அக்டோபர் 7-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை`ஜோதிட ரத்னா’ கே.பி.வித்யாதரன்
உழைப்புக்கு அங்கீகாரம்!

மேஷம்:அதிகாரத்துக்கு தலை வணங்காதவர்களே! சூரியன் வலுவாக 6-ம் வீட்டில் நிற்பதால், நினைத்த காரியம் நிறைவேறும். சுபநிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். பிள்ளைகள் பாசமாக நடந்துகொள்வார்கள். குருபகவான் வலுவாக 5-ம் வீட்டில் தொடர்வதால், அனுபவபூர்வமாகப் பேசி, காரியம் சாதிப்பீர்கள். ராசிநாதன் செவ்வாயும் 5-ல் நிற்பதால், சில நாட்களில் தூக்கமில்லாமல் போகும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும்.
கடின உழைப்புக்கு அங்கீகாரம் கிடைக்கும் காலமிது.
உடன்பிறந்தவரால் உதவி!

ரிஷபம்: எப்போதும் நியாயமாகப் பேசுபவர்களே! 4-ல் செவ்வாய் நிற்பதால், வாழ்க்கைத் துணைவரின் வருமானம் உயரும். சகோதரர் ஓடி வந்து உதவுவார். சிலர் அயல்நாடு சென்று வருவீர்கள். கேதுபகவான் லாப வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால், எந்த பிரச்னையையும் சமாளிக்கும் சக்தி உங்களுக்குக் கிடைக்கும். ஷேர் மூலம் பணம் வரும். வீடு கட்டும் பணியைத் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் வழக்கமான லாபம் உண்டு. உத்யோகத்தில் வேலைச்சுமையும், விமர்சனங்களும் அதிகரிக்கும்.
விட்டுக்கொடுக்க வேண்டிய நேரமிது.
செயல் வேகம் கூடும்!

மிதுனம்: சமாதானத்தை விரும்பு பவர்களே! சூரியன் 4-ல் நிற்பதால், எதிர்பார்ப்புகள் தடையின்றி நிறைவேறும். அரசாங்க வேலைகள் வேகமாக முடியும். இங்கிதமான பேச்சால் உறவினர்களைக் கவருவீர்கள். சுக்கிரன் சாதகமாக இருப்ப தால், உங்கள் செயலில் வேகம் கூடும். உங்கள் ரசனைக்கேற்ற வீட்டுக்கு மாறுவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் அதிகாரிகளின் அந்தரங்க விஷயங்களை வெளியில் சொல்லிக்கொண்டிருக்க வேண்டாம்.
தடுமாற்றம், தயக்கம் நீங்கி தைரியம் கூடும் காலமிது
வீடு, வாகன வசதி பெருகும்!

கடகம்: கற்பனைத் திறன் கொண்டவர்களே! ராகு வலுவாக 3-ம் வீட்டிலேயே தொடர்வதால், உங்களிடம் கடன் வாங்கியவர்கள் பணத்தைத் திருப்பித் தருவார்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். வீடு, வாகன வசதி பெருகும். 5-ல் சனி இருப்பதால், வீண் விரயம் ஏற்படலாம். 2-ல் செவ்வாய் நீடிப்பதால், முன்கோபத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க நேரிடலாம். வியாபாரத்தில் உங்களுக்கு இரட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் அதிகாரிகளின் பாராட்டால் நீங்கள் உற்சாகமடைவீர்கள்.
பெருமை சேர்க்கும் நேரமிது.
திடீர் பணவரவு!

சிம்மம்: கொள்கை, கோட்பாடு களை மாற்றிக்கொள்ளாதவர்களே! புதன் வலுவாக இருப்பதால், திடீர் பணவரவு ஏற்படும். தோற்றப் பொலிவு கூடும். செவ்வாய் ராசிக்குள்ளும், ராசிநாதன் சூரியன் 2-லும் நிற்பதால், உடல்நலக் கோளாறு வந்து நீங்கும். சனி 4-ல் நிற்பதால்... வேலைச்சுமை, மறைமுக விமர்சனங்கள் ஏற்படும். சுக்கிரன் ராசிக்குள் அமர்ந்திருப்பதால்... ஆடை, ஆபரணம் சேரும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களைத் தீட்டுவீர்கள். உத்யோகத்தில் புதிய பொறுப்புகள் தேடி வரும்.
பிரச்னைகளில் இருந்து விடுபடும் வேளையிது.
கடின உழைப்பு கைகொடுக்கும்!

கன்னி: சந்தர்ப்ப சூழ்நிலையை அனுசரித்துச் செல்பவர்களே! சுக்கிரனும், ராசிநாதன் புதனும் சாதகமாக இருப்பதால், விடாமுயற்சி, கடின உழைப்பால் வெற்றி பெறுவீர்கள். சூரியன் ராசிக்குள் நுழைவதால்... உடல் உபாதை வந்து போகும். ராசிக்குள் ராகுவும், 7-ல் கேதுவும் தொடர்வதால், சிலருக்கு வாழ்க்கைத் துணைவருடன் `ஈகோ’ பிரச்னை வரும். வியாபாரத்தில் ரகசியங்கள் யார் மூலம் கசிகிறது என்பதை அறிந்து நடவடிக்கை எடுப்பீர்கள். உத்யோகத்தில் மற்றவர்களுடன் அனுசரித்துச் செல்லுங்கள்.
சூழ்ச்சிகளை முறியடிக்கும் தருணமிது.
அதிருப்தி விலகும்!

