மற்ற எபிசோடுகள்
Published:Updated:

என் டைரி - 366

ஓவியம்:மாருதி

மெழுகுவத்தி ஆகலாமா... மணமாலை சூடலாமா?

ம்மா, அப்பா, இரண்டு தங்கைகளுடன் மூத்த பெண் நான்... இதுதான் எங்கள் குடும்பம். அம்மா, சொற்ப வருமானத்தில் ஒரு வேலைக்குச் சென்றுகொண்டிருக்கிறார். அவர் வருமானம் மட்டுமே குடும்பத்துக்கு ஆதாரம். அப்பாவுக்கு நிலையான வேலை கிடையாது. ஒரு மாதம் பணம் கொடுப்பார். பல மாதங்கள் கொடுக்க மாட்டார். குடிநோயாளியான அவர் இப்போதுதான் சிகிச்சையில் குணமடைந்திருக்கிறார். எனவே, சம்பாதித்துக் கொடுக்கவில்லை என்றாலும் அவர் குடிக்காமலும், உயிருடன் இருந்தாலுமே போதும் என்ற மனநிலைக்கு வந்துவிட்டோம். 

என் டைரி - 366

நான் பள்ளிப் படிப்பை முடித்த கையோடு தனியார் நிறுவனம் ஒன்றில் வேலைக்குச் சேர்ந்துவிட்டேன். இப்போது அம்மாவும் நானும் சம்பாதித்துதான் அப்பாவின் மருத்துவச் செலவு, தங்கைகளின் படிப்புச் செலவு, வீட்டுச் செலவு என்று எல்லாவற்றையும் சமாளிக்கிறோம். மேலே படிக்க ஆசை. போட்டித் தேர்வெழுதி அரசுப் பணி பெறும் கனவும் உள்ளது. ஆனால், அதைப் பற்றியெல்லாம் யோசிக்கும் சூழல் இல்லை.

மாதம் முழுக்க உழைத்துச் சம்பாதிக்கும் பணத்தில் ஒரு புது சுடிதார் எடுத்துக்கொள்ளவும், ஒருநாள் பேக்கரியில் பிடித்த ஸ்நாக்ஸ் வாங்கிச் சாப்பிடவும் அவ்வப்போது மனம் ஏங்கும். ஆனால், ஏற்கெனவே பற்றாக்குறையில் ஓடும் வாழ்க்கையில் அதற்கெல்லாம் இடமே கிடையாது. என் ஆசைகளை அடக்கிக்கொண்டு தங்கைகளையாவது நன்றாக படிக்க வைக்க வேண்டும் என்றே நினைக்கிறேன்.

தோழிகள் எல்லாம், ‘உன் வாழ்க்கையையும் நீ பாரு. நீ உன் தங்கைகள் மீது அக்கறை காட்டுற மாதிரியே அவங்களும் நாளைக்கு உன்கிட்ட நடந்துக்குவாங்க என்பதற்கு உத்தரவாதம் இல்ல. அவங்கவங்க வாழ்க்கையில் செட்டில் ஆயிடுவாங்க. நீ மெழுகுவத்தியா கரைஞ்சதுதான் மிச்சமா இருக்கும்’ என்கிறார்கள். அவர்கள் சொல்வதை என்னால் புறந்தள்ள முடியவில்லை. இன்னொரு பக்கம், அந்த சுயநல எண்ணத்தை முளையிலேயே கிள்ளி, திருமணமே செய்துகொள்ளாமல் கடைசி வரை இந்தக் குடும்பத்தையே என் சந்தோஷமாக நினைக்க வேண்டும் என்று என் மனம் சொல்கிறது.

என்ன செய்யட்டும் தோழிகளே?!

- பெயர் வெளியிட விரும்பாத வாசகி

என் டைரி 365-ன் சுருக்கம்

என் டைரி - 366

``கல்லூரியில் படித்தபோது என் சீனியர் என்னைக் காதலித்தார். நானும் சம்மதித்தேன். எங்கள் காதலை இருவீட்டாருமே ஒப்புக்கொள்ளாததால், நாங்களாகவே திருமணம் செய்துகொண்டோம். பின்னர் இருவீட்டாரும் எங்களை ஏற்றுக்கொண்டாலும், கணவர் வீட்டினர் என்னிடம் அதிகமாக பேசுவதில்லை.

