என் டைரி - 367
காதலிக்கும் மகள்... கலங்கித் தவிக்கும் குடும்பம்!
கணவரும் நானும், ‘ஒரே மகளே வாழ்க்கை’ என்று வாழ்ந்து வருகிறோம். நடுத்தரக் குடும்பம். காலை

நான்கு மணியில் இருந்து இரவு பதினோரு மணி வரை எங்கள் தொழிலில் நாங்கள் இடைவிடாமல் உழைப்பதெல்லாம், அவள் விரும்பியதை படிக்க வைக்கவும், அவளுடைய தேவைகளை இல்லை என்று சொல்லாமல் நிறைவேற்றவும்தான்.

கல்லூரிப் படிப்பை முடித்த சில மாதங்களில் மகளுக்கு வெளிமாநிலத்தில் வேலை கிடைத்தது. நாங்கள் பட்ட கஷ்டத்துக்கு எல்லாம் பலனை இனி அவள் அனுபவிப்பாள் என்று நிம்மதியடைந்தோம். சில மாதங்களில், தான் தன் அலுவலகத்தில் பணிபுரியும் ஒருவரை விரும்புவதாகச் சொன்னாள். பையனின் ஜாதகம் பெற்று வரச் சொல்லிப் பொருத்தம் பார்த்தோம். மூன்று பொருத்தங்களே இருந்ததுடன், ‘இந்த ஜாதகக்காரர் குணத்தில் பிழை உள்ளவர். திருமணத்துக்குப் பின் ஜாதகப்படி மாப்பிள்ளை, பெண்ணை விட்டுப் போய்விடுவார்’ என்றார் ஜோசியர். அதிர்ந்துபோய் நான்கைந்து இடத்தில் ஜாதகம் பார்த்தோம்; அனைவரும் இதையே கூறினார்கள்.
இந்நிலையில், அந்தப் பையனுக்கு, அம்மா, அப்பா யாரும் இல்லை என்ற அடுத்த தகவலை மகள் எங்களிடம் சொல்ல, குழப்பம் அதிகமானது. உண்மையிலேயே குடும்பம் இல்லையா, அல்லது ஏதாவது ஏமாற்றுப் பேர்வழியிடம் மகள் மாட்டிக்கொண்டாளா என்று கவலை அதிகமானது. அலுவலகம், அவன் வசிக்கும் இடங்களில் விசாரித்தபோது, ‘ஒரு வருஷமாதான் இங்க இருக்கார். அதுக்கு முன்னாடி என்னனு தெரியல’ என்கிறார்கள்.
இன்னொரு பக்கம், மகள் ஆத்திரத்தில் வெடிக்கிறாள். ‘ஜாதகத்தில் எல்லாம் எனக்கு நம்பிக்கையில்ல. அப்படியே என் வாழ்க்கை நாசமாப் போனாலும் பரவாயில்ல, அவனைத்தான் கட்டிக்குவேன்’ என்று உணர்ச்சிவசப்படுகிறாள். `இதற்காகவா இப்படி அரும்பாடுபட்டு வளர்த்தோம்... ஒருவேளை நாளை அவள் வாழ்வில் எதுவும் பிரச்னை என்றால், எங்களால் தாங்க முடியுமா...’ என்று நாங்கள் தவித்துக்கொண்டிருக்க, ‘ஒருவேளை நான் தற்கொலை பண்ணிக்கிட்டா..?’ என்று மகள் மிரட்டிக்கொண்டிருக்கிறாள். குழப்பங்களைப் புறந்தள்ளி திருமணத்தை நடத்திவிடலாமா? அல்லது கண்டிப்புடன் மகளை எங்கள் வழிக்குக் கொண்டுவரலாமா... அது சாத்தியமா? ஆலோசனை கூறுங்கள் தோழிகளே!
- பெயர் வெளிட விரும்பாத வாசகி

