
நள்ளிரவு வானவில் - 16 - 16
ரிதன்யாவின் இதயம் ஒரு போர்க்கால முரசாய் மாறியிருக்க, வியர்வை மின்னும் நெற்றியோடும் உலர்ந்துபோன உதடுகளோடும் ரூபேஷை தன் கரிய விழிகளால் பயமாக ஏறிட்டாள்.
ரூபேஷின் உதட்டோரம் ஓர் உயிரில் லாத புன்னகை ஜனித்திருக்க, மெள்ள அவளை நெருங்கினான்.
“என்ன ரிதன்யா... ரெண்டாவது தடவையா படை எடுத்துட்டு வந்துட்டே போலிருக்கு..!”
கலக்கத்தில் இதயம் உதைத்துக் கொண்டாலும், அதன் அடையாளத்தை முகத்தில் சிறிதும் காட்டிக்கொள்ளாமல் ரிதன்யா, ரூபேஷிடம் நிமிர்ந்தாள்.

“உண்மையைத் தெரிஞ்சுக்கிறதுக்காக எத்தனை தடவை படை எடுத்தாலும் தப்பில்லையே...”
“என்ன உண்மை?”
“வேறென்ன... அதே ‘நள்ளிரவு வானவில்’ தான்!”
“சரி... இன்னிக்கு ராத்திரி இதே ஹோட்டலுக்கு சரியா பன்னிரண்டு மணிக்கு வா... ரெண்டு பேரும் இந்த ஹோட்டலின் மொட்டைமாடிக்குப் போய் நள்ளிரவில் வானவில் தெரியுதான்னு பார்ப்போம்.”
“இந்த மாதிரியான கேலிப் பேச்சையெல்லாம் நீ ரொம்ப நேரத்துக்கு என்கிட்டே பேசிட்டிருக்க முடியாது. அதுவுமில்லாமே நான் இப்ப பேச வந்தது உன்னோட அப்பா யோகானந்த்கிட்ட!”
“அவர் ரூம்ல இல்லை...”
“எங்கே போயிருக்கார்?”
“தெரியாது.”
“அப்படீன்னா உன்கிட்டே பேசிட வேண்டியதுதான்!”
“எனக்கும் வெளியே கொஞ்சம் வேலையிருக்கு. நானும் கிளம்பிட்டே இருக்கேன்..!”
“இனி பொறுப்பதில்லை!” என்று சொன்ன ரிதன்யா, ஒரு சின்ன புன்னகையோடு தன் மார்புக்கு குறுக்காக கைகளைக் கட்டிக்கொண்டாள்.
நகர முயன்ற ரூபேஷ், சட்டென்று நின்றான். அவன் முகம் நிறம் மாறியிருந்தது.
“நீ இப்போ என்ன சொன்னே?”
“இனி பொறுப்பதில்லை!”
“இதுக்கு என்ன அர்த்தம்..?”
ரிதன்யா தன்னுடைய கைப்பையைத் திறந்து உள்ளேயிருந்த சிறிய பாலித்தீன் பையை எடுத்தாள். அதற்குள் இருந்த அந்த ஆரஞ்சு நிற காப்ஸ்யூலைக் காட்டினாள்.
“இது என்னன்னு தெரியுதா ரூபேஷ்?”
“ஏ... ஏ... ஏதோ மாத்திரை மாதிரி இருக்கு.”
“ஆனா, இது மாத்திரை கிடையாது... ஒரு ஹைலி அப்டேட்டட் பென்ட்ரைவ் என்கிற உண்மை உனக்குத் தெரியும். இந்த பென்ட்ரைவுக்குள்ளே எது மாதிரியான உண்மைகள் தூங்கிட்டிருக்கு என்கிற விபரீதமும், இந்த விபரீதம் வெளிச்சத்துக்கு வந்தா உன்னோட நிர்வாகத்துக்குக் கீழே இயங்கிட்டு இருக்கிற மூணு பெங்களூரு ஐ.டி. கம்பெனிகளும், நாலு சென்னை ஐ.டி. கம்பெனிகளும் ஒரே ராத்திரிக்குள்ளே அதலபாதாளத்துக்குள்ளே போயிடும்ங்கிற உண்மையும் உனக்குத் தெரியும்..!”
ரூபேஷ் இப்போது வியர்வைக் குளியலில் இருந்தான். விழிகளைச் சுழற்றி சுற்றும்முற்றும் ஒரு முறை பார்த்துவிட்டு, “இந்த பென்ட்ரைவ் உன் கைக்கு எப்படி வந்தது?” என்று கேட்டான்.
“வெளியே உனக்கு ஏதோ ஒரு முக்கியமான வேலை இருக்குன்னு சொன்னியே... போயிட்டு வா... அப்புறமா பேசுவோம்!”
