மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நள்ளிரவு வானவில்! - க்ரைம் தொடர் - 18

நள்ளிரவு வானவில் | ராஜேஷ்குமார்
பிரீமியம் ஸ்டோரி
News
நள்ளிரவு வானவில் | ராஜேஷ்குமார் ( நள்ளிரவு வானவில் | ராஜேஷ்குமார் )

நள்ளிரவு வானவில் - 18 - 18

ரிதன்யாவின் இதயப் பிரதேசம் முழுவதும் கலவர பூமியாக மாறியிருக்க, சற்றே பதற்றமாய் சற்றுத் தூரத்தில் மரத்தடியில் நின்றிருந்த காரை நோக்கி நடைபோட்டாள்.

‘யோகானந்த் இப்போது உயிரோடு இல்லை. `அவர் கொலை செய்யப்பட்டுவிட்டார்’ என்று நான் சொல்லப்போகும் விஷயத்தை பூங்கொடியும் திவாகரும் எந்த அளவுக்கு சீரியஸாக எடுத்துக்கொள்வார்கள்...?’

‘நள்ளிரவு வானவில்’ பிரச்னையை இதோடு விட்டுவிடுவார்களா... இல்லை, ரூபேஷிடமிருந்து வாங்கிக் கொடுக்கச் சொல்வார்களா..?’

‘அவர்களுடைய ரியாக்‌ஷன் எப்படியிருக்கும்?’

நள்ளிரவு வானவில்! - க்ரைம் தொடர் - 18

ஒட்டுமொத்த உடம்பும் வியர்த்து வழிய, காரை நெருங்கினாள் ரிதன்யா. காரின் கண்ணாடிக் கதவுகள் ஏற்றப்பட்டிருக்க, மெள்ளத் தட்டினாள்.

உள்ளே மௌனம்.

கதவு திறக்கப்பட... பத்து விநாடிகள் வரை காத்திருந்து பார்த்துவிட்டு, மறுபடியும் கண்ணாடியைத் தட்டினாள்.

அதே மௌனம் நீடித்தது.

ரிதன்யா பொறுமை இழந்துபோனவளாய் காரின் கைப்பிடியைப் பற்றி இழுத்தாள்.

‘ப்ளக்’... காரின் கதவு சற்று சிரமமாய்த் திறந்துகொள்ள, காரின் முன் ஸீட்டிலும், பின் ஸீட்டிலும் யாரும் இல்லை.

ரிதன்யா திகைத்துப்போனவளாய் காரின் கதவைச் சாத்திவிட்டு சுற்றும்முற்றும் பார்த்தாள். அந்தச் சாலையின் கடைக்கோடி வரைக்கும் மனித நடமாட்டமே இல்லை.

‘இந்தத் திவாகரும், பூங்கொடியும் எங்கே போனார்கள்?’ காரை இரண்டு முறை சுற்றி வந்த ரிதன்யா, காரின் கதவைத் திறந்துகொண்டு உள்ளே போனாள். பின்ஸீட்டில் ஒரு பிஸ்கட் பொட்டலமும், மினரல் வாட்டர் பாட்டிலும் தெரிய... ஸ்டீயரிங்கில் கார் சாவி தொங்கியது.

‘காரை இப்படி சாவியோடு விட்டுவிட்டு இருவரும் எங்கே போயிருப்பார்கள்?’

ரிதன்யா கலக்கம் கப்பிக்கொண்ட மனதோடு மறுபடியும் காரிலிருந்து கீழே இறங்க முயன்றபோது, அவளுடைய கால் விரல்களுக்கு ஏதோ தட்டுப்பட்டது. குனிந்து பார்த்தாள்.
செல்போன்.

‘இது பூங்கொடியின் கையில் இருந்த செல்போன் மாதிரி இருக்கிறதே!’

கையில் எடுத்தாள்.