இந்நிலையில் அவருடைய முதல் தம்பிக்கு சொந்தத்தில் திருமணமாக... புது மருமகளிடம் குடும்பமே பாசத்தைப் பொழிகிறது. வீட்டு விசேஷங்களில் புது மருமகளை முன்னிலைப்படுத்துவது மட்டுமன்றி,  உறவினர் வீட்டு விசேஷங்களுக்கும் கொழுந்தனாரையும் புது மருமகளையும் அனுப்புவார்கள். என் பெற்றோர் வந்தால் ‘வாங்க’ என்ற ஒரு வார்த்தையோடு அனைவரும் ஒதுங்கிச் செல்கிறார்கள். என்னை வெறுப்பேற்றவே இப்படி அவர்கள் செய்கிறார்கள். இந்த அவமானங்களைக் கண்டு தனிக்குடித்தனம் போகலாம் என்று கணவரிடம் கூறினேன். அவர் மறுத்ததோடு, ‘என் சாதியிலேயே ஒரு பொண்ணைக் கல்யாணம் பண்ணியிருந்தா, ஊரு, உறவோட இருந்திருப்பேன்’ என்று சலிப்பாக சொன்னபோது, சுக்குநூறாகிப் போனேன்.

இன்னொரு கொழுந்தனாருக்கு மணம் முடித்து மூன்றாவது மருமகள் வந்தால், என் நிலை இன்னும் தாழ்ந்து போகுமா? அவமானங்கள், புறக்கணிப்புகள் என்னோடு நின்று போகுமா... அல்லது, பிறக்கப்போகும் என் குழந்தைக்கும் தொடருமா? தீராத மனக்காயங்களுடன் தவிக்கும் எனக்கு தீர்வு சொல்லுங்கள்!’’

வாசகிகள் ரியாக்‌ஷன்

ஒவ்வொன்றுக்கும் பரிசு: ரூ 100

தனிக்குடித்தன முயற்சியைத் தீவிரப்படுத்து!

காதல் திருமணம் செய்து கொண்டதில் உனக்கும், உன் கணவருக்கும் பங்கு உள்ளது. உன்னை மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டியது அவரது கடமை. சாவகாசமாக, குடும்பத்தில் நடக்கும் சம்பவங்களை கணவரிடம் சொல்லி சிந்திக்கச் சொல். வேறு சாதி என்று பிரித்துப்பார்ப்பவர்களுடன் கூட்டுக்குடும்பம் எடுபடாது. எனவே, தனிக்குடித்தன சிறப்பை கணவரிடம் எடுத்துக் கூறி அவர் மனதை மாற்று.

- யோ.ஜெயந்தி, கோவை

காலம் அனைவரையும் மாற்றும்!

சாதி மாறி திருமணம் செய்த தம்பதியரின் பெரும்பாலான வீடுகளில் நடப்பதுதான் உங்கள் வீட்டிலும் நடக்கிறது. நீங்களாக வெளியே செல்லாதிருப்பதுதான் உங்களுக்கு நல்லது. காலம் அனைவரையும் மாற்றும். உங்கள் வீட்டில் உள்ளவர்கள் மட்டும் விதிவிலக்கல்ல. நல்லபடியாக நடந்துகொண்டால் அவர்கள் மனம் மாறும். நிச்சயம் வெற்றி கிட்டும்.

- க.ரேணுகா, திருவாரூர்

கணவர் அன்புதான் முக்கியம்!

பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்துகொண்டதை குற்றமாக கருதாதே. புகுந்த வீட்டில் உன்னை பாரபட்சமாக நடத்துவதை குறையாக கருத வேண்டாம். உனக்கு தன்னம்பிக்கையூட்டும் கருவியாக எடுத்துக்கொள். எந்த நிலையிலும் உன் கணவர்மீது கொண்ட அன்பு குறையாமல் பார்த்துக்கொள். கணவனை கைக்குள் போட்டுக்கொண்டால் போதும், எதிர்காலத்தில் எல்லாமே கைகூடும்.

- ராணி மகாலிங்கம், ஞானஒளிவுபுரம்