அவள் 16
Published:Updated:

சிறப்புக் குழந்தைகள்... சிறப்புப் பள்ளி... சிறப்பான சேவை!

எஜுகேஷன் ஸ்பெஷல்

ன்மிக உபன்யாசகர் வேளுக்குடி கிருஷ்ணனின் முயற்சியால் ஸ்ரீரங்கத்தில் சமீபத்தில் துவங்கியிருக்கிறது, ‘அப்யாஸா கேந்த்ரா’. பல்வேறு சிறப்புத் தேவைகள் கொண்ட குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கான தொழிற்பயிற்சி மையம் இது. இம்மையத்தை நிறுவி நிர்வகிப்பவர், சிறப்புக் குழந்தைகளுக்கான கல்வி மற்றும் மேம்பாட்டில் நிபுணத்துவம், அக்கறை, பல ஆண்டுகள் அனுபவம் பெற்ற ‘வீ எக்ஸெல் கல்வி அறக்கட்டளை’யின் நிறுவனர் வசுதா பிரகாஷ்.

‘‘சில மாதங்களுக்கு முன்னால், கிருஷ்ணன் சுவாமிகள் என்கிட்டே, ‘ஸ்ரீரங்கம் வேத பாடசாலையில் ஆசிரியராக இருக்கும் ஒருத்தரோட ரெண்டு குழந்தைகளும் சிறப்புக் குழந்தைகள். அவங்களுக்கு ஏதேனும் பயிற்சி கொடுக்க முடியுமா?’னு கேட்டு, இங்கே சென்னைக்கு அனுப்பி வெச்சார். அவங்களோட முன்னேற்றத்தைப் பார்த்துட்டுத்தான் சுவாமிகள், இப்படி ஒரு முடிவுக்கு வந்தார். ஸ்ரீரங்கத்தில் அவருக்குச் சொந்தமான நிலத்தைத் தானமாகக் கொடுத்து, அதில் பள்ளியை ஆரம்பிக்கச் சொன்னார்.

சிறப்புக் குழந்தைகள்... சிறப்புப் பள்ளி... சிறப்பான சேவை!

ஏதாவது ஒரு குறைபாட்டுடன் பிறந்த குழந்தைகளை, வீட்டில் வெச்சுப் பார்த்துக்க முடியாத எத்தனையோ பெற்றோர்கள் இருக்காங்க. இது மாதிரி சிறப்பு தேவையுள்ள பிள்ளைங்களுக்கு கல்வி அறிவை ஓரளவுக்குத்தான் தரமுடியும். அதுக்கு மேல அவங்களை ஏதாவது ஒரு தொழிலில் ஈடுபடுத்தியே ஆகணும். படிக்கவே முடியாத எத்தனையோ சிறப்புக் குழந்தைகள், பெரியவங்க இருக்காங்க. அவங்களுக்கு ஏதாவது ஒரு தொழிற்பயிற்சியைக் கொடுத்து, அதன் மூலம் வேலைவாய்ப்பு உருவாக்கிக் கொடுத்து, அவங்க தன் காலில் நிக்கிறதுக்கும், முடிந்தவரை குடும்பத்தைச் சார்ந்திராமல் இருக்கிறதுக்கும் உதவறதுதான் எங்க நோக்கம்!’’ என்கிறார் வசுதா. கணவர் அமெரிக்காவில் இருக்க, தான் மட்டும் சென்னையிலேயே தங்கி, சிறப்புக் கல்வியில் பல புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தி, குழந்தைகளிடம் நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்தி வருகிறார்.

‘‘இப்போ எங்க எல்லா சென்டர்களிலும் சேர்த்து 500-க்கும் மேல் மாணவர்கள் இருக்காங்க. எங்க பள்ளிகளில், பிறந்த குழந்தை முதல் 90 வயசுக்கு மேலான தாத்தா, பாட்டி வரை, சிறப்புத் தேவைகள் உள்ள எல்லோருக்குமே பயிற்சிகள் கொடுக்கப்படுது. ஓரளவுக்கு மேல் படிப்பு சொல்லிக் கொடுக்க முடியாத குழந்தைகளுக்காகவும், பெரியவர்களுக்காகவும்தான் தொழிற்பயிற்சி மையம் (வொகேஷனல் சென்டர்) இருக்கு. 16 வயசுக்கு மேல எல்லோருக்குமே ‘ப்ரீ வொகேஷனல் ஸ்கில்ஸ்’ சொல்லித் தர்றோம்.

