மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நள்ளிரவு வானவில்! - க்ரைம் தொடர் - 24

நள்ளிரவு வானவில் | ராஜேஷ்குமார்
பிரீமியம் ஸ்டோரி
News
நள்ளிரவு வானவில் | ராஜேஷ்குமார் ( நள்ளிரவு வானவில் | ராஜேஷ்குமார் )

ராஜேஷ்குமார், ஓவியங்கள்: அரஸ்

பார்த்தசாரதி மறுமுனையில், உடைந்துபோன குரலில் பேச்சைத் தொடர்ந்தார்...

‘`இதோ பார் ஞானேஷ்... உன்னோட திட்டத்தை சீக்கிரமா ஒரு முடிவுக்குக் கொண்டு வா..! நீ உயிரோடு இருக்கிற விஷயம் போலீஸுக்குத் தெரியாம இருந்திருந்தா, எனக்கு எந்தப் பிரச்னையும் வந்திருக்காது. ஆனா, விஷயம் வெளியாயிட்டதால போலீஸ்ல இருக்கிற ஹைலெவல் ஆபீஸர்ஸ் நினைச்ச நேரம் என்கிட்டே வந்து என்கொயரி என்கிற பேர்ல தேவையில்லாத கேள்விகளைக் கேட்டு டார்ச்சர் தர்றாங்க. கொஞ்ச நேரத்துக்கு முந்தி டி.ஜி.பி. எனக்கு போன் பண்ணி ‘உங்க மகன் ஞானேஷ் சம்பந்தப்பட்ட பிரச்னையில் உண்மைகள் வெளியே வர நீங்க முழுமையா ஒத்துழைப்பு தரணும்’னு சொல்றார். அதுக்கு என்ன அர்த்தம்... நான் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தரலைன்னு அவர் சொல்லாம சொல்றார்.”

நள்ளிரவு வானவில்! - க்ரைம் தொடர் - 24

ஞானேஷ் செல்போனில் குரலைத் தாழ்த்தினான்.

“அப்பா! ஒரு ரெண்டு நாள் சமாளிங்க. திட்டம் இப்போ ஃபைனல் ஸ்டேஜ்ல இருக்கு. எப்படியும் இரண்டு நாளைக்குள்ளே எல்லாத்தையும் முடிச்சுடுவேன்..!”

“ரெண்டு நாளைக்குள்ளே எல்லாம் முடிஞ்சுடுமா?”

“கண்டிப்பா முடிஞ்சுடும்.”

“உன்னோட ஃப்ரெண்ட் மணி கண்டன் இப்போ சென்னையில் இருக் கானா... இல்லை, பெங்களூர்ல இருக்கானா?”

“பெங்களூர்லதான் இருக்கான். அவனோட கஸ்டடியில்தான் திவாகரையும் பூங் கொடியையும் வெச் சிருக்கேன்.”

“ஞானேஷ்..!”

“சொல்லுங்கப்பா...”

“அந்த ஜோர்டான் நாட்டு ஹை டெக் பீப்பிள்ஸைப் பார்த்துப் பேசிட்டியா..?”

``பேசிட்டேன். நான் சொன்ன எல்லா டெர்ம்ஸ் அண்ட் கண்டிஷன்களுக்கும் ஒப்புக்கிட்டாங்க. இனிமே சொல்ல வேண்டியவங்ககிட்டே சொல்லிட்டா என்னோட வேலை முடிஞ்சுது...”

“சரி... ரூபேஷை எப்படி ஹேண்டில் பண்ணப்போறே? அவனோட விஷயத்துல நீ ரொம்பவும் காஷியஸ்ஸா இருக்கணும்.”

“அப்பா... நான் அதையெல்லாம் பார்த்துக்கறேன். நீங்க டென்ஷன் ஆகாம இருந்தா போதும். இப்படியெல்லாம் எனக்கு போன் பண்றதுகூட வேண்டாம்... போலீஸ் டிபார்ட்மென்ட்ல உங்க செல்போன் காலை மானிட்டர் பண்ணி டேப் பண்றதுக்கும் வாய்ப்பு இருக்கு!”

“நீ சொல்றதும் சரிதான்... நான் இனிமே உனக்கு போன் பண்ணலை. ஏதாவது முக்கியமான விஷயமா இருந்தா என்னோட இ-மெயில் ஐ.டி-க்கு மெசேஜ் பண்ணிடு... நானும் அதே மாதிரி பண்ணிடறேன்.”