பூங்கொடியின் செல்போன்தான். ரிதன்யா அந்த செல்போனை தன் இடது உள்ளங்கையில் அதக்கிக் கொண்டபோது ஒருவிதமான பிசுபிசுப்பை உணர்ந்தாள்.

‘என்ன அது?’

இடது உள்ளங்கையை உயர்த்திப் பார்த்தாள்.

ரத்தம்.

இன்னமும் உலர ஆரம்பிக்காத ரத்தம்.

ரிதன்யாவின் இதயத் துடிப்பு ரிதம் மாறியது. ‘இங்கேயும் ஏதோ ஓர் அசம்பாவிதம் நடந்திருக்க வேண்டும்..!’

‘செல்போன் உயிரோடு இருக்கிறதா?’

சோதித்துப் பார்க்க பக்கவாட்டில் இருந்த பட்டனை அழுத்தினாள். செல்போனின் திரை வெளிச்சச் சதுரமாய் தெரிய, அப்பேரட்டஸ் ஐகான்கள் வரிசையாய் தெரிந்தன. ‘கான்டாக்ட்ஸ்’ ஐகானை அழுத்தி ‘சேவ்’ செய்யப்பட்ட எண்களைத் தேடினாள். `ஏதுமில்லை' (EMPTY) என்று பதில் வந்தது. ‘மெசேஜ்’ ஆப்ஷனுக்குப் போய் ஏதாவது ‘மெசேஜ்’ இருக்கிறதா என்று பார்க்க... எல்லாமே டெலிட் செய்யப்பட்டுவிட்டதாய் ஒரு தகவல் சொன்னது.

‘இந்த செல்போனிலிருந்து ‘அவுட் கோயிங் கால்’ போகுமா... போகாதா?’

ரிதன்யா வியர்த்து வழிந்தபடி செல்போனை கையில் வைத்துக்கொண்டு யோசித்தாள்.

‘ரூபேஷுக்கு போன் செய்யலாமா?’

‘வேண்டாம்.. இப்போது அவனிடம் பேசினால் பிரச்னை இன்னமும் சிக்கலாகும். போலீஸ் டிபார்ட்மென்ட்டில் இருக்கும் யாராவது ஒருவரிடம் பேசிப் பார்க்கலாம்..!’

ரிதன்யாவுக்கு அவளுடைய இம்மீடியட் பாஸான சைபர் க்ரைம் செல்லில் இருக்கும் டி.எஸ்.பி. நம்பெருமாளின் ஞாபகம் வந்தது. அவருடைய எண்களை செல்போனின் கீ-பேடில் அழுத்தினாள். உடனே ‘நாட் ரீச்சபிள்’ என்ற ஒரு பெண்ணின் ரிக்கார்டட் வாய்ஸ் கேட்டது. இரண்டு தடவை முயற்சித்துப் பார்த்துவிட்டு வேறு யாருக்கு போன் செய்யலாம் என்று யோசித்த விநாடி கணவன் ஹரிகிருஷ்ணனின் நினைவு வந்தது. எண்களைத் தட்டிவிட்டாள்.

அடுத்த விநாடியே ரிங்டோன் போயிற்று. சில விநாடிகளுக்குப் பின் ஹரிகிருஷ்ணனின் குரல் கேட்டது.

`‘யெஸ்..!’’

‘`என்னங்க... நான் ரிதன்யா!’’

மறுமுனையில் ஹரிகிருஷ்ணனின் குரல் சீறியது.

‘’ரிதன்யா..! இது யாரோட போன்... நீ இப்போ எங்கே இருக்கே..? கடந்த ரெண்டு மணி நேரமா உன்னைக் கான்டாக்ட் பண்ண தவியா தவிச்சுட்டிருக்கேன்.”

“டென்ஷன் ஆகாதீங்க... நான் சொல்றதைக் கொஞ்சம் நிதானமா கேளுங்க..!”