“எ... எ... எனக்கு எந்த வேலையும் இல்லை. இப்பவே பேசுவோம். வா... இது என்னோட ரூம்...” தனக்கு எதிரில் இருந்த 502 எண் அறையைக் காட்டினான் ரூபேஷ்.
“உன்னோட அப்பா யோகானந்த் எங்கே?”
“இந்த ஹோட்டலின் ஏழாவது மாடியில் ரூஃப் கார்டனில் உட்கார்ந்து லிக்கர் சாப்பிட்டுக்கிட்டு இருக்கார். அந்த ‘இனி பொறுப்பதில்லை’ பற்றி நாம பேசுவோம்...” ரூபேஷ் சொல்லிக்கொண்டே தன் கையில் வைத்து இருந்த சாவியால் 502-ம் எண் அறையின் மேக்னடிக் பூட்டுக்கு விடுதலை கொடுத்தான்.

“நான் இந்த ரூமுக்குள்ளே நுழையறதுக்கு முன்னாடி நீ ஒரு விஷயத்தை தெரிஞ்சுக்கணும்”
“என்ன..?”
“உன்னையும் உன்னோட அப்பாவையும் ‘இனி பொறுப்பதில்லை’ விஷயமா பார்த்துப் பேச நான் மட்டும் தனியா வரலை?”
“பி... பி... பின்னே..?”
“என்கூட ரெண்டு பேர் வந்திருக்காங்க. ஹோட்டலுக்கு வெளியே கார்ல வெயிட் பண்ணிட்டு இருக்காங்க... நான் ஹோட்டலை விட்டு பத்திரமா வெளியே போகாத பட்சத்தில் அவங்க உங்களுக்கு எதிரா எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் அவ்வளவு நல்லதா இருக்காது.”
“யா... யார் அவங்க..?”
“அது உனக்குத் தேவையில்லாத விஷயம். அடுத்த ஒரு மணி நேரத்துக்குள்ளே நம்ம பேச்சு வார்த்தை முடியணும்...”
“நீ மொதல்ல உள்ளே வா... உனக்கு எந்த ஒரு பிரச்னையும் வராம நான் பார்த்துக்கிறேன்.”
அறைக்குள் நுழையப் போன ரிதன்யா ரூபேஷிடம் திரும்பினாள். “உன்னோட அப்பா எங்கே இருக்கிறதா சொன்னே?”
“மேலே ரூஃப் கார்டன்ல.”
“அவருக்கு போன் பண்ணி ரூமுக்கு வரச் சொல்லு.”
“அவர் வேண்டாம்... நாமளே பேசி ஒரு முடிவுக்கு வருவோம்.”
“ஸாரி! இந்த ‘இனி பொறுப்பதில்லை’ விஷயத்தை உங்க ரெண்டு பேருக்கும் முன்னாடி பேசறதுதான் சரியா இருக்கும்னு நினைக்கிறேன். ஒரு மணி நேரத்துக்குள்ளே எனக்கு வேலை முடியணும்...”
“அவர் இப்போதைக்கு கீழே வர மாட்டார். அவரைப் பார்க்கணும்னா நாம்தான் ரூஃப் கார்டனுக்கு போகணும்!”
“போகலாம்...” என்றாள் ரிதன்யா எங்கோ பார்த்துக்கொண்டு.
ரூபேஷ் எரிச்சலோடு தன்னுடைய அறைக்கதவை மறுபடியும் லாக் செய்தான். “வா... போகலாம்!”
இருவரும் காரிடாரில் நடந்து காலியாக இருந்த லிஃப்ட்டுக்கு வந்து ஏழாவது மாடியில் இருந்த ரூஃப் கார்டனுக்குள் நுழைந்தார்கள்.
ரூஃப் கார்டன்... ஏராளமான மணி ப்ளான்ட் கொடிகளோடும் தொட்டிகளில் வளர்க்கப்பட்ட ஷேடோ குரோட்டன்ஸ் செடிகளோடும் ஒரு செயற்கையான இயற்கையோடு பார்வைக்குக் கிடைத்தது. காற்றில் ஊதுவத்தி புகை இழைகிற மாதிரியான தினுசில் வயலின் இசை.
அந்தக் காலை நேரத்தில் ரூஃப் கார்டன் பாரில் யாரும் இல்லை. யோகானந்த் மட்டும் அரையிருட்டான ஒரு மூலையோர மேஜையில் முதுகைக் காட்டிக்கொண்டு உட்கார்ந்திருந்தார். அவருக்கு முன்னால் உயர்ந்த ஜாதியைச் சேர்ந்த வெளிநாட்டு மதுபான பாட்டில் ஒன்று பொன்னிற திரவத்தோடு பளபளத்தது. பேரர் ஒருவர் மதுபாட்டில்கள் ராணுவ ஒழுங்கோடு அணிவகுத்திருந்த ஷெல்ஃபின் கண்ணாடி உடம்பை பாலீஷ் துணியால் தேய்த்துக்கொண்டிருந்தார்.