“இட்ஸ் ஓ.கே!” என்று சொன்ன ஞானேஷ் தன்னுடைய செல்போனை அணைத்தான். எதிரில் உட்கார்ந்திருந்த ஜியா கலீத் தன் சதைப்பிடிப்பான உதடுகளை புன்னகையில் விரித்தார்.

“ஏதாவது பிரச்னையா..?”

“பிரச்னைதான்! ஆனா, நாம் பயப்படுகிற அளவுக்குப் பிரச்னையில்லை. எம்.என்.ஆர் டெமோவில் மேற்கொண்டு உங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருக்கிறதா..?”

“இல்லை... எல்லாவற்றுக்கும் நீங்கள் சரியான விளக்கம் கொடுத்துவிட்டீர்கள். ப்ராஜெக்ட்டுக்கான விலையும் முடிவாகிவிட்டது.”

“இனி நான் புறப்படலாமா..?”

“நீங்கள் புறப்படலாம். ஆனா, இன்னொரு தடவை நாம் சந்திக்கவேண்டி வரலாம்...”

“நான் காத்திருக்கிறேன்.”

“அந்தச் சந்திப்பு இந்தியாவில் இருக்காது. எங்கள் நாட்டில்தான் இருக்கும். உங்களுக்கு ஜோர்டான் வர எந்த ஆட்சேபனையும் இல்லையே?”

ஞானேஷ் சிரித்தான். “இந்த உலகத்தின் எந்த மூலைக்குக் கூப்பிட்டாலும் நான் வரத் தயாரா இருக்கிறேன். ஆனால், பேச்சுவார்த்தை திசைமாறிப் போகாமல் நேர்மையா இருக்க வேண்டும். நான் ஏமாற்றப்படுவதாக ஒரு விநாடி உணர்ந்தாலும் உங்களை விட்டு விலகிவிடுவேன்.”

“எந்த ஒரு வியாபாரம் நடந்தாலும் அதில் எங்களுடைய முதல் முதலீடு நேர்மையாகத்தான் இருக்கும். நாங்கள் பேசும் வார்த்தைகளில் ஒரு வார்த்தைகூட பொய்யாக இருக்காது என்கிற உத்தரவாதத்தை நான் தருகிறேன்!”

“இந்த வார்த்தை போதும்... முதல்கட்ட பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிந்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி!” - சொன்ன ஞானேஷ், ஜியா கலித்தின் கையைப் பற்றிக் குலுக்கிவிட்டு எழுந்தான்.

பசவன்குடியில் இருந்த யோகானந்த்தின் ஃபார்ம் ஹவுஸ் அந்த ராத்திரியின் பத்து மணி இருட்டில் நிசப்தமாய் உறைந்து போயிருக்க, கமிஷனர் ராஜகணேஷ், ரூபேஷின் அறையில் அவனுக்கு முன்பாக உட்கார்ந்து நிதானமான குரலில் சொல்லிக்கொண்டிருந்தார்...

‘’கடந்த ரெண்டு நாளா பயத்தின் காரணமா நீங்க சரியா சாப்பிடறது இல்லைன்னு கேள்விப்பட்டேன். உங்க ஃபாதர் யோகானந்த்துக்கும், டி.எஸ்.பி. நம்பெருமாளுக்கும் ஏற்பட்ட மரணம் போலவே உங்களோட மரணமும் இருக்கும்னு நீங்க நினைச்சு பயப்படறதும், அதுக்காக பயந்து பயந்து சாப்பிடறதும் தேவையில்லாதது. இந்த ஃபார்ம் ஹவுஸைச் சுற்றிலும் ஒரு போலீஸ் படையே நிறுத்தப்பட்டிருக்கு. மூன்றடுக்கு பாதுகாப்பு. உங்களுக்குத் தரப்படுகிற உணவு மூன்று பேர் கொண்ட டாக்டர் குழுவால் சோதனை செய்யப்பட்ட பிறகே இந்த அறைக்கு உங்களுடைய நம்பிக்கைக்குரிய வேலைக்காரனால் கொண்டுவரப்படுது. அதனால நீங்க தைரியமா சாப்பிடலாம்!”

தலைகுனிந்து உட்கார்ந்திருந்த ரூபேஷ், ஒரு கோபப் பார்வையோடு ராஜகணேஷை ஏறிட்டான்.