“என்ன கேட்கிறது..? உன்னோட போனுக்கு என்னாச்சு..? நம்ம பையன் அபிநய் படிக்கிற கான்வென்ட்டிலிருந்து பிரின்ஸிபால் மரிய புஷ்பம் உனக்கு போன் பண்ணி அபிநய்க்கு உடம்பு சரியில்லை என்கிற விஷயத்தைச் சொன்னாங்களா, இல்லையா..?”

“சொன்னாங்க... டாக்டர் ட்ரீட்மென்ட் கொடுத்ததுல டெம்பரேச்சர் குறைஞ்சிருக்கிறதா சொல்லி, கவலைப்பட ஒண்ணுமில்லைன்னும் சொன்னாங்க...”

“அதுக்கப்புறம் அந்த பிரின்ஸிபால் உனக்கு போன் பண்ணலையா..?”

“பண்ணலையே..!”

‘’ரிதன்யா... உனக்கு என்னாச்சு? ஆர் யூ ஆல்ரைட்..? அந்த பிரின்ஸிபால் உனக்கு மறுபடியும் போன் பண்ணி `அபிநய்க்கு ஃபீவர் குறையவேயில்லை. கொஞ்சம் சீரியஸ் கண்டிஷன். மே பி ஸ்வைன் ஃபுளு... கோயம்புத்தூருக்கு கொண்டு போய் ஏதாவது ஒரு ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணி ட்ரீட்மென்ட் தர்றது பெட்டர்னு இங்கேயிருக்கிற டாக்டர்ஸ் சொல்லிட்டாங்க. இன்னும் கொஞ்ச நேரத்துல ஆம்புலன்ஸ்ல புறப்பட்டுப் போறோம். நீங்களும் கோயம்புத்தூர் வந்துட்டா பரவாயில்லை’னு சொன்னாங்களா இல்லையா..?”

“சொ... சொல்லலையே..!”

“சொன்னாங்களாமே... நீயும் வந்துடறேன்னு சொன்னியாமே..? எனக்கு அவங்க போன் பண்ணியிருந்தாங்க...”

“அப்படீன்னா... அந்த போன்காலை பூங்கொடிதான் அட்டெண்ட் பண்ணியிருக்கணும்..!”

‘’பூங்கொடியா... யாரது..?”

“சொல்றேன்... நேத்திலிருந்து நான் ஒரு பிரச்னையில் மாட்டிக்கிட்டு தவியா தவிச்சுட்டு இருக்கேங்க. அதைச் சொல்லத்தான் உங்களுக்கு இப்ப போன் பண்ணினேன்.”

“எ... எ... என்ன பிரச்னை..?”

ரிதன்யா ஒரு ஐந்து நிமிஷ நேரத்தை செலவழித்து திவாகர் - பூங்கொடி சம்பந்தப்பட்ட எல்லா விஷயங்களையும் சொல்லி முடிக்க... செல்போனின் மறுமுனையில் இருந்த ஹரி கிருஷ்ணன் இடிந்து போயிருந்தான்.

“அது என்ன நள்ளிரவு வானவில்?”

‘’தெரியலையே..!”

‘’ரிதன்யா... நடந்திருக்கிற சம்பவங்களைப் பார்க்கும்போது இது ஒரு அசாதாரணமான விவகாரம்னு நல்லாவே தெரியுது... நீ இன்னமும் அந்த அபாய வளையத்துக்குள்ளேதான் இருக்கேனு நினைக்கிறேன்.”

‘’ஆமா..! யோகானந்த் இப்போ உயிரோடு இல்லை. கார்ல எனக்காக வெயிட் பண்ணிட்டிருந்த திவாகரும் பூங்கொடியும் காரை ரோட்ல அப்படியே விட்டுட்டு தலைமறைவாயிட்டாங்க... அவங்களால இன்னும் என்னென்ன பிரச்னைகள் வரும்னு தெரியலை. ரூபேஷ் வேற ஹோட்டலின் ரூஃப் கார்டனில் யோகானந்தின் டெட்பாடியோடு வெயிட் பண்ணிட்டிருக்கான். டி.எஸ்.பி. நம்பெருமாளுக்கு போன் பண்ணினேன். ‘நாட் ரீச்சபிள்’னு ரிக்கார்டட் வாய்ஸ் வந்தது.”

