சொல்லிவிட்டு தனக்கு முன்பாக இருந்த கம்ப்யூட்டரை மின்னல் வேகத்தில் தட்டிப் பார்த்துவிட்டு ‘’ஒன் மிஸ்டர் யோகானந்த் ஈஸ் ஸ்டேயிங் தேர்” என்றாள்.
“தேங்க்யூ..! நான் அவரைப் பார்க்கப் போகிறேன். நான் வந்திருப்பது அவருக்குத் தெரிய வேண்டாம்!”
“ஓ.கே. மேடம்... ஐ நோ த ப்ரொஸீஜர்ஸ் ஆஃப் போலீஸ்.”
ரிதன்யா மறுபடியும் அவளுக்கு ஒரு நன்றியைத் தெரிவித்துவிட்டு பக்கவாட்டில் தெரிந்த லிஃப்ட்டை நோக்கிப் போனாள். காலியாயிருந்த லிஃப்ட்டுக்குள் நுழைந்து ஐந்தாவது மாடிக்குரிய பட்டனை அழுத்தினாள்.
இருபது விநாடிப் பயணம்.
ஐந்தாவது மாடி வந்தது. லிஃப்ட்டிலிருந்து வெளிப்பட்ட ரிதன்யா, அந்தக் கரும்பச்சை கிரானைட் தளத்தில் மெள்ள நடைபோட்டாள். சென்ட்ரலைஸ் செய்யப்பட்ட ஏ.சி... ஹோட் டலின் எல்லாப் பகுதிகளையும் ஜில்லிப்பாய் வைத்திருந்தாலும், ரிதன்யாவின் முன் நெற்றியும் பின் கழுத்தும் வியர்த்து சொதசொதத்தன.
‘இனி பொறுப்பதில்லை’ பென்ட்ரைவுக்கு யோகானந்தும் ரூபேஷும் எந்த அளவுக்குப் பயப்படுவார்கள்..?’
‘ஒருவேளை பயப்படாவிட்டால்..?’
இதயத்துக்குள் படபடப்பாய் யோசித்துக் கொண்டே, அறை எண்களைப் பார்த்தபடி நடந்தாள்.
வராந்தாவின் மையப்பகுதியில் அறை எண் 501 பார்வைக்குக் கிடைத்தது. அறைக்கு முன்பாக போய் நின்று அழைப்பு மணிக்குரிய பட்டனின் மேல் விரலை வைத்தாள்.
அதே விநாடி...
அவளுடைய முதுகில் குரல் கேட்டது.
‘`என்ன ரிதன்யா.. அப்பாவைப் பார்க்க வந்தியா?”
திரும்பினாள்.
ரூபேஷ்.
- தொடரும்...
ராஜேஷ்குமார் ஓவியங்கள்: அரஸ்
சேமிப்பு... உஷார்!

மளிகைச் சீட்டு!
இதில் குறிப்பிட்ட மாதங்களுக்கு ஒரு தொகையைச் சீட்டுக் கட்டி வர வேண்டும், சீட்டின் இறுதியில் அவர்கள் பட்டியலிட்ட மளிகைப் பொருட்களை வழங்குவார்கள். ஆனால், அந்தப் பொருட்கள் தரமற்றதாக இருக்கும். சீட்டுப்பிடிப்பவர், இந்த மளிகைக் பொருட்களை மொத்த விலைக் கடையில் வாங்கி, சீட்டுப் போட்டவர்களுக்கு வழங்குவார். ஒருவேளை பட்டியலிட்ட பொருட்களில் ஏதேனும் விலை ஏறிப் போயிருந்தால், அந்தப் பொருளின் அளவைக் குறைத்துவிடுவார். பொதுவாக, மளிகைப் பொருளை சீட்டுப் போட்டு மொத்தமாக வாங்கி ஸ்டோர் செய்வதைவிட, மாதம்தோறும் வாங்கிப் பயன்படுத்துவதே நல்லது.