மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நள்ளிரவு வானவில்! - க்ரைம் தொடர் - 20

நள்ளிரவு வானவில் | ராஜேஷ்குமார்
பிரீமியம் ஸ்டோரி
News
நள்ளிரவு வானவில் | ராஜேஷ்குமார் ( நள்ளிரவு வானவில் | ராஜேஷ்குமார் )

ராஜேஷ்குமார், ஓவியங்கள்: அரஸ்

சார்லஸ் நீட்டிய ஃபாரன்ஸிக் ரிப்போர்ட்டை வாங்கிக்கொண்ட டி.எஸ்.பி. நம்பெருமாள், அதை நிதானமாகப் படித்துப் பார்த்துவிட்டு, தன் அருகே அமர்ந்திருந்த கமிஷனர் ராஜகணேஷிடம் கொடுத்தார்.

“ப்ளீஸ் கோ த்ரூ இட் ஸார். இதுல உங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால், மிஸ்டர் சார்லஸ்கிட்டே கேட்டு க்ளியர் பண்ணிக்கலாம்.”

ரிப்போர்ட்டின் பக்கங்களை ராஜகணேஷ் புரட்ட, அறை நிசப்தத்தில் இருந்தது. ரூபேஷ் நெற்றியைப் பிடித்தபடி தலை கவிழ்ந்திருக்க, ரிதன்யா இறுக்கமான முகத்தோடு நாற்காலியில் சாய்ந்திருந்தாள்.

ரிப்போர்ட்டைப் படித்து முடிக்க முழுசாக இரண்டு நிமிஷங்களை எடுத்துக்கொண்ட ராஜகணேஷ், சார்லஸ்ஸை ஏறிட்டார்.

“யோகானந்தோட மரணத்துக்குக் காரணம் `ஏ ரேர் ஆஃப் த ரேரஸ்ட் பாய்ஸன்’னு போட்டிருக்கீங்களே... அந்த பாய்ஸனுக்கு பேர் கிடையாதா?”

“பேர் இருக்கு ஸார்...”

“பின்னே ஏன் மென்ஷன் பண்ணலை?”

நள்ளிரவு வானவில்! - க்ரைம் தொடர் - 20

“ஸாரி ஸார்... சில வகை பாய்ஸன்களோட பேரை ரிப்போர்ட்ல மென்ஷன் பண்ணக்கூடாதுன்னு எழுதப்படாத சட்டம் ஒண்ணு ஃபாரன்ஸிக் செக்‌ஷன்ல இருக்கு. பட், இந்த பாய்ஸனோட பூர்வீகத்தைப் பற்றியும் இதனோட ப்ளஸ், மைனஸ் பாயின்ட்ஸ் என்ன என்பதைப் பற்றியும் சொல்ல எந்தவிதமான ரெஸ்ட்ரிக்‌ஷனும் இல்லை. சொல்லலாமா ஸார்?”

“ப்ளீஸ்..!”

“ஸார்... அரிதிலும் அரிதான இந்த பாய்ஸனோட பூர்வீகம் தெற்கு சீனப் பகுதியில் இருக்கும் ஷாங்சீ என்கிற ஒரு மலைப்பிரதேசம். அந்த மலைப்பகுதியில் இருக்கும் ‘சைனீஸ் கோப்ரா’ எனப்படும், ஒரு அடி நீளம் மட்டுமே இருக்கும் பாம்புகளிடம் இருந்து விஷத்தை எடுத்து, அதை திடப்பொருளாக்கி உடைத்து பவுடராக மாற்றி, காப்ஸ்யூல்களில் அடைத்து ‘லைஃப் சேவிங் ட்ரக்ஸ்’ என்ற பெயரில் ஒரு சில குறிப்பிட்ட நாடுகளுக்கு மட்டும் சப்ளை செய்யப்படுகிறது. அந்த லிஸ்ட்டில் நம்ம நாடும் இருக்கு. உண்மையில் இந்த பாய்ஸனை ஒரு குறிப்பிட்ட பிக்கோகிராம் (Picogram) அளவு கொடுத்து ஒரு நோயாளியின் உயிரைக் காப்பாற்ற முடியும். பிக்கோகிராமின் அளவை அதிகப்படுத்தும்போது மட்டும்தான் இது ஒரு கொடிய விஷமாக மாறி உயிரைப் பறிக்கும். எந்த ஒரு விஷமும் ஒரு மனிதனின் மரணத்துக்கு தான் காரணம் என்பதை ஒப்புக்கொள்ளும். ஆனா, இந்த பாய்ஸன் மட்டும் தன்னை வெளிப்படுத்திக்கொள்ளாமல் பதுங்கிக்கொண்டு மௌனம் சாதிக்கும். இந்த ஒரு காரணத்துக்காகவே இந்த பாய்ஸனுக்கு ‘ஸ்டெப் மதர் பாய்ஸன்’ என்கிற ஒரு செல்லப் பெயரும் உண்டு!”