ரிதன்யா நடந்துகொண்டே ரூபேஷிடம் கேட்டாள்... “உன் அப்பாகிட்டே விஷயத்தை நீ சொல்றியா... இல்ல, நான் சொல்லட்டுமா?”
“நானே சொல்றேன்!”
“ஹோட்டலுக்கு வெளியே ரெண்டு பேர் கார்ல வெயிட் பண்ணிட்டிருக்காங்க என்கிற விஷயம் மனசுக்குள்ளே இருக்கட்டும்!”
“நிலைமை எனக்குப் புரியுது. நீ மறுபடியும் மறுபடியும் அதை எனக்கு ஞாபகப்படுத்திக்கிட்டு இருக்க வேண்டிய அவசியம் இல்லை...” - ரூபேஷ் குரலைத் தாழ்த்தி கோபமான குரலில் சொல்லிவிட்டு, யோகானந்தை நெருங்கினான்.
“அப்பா..!”
அவரிடமிருந்து பதில் வராமல் போகவே, ரூபேஷ் அவருக்கு எதிரில் போய் நின்றான்.
“அப்பா... மறுபடியும் சைபர் க்ரைமிலிருந்து அந்த ரிதன்யா வந்து...” - பேசிக் கொண்டே போனவனின் பேச்சு சட்டென்று அறுந்து போக, அவனுடைய கண்ணின் பாவைகள் உறைந்தன.
நாற்காலியில் இயல்பாக உட்கார்ந்திருந்த யோகானந் தின் தலை ஒரு பக்கமாக சாய்ந்திருந்தது. நாசித் துவாரங் களிலும், கடைவாய் ஓரத்திலும் ரத்த இழைகள் வழிந்து இருக்க, விழிகள் திறந்த நிலையில் இறந்து போயிருந்தார்.
சென்னை.
போலீஸ் கமிஷனர் ராஜ கணேஷ் தன்னுடைய அலுவலக அறையில் க்யூ பிராஞ்ச் ஆபீஸர் செந்தில்குமாரோடு உட்கார்ந்திருக்க, எதிரில் இருந்த நாற்காலிகளில் அன்வரும் மீராவும் இருள் கப்பிய முகங்களோடு தெரிந் தார்கள். ராஜகணேஷ் அடித்ததன் காரணமாக அன்வரின் உதடுகளும் மூக்கும் வீங்கியிருந்தன. முதலுதவி செய்ததற்கு அடையாளமாக தாடையில் பிளாஸ்டர் ஒன்று ஒட்டப்பட்டிருந்தது.
“அது என்ன வார்த்தை... நள்ளிரவு வானவில்லா..?”
- ராஜகணேஷ் ஒரு கூர்மையான பார்வையோடு கேட்க, அன்வர் தலையாட்டினான்.
“ஆமா ஸார்...”
“அதுக்கு என்ன அர்த்தம்?”
“அது ஒரு கோட்வேர்ட் ஸார்... நான் வொர்க் பண்ற ‘ஃப்யூச்சர் மிராக்கிள்’ ஐ.டி.கம்பெனியில் ஞானேஷ் தலைமையில் ஒரு ப்ராஜெக்ட்டை உருவாக்கி னாங்க. அந்த ப்ராஜெக்ட்டுக்கு ஞானேஷ் வெச்ச பேர்தான் ஏ.எம்.ஆர். ‘ஏ மிட்நைட் ரெயின்போ’. அதாவது நள்ளிரவு வானவில். இப்படியொரு பேரை வெக்கிறதுக்கு இன் னொரு காரணமும் இருக்கு ஸார்...’’
“என்ன காரணம்?”
“அந்த ப்ராஜெக்ட்டை உருவாக்கினவங்க, ஞானேஷையும் சேர்த்து, மொத்தம் ஏழு பேர். ஏழு பேரில் ஞானேஷைத் தவிர மற்ற ஆறு பேரும் பெண்கள். ப்ராஜெக்ட் பெரிய அளவில் வெற்றி பெற அந்த ஆறு பெண்களும் ஞானேஷுக்கு உறுதுணையா இருந்தாங்க. அந்தப் பெண்களின் பெயர்களில் இருந்த முதல் எழுத்துகளையும் ஞானேஷ் பெயரில் இருந்த முதல் எழுத்தையும் சேர்த்து எழுதிப் பார்த்தபோது ‘VIBGYOR’னு வந்தது. ஒரு வானவில்லோட ஏழு நிறங்களை குறிக்கிற வார்த்தைதான் விப்ஜியார். இதையே ஒரு காரணமா வெச்சு அவங்க உருவாக்கின ப்ராஜெக்ட்டுக்கு ‘நள்ளிரவு வானவில்’னு பெயர் சூட்டி அதையே கோட்வேர்டாகவும் வெச்சுக்கிட்டாங்க... இது வெளியே யாருக்கும் தெரியாது. ஞானேஷ் எனக்கு க்ளோஸ் ஃப்ரெண்டா இருந்ததால என்கிட்ட மட்டும் ஒரு தடவை சொன்னான்.”
