
ராஜேஷ்குமார், ஓவியங்கள்: அரஸ்
டி.வி திரையில் அந்தக் காட்சி நன்றாகவே தெரிந்தது.
தேசியமயமாக்கப்பட்ட ஒரு வங்கியின் ஏ.டி.எம் சென்டர் அது. ஆறு பேர் கொண்ட க்யூவில் மூன்றாவது நபராக நின்றிருந்தான் ஞானேஷ். ஷேவ் செய்யப்படாத முகம். ஒழுங்காக வாரப்படாத தலைக்கேசம். வலது கையில் சுருட்டி வைக்கப்பட்டிருந்த நாளிதழும், இடது கைவிரல்களின் இடுக்கில் ஏ.டி.எம் கார்டும் தெரிந்தன.

போலீஸ் கமிஷனர் ராஜகணேஷ் உறைந்துபோன விழிகளோடு டி.வி திரையையே பார்த்துக்கொண்டிருக்க, சி.சி.டி.வி கேமராக்களின் ஒருங்கிணைப்பு அதிகாரியான சர்வானந்த் கௌடா அவரிடம் திரும்பினார்.
“ஸார்... நீங்கள் குறிப்பிடும் ஞானேஷ் என்கிற நபர் க்யூவில் மூன்றாவது நபராக நின்றுகொண்டிருக்கிறார். சரியா?”
“சரிதான்...”
“அது ஞானேஷ்தானே... ஆர் யூ ஷ்யூர்?”
“ஷ்யூர்... நோ டவுட்! பை த பை... இது எந்த ஊரில் இருக்கிற ஏ.டி.எம் சென்டர்?”
“அந்த விவரத்தைச் சொன்னால் இன்னமும் ஆச்சர்யப்படுவீர்கள். ரூபேஷின் அப்பா யோகானந்த் எந்த ஹோட்டலில் வைத்து கொலை செய்யப்பட்டார்?”
“ஒயிட்ஃபீல்டில் இருக்கிற ப்ளஸன்ட் ஓஷன் ஹோட்டல்.”
“அந்த ஹோட்டலுக்கு எதிரே நூறு மீட்டர் தூரத்தில் இருக்கிற ஒரு ஷாப்பிங் காம்ப்ளெக்ஸின் கிரவுண்ட் ஃப்ளோரில் இந்த ஏ.டி.எம் சென்டர் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. பெங்களூரில் ஒரு பெண் ஏ.டி.எம் சென்டரில் தாக்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, சைபர் க்ரைம் பிராஞ்ச் சில வாரங்களாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதில் ஒரு நடவடிக்கையாக, பெங்களூரிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் உள்ள ஏ.டி.எம் சென்டர்களில் பதிவான காட்சிகளை இந்த சி.சி.டி.வி ஒருங்கிணைப்பு மையத்துக்குக் கொண்டுவந்து ரேண்டமாக டி.வி-யில் போட்டுப் பார்த்து சந்தேகத்துக்குரிய நபர்களை போலீஸ் வளையத்துக்குள் கொண்டுவருவதுதான் இந்த டிபார்ட்மென்டின் வேலை. இந்த ‘நள்ளிரவு வானவில்’ விவகாரத்தில் சம்பந்தப்பட்ட எல்லா நபர்களின் போட்டோக்களும் சைபர் க்ரைம் பிராஞ்ச்சில் இருந்ததால், ஏ.டி.எம்-மின் க்யூவில் நின்றிருந்த ஞானேஷை என்னால் அடையாளம் கண்டுபிடிக்க முடிந்தது. மண்சட்டியில் அஸ்தியா வந்த ஒரு நபர் உயிரோடு இருப்பது எப்படி சாத்தியம்?”
“தப்பு எங்கேயோ நடந்திருக்கிறது!” என்று இறுகிப்போன முகத்தோடு சொன்ன ராஜகணேஷ், தன்னுடைய செல்போனை எடுத்து ஒரு எண்ணைத் தேடி எடுத்து கான்டாக்ட்ஸ் ஆப்ஷனுக்குப் போய் தட்டினார். மறுமுனையில் ரிங் போய், சில விநாடிகளில் ஒரு குரல் கேட்டது.
“யெஸ்...”
“நேஷனல் பயாலாஜிகல் ரிசர்ச் யூனிட்?”
