மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நள்ளிரவு வானவில்! - க்ரைம் தொடர் - 22

நள்ளிரவு வானவில் | ராஜேஷ்குமார்
பிரீமியம் ஸ்டோரி
News
நள்ளிரவு வானவில் | ராஜேஷ்குமார் ( நள்ளிரவு வானவில் | ராஜேஷ்குமார் )

ராஜேஷ்குமார், ஓவியங்கள்: அரஸ்

மிஷனர் ராஜகணேஷ், ரிதன்யா இருவரும் கர்நாடக டி.ஜி.பி. ருத்ரப்பாவுக்கு முன்பாக இறுகிப்போன முகங்களோடு உட்கார்ந்திருக்க, அவர் பிசிறடிக்காத ஆங்கிலத்தில் நிதானமான குரலில் கேட்டார்...

‘`டி.எஸ்.பி. நம்பெருமாளின் போஸ்ட்மார்ட்டம் என்ன சொல்கிறது..?”

நள்ளிரவு வானவில்! - க்ரைம் தொடர் - 22

“ரூபேஷின் அப்பா யோகானந்த், ஒரு புது வகையான விஷத்தை வைத்து எப்படி கொலை செய்யப்பட்டாரோ, அதேபோல் டி.எஸ்.பி. நம்பெருமாளும் கொலை செய்யப்பட்டிருக்கிறார். பசவன்குடியில் உள்ள யோகானந்த்தின் ஃபார்ம் ஹவுஸுக்கு நாங்க நான்கு பேரும் காரில் போய்க்கொண்டு இருந்தபோது, நம்பெருமாளுக்கு திடீரென்று வாய்க்குள் உமிழ்நீரின் சுரப்பு அதிகமாகி, அதில் ரத்தம் கலந்து வழிய ஆரம்பித்துவிட்டது. நாங்கள் உடனே பதற்றமடைந்தோம். நம்பெருமாளால் பேச முடியவில்லை. இரண்டு கைகளாலும் இதயத்தைப் பிடித்துக்கொண்டு அவர் துடிக்க ஆரம்பித்தார். காரை ஓட்டிக்கொண்டிருந்த ரூபேஷ், உடனடியாக மால்வாடிக்கு அருகில் உள்ள ஹாஸ்பிடலுக்கு காரை செலுத்தினார். ஆனால், ஹாஸ்பிடலுக்கு போவதற்கு முன்பாகவே நம்பெருமாளின் உயிர் பிரிந்துவிட்டது!”

நள்ளிரவு வானவில்! - க்ரைம் தொடர் - 22

டி.ஜி.பி. ருத்ரப்பா தன்னுடைய பரந்த முன்வழுக்கையை இடது கை விரல்களால் ஸ்லோமோஷனில் தேய்த்துக்கொண்டே கமிஷனர் ராஜகணேஷை ஏறிட்டார்.

‘`யோகானந்த் கொலை செய்யப்படு வதற்குக் காரணம் இந்த `நள்ளிரவு வானவில்’ ப்ராஜெக்ட் சம்பந்தப்பட்ட பிரச்னை என்றால், நம்பெருமாள் கொலை செய்யப்படுவதற்கு என்ன காரணம்?”

“அதே `நள்ளிரவு வானவில்’ ப்ராஜெக்ட் பிரச்னைதான் ஸார்” என்றாள் ரிதன்யா.

“எப்படி... நம்பெருமாள் ஒரு போலீஸ் ஆபீஸர். அவர் மேல் கொலையாளிக்கு என்ன பகை இருக்க முடியும்?”

“நான் இங்கே இப்போது ஓர் உண்மையைச் சொல்லியாக வேண்டும் ஸார்...”

“என்ன உண்மை?”