“ஸார்! நீங்க கடமைக்காக எனக்கு ஆறுதல் சொல்றீங்க. அந்த ஞானேஷை நீங்க பிடிக்காத வரை நான் நிம்மதியா சாப்பிட முடியாது; தூங்க முடியாது. ஞானேஷ் என்னோட செல்போனுக்கு அனுப்பியிருக்கிற மெசேஜைப் பாருங்க. அவன் உபயோகப்படுத்தியிருக்கிற வார்த்தைகளைப் படிச்சாலே அடிவயித்துல அமிலம் சுரக்கற மாதிரி இருக்கு. இந்த மெசேஜைப் படிங்க..!” - சொன்ன ரூபேஷ், தன்னுடைய செல்போனை உயிர்ப்பித்து மெசேஜ் ஆப்ஷனுக்குப் போய் அந்த எஸ்.எம்.எஸ் செய்தியைக் காட்டினான்.

கமிஷனர் ராஜகணேஷ் வாங்கிப் பார்த்தார்.

`ரூபேஷ்! உன்னுடைய அப்பா யோகானந்த்தும் அந்தக் கறுப்பு ஆடு டி.எஸ்.பி. நம்பெருமாளும் உனக்காக நரகத்தின் வாசலில் உன் வருகையை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டு இருக்கிறார்கள். நீ புறப்பட்டு  செல்ல தயாராய் இருக்கவும். அவர்கள் எப்படி இறந்தார்களோ, அது போலவே உன்னுடைய மரணமும் இருக்கும். நீ பசிக்குச் சாப்பிடும் உணவுதான் உனக்கு எமன். நீ போலீஸ் வளையத்துக்குள் எவ்வளவு பாதுகாப்போடு இருந்தாலும் மரணம் உன்னை நெருங்குவது சர்வ நிச்சயம்.’

ராஜகணேஷ் அந்த செல்போனை ரூபேஷிடம் திருப்பிக் கொடுத்துக்கொண்டே சொன்னார்...

‘`இதே மாதிரியான மெசேஜ் எனக்கும் வந்தது. அந்த ஞானேஷ் சட்டவிரோதமான சில சிம்கார்டுகளை வெச்சுக்கிட்டு இப்படிப்பட்ட எஸ்.எம்.எஸ்-களை அனுப்பி உங்களுக்கும் போலீஸ் டிபார்ட்மென்ட்டுக்கும் டார்ச்சர் கொடுத்துட்டிருக்கான். இன்னும் ரெண்டு நாள்ல அவனை எப்படியும் மடக்கிடுவோம்!”

“அதுக்குள்ளே நான் போயிடுவேன் போலிருக்கே..!”

“மிஸ்டர் ரூபேஷ்... இது மாதிரியான நேரங்களில்தான் தைரியமா இருக்கணும். நீங்க துணிச்சலோடு இருந்தாத்தான் டிபார்ட்மென்ட் பீப்பிளான நாங்க துணிஞ்சு சில ஏற்பாடுகளைப் பண்ண முடியும்.”

“இது என்னோட உயிர்ப் பிரச்னை ஸார்... அதுதான் உள்ளுக்குள்ளே இவ்வளவு பயந்து பயந்து செத்துட்டிருக்கேன்!” ரூபேஷ் சொல்லிக்கொண்டிருக்கும்போதே ராஜகணேஷின் செல்போன் வைப்ரேஷனில் உதறியது. எடுத்து, அழைப்பது யார் என்று பார்த்தார்.

சென்னையில் இருந்து டெபுடி போலீஸ் கமிஷனர் மகேஷ்வரன். ராஜகணேஷ் செல்போனை இடது காதுக்கு ஒற்றினார்.

“சொல்லுங்க மகேஷ்வரன்..!”

“ஸார்! நமக்கு வேண்டிய இன்ஃபார்மர் மூலமா ரெண்டு நிமிஷத்துக்கு முன்னாடி ஒரு தகவல் வந்தது...”

“என்ன?”

“அந்த ஞானேஷ் பெங்களூரிலிருந்து சென்னைக்கு வந்துட்டு இருக்கிறதா தகவல் ஸார்!”

“எதுல வர்றான்?”

“பஸ்... ஆனா, எந்த பஸ்ஸுலன்னு தெரியலை. அதனால டோல்கேட் போன்ற இடங்களில் எல்லா பஸ்களையும் நிறுத்தி சோதனை போட ஏற்பாடு பண்ணியிருக்கேன் ஸார்..!”