“அந்த ஆறு பெண்களோட பேர் என்ன?”
“வினயா, இந்துவதனா, பிருந்தா, யாமினி, ஓமனா, ராகவி..!”
அன்வர் சொன்ன பெயர்களை எல்லாம் ஒரு தாளில் குறித்துக்கொண்ட ராஜகணேஷ் அந்தப் பெயர்களில் உள்ள முதல் எழுத்துக்களை எடுத்து எழுதிப் பார்த்துவிட்டு கேட்டார்.
‘`இப்போ ஞானேஷ் உயிரோடு இல்லை என்கிற விஷயம் இந்த ஆறு பெண்களுக்கும் தெரியுமா...?’'
அன்வர் மௌனமாக இருந்தான். மீரா குறுக்கிட்டுச் சொன்னாள்... `‘இந்த ஆறு பேரும் உயிரோடு இருந்தாத்தானே ஸார் ஞானேஷ் இறந்தது அவங்களுக்குத் தெரியும்..!”
ராஜகணேஷின் இரண்டு புருவங்களும் சில மில்லி மீட்டர்கள் உயர்ந்து, சில விநாடிகள் அப்படியே நின்றன.
“என்னது... அந்த ஆறு பெண்களும் உயிரோடு இல்லையா... நீ என்னம்மா சொல்றே..?”
“உண்மையைச் சொல்லிட்டிருக்கேன் ஸார்...” - சொன்ன மீரா, அன்வரிடம் இருந்த செல்போனை பறித்து ‘வாட்ஸ்அப்’ ஆப்ஷனுக்குப் போய் ஒரு வீடியோ பதிவை உயிர்ப்பித்தாள். ராஜகணேஷிடம் நீட்டினாள்.
அது ஒரு தொலைக்காட்சியின் செய்தி வாசிப்பு. அதன் மேல் விரலை வைக்க பதிவு உயிர் பெற்றது. நியூஸ் ரீடர் பெண்மணி நேர்ப்பார்வை பார்த்துக்கொண்டு செய்தி வாசித்தாள்.
“டெல்லி மென்பொருள் கம்பெனி ஒன்றில் பணியாற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆறு இளம் பெண்கள் உதகை மலர்க்கண்காட்சியைப் பார்த்துவிட்டு திரும்பும் வழியில் பர்லியாறு அருகே கொண்டை ஊசி வளைவில் வேன் திரும்பும்போது தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு நூறடி ஆழப் பள்ளத்தில் விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்தனர். இறந்தவர்கள் அனைவரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. வேனை ஓட்டிய டிரைவர் குமாரவேல் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.”
செய்தி வாசிப்புக்குப் பிறகு பள்ளத்தில் உருண்டு கிடந்த உருக்குலைந்த வேனும், சாலையோரமாக கிடத்தப்பட்டிருந்த ஆறு பெண்களின் ரத்தம் தோய்ந்த உடல்களும் போட்டோ பதிவுகளாய் பார்வைக்குக் கிடைக்க, ராஜகணேஷ் ஒரு கனமான கவலையோடு நெற்றியைத் தேய்த்தார்.
“ஞானஷோட மரணத்துக்குப் பின்னாடி இப்படியொரு பரிதாபமான ஃப்ளாஷ்பேக் வேற இருக்கா... இந்த விபத்து எப்ப நடந்தது?”
“போன வருஷம் மே மாசம் ஸார்... அந்தச் சமயத்துல அதை எல்லாருமே விபத்துன்னு நம்பிட்டிருந்தபோது ஞானேஷ் மட்டும் என்கிட்டே ‘அது விபத்து கிடையாது... யாரோ திட்டம் போட்டு ஆறு பேரையும் தீர்த்துக்கட்டியிருக்காங்க'ன்னு சொல்லிட் டிருந்தார்...”
“யார் அந்த யாரோ?”
“ஞானேஷ் சொன்னான் ஸார்..!”
“யாரு..?”
“சொன்னா நம்ப மாட்டீங்க ஸார்..!”
- தொடரும்...
ராஜேஷ்குமார் ஓவியங்கள்: அரஸ்