“இந்த விஷத்தோட தாயகம் சீனா மட்டும்தானா... இல்லை, வேறு நாடு ஏதாவது உண்டா..?”

“சீனா மட்டும்தான் ஸார்...”

ராஜகணேஷின் பார்வை இப்போது ரூபேஷின் பக்கம் திரும்பியது.

“மிஸ்டர் ரூபேஷ்... உங்களுடைய ஐ.டி. கம்பெனிக்கும் சீனாவில் இருக்கிற ஐ.டி. கம்பெனி

களுக்கும் ஏதாவது தொடர்பு உண்டா..?”

“இல்ல ஸார்.”

“ப்ளீஸ்..! அவசரப்பட்டு எந்த ஒரு பதிலையும் சொல்லாதீங்க. தொலைத்தொடர்பு தொழில்நுட்பம் சம்பந்தமா எந்த ஒரு சீனப் பிரதிநிதியாவது கடந்த வருடமோ, அதற்கு முந்தைய வருடமோ உங்கள் கம்பெனிக்கு வந்து பேச்சுவார்த்தை ஏதேனும் நடத்தியது உண்டா..?”

“சர்ட்டன்லி நாட் ஸார்... ஐயாம் ஷ்யூர் அபௌட் இட்!”

ராஜகணேஷ், ரிதன்யாவிடம் திரும்பி கையை நீட்டினார்... “அந்த போட்டோவைக் கொடுங்க மிஸஸ் ரிதன்யா!”

ரிதன்யா தன் கைப்பையைத் திறந்து, பத்திரப்படுத்தி வைத்திருந்த போஸ்ட் கார்டு சைஸ் போட்டோவை எடுத்து நீட்ட, அவர் அதை வாங்கி ரூபேஷிடம் கொடுத்தார்.

“ஒரு நிமிஷம் இந்த போட்டோவைப் பாருங்க..!”

ரூபேஷ் வாங்கிப் பார்த்தான்.

நாற்பது வயது வெளிநாட்டுப் பெண் ஒருத்தி கறுப்பு கவுனில் கேமராவைப் பார்த்து சிரித்தபடி இருந்தாள். உடையின் மேல் பட்டன் அவிழும் அபாயத்தில் இருந்தது.

“யார் ஸார் இது?” - ரூபேஷ் கேட்க, ராஜகணேஷ் சிரித்தார்...

“இந்தக் கேள்விக்கு நீங்கதான் பதில் சொல்லணும்!”

ரூபேஷ் திகைத்தான்.

“நான் பதில் சொல்லணுமா... எனக்கு எப்படி ஸார் தெரியும்?”

“இந்த வெளிநாட்டுப் பெண்ணோட போட்டோவை நான் எங்கேயிருந்து எடுத் தேன்னு சொன்னா உங்க ஆச்சர்யம் இன்னும் கொஞ்சம் அதிகமாகும்...”

“எங்கேயிருந்து எடுத்தீங்க..?”

ராஜகணேஷ் மறுபடியும் ரிதன்யாவைப் பார்க்க, அவள் மறுபடியும் தன்னுடைய கைபையைத் திறந்து அதிநவீன செல்போன் ஒன்றை எடுத்து வைத்தாள்.

“இது யாரோட செல்போன்னு தெரியுதா மிஸ்டர் ரூபேஷ்..?”

“தெரியலை ஸார்.”

“இது உங்க அப்பாவோட செல்போன். உங்க கம்பெனியில் இருக்கும் அவருடைய பெர்சனல் ரூமை தரோவா செக் பண்ணிப் பார்த்தபோது சுவரோர ஷெல்ஃபின் மறைவான பகுதிக்குள்ளே இந்த செல்போன் ஒளித்து வைக்கப்பட்டு இருந்தது. மிகப்பெரிய வி.ஐ.பி-க்கள் மட்டுமே பயன்படுத்துகிற இது மாதிரியான அல்ட்ரா ஸ்மார்ட் செல்போன்கள் மூலமா தனக்குத் தெரிந்த, மிகவும் அறிந்த நபர்களை மட்டுமே தொடர்புகொள்ள முடியும்... இது மாதிரியான போன்கள் இந்தியாவுக்கு 2020-ல்தான் வரும். இந்த போனை உங்கப்பாவுக்கு தன்னுடைய பரிசா கொடுத்ததே இந்தப் பெண்தான்.”