“அது மட்டும் போதாது மகேஷ்வரன். ஞானேஷ் இப்போ அவன் தன்னோட சுய உருவத்தில் இல்லை. வேறு ஏதாவது ஒரு ‘கெட் அப்’பில் இருக்கலாம். சோதனை கடுமையான முறையில் இருந்தாத்தான் அவனைக் கண்டுபிடிக்க முடியும்.”

“அதற்கான ஏற்பாடுகளையும் பண்ணிட்டேன் ஸார்..!”

“தட்ஸ் குட்!”

“அப்புறம் இன்னொரு விஷயம் ஸார்...”

“என்ன..?”

“ஞானேஷோட அப்பா ரிட்டையர்ட் ஜட்ஜ் பார்த்தசாரதி விசாரணைக்கு சரியான முறையில் ஒத்துழைக்க மறுக்கிறார் ஸார். மகன் ஞானேஷைப் பற்றிய எந்த ஒரு கேள்விக்கும் தெளிவான பதிலைச் சொல்லுவது கிடையாது. ‘உங்க மகன் உயிரோடு இருக்கிறார் என்று தகவல் வந்திருக்கிறது. இதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?’ என்று கேட்டால், ‘ஞானேஷ் உயிரோடு  இருந்தா எனக்கு சந்தோஷம்தான்’ என்று சர்வசாதாரணமா சொல்லிவிட்டு மௌனமா இருந்துவிடுகிறார். `உங்கள் மகன் இப்படி நாடகமாட வேண்டிய அவசியம் என்ன?’ என்று கேட்டால், `இந்தக் கேள்வியை அவனிடம்தான் கேட்க வேண்டும்’ என்று சொல்கிறார். ரிட்டையர்ட் ஜட்ஜ் பார்த்தசாரதிக்கு எல்லா உண்மைகளும் தெரியும்; ஆனால், அவர் மறைக்கிறார் என்று டி.ஜி.பி. நினைக்கிறார். மேற்கொண்டு எது மாதிரியான நடவடிக்கையை அவர் மீது எடுப்பது என்று நமது டிபார்ட்மென்ட்டின் சட்டக்குழு யோசித்து வருகிறது.”

“மிஸ்டர் மகேஷ்வரன்! இங்கேயும் நிலைமை சரியில்லை. யோகானந்த்தும் நம்பெருமாளும் கொலை செய்யப்பட்டுவிட்ட நிலையில், ரூபேஷின் உயிருக்கும் ஞானேஷ் குறிவைத்திருக்கிறான். அதை பகிரங்கமா எஸ்.எம்.எஸ். மூலம் குறுஞ்செய்தியா அனுப்பி மிரட்டல் விடுத்திருக்கிறான். ரூபேஷ் ஒவ்வொரு வேளையும் பயந்து பயந்து சாப்பிட வேண்டியிருக்கிறது. `மிட்நைட் ரெயின்போ’ ப்ராஜெக்ட்டைப் பற்றி முழுமையா தெரிந்துகொள்ள யோகானந்த், டி.எஸ்.பி. நம்பெருமாள், ரூபேஷ் இந்த மூன்று பேரும் முயற்சி செய்தது ஞானேஷுக்குப் பிடிக்கவில்லை என்பதால்தான் இந்தப் பழிவாங்கல் என்று நான் நினைக்கிறேன்.”

நள்ளிரவு வானவில்! - க்ரைம் தொடர் - 24

“ஸார்! பெங்களூரிலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருக்கும் ஞானேஷை எப்படியும் இன்று இரவுக்குள் மடக்கிடுவோம் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.”

“ஞானேஷ் சென்னைக்கு வருகிற தகவல் உண்மைதானா..?”

“நம்பத்தகுந்த இன்ஃபார்மரிடம் இருந்து வந்த அதிகாரபூர்வமான தகவல் ஸார் இது! இப்போது எனக்கு இருக்கிற கவலையெல்லாம் அவன் தப்பித்துப் போய்விடக்கூடாது என்பதுதான்!”

“ஞானேஷ் எதற்காக சென்னைக்கு வருகிறான்?”

“தெரியவில்லை ஸார்... அவனுடைய நண்பன் மணிகண்டனும் இப்போது மயிலாப்பூரில் இருக்கும் அவனுடைய வீட்டில் இல்லை. இரண்டு பேரும் சேர்ந்துதான் ஏதோ திட்டம் போட்டிருக்கிறார்கள் என்பது என் யூகம்.”