“யெஸ்...”
“மிஸ்டர் கௌசிக் பாண்டே?”
“ஹோல்டிங்...”
“மிஸ்டர் கௌசிக்... ஐயாம் ராஜகணேஷ். சென்னை கமிஷனர் ஆஃப் போலீஸ்.”
“ஓ! ஹௌ ஆர் யூ ஸார்?”
“ஃபைன்..!”
“எனக்கு போன் செய் திருக்கிறீர்கள். எனிதிங்க் இம்பார்ட்டன்ட்?”
“யெஸ்... எனக்கு உண்மையான, ஒளிவு மறைவு இல்லாத தகவல் தேவைப்படுகிறது. உங்களால்தான் அதைக் கொடுத்து உதவ முடியும்.”
“வாட் டூ யூ மீன்?”
“சில நாட்களுக்கு முன் ஞானேஷ் என்பவரின் சாம்பலை டி.என்.ஏ. சோதனைக்கு உட்படுத்தி, அவருடைய தந்தை பார்த்தசாரதியின் டி.என்.ஏ-வோடு ஒப்பிட்டுப் பார்த்து, இறந்து போனது ஞானேஷ்தான் என்று ரிப்போர்ட் கொடுத்தது நீங்கள்தானே மிஸ்டர் கௌசிக்?”
“ஆமாம்..!”
“உண்மையாகவே அந்த அஸ்தி சாம்பலை சோதனைக்கு உட்படுத்தி டி.என்.ஏ கம்பேரிசன் செய்து பார்த்தீர்களா?”
“பார்த்தேன்..!”
“கொலை செய்யப்பட்டது ஞானேஷ்தான்... மண்சட்டியில் இருந்தது அவருடைய அஸ்திதான் என்று ரிப்போர்ட் அனுப்பியது நீங்கள்தானே?”
“ஆமாம்!”
“அந்த ஞானேஷ் இப்போது உயிரோடு இருக்கிறாரே... எப்படி?”
``எ... எ... என்ன சொன்னீர்கள்... உயிரோடு இருக்கிறாரா?’’
“ஆமாம்... பெங்களூரில் இருக்கிற ஒரு ஏ.டி.எம் சென்டரில் பணம் எடுப்பதற்காக க்யூவில் காத்துக்கொண்டிருக்கிறார். `வாட்ஸ்அப்’பில் அந்தப் பதிவை உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன். பார்க்கிறீர்களா..?”
மறுமுனையில் மௌனம் பல விநாடிகளுக்கு நீடிக்கவே, ராஜகணேஷ் கேட்டார்... “என்ன மிஸ்டர் கௌசிக், பேச்சையே காணோம்?”
“இது மாதிரியான இக்கட்டான நிலைமை என்றைக்காவது ஒருநாள் வரும்; இப்போதைக்கு வராது என்று நினைத்திருந்தேன். ஆனால், இவ்வளவு சீக்கிரம் வரும் என்று நான் நினைக்கவில்லை...”
“என்ன சொல்கிறீர்கள்?”
“அது ஒரு பொய்யான ரிப்போர்ட்தான். அது ஞானேஷின் சாம்பல் கிடையாது. ஒரு பறவையின் சாம்பல்.''
“எதற்காக அப்படியொரு பொய் ரிப்போர்ட்?”
“மேலிடத்துக் கட்டளை.”
“யார் அது?”
“ஸாரி ஸார்... ஐயாம் ஹெல்ப்லஸ். நான் இந்த விஷயத்தில் உண்மையான தகவல்களைச் சொல்ல முடியாது.”
“இப்படி சொல்லி நீங்கள் தப்பித்துக்கொள்ள முடியாது மிஸ்டர் கௌசிக்! டிபார்ட்மென்ட் ரீதியா நடவடிக்கை எடுக்கப்பட்டால் சட்டம் உங்களை நெருக்கும். அப்போது நீங்கள் உண்மையைச் சொல்லித்தான் தீரவேண்டும்!”
மறுமுனையில் கௌசிக் பாண்டே சிறிதும் அதிர்ச்சி காட்டாமல் சிரித்தார். “ஸார்... நீங்கள் எதுமாதிரியான நடவடிக்கை எடுத்தாலும் எனக்குக் கவலையில்லை. ஏனென்றால், உங்களுக்குப் பதில் சொல்லப்போவது நான் இல்லை.”