“உங்களுக்கு எப்படி ஸார் தெரியும்?”

“இந்த செல்போனை ‘ஆன்’ பண்ணுங்க. அது எப்படினு உங்களுக்கே தெரியும்!”

ரூபேஷ், ராஜகணேஷ் நீட்டிய செல்போனை வாங்கி அதை `ஆன்’ செய்ததுமே செல்போன் திரையில் அந்தப் பெண்ணின் போட்டோ ஸ்லோமோஷனில் உற்பத்தியாயிற்று.

போட்டோவுக்குக் கீழே ஆங்கிலத்தில் வார்த்தைகள்...

Mr. Yog!

This is my humble gift...

Accept it.

ரூபேஷ் குழப்பமான முகத்தோடு செல்போனிலிருந்து நிமிர்ந்தான்... “ஸார்! இந்த போன் விஷயம் எனக்குப் புதுசா இருக்கு. இந்த ஃபாரின் லேடி யார்னு எனக்குத் தெரியலை ஸார்.”

“உங்க ஃபாதர் பெண்கள் விஷயத்தில் எப்படி..?”

“ஸார்.... என்னோட மதர் இறந்தபோது எனக்குப் பத்து வயசு. அந்த சமயத்துல அப்பாவுக்கு வயசு நாற்பதுதான். ஆனா, அவர் ரீமேரேஜ் பண்ணிக்கலை. ரிலேட்டிவ்ஸ், ஃப்ரெண்ட்ஸ் எல்லாருமே சொல்லிப் பார்த்தாங்க. அவர் கேட்கலை. என்னைப் பொறுத்தவரைக்கும் பெண்கள் விஷயத்துல அவர் மிஸ்டர் க்ளீன். எனக்குத் தெரிஞ்சு அவர்கிட்டே இருக்கிற ஒரே ஒரு கெட்ட பழக்கம் விதம்விதமான பிராண்ட்களில் லிக்கர் கன்ஸ்யூம் பண்றதுதான்.”

“ஸோ... உங்களுக்கு இந்த ஃபாரின் லேடி யார்னு தெரியாது..?”

“தெரியாது ஸார்...”

“இந்த அல்ட்ரா ஸ்மார்ட் செல்போனை ஒரு மணி நேரமா கிளறிப் பார்த்தும் கேஸுக்கு பாஸிட்டிவ்வா ஒரு சின்னத் தகவல்கூட கிடைக்கலை. கிடைச்ச ஒரே விஷயம், இந்த போட்டோதான். பை த பை, உங்களுக்கு பசவன்குடியில் சொந்தத்துல ஒரு ஃபார்ம் ஹவுஸ் இருக்காமே... அது உண்மையா?”

“உண்மைதான் ஸார்..!”

“ஒவ்வொரு பௌர்ணமியன்னிக்கும் உங்க ஃபாதர் அந்த ஃபார்ம் ஹவுஸுக்குப் போயிடுவாராமே..?”

“இதை உங்களுக்கு யார் ஸார் சொன்னது?

“கடந்த 48 மணி நேர விசாரணையில் உங்க கம்பெனியின் ‘கீ போஸ்ட்’களில் இருக்கும் 119 பேரை விசாரிச்சதுல, மூணு பேர் இந்தத் தகவலைச் சொன்னாங்க. அது என்ன பௌர்ணமி நாட்களில் மட்டும் அந்த ஃபார்ம் ஹவுஸுக்கு விஜயம்?”

“ஃபார்ம் ஹவுஸ் அமைந்திருக்கிற அந்த இடம் ஒரு வெட்டவெளி ஏரியா ஸார். பௌர்ணமி நாட்களில் அந்த இடம் ரொம்பவும் அழகா இருக்கும்னு அப்பா சொல்வார். அதுக்காகவே அங்கே ஸ்டே பண்ணிட்டு வருவார்.”

நள்ளிரவு வானவில்! - க்ரைம் தொடர் - 20

“அது மட்டும்தான் காரணமா?”

“வேற என்ன காரணம் இருக்கும்னு நீங்க நினைக்கறீங்க..?”