“டி.எஸ்.பி. நம்பெருமாள் என்னுடைய இம்மீடியட் பாஸ். இந்த ‘நள்ளிரவு வானவில்’ ஒரு விபரீதமான ப்ராஜெக்ட். அதைப்பற்றின எல்லா உண்மைகளும் யோகானந்த்துக்கும் அவருடைய சன் ரூபேஷுக்கும் தெரியும் என்கிற உண்மை நம்பெருமாளுக்கும் தெரியும். எனக்கும் தெரியும். ஆனால், இந்த விஷயத்தை அவர் ஆர்வம் இல்லாமல் நிதானமாகக் கையாண்டார். ஒரு கட்டத்தில் எனக்குக் கூட எச்சரிக்கை விடுவது போல் பேசினார். இரண்டு வருடங்களுக்கு முன்பு கன்னட அரசியல் பத்திரிகையொன்று, யோகானந்த் - நம்பெருமாள் இரண்டு பேரையும் இணைத்து ஒரு புகைப்படத்தை வெளியிட்டு, பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், அந்தச் செய்தி எந்தக் காரணத்தினாலோ அப்படியே அடங்கிப் போயிற்று. இப்போது... யோகானந்த் எந்த முறையில் விஷம் வைத்து கொலை செய்யப்பட்டாரோ, அதே முறையில் நம்பெருமாள் கொலை செய்யப்பட்டிருக்கிறார்.”

“யோகானந்த் சாப்பிட்ட மதுவில் விஷம் கலக்கப்பட்டு இருந்தது. அவர் இறந்தார். நம்பெருமாள் உங்களோடு காரில் பயணித்தவர். அவர் வழியில் என்ன சாப்பிட்டார்?”

ராஜகணேஷ் குறுக்கிட்டு சொன்னார்...

“ஸார்! நாங்கள் காரில் பசவன்குடிக் குப் பயணம் செய்வதற்கு முன்பாக அவர் உபயோகித்த மினரல் வாட்டர் பாட்டிலில் இருந்த நீரைக் குடித்திருக் கிறார். அந்த பாட்டிலில் விஷம் கலக்கப்பட்டு இருக்கலாம் என்பது போஸ்ட்மார்ட்டம் செய்த டாக்டர்களின் கணிப்பு. அதற்கேற்றாற்போல் அவருடைய அறையில் இருந்த அந்த மினரல் வாட்டர் பாட்டிலைத் தேடியபோது அது கிடைக்கவில்லை. நாங்கள் காரில் ஏறியதுமே அந்த பாட்டிலை யாரோ அப்புறப்படுத்தியிருக்கிறார் கள். அவருடைய அலுவலகத்தில் விசாரித்தால், யாரிடமிருந்தும் உபயோகமான எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. அதேபோல் ப்ளஸன்ட் ஓஷன் ஹோட்டலில் யோகானந்த்துக்கு மதுவை ஊற்றிக் கொடுத்த பேரர், போலீஸ் விசாரணைக்குப் பயந்து தலைமறைவானான். ஆனால், அடுத்த நாளே ஒரு லாயரோடு வந்து, போலீஸில் சரண் அடைந்து, `நான் மதுவில் எந்த விஷத்தையும் கலக்கவில்லை’ என்று சொல்லி, தன்னுடைய வாதத்தை நியாயப்படுத்திவிட்டு, இப்போது ஜாமீனில் வெளியே வந்துவிட்டான்.”

“கொலையாளியின் அடுத்த குறி... ரூபேஷ்தான்!”

“கண்டிப்பா ஸார்... ரூபேஷ் இப்போதே மரணபயத்தில் உறைந்து போயிருக்கிறான். அவனுடைய வீட்டுக்குப் பலத்த போலீஸ் காவல் போட்டிருந்தாலும் எதையுமே சாப்பிடப் பயப்படுகிறான்.

“கொலையாளி ஞானேஷ்தான் என்பதில் உங்களுக்கு இரண்டாவது கருத்து இருக்கிறதா மிஸ்டர் ராஜ கணேஷ்?”

“யெஸ் ஸார்... என்னுடைய சந்தேகம் எல்லாம் ரிதன்யாவை வீட்டுக்குள் வைத்து மிரட்டிய அந்த திவாகர், பூங்கொடி மேல்தான். யோகானந்த்தைக் கொலை செய்யும் நோக்கத்தோடுதான் ரிதன்யாவையும் அழைத்துக்கொண்டு ஒயிட் ஃபீல்டுக்கு வந்திருக்க வேண்டும்.”