ராஜகணேஷ் மேற்கொண்டு பேசும் முன்பு கௌசிக் பாண்டே மறு முனையில் செல்போனை வைத்துவிட, எரிச்சலாகி தானும் செல்போனை அணைத்தார். எதிரில் உட்கார்ந்து தன்னையே பார்த்துக்கொண்டிருந்த சர்வானந்த் கௌடாவை ஏறிட்டார். உஷ்ணமான பெருமூச்சொன்றை வெளியேற்றிவிட்டு சொன்னார்...
“ஞானேஷ் உயிரோடுதான் இருக்கிறான்.”
“ஸோ... சி.சி.டி.வி. கேமரா ஞானேஷ் மாதிரி இருக்கிற ஒரு பொய்யான நபரைக் காட்டவில்லை?”
“ஆமாம்.”
“ஞானேஷ் இப்படியொரு கண்ணாமூச்சி விளையாட்டு விளையாட என்ன காரணம் ஸார்..?”
“தெரியவில்லை. நான் கண்டுபிடிக்க வேண்டிய பல உண்மைகளில் இதுவும் ஒன்று...” என்று சொல்லிக்கொண்டே எழ முயன்ற ராஜகணேஷ், மறுபடியும் நாற்காலியில் உட்கார்ந்தபடி குரலைத் தாழ்த்தினார்.
“நீங்கள் எனக்கு உதவி செய்ய வேண்டும்.”
“சொல்லுங்க ஸார்...”
“சி.சி.டி.வி கேமராவில் ஞானேஷ் பதிவாகியிருக்கிற விஷயம் அதிகாரபூர்வமா இங்கே யார் யாருக்கெல்லாம் தெரியும்?”
“உங்களுக்கும் எனக்கும் மட்டும்தான் தெரியும். இனிமேல்தான் டி.எஸ்.பி நம்பெருமாளுக்கு சொல்ல வேண்டும். அவருக்கு ஞானேஷைப் பற்றித் தெரிந்திருக்க நியாயமில்லை. அதனால்தான் உங்களுக்கு முதன்முதலா சி.சி.டி.வி கேமராவில் பதிவாகியிருந்த காட்சியைக் காட்டி அது ஞானேஷ்தானா என்று உறுதி செய்துகொண்டேன்.”
“இட்ஸ் ஓ.கே... இந்த விஷயம் தற்போது யாருக்கும் தெரியவேண்டாம். இதுபற்றி டி.எஸ்.பி நம்பெருமாளோடு நான் பேசிக் கொள்கிறேன்...”
அறையிலிருந்து வெளிப்பட்டார் ராஜ கணேஷ். அந்த நீண்ட வராந்தாவில் யோசனையோடு நடந்து, டி.எஸ்.பி நம் பெருமாளின் அறைக்குள் நுழைந்தார்.
நம்பெருமாள் செல்போனில் யாரிடமோ பேசிக்கொண்டிருக்க, ரூபேஷ் தன் இடது கை விரல்களால் நெற்றியைத் தேய்த்தபடி தலைகுனிந்து உட்கார்ந்திருந்தான். ராஜகணேஷைப் பார்த்ததும் நம்பெருமாள் வேகவேகமாய் செல்போன் பேச்சை முடித்துக்கொண்டு நாற்காலியைக் காட்டினார்.
“ப்ளீஸ் ஸார்...”
ராஜகணேஷ் உட்கார்ந்ததும் நம்பெருமாள் கேட்டார்...
“சி.சி.டி.வி. கேமரா யூனிட்டில் எனிதிங் இம்பார்ட்டன்ட் ஸார்?”
அறையில் ரூபேஷ் இருந்த காரணத்தால் ராஜகணேஷ், ஞானேஷைப் பற்றிய செய்தியைச் சொல்லாமல் “நத்திங்” என்று சொன்னார். “சர்வானந்த் கௌடா சில சி.சி.டி.வி. கேமரா பதிவுகளைக் காட்டி உங்கள் விசாரணைக்கு ஏதாவது உபயோகப்படுமா என்று கேட்டார். நானும் பார்த்தேன். ஒயிட்ஃபீல்ட் ப்ளஸன்ட் ஓஷன் ஹோட்டலுக்கு வெளியே நடந்த சில சாதாரண நிகழ்வுகள் அவை.”