“அந்த ஃபார்ம் ஹவுஸை சோதனை போட்ட பிறகுதான் அந்தக் காரணத்தைச் சொல்ல முடியும்...”

“இப்பவே வேணும்னாலும் பசவன்குடியில் இருக்கிற அந்த ஃபார்ம் ஹவுஸுக்குப் புறப்பட்டுப் போலாம் ஸார். நானும் சரி, என்னோட அப்பாவும் சரி... சட்டவிரோதமான காரியங்களுக்கு எதிரானவங்க. மிஸஸ் ரிதன்யாகிட்டே நாங்க அன்னிக்கு கடுமையா நடந்துகிட்டதுக்குக் காரணம், எங்களுக்கு சம்பந்தமே இல்லாத ஒரு விஷயத்தைப் பத்தி என்கொயரி பண்ண வந்ததுதான்.”

“மிஸ்டர் ரூபேஷ்... நீங்க ஒரு விஷயத்தை தெளிவா புரிஞ்சுக்கணும். ‘நள்ளிரவு வானவில்’ என்கிற ஒரு விஷயத்துக்கும் உங்களுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லைனு சொல்றீங்க. ஆனா... திவாகர், பூங்கொடி என்கிற இரண்டு பேர் ரிதன்யாவின் வீட்டுக்கே போய் அவங்களை ஹவுஸ் அரஸ்ட் பண்ணி மிரட்டியிருக்காங்க. `நள்ளிரவு வானவில்’ மேட்டர் உங்களுக்கும் உங்க ஃபாதருக்கும் தெரியும்னு சொல்லியிருக்காங்க. அவங்க மிரட்டலுக்குப் பயந்துதான் ரிதன்யாவும் ஒயிட்ஃபீல்டில் இருந்த அந்த ஹோட்டலுக்கு உங்க அப்பாவைப் பார்க்க வந்தாங்க. அன்ஃபார்ச்சுனேட்லி யோகானந்த் வாஸ் மர்டர்ட் பை ஸம்படி. திவாகர், பூங்கொடி யார்னு உங்களுக்குத் தெரியுமா?

“ஸார்! நான் ஏற்கெனவே இந்தக் கேள்விக்குப் பதில் தெரியாதுனு சொல்லிட்டேன். அவங்களை யாரோ ‘மிஸ்கைடு’ பண்ணியிருக்காங்க... என்னோட ஃபாதர் கொலை செய்யப்பட்ட  விஷயத்தை திவாகருக்கும், பூங்கொடிக்கும் ரிதன்யா தெரியப்படுத்தறதுக்கு முன்னாடியே அந்த ரெண்டு பேரும் காரை அதே இடத்துல நிறுத்திட்டு தப்பிச்சுப் போயிட்டாங்க. அப்படீன்னா, என்னோட அப்பா கொலை செய்யப்பட்ட விஷயம் முன்னாடியே அவங்களுக்குத் தெரிஞ்சிருக்கு.”

ரிதன்யா இடைமறித்துச் சொன்னாள்...

“ஸார்... பசவன்குடியில் இருக்கிற யோகானந்தின் ஃபார்ம் ஹவுஸுக்குப் போய் ஒரு கம்ப்ளீட் சர்ச் பண்ணினாலே நம்மகிட்டே இருக்கிற விடை தெரியாத பல கேள்விகளுக்கு விடைகள் கிடைக்கலாம்.”

ரூபேஷ் இருண்டு போன முகத்தோடு ராஜகணேஷை ஏறிட்டான். “ஸார்... என் அப்பாவோட உயிருக்கு ஆபத்து ஏற்பட்ட மாதிரி என்னோட உயிருக்கும் ஆபத்து ஏற்படலாம். `நள்ளிரவு வானவில்’ சம்பந்தப்பட்ட விஷயங்கள் எனக்கும் அப்பாவுக்கும் தெரியும்னு யாரோ தப்பா நினைச்சுக் கிட்டு செயல்பட்டுக்கிட்டு இருக்காங்க. அதைத் தடுத்து நிறுத் தணும்னா உடனடியா உங்க இன்வெஸ்டிகேஷனை தீவிரப் படுத்தணும். அப்பாவோட ஃபார்ம் ஹவுஸுக்கு உடனே போலாம் ஸார். அங்கே என்னோட பார்வைக்குத் தட்டுப்படாத சில தடயங்கள் உங்க பார்வைக்குத் தட்டுப்படலாம்” - ரூபேஷ் சொல்லிக்
கொண்டிருக்கும்போதே டி.எஸ்.பி. நம்பெருமாளுக்கு முன்பாக இருந்த இன்டர்காம் டெலிபோன் மெலிதாய் சிணுங்கிக் கூப்பிட்டது.