இப்போ, ஸ்ரீரங்கத்தில் ஆரம்பிச்சிருக்கிற மையத்தில் சேர்ந்திருக்கும் எல்லோருமே 20 வயசுக்கு மேற்பட்டவங்கதான். அவங்களுக்கு கோயில் தொடர்பான வேலைகளைச் சொல்லித் தரச்சொல்லியிருக்கார் கிருஷ்ணன்ஜி. பூ தொடுக்கிறது, விளக்குத் திரி திரிக்கிறது, பித்தளை விளக்கு, பூஜை பாத்திரம் தேய்க்கிறது, பிரசாதம் பண்றது... இப்படியான வேலைகளில் பயிற்சி கொடுத்துட்டா, அவங்களை கோயில் வேலைகளில் ஈடுபடுத்திக்கலாம்... அவங்களுக்கும் வருமானம் கிடைக்குமே!’’ எனும் வசுதாவுக்கு, அண்மையில் செயின்ட் ஜான்ஸ் ஆம்புலன்ஸ் அமைப்பு, ‘சாதனையாளர் விருது’ வழங்கி கௌரவித்துள்ளது. ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனத்தின் ‘நல்லோர் விருதை’யும் பெற்றுள்ளார்.

சிறப்புக் குழந்தைகள்... சிறப்புப் பள்ளி... சிறப்பான சேவை!

‘‘சென்னையில் இருக்கும் தொழிற்பயிற்சி மையத்தில், லாண்டிரி, சர்க்யூட் போர்டு அசெம்பிளிங், பாக்குமட்டை தட்டு செய்தல், தோட்டம் போடுதல், நர்சரி, தாம்பூலப்பை செய்தல், பொடி வகைகள் தயாரித்தல் போன்ற பல வேலைவாய்ப்புக்கேற்ற பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. ஸ்ரீரங்கத்திலும் லாண்டிரி, கிச்சன் எல்லாம் ஆரம்பிச்சு, டிரெயினிங் கொடுக்கப் போறோம்!’’ எனும் வசுதா, மாணவர்களுக்காக மாதம் ஒரு இசைக்கலைஞரை வரவழைத்து நிகழ்ச்சி நடத்துவது, அவர்களை ஆர்ட் கேலரிக்கு அழைத்துச் செல்வது, விமானத்தில் அழைத்துச் சென்று வருவது என வித்தியாசமான முயற்சிகளை அக்கறையுடன் முன்னெடுத்துக் கொண்டிருக்கிறார்.

‘‘ஸ்ரீரங்கம் ‘அப்யாஸா கேந்திரா’வில் சேர்பவர்களுக்கு, சாதாரண கட்டணம்தான் வசூலிக்கப்படுது. அதாவது, 500 ரூபாய். ஆனால் வெளியூரில் இதைவிட சற்று அதிகமாகவே வசூலிக்கப்படுது.  ெசன்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில் இயங்கும் ‘வீ எக்ஸெல் கல்வி அறக்கட்டளை’, சிருங்கேரி சாரதா பீடத்துடன் இணைக்கப்பட்டது. பள்ளிக்கான இடத்தையும் சிருங்கேரி மடம்தான் வழங்கினாங்க. சிருங்கேரி மடம், வேளுக்குடி கிருஷ்ணன்ஜி... இந்த மாதிரி நல்ல உள்ளங்கள் இருக்கப்போ, சிறப்புக் குழந்தைகளை வெச்சிருக்கிற எந்தப் பெற்றோரும் கவலைப்பட வேண்டியதில்லை!’’ என்று கருணையோடு கூறும் வசுதாவுக்கு, 100 கிராமங்களில் சிறப்புப் பள்ளிகளைத் தொடங்க வேண்டும் என்பதே லட்சியம்.

பிரேமா நாராயணன்  படங்கள்: ஜெ.வேங்கடராஜ்

அமெரிக்கா டு சென்னை!

திருநெல்வேலியைப் பூர்வீகமாகக் கொண்ட வசுதா... பிறந்து, வளர்ந்தது மும்பையில். இளங்கலை வணிகவியல், முதுகலை கிளினிக்கல் சைக்காலஜி முடித்தவர், ஐ.டி துறையைச் சேர்ந்த பிரகாஷை மணந்த பிறகு, சவுதி அரேபியா, அமெரிக்கா என அயல்நாடுகளில் வாசம். சவுதியில் ஸ்பெஷல் எஜுகேட்டர் பணி, அமெரிக்காவில் சிறப்புக் கல்வியில் பிஹெச்.டி முடித்தவர், சென்னையில் 2001-ல் தொடங்கிய ‘வீ எக்ஸெல் கல்வி அறக்கட்டளை’க்கு இப்போது திருநெல்வேலி, ஈரோடு, ஷோலாப்பூர், நாசிக் எனப் பல இடங்களில் கிளைகள் உள்ளன. பேச்சு வராத சிறப்புக் குழந்தைகளை மதிப்பீடு செய்வதற்கான ‘பிளே தெரபி’ எனப்படும் விளையாட்டு முறை இந்தியாவிலேயே ‘வீ எக்ஸெல்’ சிறப்புப் பள்ளியில் மட்டும்தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது!