என் டைரி - 365
புகுந்த வீடு... பொசுக்கும் கூடு!
என் பெற்றோருக்கு நான் ஒரே பெண். எனக்கு முன் இரண்டு குழந்தைகள் பிறந்து இறந்துவிட்டதால், என்னைச் செல்லமாகக் கொண்டாடி வளர்த்தார்கள். கல்லூரியில் படித்தபோது, சீனியர் ஒருவர் என்னை விரும்புவதாகக் கூறி, ஒரு கட்டத்தில் என்னையும் சம்மதிக்க வைத்தார். என் பெற்றோர், ‘இது வேண்டாம், அந்த வீட்டின் பழக்கவழக்கம் உனக்கு சரிப்பட்டு வராது’ என்றனர். அவர் வீட்டிலும் சம்மதம் கிடைக்கவில்லை. இருவீட்டின் சம்மதமின்றி திருமணம் செய்துகொண்டோம்.

மாதங்கள் ஆக ஆக, இருவர் வீட்டிலும் எங்களை ஏற்றுக்கொண்டார்கள். ஆனாலும் மாமியார், மாமனார், நாத்தனார்கள், கொழுந்தனார்கள் யாரும் என்னிடம் அதிகமாகப் பேச மாட்டார்கள். அந்தக் கூட்டுக் குடும்பத்தில் தனித்திருந்த எனக்கு ஒரே ஆறுதல், என் கணவர். ‘எல்லாம் போகப் போக சரியாகிடும்’ என்பார். இந்நிலையில் அவரின் முதல் தம்பிக்கு சொந்தத்திலேயே திருமணம் முடிந்தது. புது மருமகளிடம் இந்தக் குடும்பமே பாசத்தைப் பொழிகிறது. இன்னொரு பக்கம், அதை என்னை வெறுப்பேற்றும் நடவடிக்கையாக நினைத்தே அவர்கள் செய்கிறார்கள் என்பதும் உண்மை.
ஏதாவது பண்டிகை, விசேஷம் என்றால், ‘அதுக்கு (எனக்கு) நம்ம சாதி வழக்கம் எதுவும் தெரியாது, நீயே எல்லாத்தையும் பண்ணு’ என்பது, உறவினர்களின் விசேஷங்களுக்கு என் கணவரையும் என்னையும் தவிர்த்து, கொழுந்தனாரையும் புது மருமகளையும் அனுப்புவது, அந்தப் பெண்ணின் உறவினர்கள் வீட்டுக்கு வந்தால் விருந்து வைத்து அமர்க்களப்படுத்தி... என் தாய், தந்தை வந்தால் ‘வாங்க’ என்பதற்கு மேல் ஒரு வார்த்தைகூட பேசாமல் அனைவரும் ஒதுங்கிச் செல்வது என்று... மனதைக் காயப்படுத்துகிறார்கள். இதை எதிர்த்துக் கேட்க வேண்டிய கணவர் அமைதியாக இருக்க, ‘கூட இருந்தாதானே அவமானப்படுத்துவாங்க? நாம தனிக்குடித்தனம் போயிடலாம்’ என்றேன். அவர் மறுத்ததோடு, ‘பேசாம நானும் என் சாதியிலேயே ஒரு பொண்ணைக் கல்யாணம் பண்ணியிருந்தா, ஊரு, உறவோட சேர்ந்து இருந்திருப்பேன்’ என்று வெறுப்பும் சலிப்புமாகச் சொன்னபோது, சுக்குநூறாகிப் போனேன். என் கண்ணீரைப் பார்த்து, ‘இதையெல்லாம் நினைச்சுதான் அப்போவே வேண்டாம்னு சொன்னோம்’ என்று என் பெற்றோரும் கண்ணீர் வடிக்கிறார்கள்.
இன்னொரு கொழுந்தனாருக்கு மணம் முடித்து மூன்றாவது மருமகள் வரும்போது, இந்த வீட்டில் என் நிலை இன்னும் தாழ்ந்து போகுமா? அவமானங்கள், புறக்கணிப்புகள் என்னோடு நின்று போகுமா... அல்லது, எனக்குப் பிறக்கப்போகும் குழந்தைக்கும் தொடருமா? எனில், இந்த வாழ்க்கையில் என்ன சந்தோஷம் கிடைக்கப் போகிறது எனக்கு?
தீராத மனக்காயங்களுடன் தவித்துக்கொண்டிருக்கும் எனக்கு தீர்வு சொல்லுங்கள் தோழிகளே!