நள்ளிரவு வானவில்! - க்ரைம் தொடர் - 18

“டி.எஸ்.பி. நம்பெருமாளை கான்டாக்ட் பண்ண முடியலைன்னா என்ன... வேற போலீஸ் ஆபீஸர்ஸை கான்டாக்ட் பண்ணிப் பேசலாமே..?”

“முடியாதுங்க... இது சைபர் க்ரைம் பிராஞ்ச் சம்பந்தப்பட்ட ஹைலி கான்ஃபிடென்ஷியல் மேட்டர். ‘நள்ளிரவு வானவில்’ சம்பந்தமா எந்த ஒரு சம்பவம் நடந்தாலும் நான் அவர்கிட்ட மட்டும்தான் பேசணும்.”

“சரி... நீ இப்போ என்ன பண்ணப்போறே?”

“ரூபேஷ் எனக்காக வெயிட் பண்ணிட்டிருப்பான். நான் போய் அவன்கிட்டே விஷயத்தை சொல்லணும். நீங்க உடனே கோயம்புத்தூர் புறப்பட்டுப் போங்க. அபிநய்யை கவனிங்க...”

“பிரின்ஸிபால் அரை மணி நேரத்துக்கு முன்னாடி என்கிட்டே பேசும்போது அபிநய்யை கே.ஜி. ஹாஸ்பிடலில் அட்மிட் பண்ணியிருப்பதாகவும்... ப்ளட் டெஸ்ட், ஸ்கேன் எடுத்துப் பார்த்தபோது அது ஸ்வைன் ஃப்ளூ இல்லைன்னு தெரியவந்ததாகவும் சொன்னார். ஸோ, வீ ஆர் சேஃப். நான் அடுத்த ஃப்ளைட்ல கோயம்புத்தூர் கிளம்பறேன். இங்கே உன் ஒருத்தியால பிரச்னைகளை ஃபேஸ் பண்ண முடியுமா..?”

“தன்னோட அப்பா கொலை செய்யப்பட்டதால ரூபேஷ் இடிஞ்சு போயிருக்கான். இனி அவனை ஹேண்டில் பண்றதுல பிரச்னை இருக்காதுன்னு நினைக்கிறேன்...”

“நான் அப்படி நினைக்கலை ரிதன்யா... இனிமேல்தான் நீ அதிகப் படியான பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்னு நினைக்கறேன்.”

“ஏன்... எதனால..?”

“உன்னைத் துப்பாக்கி முனையில் மிரட்டி ஒயிட்ஃபீல்ட் ஹோட்டல் வரைக்கும் கூட்டிட்டு வந்த திவாகரும் பூங்கொடியும் காரை ரோட்ல அநாதையா விட்டுட்டு திடீர்னு தலைமறைவாக வாய்ப்பேயில்லை.”

“அப்புறம்?”

“அந்த ரெண்டு பேருக்கும் யாரோ ஒரு மூணாவது நபரால ஆபத்து ஏற்பட்டிருக்கலாம்.”

“பூங்கொடியோட செல்போனில் இருந்த ரத்தக் கறையை வெச்சு சொல்றீங்களா?”

“ஆமா..!”

“அதாவது காருக்குள்ளே ஒரு கைகலப்பு ஏற்பட்டு அதன் காரணமா ரத்தகாயம் ஏற்பட்டு அந்த ரத்தம் பூங்கொடியின் செல்போனில் பட்டிருக்கலாம்ங்கிறது உங்க கெஸ் வொர்க்?”