“கொலைக்கான மோட்டிவ்..?”

“ஐயாம் நாட் ஹேவிங் எனி கெஸ் வொர்க் ஸார். தலைமறைவான அல்லது கடத்தப்பட்ட அந்த இரண்டு பேரும் போலீஸ் கையில் பிடிபட்டால்தான் உண்மைகள் வெளியே வரும்!”

“எனக்கென்னவோ இது ஞானேஷின் பழிவாங்கும் படலம் போல் தெரிகிறது. உயிரோடு இருப்பவன் எதற்காக தான் இறந்துவிட்டதாக எல்லோரும் நினைக்க வேண்டும் என்று நாடகமாட வேண்டும்?’’

“அதுவும் புரியாத புதிர்தான் ஸார். ஞானேஷ், பெங்களூரில் இருப்பது உறுதியாகிவிட்டதால் அவனைத் தேடிக் கண்டுபிடிக்க போலீஸின் தனிப்படைஒன்று எல்லாப்பக்கமும் வலையை வீசி வைத்திருக்கிறது. எப்படியும் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் ஞானேஷை மடக்கிவிட முடியும் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது ஸார்” - ராஜகணேஷ் சொல்லிக்கொண்டு இருக்கும்போதே, ரிதன்யாவின் கைப்பையில் இருந்து செல்போன் தன் ரிங்டோனை வெளியிட்டது. செல்போனை எடுத்து அழைப்பது யார் என்று பார்த்தாள்.

அவளுடைய கணவன் ஹரிகிருஷ் ணன். செல்போனை எடுத்து தன் காதுக்கு ஒற்றி மெள்ளப் பேசினாள்...

``என்னங்க..! நான் இப்போ முக்கிய மான மீட்டிங்ல இருக்கேன். அப்புறமா பேசட்டுமா?”

டி.ஜி.பி. ருத்ரப்பா கையமர்த்தினார். ‘’மிஸஸ் ரிதன்யா! நீங்கள் உங்கள் கணவரிடம் தாராளமா பேசலாம். நம்முடைய மீட்டிங் ஓவர். மேலும் இந்த அறையில் இருந்துகொண்டு நீங்கள் செல்போனில் பேசினால் வாய்ஸ் பிரேக் ஆகும். வெளியே போய் பேசிவிட்டு வாருங்கள். சூடாக காபி சாப்பிட்டுவிட்டு கிளம்புவோம்.”

“தேங்க்யூ ஸார்” என்று சொன்ன ரிதன்யா, அந்த அறையிலிருந்து வெளிப் பட்டு காரிடாருக்கு வந்து ஓர் ஓரமாய் நின்றுகொண்டு கணவனிடம் பேச்சைத் தொடர்ந்தாள்...

“என்னங்க! நம்ம அபிநய் இப்போ எப்படியிருக்கான்... ஃபீவர் மறுபடியும் வரலையே..?”

“வரலை... இன்னிக்குக் காலையில் ரெண்டு இட்லி சாப்பிட்டான். இனி எந்தப் பிரச்னையும் இல்லைனு டாக்டர் சொல்லிட்டார். நான் நாளைக்குக் காலை யில் கோயம்புத்தூரிலிருந்து அபிநய்யையும் கூட்டிக்கிட்டு ஃப்ளைட்ல பெங்களூர் வந்துடலாம்னு இருக்கேன். அபிநய் ‘அம்மா அம்மா’ என்று புலம்பிட்டே இருக்கான்...”

``சரிங்க... கூட்டிட்டு வந்துடுங்க. எனக்கும் அவனைப் பார்க்கணும்போல் இருக்கு...”

“உனக்கு அங்கே எந்தப் பிரச்னையும் இல்லையே?”

“ஒரு பிரச்னையும் இல்லை. ‘நள்ளிரவு வானவில்’ பிரச்னை ஒரு முடிவை நோக்கிப் போயிட்டிருக்கு. அதுக்கு சீக்கிரமாவே விடை கிடைக்கும்.”

“நான் சொன்னது ஞாபகம் இருக்கட் டும்...”