- பெயர் வெளியிட விரும்பாத வாசகி
என் டைரி - 364-ன் சுருக்கம்

``என் வலது கால் சற்று வளைந்திருப்பதால், வரன்கள் தட்டிப்போயின. இதற்கிடையே மேற்படிப்புகளை முடித்த நிலையில், நல்ல சம்பளத்தில் ஆசிரியர் பணி கிடைத்தது. உடன் பணியாற்றிய ஆசிரியர், என்னைக் காதலிப்பதாகக் கூறியது, புண்பட்ட என் மனதுக்கு மருந்தானது. என்னைவிட குறைந்த சம்பளம்தான். சொந்த வீடு, நிலம் என்று எதுவும் இல்லை. ஆனால், திருமணத்தில் நான் உறுதியாக நின்றதால், அதை சிறப்பாக முடித்தார் அப்பா.
திருமணமான சில நாட்களில், எனக்குப் போட்ட நகைகளை மாமியார் வாங்கிக்கொண்டார். சம்பளத்தையும் அவரிடம் கொடுக்கச் சொன்னார் கணவர். பணம் சம்பாதிக்கும் இயந்திரமாக நடத்தப்படுவது குறித்து வாக்குவாதம் வெடித்தபோது... ‘அழகுக்காக உன்னைக் கல்யாணம் பண்ணினேன்னு நினைச்சியா? சம்பாத்தியம் கைக்கு வரும்; கால் ஊனமா இருக்கறதால எங்க சொல்படி நடந்துக்குவேனு யோசிச்சுதான் கல்யாணம் பண்ணி கூட்டிட்டு வந்தோம்’ என்று கணவர் சொன்னதும், இடி விழுந்ததுபோல் இருந்தது.
வேதனை பொறுக்காமல் பெற்றோர் வீட்டுக்கு வந்துவிட்டேன். இதுபற்றி அறிந்த பள்ளி முதல்வர், எங்களைச் சேர்த்துவைக்க பேச்சுவார்த்தைக்கு அழைக்கிறார். `இதுதான் விதி’ என்று அவரை ஏற்றுக்கொள்ளவா... `எனக்கும் சுயமரியாதை உண்டு’ என்று தனித்து வாழ்ந்துகாட்டவா? வழிகாட்டுங்கள்!’’
வாசகிகள் ரியாக்ஷன்
ஒவ்வொன்றுக்கும் பரிசு: ரூ 100
விவாகரத்து பெற்றுக்கொள்!
நல்ல சம்பளம், நகை நட்டு என்று திட்டம் போட்டுத் திருமணம் செய்துகொண்டிருக்கிறார் உன் கணவர். மேலும், காரணத்தை அவரே விளக்கமாக சொல்லிவிட்டபிறகு சேர்ந்து வாழ்வது முட்டாள்தனம். சமரசத்துக்கு முயற் சிக்கும் பள்ளி முதல்வரிடம் உன் பிரச்னைகளைக் கோடிட்டுக் காட்டு, அவர் புரிந்துகொள்வார். விவாகரத்து பெற்றுக்கொள்; முடிந்தால் அந்தப் பள்ளியை விட்டு வேறு இடத்துக்கு மாற்றலாகி செல். படிப்பும், வேலையும் இருக்கையில் ஏன் பயம்? ஊனம் ஒரு குறையல்ல. காலம் மாறும்; நல்ல துணையும் தேடி வரும்.
- ராஜேஸ்வரி வெங்கட், சென்னை-82
தைரியமாக வாழ்ந்துகாட்டு!
தாமதமாக திருமணம் செய்து எதிர்பார்ப்புகளுடன் இல்வாழ்க்கையில் அடியெடுத்து வைத்த உனக்கு பேரிடியை ஏமாற்றமாக பரிசளித்த கணவனையும், மாமியாரையும் நம்பி மறுபடியும் அந்த வீட்டுக்கு போகாதே. உடலில் குறைபாடு இருந்தால் என்ன? மனதில் ஊனம் இல்லையே! விவாகரத்து பெற்று உன் பெற்றோருடன் சேர்ந்து வாழு. மேலும் உனக்கு வேலை இருக்கிறது; சம்பளமும் வருகிறது. தைரியமாக வாழ்ந்துகாட்டு! நீ மகிழ்ச்சியாக வாழ்வதைப்பார்த்து கணவரும், மாமியாரும் பொறாமையால் வாடட்டும்!
- உஷா முத்துராமன், திருநகர்
ஒருமுறை பேசிப் பார்க்கலாம்!
நீங்கள் சொல்வதைப் பார்த்தால் அவர்கள் திட்டமிட்டே உங்களை அடைந்திருப்பதாக தெரிகிறது. இருப்பினும் உங்களுக்கு உதவிகரமாக விளங்கும் உங்கள் பள்ளி நிர்வாகத்துக்கு மதிப்பளிக்கும் விதத்தில் ஒருமுறை கணவர் வீட்டாரிடம் பேசிப் பார்க்கலாம். அதன் பிறகும் அவர்கள் திருந்தவில்லையெனில், பள்ளி நிர்வாகம் மூலமாகவே அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கலாம்.
- த.சாந்தி, திருவாரூர்