“ஆமா..!”

“ஸோ... இந்த ‘நள்ளிரவு வானவில்’ விவகாரத்தில் கண்ணுக்குப் புலப்படாமல் மூணாவதா ஒரு எதிரி எங்கிருந்தோ செயல்படறான்னு சொல்ல வர்றீங்க?”

“அதேதான்! நீ இனிமேல்தான் ரொம்பவும் ஜாக்கிரதையா இருக்கணும். ரூபேஷைப் போய்ப் பார்க்கிறதுக்கு முன்னாடி நீ டி.எஸ்.பி. நம்பெருமாள்கிட்டே பேசிடறது முக்கியம்.”

“அவருக்குப் போன் பண்ணினால்தான் ரெஸ்பான்ஸே இல்லையே?”

“அவரோட செல்லுக்கு ட்ரை பண்ணாதே! அவர் இந்த நேரத்துக்கு ஆபீஸில்தானே இருப்பார்...?”

“ஆமா..!”

“ஆபீஸோட லேண்ட் லைனுக்கு போன் பண்ணு...”

“சரி... நான் போன் பண்றேன். டி.எஸ்.பி. கிட்டே விஷயத்தைக் கொண்டுபோயிட்டா அதுக்கப்புறமா விசாரணையெல்லாம் டிபார்மென்ட் ரீதியாகத்தான் இருக்கும். நீங்க கோயம்புத்தூர் போய் அபிநய்யை நல்லவிதமா பார்த்துக்குங்க... நான் இங்கே இருக்கிற நிலவரத்தைப் பார்த்துக்கிட்டு புறப்பட்டு வர்றேன்.”

“அப்புறம்... ரிதன்யா...”

“சொல்லுங்க...”

“இனிமே உனக்கு இந்த போலீஸ் வேலை வேண்டாம். இப்போ நீ பார்த்துட்டு இருக்கிற ‘நள்ளிரவு வானவில்’ கேஸ்தான் உன்னோட கடைசி கேஸா இருக்கணும்.”

“அதைப்பத்தியெல்லாம் பேச இது சரியான நேரமில்லை. நான் போனை கட் பண்றேன். கோயம்புத்தூர் போய்ச் சேர்ந்ததும் எனக்கு உடனடியா தகவல் கொடுங்க... அபிநய் இப்போ எப்படி இருக்கானோன்னு ஒரே பதைபதைப்பா இருக்கு!”

“அவன் ஃபீவரிலிருந்து ரெக்கவர் ஆயிட்டு வர்றதா பிரின்ஸிபால் சொல்லிட்டாங்க. யூ டேக் கேர் வித் யுவர் ஆக்டிவிட்டீஸ்!”

- மறுமுனையில் ஹரிகிருஷ்ணன் செல்போனை அணைத்துவிட, ரிதன்யா அடுத்த சில விநாடிகளில் நம்பெருமாளின் டி.எஸ்.பி. அலுவலகத்தைத் தொடர்புகொள்ள... உதவியாளர் ஒருவர் ரிஸீவரை எடுத்தார்.

“ஹலோ..!”

“நான் ரிதன்யா பேசறேன்.”

“சொல்லுங்க மேடம்...”

“பேசறது யாரு... புருஷோத்தமனா?”

“ஆமா மேடம்...”

“டி.எஸ்.பி. ஆபீஸுக்கு வந்துட்டாரா?”

“வந்துட்டார் மேடம்... ரூம்ல யார் கூடவோ பேசிட்டிருக்கார்”

“நான் உடனடியா அவர்கிட்டே பேசணும். மேட்டர் ஈஸ் வெரி அர்ஜென்ட்!”

“உடனடியா லைன் தர்றேன் மேடம்..!”

அடுத்த சில விநாடிகளில் இணைப்பு கிடைத்தது. நம்பெருமாள் பேசினார். “சொல்லு ரிதன்யா... எனிதிங் இம்பார்ட்டன்ட்?”