“என்ன சொன்னீங்க?”

“இனிமேல் உனக்கு இந்த போலீஸ் வேலை வேண்டாம்!”

“அதைப்பத்தி அப்புறமா பேசி ஒரு முடிவு எடுப்போம். நீங்க மொதல்ல கோயம்புத்தூரிலிருந்து புறப்பட்டு வாங்க..!” செல்போனை அணைத்து கைப்பைக்குள் போட்டுக்கொள்ள முயன்ற ரிதன்யா, சுற்றும்முற்றும் ஒரு தடவை பார்த்துவிட்டு, செல்போனில் கான்டாக்ட்ஸ் ஆப்ஷனுக் குப் போய் ஒரு எண்ணைத் தேய்த்தாள். மறுமுனையில் உடனே ரிங் போயிற்று. அடுத்த சில விநாடிகளில் ஓர் ஆண் குரல் ‘ஹலோ’ என்றது.

ரிதன்யா குரலைத் தாழ்த்தினாள்.

“என்ன பண்ணிட்டிருக்கீங்க ஞானேஷ்?”

“ஹோட்டல் ‘மௌரியா’வுக்குப் போய்க் கிட்டிருக்கேன்”

“எதுக்கு?”

‘’பார்ட்டியைப் பார்க்கத்தான்!”

“பார்ட்டி யாரு..?”

“ஜோர்டானிலிருந்து வந்திருக்காங்க... மொத்தம் மூணு பேர். `எம்.என்.ஆர்’ ப்ராஜெக்ட்டைப்பத்திப் பேசி ஒரு ஹ்யூஜ் ரேட் ஃபிக்ஸ் பண்ணணும்.”

‘’ஜாக்கிரதை ஞானேஷ்..! நீங்க உயிரோடு இருக்கிற விஷயம் தெரிஞ்சு, கர்நாடகாவின் போலீஸ் படை பெங்களூருவின் எட்டு திசைகளிலும் வலைவீசித் தேடிக்கிட்டு இருக்கு!”

ஞானேஷ் மறுமுனையில் சிரித்தான்... ‘`நான் ஒன்பதாவது திசையில் இருக்கேன் என்கிற விஷயம் அவங்களுக்குத் தெரியாது. சரி... அங்கே என்ன நிலைமை?”

“வழக்கம் போல் உயரதிகாரிகள் இன்வெஸ்டிகேஷன் ‘க்யூப்’களில் உட்கார்ந்து ‘இன் கேமரா கான்வெர்சேஷன்’களை நடத்திக்கிட்டு இருக்காங்க. நானும் என்னோட பங்குக்கு ஏதோ பேசிட்டிருக்கேன். இப்பகூட டி.ஜி.பி. ருத்ரப்பா, சென்னை போலீஸ் கமிஷனர் ராஜகணேஷ், நான்... மூணு பேரும் உட்கார்ந்து பேசிக்கிட்டு இருக்கும்போதுதான் என்னோட ஹஸ்பண்ட் எனக்கு போன் பண்ணினார். அறைக்குள்ளே உட்கார்ந்து பேசினா... வாய்ஸ் பிரேக்காகும்ங்கிறதால வெளியே வந்து அவர் கூட பேசினேன். பேசி முடிச்சதும் எனக்கு உங்க ஞாபகம் வந்தது. பக்கத்துல யாரும் இல்லாததால நான் உங்களுக்கு போன் பண்ணினேன்.”

“ரூபேஷ் எப்படியிருக்கான்?”

“தேவையான அளவு போலீஸ் பாதுகாப்பு கொடுத்திருக்கோம். இருந்தாலும் பயந்து செத்துட்டிருக்கான்.”

“பயத்திலேயே சாகட்டும்! சரி... ரிதன்யா, நான் ஹோட்டல் மௌரியாவுக்கு வந்துட்டேன். பார்ட்டிகிட்டே பேசிட்டு ராத்திரி பதினோரு மணிக்கு மேல உங்களுக்கு போன் பண்றேன். அதுக்கு முன்னாடி ஏதாவது அர்ஜென்ஸி இருந்தா எனக்கு ஒரு ‘மிஸ்டு கால்’ கொடுங்க. நிலைமை எனக்கு சாதகமா இருந்தா உடனே போன் பண்றேன்!”