தலைகுனிந்து உட்கார்ந்திருந்த ரூபேஷ் நிமிர்ந்தான்.
“ஸார்... இந்த `நள்ளிரவு வானவில்’ பிரச்னையை வெகு சீக்கிரமா ஒரு முடிவுக்குக் கொண்டுவரணும். பசவன்குடியில் இருக்கிற என் அப்பாவோட ஃபார்ம் ஹவுஸைப் பார்க்க விரும்பறதா சொன்னீங்க... புறப்பட்டு போலாமா?’
“ஏன் இப்படி அவசரப்படறீங்க ரூபேஷ்..?”
“உயிர் பயம் ஸார்! எங்க அப்பாவுக்கு நேர்ந்த மாதிரியான ஒரு மரணம் எனக்கும் ஏற்பட்டுவிடக்கூடாதே..!”
“இது தேவையில்லாத பயம்! இப்போ நீங்க பாதுகாப்பான போலீஸ் வளையத்துக்குள்ளே இருக்கீங்க... கொலையாளி பிடிபடும் வரை உங்களுக்கு எந்த ஆபத்தும் வராதபடி பார்த்துக்க வேண்டியது என்னோட பொறுப்பு!”
“கொலையாளியோட திறமையை நீங்க குறைச்சு மதிப்பிட்டுப் பேசிட்டு இருக்கீங்க ஸார். ‘ப்ளஸன்ட் ஓஷன்’ ஹோட்டலில் இருந்த அத்தனை செக்யூரிட்டி ஏற்பாடுகளையும் ஏமாத்திட்டு, என் அப்பாவோட உயிரை சுலபமா எடுத்துட்டுப் போற அளவுக்கு கொலையாளியோட செயல்பாடு இருந்திருக்கு. வெளியே எனக்கு எந்தப் பாதுகாப்பும் இல்லை... மரணம் என்னை நெருங்க எவ்வளவு நேரமாகும்?”
ராஜகணேஷை ஏறிட்டார், நம்பெருமாள்.
“ஸார்... ரூபேஷ் பயப்படறதுல நியாயம் இருக்கு. ‘நள்ளிரவு வானவில்’ விவகாரம் சம்பந்தமா நடந்த மரணங்களுக்கும், ரூபேஷுக்கும் அவரோட அப்பாவுக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை. சம்பந்தம் இருக்கிறதா நினைச்சுட்டு யாரோ பழிவாங்கும் படலத்தை ஆரம்பிச்சிருக்காங்க.... இதை நாம உடனடியா தடுத்தாகணும்!”
“நான் என்னோட கெஸ்வொர்க்கை சொல்லட்டுமா ஸார்..?” - கேட்டுக்கொண்டே பக்கத்து அறையிலிருந்து வெளிப்பட்டாள் ரிதன்யா. எல்லோருடைய பார்வையும் அவள் மேல் திரும்பியது.
“சொல்லு!” என்றார் நம்பெருமாள்.
“நள்ளிரவு வானவில் விவகாரத்துக்கும் யோகானந்த்துக்கும் மட்டும் ஏதாவது லிங்க் இருந்திருக்கலாம். ரூபேஷுக்கு அது தெரியாமலும் இருக்கலாமில்லையா?”
“இப்ப நீ என்ன சொல்ல வர்றே?”
“கொலையாளியோட எய்ம் யோகானந்த் மட்டும்தான். ரூபேஷ் இல்லைன்னு சொல்றேன். பசவன்குடியில் இருக்கிற யோகானந்த்தோட ஃபார்ம் ஹவுஸை தரோவா செக் பண்ணினா நிச்சயமா ஏதாவது ஒரு யூஸ்ஃபுல் க்ளூ கிடைக்கும்ங்கிறது என்னோட நம்பிக்கை...”
“இனியும் லேட் பண்ண வேண்டாம்... கிளம்புவோம்” எழுந்தார் ராஜகணேஷ்.
பசவன்குடியை நோக்கி கார் சீரான வேகத்தில் விரைந்துகொண்டிருந்தது.