துலாம்: `எல்லோரும் நல்ல வர்கள்’ என்று நினைப்பவர்களே! ராசிநாதன் சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால், எதிர்பார்த்த வகையில் பணம் வரும். புதன் 12-ல் மறைந்திருப்பதால், உறவினர்கள் மத்தியில் இருந்த அதிருப்தி விலகும். சூரியனும் 12-ல் மறைந்திருப்பதால், திடீர் பயணங்கள் மேற்கொள்ள நேரிடலாம். 2-ல் சனி நிற்பதால், பேச்சால் பிரச்னை வந்து செல்லும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் உங்களின் திறமைக்குப் பாராட்டு கிடைக்கும்.
வசதி, வாய்ப்புகள் கூடும் நேரமிது.
பிள்ளைகளால் பெருமை!

விருச்சிகம்: பாகுபாடு பார்க்காமல் எதையும் செய்பவர்களே! சூரியன் லாப வீட்டில் நிற்பதால், இழுபறியாக இருந்த வேலைகள் உடனே முடியும். எதிர்த்தவர்கள் நண்பர்களாவார்கள். பிள்ளைகள் முன்னேற வேண்டுமென துடிப் பார்கள். ராசிநாதன் செவ்வாய் 10-ல் அமர்ந்திருப்பதால், அதிகாரப் பதவியில் இருப்பவர்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் அறிவித்து லாபம் ஈட்டுவீர்கள். குரு 10-ல் தொடர்வதால், உத்யோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.
புகழ், கௌரவம் கூடும் தருணமிது.
வெற்றிக்கு வித்திடும் வேளை!

தனுசு: தர்மத்தின் பாதையில் செல்பவர்களே! சூரியன் 10-ல் நிற்பதால், உங்களின் ஆளுமைத் திறன் அதிகரிக்கும். அரசால் அனு கூலம் உண்டு.நட்பு வட்டம் விரியும். உடன்பிறந்தவர் களின் அரவணைப்பு அதிகரிக்கும். வெள்ளியாலான பொருட்கள் வாங்குவீர்கள். குருபகவான் வலுவாக அமர்ந்திருப்பதால், பணபலம் உயரும். சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். வியாபாரத்தில் புது ஏஜென்சி எடுப்பீர்கள். அனுபவமிக்க வேலையாட்கள் அமைவார்கள். உத்யோகத்தில் புதுப் பதவி கிடைக்கும்.
வெற்றிக்கு வித்திடும் வேளையிது.
இல்லறம் இனிக்கும்!

மகரம்: தொடங்கிய வேலையை சரியாக செய்து முடிப்பதில் அதிக ஆர்வமுள்ளவர்களே! ராசிநாதன் சனிபகவான் வலுவாக அமர்ந்திருப்பதால், வாழ்க்கைத் துணைவர் இனிமையாகப் பேசுவார். வீட்டை அழகுபடுத்துவீர்கள். பிள்ளைகளால் உறவினர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். குரு 8-ல் நீடிப்பதால், யாருக்கும் பணம் வாங்கித் தருவதில் ஈடுபடாதீர்கள். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் சம்பாதிப்பீர்கள். உத்யோகத்தில் வேலைச்சுமை இருந்தாலும் சாதிப்பீர்கள்.
நீண்ட நாள் கனவு நிறைவேறும் காலமிது.
உற்சாகமடையும் வேளை !

கும்பம்: எல்லோரிடமும் அன்பாக நடந்துகொள்பவர்களே! ராசிநாதன் சனிபகவான் 10-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால், வெகுநாள் கனவாக இருந்த வீடு வாங்கும் ஆசை இப்போது நிறைவேறும். சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும். உறவினர் தொடர்பான பிரச்னைகள் முடிவுக்கு வரும். சுக்கிரன் 7-ல் அமர்வதால், சோர்வு நீங்கி உற்சாகமடைவீர்கள். வியாபாரத்தில் புது சரக்குகளைக் கொள்முதல் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்களுக்கு தொல்லை தந்த உயரதிகாரி இடம் மாறுவார்.
அடிப்படை வசதிகள் பெருகும் நேரமிது.
தேக்க நிலை மாறும்!

மீனம்: மரியாதை கொடுப்பவர் களிடம் வளைந்து செல்பவர்களே! புதன் 7-ல் நிற்பதால்... உறவினர், தோழிகளுடன் இருந்த விரிசல்கள் விலகும். செவ்வாய் 6-ம் வீட்டில் உச்சம் பெற்றிருப்பதால், வீடு, மனை வாங்குவது, விற்பதில் இருந்த தேக்க நிலை மாறும். குருவும், சுக்கிரனும் 6-ல் தொடர்வதால், பெரிய அளவில் யாருக்கும் முன் பணம் தர வேண்டாம். வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் தள்ளிப் போகும். உத்யோகத்தில் நீங்கள் எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாகக் கிடைக்கும்.
தட்டுத் தடுமாறி முன்னேறும் நேரமிது.