“ஓ.கே... ஞானேஷ்! டேக் கேர்... இன்னிக்கு என்ன கெட்டப்..?”

“போகப் போகிற இடம் ஃபைவ் ஸ்டார் ஹோட்டல். அதனால ஃபுல்சூட் இன் க்ரே கலர். வயசு ஃபார்ட்டி ப்ளஸ்னு நினைக்கிற மாதிரி பெப்பர் சாலட் ஹேர் ஸ்டைல் பிரெஞ்ச் தாடி, மீசை. கண்ணாடிக்கு முன்னாடி நின்னு பார்த்தப்ப எனக்கே என்னை அடையாளம் தெரியலை!”

“சரி... காரிடார்ல யாரோ வர்ற மாதிரி இருக்கு. ராத்திரி பேசுவோம்!” - செல்போனின் இணைப்பை அணைத்து, அதைக் கைப்பைக்குள் போட்டுக்கொண்டு டி.ஜி.பி அறையை நோக்கிப் போனாள் ரிதன்யா.

மௌரியா எக்சல்சையர் ஹோட்டலின் வரவேற்பறைக்குள் நுழைந்தான் ஞானேஷ்.

மின்சார வெளிச்சத்தை வெள்ளமென உமிழ்ந்துகொண்டிருந்த மெகா சைஸ் லஸ்தர் விளக்குகளுக்குக் கீழே சிறகுகள் இல்லாத தேவதைகள் போல் மூன்று ரிசப்ஷனிஸ்ட் பெண்கள் தெரிய, மையமாக இருந்த பெண்ணை நோக்கிப் போனான் ஞானேஷ். அவளுடைய கண்களும் உதடுகளும் போட்டி போட்டுக்கொண்டு புன்னகைக்க ``யெஸ்...” என்றாள்.

‘’ஒன் மிஸ்டர் ஜியா கலீத் ஃப்ரம் ஜோர்டான். ரூம் நம்பர் ப்ளீஸ்...’’

“வாட் அபௌட் யூ ஸார்?”

“ஐயாம் ஃபாஸில் ஃப்ரம் ஹைதராபாத்.”

ரிசப்ஷனிஸ்ட் பெண் ஆங்கிலத்தில் தொடர்ந்தாள்... ``அவரை எதற்காகப் பார்க்க வேண்டும்?”

“எனக்கு அவர் அப்பாயின்ட்மென்ட் கொடுத்திருக்கிறார்.”

“ஒன் மினிட் ஸார்..!” - சொன்னவள், இன்டர்காமின் ரிஸீவரை தன் பொன்னிற விரல்களால் எடுத்து, அவரைத் தோல் போன்ற காதின் மடலோடு உரசவிட்டாள். லிப்ஸ்டிக் பூசாமலேயே சிவந்து போயிருந்த உதடுகள், முப்பது விநாடிகள் அசைந்தன. பின்னர் ரிஸீவரை வைத்துவிட்டு, தன் புன்னகையின் பரப்பைப் பெரிதாக்கிக் கொண்டே ஞானேஷை ஏறிட்டாள்.

‘’செகண்ட் ஃப்ளோர், ரூம் நம்பர் டூ நாட் ஃபைவ் ஸார். ஹி ஈஸ் வெயிட்டிங் ஃபார் யூ...”

“தேங்க்யூ..!”

ஞானேஷ் லிஃப்ட்டை நோக்கி நடந்தான். அடுத்த சில விநாடிகளில் இரண்டாவது மாடியின் வராந்தாவில் கடைசியாக இருந்த 205 எண்ணிட்ட அறைக்கு முன்பாக நின்று அழைப்பு மணிக்கு வேலை கொடுத்தான்.