நள்ளிரவு வானவில்! - க்ரைம் தொடர் - 18

“ஆமா ஸார்..! நீங்க இம்மீடியட்டா புறப்பட்டு ஒய்ட்ஃபீல்டில் இருக்கிற ‘ப்ளஸன்ட் ஓஷன்’ ஹோட்டலுக்கு வரணும். ‘நள்ளிரவு வானவில்’ மேட்டர் ஒரு விபரீதமான முடிவை நோக்கிப் போயிட்டிருக்கு...”

“ஏன்... என்னாச்சு?”

“ஃப்யூச்சர் மிராக்கிள் கம்பெனியின் எம்.டி. யோகானந்த் இப்போ உயிரோடு இல்லை. ஹீ ஈஸ் மர்டர்ட் பை ஸம்படி இன் தட் ஹோட்டல் ரூஃப் கார்டன்...”

“எ... எ... எப்போ?

“சம்பவம் எப்போ நடந்ததுன்னு தெரியலை ஸார். நானும் ரூபேஷும் அவரைப் பார்க்கப் போனபோது அவர் இறந்து போயிருந்தார்.”

“நீ எதுக்காக அங்கே போனே?”

“நேர்ல வாங்க ஸார்... எல்லாத்தையும் சொல்றேன்.”

மறுமுனையில் ரிதன்யா செல்போனை அணைத்துவிட... டி.எஸ்.பி. நம்பெருமாள் வியர்த்துவிட்ட முகத்தோடு, தனக்கு எதிரில் உட்கார்ந்திருந்த போலீஸ் கமிஷனர் ராஜகணேஷைப் பார்த்தார்.

“மிஸ்டர் ராஜகணேஷ்... நீங்க சென்னை யிலிருந்து பெங்களூர் வந்து ‘நள்ளிரவு வானவில்’ சம்பந்தமா யோகானந்தை விசாரிக்க இருந்த விஷயம் வேற யாருக்காவது தெரியுமா...?”

ராஜகணேஷ் தீர்க்கமாய் தலையாட்டினார்.

“சான்ஸே இல்லை... இது ஒரு ‘இன்-கேமரா’ மேட்டர்...”

“சில மணி நேரத்துக்கு முன்னாடி யோகானந்த் ஒரு ஹோட்டலின் ரூஃப் கார்டனில் வைத்து கொலை செய்யப்பட் டிருக்கார்.”

“எ... எ... எப்படி..?”

“தெரியலை... என்னுடைய ‘இன்வெஸ்டிகேஷன் விங்’கில் இருக்கிற ரிதன்யாகிட்டயிருந்து வந்த செய்தி. நாம உடனடியா ஸ்பாட்டுக்குப் போகணும்.”

இருவரும் அறையை விட்டு வேகமாக வெளிப்பட்டார்கள். அலுவலகத்தின் நீள வராந்தாவில் நடக்கும்போது நம்பெருமாளின் செல்போன் முணுமுணுப்பாய் கூப்பிட்டது. எடுத்து அழைப்பது யார் என்று பார்த்தார்... ரூபேஷ்.
 
தன்னுடைய முகத்தில் எந்தவிதமான உணர்ச்சியையும் காட்டிக்கொள்ளாமல், காதுக்கு செல்போனைக் கொடுத்தார்.

“சொல்லு..!”

மறுமுனையில் ரூபேஷ் பேசினான். குரலில் பயமும் நடுக்கமும் தெரிந்தது.

“டி.எஸ்.பி. ஸார்! நாம நினைச்சமாதிரியே அப்பாவைக் கொன்னுட்டாங்க... இனி நாம ரெண்டு பேரும் ஜாக்கிரதையா இருக்கணும்.”

- தொடரும்...

ராஜேஷ்குமார்  ஓவியங்கள்: அரஸ்