“எல்லா யூகங்களுக்கும் விடை கிடைக்க வேண்டுமென்றால் ஞானேஷ் ‘லாக்கப்’புக்கு வர வேண்டும்!”

“நாளை பொழுது விடியும் போது ஞானேஷ் சென்னையில் உள்ள ஏதாவது ஒரு போலீஸ் ஸ்டேஷனின் லாக்கப்புக்குள் முழங்கால்களைக் கட்டிக்கொண்டு உட்கார்ந்திருப்பான் ஸார்!”

“டூ இட் மிஸ்டர் மகேஷ்வரன்!” - சொல்லிவிட்டு, செல்போனை அணைத்தார் ராஜகணேஷ்.

ரூபேஷ் கேட்டான்... “என்ன ஸார்... ஞானேஷ் சென்னைக்குப் போயிட்டிருக்கானா..?”

“ஆமா... நம்பிக்கைக்குரிய ஒரு இன்ஃபார்மர் மூலமா சென்னை போலீஸுக்குத் தகவல் கிடைச்சிருக்கு. ஞானேஷை எப்படியும் மடக்கிடுவாங்க... இனிமே கவலையில்லை. நீங்க நிம்மதியா ரெஸ்ட் எடுங்க மிஸ்டர் ரூபேஷ். நாளைக் காலையில் நான் நல்ல செய்தியோடு உங்களை சந்திக்கிறேன்.”

ராஜகணேஷ் விடைபெற்றுக்கொண்டு போய்விட... ரூபேஷ் பயத்தை மறந்தவனாய் புன்னகையோடு படுக்கையில் சாய்ந்தான். பக்கத்தில் இருந்த ரிமோட் கன்ட்ரோலை எடுத்து டி.வி-யை ஆன் செய்தான்.

ஏதோ கார்ட்டூன் சேனல்.

ஜெர்ரியை டாம் துரத்திக்கொண்டிருந்தது. ஒரு ஐந்து நிமிட நேரம் அதைப் பார்த்துக்கொண்டு இருந்துவிட்டு சேனலை மாற்றினான். காஷ்மீர் பார்டரில் இந்தியா - பாகிஸ்தான் பரஸ்பரம் துப்பாக்கிச் சண்டை நடத்தியதை ஒரு ஆங்கிலச் செய்தி சேனல் ‘பிரேக்கிங் நியூஸ்’ என்று சொல்லிப் பதற்றப்படுத்திக்கொண்டிருக்க, அதையும் சில நிமிஷ நேரம் பார்த்துக்கொண்டிருந்துவிட்டு ஒரு தமிழ் சேனலின் சீரியலுக்குப் போனான்.

அதே விநாடி - ரூபேஷின் செல்போன் ரிங்டோனை வெளியிட்டது. டி.வி-யை அணைத்துவிட்டு செல்போனை எடுத்துப் பார்த்தான். புது எண்.

`யாராக இருக்கும்’ என்று யோசித்தபடியே செல்போனை எடுத்து காதுக்கு ஒற்றினான்... ‘`யாரு?”

“என்ன ரூபேஷ்... பகவன்குடியில் இருக்கிற பண்ணைவீட்டில் போலீஸோட பாதுகாப்பு வளையத்துக்குள்ளே உட்கார்ந்துகொண்டு, வரப்போகிற மரணத்துக்காக வெயிட் பண்றே போலிருக்கு!”

ரூபேஷ் நிமிர்ந்து உட்கார்ந்தான். உடம்பு இன்ஸ்டன்ட்டாக வியர்த்து, நாக்கு உடனே வறண்டது.

“யா... யார்... நீ..?”

“நீ ரூபேஷ்னா, நான் ஞானேஷ்..!”

கட்டிலிலிருந்து நடுக்கமாக இறங்கினான் ரூபேஷ். கையில் இருந்த செல்போன் தன்னிச்சையாக ஒரு நடுக்கத்துக்கு உட்பட்டது.

“நீ... நீயா..?”

“நானேதான்! கொஞ்சம் பின்னாடி திரும்பிப் பாரு...”

பார்த்தான்.

அந்த அறையின் மூலையில் இருந்த ‘வார்ட்ரோப்’பின் கதவைத் திறந்துகொண்டு ஞானேஷ் வெளிப்பட்டான்.

உதட்டில் சின்னப் புன்னகை.

வலது கையில் மேக்னம் ரிவால்வர்.

- தொடரும்...