நள்ளிரவு வானவில்! - க்ரைம் தொடர் - 22

விரிந்த பளபளப்பான ரோஸ்வுட் கதவுக்குப் பின்னால் அந்த ஜியா கலீத், ஆறரையடி  உயரத்தில் நின்றிருந்தார். செம்பழுப்பில் தலைமுடியும் தாடியும் அடர்த்தியாய் தெரிய, பைஜாமா போன்ற வெள்ளுடுப்பை தன் ஐம்பது வயது உடம்புக்குக் கொடுத்திருந்தார். நல்ல ஆங்கிலம் பேசினார்.

“வெல்கம் மிஸ்டர் ஞானேஷ்... உங்களுக் காகத்தான் எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு காத்திருக்கிறேன்.”

ஞானேஷைத் தழுவிக்கொண்டபோது ரோஜாப்பூக்களில் நனைந்ததுபோல் அவர் பூசியிருந்த அத்தர் சென்ட் மணத்தது.

“மன்னிக்க வேண்டும் ஜியா கலீத். இங்கே கொஞ்சம் நிலைமை சரியில்லை. சுற்றும்முற்றும் பார்த்துவிட்டுத்தான் தெருவில் கால் வைக்க வேண்டியிருக்கிறது. இன்றைக்கு நாம் ‘மிட்நைட் ரெயின்போ’ பற்றிப் பேசிவிடலாம் இல்லையா..?”

‘’கண்டிப்பாகப் பேசியாக வேண்டும். ஓர் ஒப்பந்தத்தையும் தயாரித்து பரஸ்பரம் நாம் மாற்றிக்கொள்ள வேண்டும். இந்த வாய்ப்பை நழுவவிட்டால், இனிமேல் இதுபோன்றதொரு வாய்ப்பு நமக்கு கிடைக் காமலே போய்விடும். பக்கத்து அறைகளில் என்னுடைய இரண்டு உதவியாளர்கள் தங்கியிருக்கிறார்கள். அவர்களையும் இங்கே வரவழைத்த பிறகு நீங்கள் மிட்நைட் ரெயின்போவைப் பற்றியும், அதன் செயல்பாடுகள் பற்றியும் விளக்கமாக எடுத்துச் சொல்லலாம். இதுபோன்ற கம்ப்யூட்டர் சம்பந்தப்பட்ட விஷயங்களில் அவர்களுக்குத்தான் நிறைய சந்தேகங்கள் தோன்றும்.’’

- சொன்ன ஜியா கலீத் தன்னுடைய செல்போனை எடுத்துக்கொள்ள, ஞானேஷ் அங்கிலிருந்த சோபாவில் சாய்ந்தான்.

அதே விநாடி அவனுடைய கோட் பாக்கெட்டில் இடம் பிடித்திருந்த செல்போன் வைப்ரேஷனில் உதறுவதை உணர்ந்து எடுத்து அழைப்பது யார் என்று பார்த்தான்.அவனுடைய நண்பன் மணிகண்டன்.

“என்ன மணி...?”

‘’ஞானேஷ்... நீ இப்போ எங்கே இருக்கே?”

“மௌரியா ஹோட்டல்ல! ஏன்... என்ன விஷயம்?”

“அஞ்சு நிமிஷத்துக்கு முன்னாடி சின் னதா ஒரு அசம்பாவிதம் நடந்து போச்சு...”

“விஷயத்தைச் சொல்லு...!”

“திவாகரையும், பூங்கொடியையும் ஒரு ரூம்ல போட்டு அடைச்சு வெச்சிருந்தோம் இல்லையா... அங்கேயிருந்து திவாகர் வென்டிலேட்டர் வழியா தப்பிக்க முயற்சி பண்ணினான். நான் அங்கிருந்த இரும்புக் கம்பியை எடுத்து அவன் பின்னந்தலையில் ஓங்கி அடிச்சேன். அப்படியே தலைகுப்புற விழுந்து மயக்கமாயிட்டான். மூச்சு பேச்சில்லை. ஆள் உயிரோடு இருக்கானா இல்லையான்னு சந்தேகமா இருக்கு. எனக்கு என்ன பண்றது தெரியலை. நீ உடனே புறப்பட்டு வந்தா பரவாயில்லைனு நினைக்கிறேன்!”

- தொடரும்...