``மூத்த பெண்ணான எனக்கு இரண்டு தங்கைகள். அம்மாவின் சொற்ப வருமானமே குடும்பத்துக்கு ஆதாரமாக இருந்து வந்தது. குடிநோயாளியான அப்பா, இப்போதுதான் சிகிச்சையில் குணமடைந்திருக்கிறார். பணம் கொடுக்காவிட்டாலும், அவர் உயிருடன் இருந்தாலே போதும் என்று நினைக்கிறோம். பள்ளிப் படிப்பை முடித்த நான் தற்போது தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறேன். அம்மாவின் சம்பாத்தியம் மற்றும் என் சம்பாத்தியத்தில்தான் இப்போது அப்பாவின் மருத்துவச் செலவு உள்ளிட்ட எல்லா செலவுகளையும் சமாளிக்கிறோம். பற்றாக்குறையில் ஓடும் வாழ்க்கையில் என் சின்னச் சின்ன ஆசைகளைக்கூட அடக்கிக்கொண்டு, தங்கைகளையாவது நன்றாக படிக்க வைக்க நினைக்கிறேன். தோழிகளோ, ‘ உன் வாழ்க்கையையும் பாரு... உன் தங்கைகள் வாழ்க்கையில் செட்டில் ஆனபிறகு நீ மெழுகுவத்தியா கரைஞ்சதுதான் மிச்சமா இருக்கும்’ என்கிறார்கள். இதை என்னால் புறந்தள்ள முடியவில்லை. இன்னொரு பக்கம், அந்த சுயநலத்தை முளையிலேயே கிள்ளி, திருமணம் செய்துகொள்ளாமல் குடும்பத்தையே என் சந்தோஷமாக நினைக்க வேண்டும் என்கிறது என் மனம். என்ன செய்வது?!’’
வாசகிகள் ரியாக்ஷன்
ஒவ்வொன்றுக்கும் பரிசு: ரூ 100
கொஞ்சநாள் பொறு தோழி!
குடும்பச் சூழ்நிலை புரிந்து, நீ வேலைக்கு சென்று சம்பாதிப்பதும், அதன் மூலம் உன் தங்கைகளைப் படிக்க வைப்பதும் ஆத்மார்த்தமான விஷயம். ஆனால், இந்த மெழுகுவத்தி முழுவதுமாக உருகத் தேவை இல்லை. கரன்ட் வரும் வரை ஒளியூட்டினால் போதும்... அதாவது, உன் தங்கைகள் படிப்பை முடிக்கும் வரை. அதன் பிறகு உனக்கு ஒரு வாழ்க்கையை கண்டிப்பாக அமைத்துக்கொள்ள வேண்டும்.
- என்.ஜீவிதா, தஞ்சாவூர்
திட்டமிட்டு செயல்படு!
தங்கைகளை கரையேற்றுவது உனது கடமை. வாழ்க்கை மிகப் பெரியது. கரையில் அலைகள் வீசத்தான் செய்யும். சிரமப்பட்டு நடுக்கடலுக்கு சென்றுவிட்டால் அமைதி நிலவும். போராடிக்கொண்டே இருப்பதைவிட, திட்டமிட்டு செயல்படு. நிச்சயம் உயர்வு கிடைக்கும்.
- கே.பாப்பாத்தி, மதுரை
முயற்சிகள் தொடரட்டும்!
ஒரேயடியாக உன் வாழ்க்கையை அர்ப்பணம் செய்து மெழுகுவத்தியாக உருக வேண்டியதும் இல்லை... அதே நேரத்தில், குடும்பத்தை உதற வேண்டியதும் இல்லை. ரயில் பயணத்தில் போகிற போக்கில் நாம் ரசிக்கும் இயற்கைக் காட்சிகளைப் போல, சின்னச் சின்ன சந்தோஷங்களை அவ்வப்போது அனுபவித்துவிட வேண்டும். அதே நேரத்தில் உன் குடும்பம் முன்னுக்கு வர வேண்டி செய்யும் முயற்சிகளும் தொடரட்டும். மணமாலை கழுத்தில் விழவும் ஆவன செய்.
- வசந்தா தசரதன், திண்டுக்கல்