காரை ரூபேஷ் ஓட்ட, அவன் அருகில் ராஜகணேஷும் பின் ஸீட்டில் நம்பெருமாளும் ரிதன்யாவும் உட்கார்ந்திருந்தார்கள். சாலையின் இருபுறமும் பெங்களூரு நகரம் கட்டடங்களால் நிரம்பி மூச்சுத் திணறிக்கொண்டிருந்தது. காருக்குள் நிலவிய வேண்டாத மௌனத்தை ராஜகணேஷ் கலைத்தார்.
“உங்க மூணு பேர்ல ஞானேஷை நேர்ல பார்த்தவங்க யாரு?”
“யாருமே இல்ல ஸார்... பேரைக் கேள்விப்பட்ட தோட சரி. இன்னிக்கு நீங்க காட்டின போட்டோவைப் பார்த்துதான் ஞானேஷ் எப்படியிருப்பான்னு தெரிஞ்சுகிட்டோம்!” - ரிதன்யா சொல்ல, நம்பெருமாள் தொடர்ந்தார்...
“ஸார்! நான் ஒரு விஷயம் சொன்னா நீங்க தப்பா நினைச்சுக்கமாட்டீங்களே?”

“இதுல நான் தப்பா நினைக்க என்ன இருக்கு மிஸ்டர் நம்பெருமாள்? இந்தக் கேஸ் விஷயமா நீங்க எதுமாதிரியான கருத்தை வேணும்னாலும் தைரியமா சொல்லலாம். அந்தக் கருத்து கேஸுக்கு உபயோகமானதா இருந்தா நல்லதுதானே?”
“ஸார்... இந்த நள்ளிரவு வானவில் ப்ராஜெக்ட்டை தயார் பண்ணி அதை வெற்றிகரமா முடிச்சது மொத்தம் ஏழு பேர்... ஞானேஷ் உள்பட. இதில் ஆறு பேர் பெண்கள். இவங்க ஆறு பேருமே ஊட்டி மலைப்பாதையில் வேன் கவிழ்ந்து இறந்துட்டாங்க. அவங்க இறந்ததுக்கு ஆதாரம் இருக்கு. ஆனால், ஞானேஷ் இறந்ததுக்கு ஆதாரம் இல்லை. மண்சட்டியில் அஸ்தி வந்ததா சொன்னீங்க. அந்த அஸ்தி சாம்பலை சோதனைக்கு அனுப்பி டி.என்.ஏ கம்பேரிசன் செய்ததில் அது ஞானேஷ்தான்னு கன்ஃபார்ம் ஆனதா சொன்னீங்க... இல்லையா?”
“ஆமா...”
“அந்த டெஸ்ட் ஏன் பொய்யா இருக்கக்கூ டாது?”
ராஜகணேஷ் லேசாக திடுக்கிட்டு, பிறகு இயல்பான நிலைமைக்கு வந்தார்.
`நம்பெருமாள் விஷயம் தெரிந்து பேசுகிறாரா இல்லை தெரியாமல் பேசுகிறாரா..?’
“என்ன ஸார் சைலன்ட் ஆகிட்டீங்க...? டி.எஸ்.பி-யோட சந்தேகம் சரியா தப்பா...?” - காரை ஓட்டிக்கொண்டிருந்த ரூபேஷ் கேட்டான்.
“நேஷனல் பயாலாஜிகல் ரிசர்ச் யூனிட்ல கொடுத்த ரிப்போர்ட் தப்பா இருக்க வாய்ப் பில்லையே?”
“ஒருவேளை தப்பா இருக்க வாய்ப்பு இருந்தா?”
“ஞானேஷ் உயிரோடு இருக்கான்னு அர்த்தம்.”
“அப்படி அவன் உயிரோடு இருந்தா தப்பானவன்தானே..?” - டி.எஸ்.பி. நம்பெருமாள் சொல்லிக்கொண்டிருக்கும்போதே அவருடைய வாய்க்குள் சட்டென்று உமிழ்நீரின் அளவு அதிகமாயிற்று. புளிப்புச் சுவையை உணர்ந்தார். உதடுகள் ஈரமாயின.
‘என்ன இது?’ திடுக்கிட்டுப் போனவராய் தன்னுடைய கர்ச்சீஃப்பை எடுத்து வாயை ஒற்றி எடுத்துப் பார்த்தார்.
ரத்தம்.
அடுத்த விநாடியே நம்பெருமாளின் இதயம் இரும்புக் குண்டாய் கனக்க ஆரம்பித்தது.
- தொடரும்...