ரிஸீவரை எடுத்தார் நம்பெருமாள். மறுமுனையில் பேசிய நபரின் பேச்சை அரை நிமிஷ நேரம் செவிமடுத்துவிட்டு, பாறையாய் இறுகிப்போன முகத்தோடு ரிஸீவரை வைத்துவிட்டு, ராஜகணேஷிடம் திரும்பினார்.

“ஸார்... இந்த சைபர் க்ரைம் பிராஞ்ச் கட்டடத்தின் வளாகத்தில் இருக்கிற சி.சி.டி.வி. கேமராக்களின் ஒருங்கிணைப்பு அதிகாரியான மிஸ்டர் சர்வானந்த் கௌடா உங்களைத் தனிப்பட்ட முறையில் பார்த்து பேச விரும்பறார். உங்களுக்கு ஏதும் ஆட்சேபனை இல்லையே?”

“நோ... நோ... ஏதோ ஒரு முக்கியமான விஷயமா இருக்கப் போய்த்தானே அவர் என்னோட பேச விரும்பறார்...”- சொல்லியபடியே ராஜகணேஷ் எழுந்துகொண்டார்.

சைபர் க்ரைம் பிராஞ்ச் வளாகத்தின் கோடியில் இருந்தது சி.சி.டி.வி. கேமராக்களின் ஒருங்கிணைப்பு மையம். நடுத்தர வயதில் இருந்த சர்வானந்த் கௌடா, பாதி வழுக்கைத் தலையோடு பிரெஞ்ச் தாடி வைத்துக் கொண்டு தொண்ணூறு கிலோ உடம்போடு நாற்காலியில் நிரம்பியிருந்தார். உத்யோக ரீதியான புன்னகையோடு வரவேற்றவரின் உச்சரிப்பில் நல்ல ஆங்கிலம் தெரிந்தது...

“தேங்க்ஸ் ஃபார் யுவர் கம்மிங்!”

“நோ ஃபார்மாலிட்டீஸ்... கம் டு த பாயின்ட்.”

“உங்களோடு மட்டுமே ஒரு விஷயத்தைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்...”

“ப்ளீஸ்..!”

“டெல்லி ஃப்யூச்சர் மிராக்கிள் கம்பெனியில் பணியாற்றிக்கொண்டிருந்த ஞானேஷ் என்பவர் கொலை செய்யப்பட்டு, அவருடைய அஸ்தி சாம்பல், மீராவின் வீட்டு மொட்டை மாடியில் ஒரு மண்சட்டியில் வைக்கப் பட்டிருந்தது உண்மைதானே..?”

“உண்மைதான்..!”

“அந்த சாம்பலை டி.என்.ஏ. சோதனைக்கு அனுப்பி வைத்து ரிப்போர்ட் வாங்கினீர்களா?”

“வாங்கினேன்.”

“ரிப்போர்ட் சொன்ன செய்தி என்ன?”

“அது ஞானேஷின் சாம்பல்தான் என்று ரிப்போர்ட் உறுதிபடுத்தியிருந்தது.”

“அதை நீங்களும் நம்பிவிட்டீர்கள்..?”

“நேஷனல் பயாலாஜிகல் ரிசர்ச் யூனிட் கொடுத்த ரிப்போர்ட்டை நம்பாமல் இருக்க முடியுமா..?”

“அது பொய்..!”

“வாட் டூ யூ மீன்..?!”

“ஞானேஷ் உயிரோடு இருக்கிறார்... ஒரு ஏ.டி.எம். சென்டரில் பணம் எடுப்பதற்காக வரிசையில் நகர்ந்துகொண்டு இருக்கிறார். பார்க்கிறீர்களா..?”

சர்வானந்த் கௌடா சொல்லிக்கொண்டே தன் கையில் வைத்திருந்த ரிமோட் கன்ட்ரோலை எதிரேயிருந்த டி.வி. திரைக்கு முன்பாக நீட்டி, பட்டனை அழுத்தினார்.

நாற்பத்தியாறு அங்குல டி.வி-யின் திரை உயிர் பிடித்துக்கொண்டு வெளிச்சமாய் ஒளிர்ந்தது.

- தொடரும்...