ஒவ்வொன்றுக்கும் பரிசு: ரூ.200
மெஷினுக்கு ரெஸ்ட்... உடம்புக்கு பெஸ்ட்!

என் தோழியை வெகுநாட்களுக்குப் பிறகு சந்தித்தேன். முன்பு, மிகவும் குண்டாக இருந்தவள், ஸ்லிம்மாகி இருந்தாள். ``என்ன... டயட்டில் இருந்தியா?’’ எனக் கேட்டேன். அதற்கு அவள், ``அதெல்லாம் ஒண்ணுமில்ல... வீட்டிலுள்ள மிக்ஸி, வாஷிங்மிஷின், வாக்குவம் கிளீனர் எல்லாத்தையும் கட்டிவைத்துவிட்டேன். அம்மியில் அரைப்பது, துணியை கையால் துவைப்பது, வீட்டைத் துடைப்பது என பல வேலைகளைக் குனிந்து நிமிர்ந்து செய்வதால், உடம்பு தானாகவே குறைந்துவிட்டது. மனதுக்கும் புத்துணர்ச்சி கிடைக்கிறது’’ என்றாள்.
இதை நாமும் முயற்சிக்கலாமே!
- எஸ்.சுப்புலெட்சுமி, புதுக்கோட்டை
மறதிக்கு மருந்தாகும் `மெமரி போர்டு’!

புதிதாக கட்டப்பட்ட அப்பார்ட்மென்ட் ஒன்றில் குடியேறிய தோழியைச் சந்திக்கச் சென்றிருந்தேன். அன்று மாலை ஷாப்பிங் செல்ல இருவரும் தயாராகி லிஃப்ட்டுக்கு வந்தபோது தோழி மட்டும் வேகமாக வீட்டுக்குள் சென்று சில நிமிடங்களில் வந்தாள். ``என்ன ஏதாவது மறந்துட்டியா?’’ என்று கேட்டதற்கு, ‘’ஆமாம்’’ என்றவள், லிஃப்ட் அருகே இருந்த போர்டை சுட்டிக் காட்டினாள். அதில், `கேஸ் லைன், பைப் லைன், மின்சார ஸ்விட்சுகள், டி.வி ஆகியவற்றை சுவிட்ச் ஆஃப் செய்தீர்களா? மொபைல் சார்ஜர் எடுத்துக்கொண்டீர்களா? போஸ்ட், கொரியர் வந்தால் வாங்கி வைக்கும்படி அண்டை வீடு அல்லது பாதுகாவலரிடம் கூறினீர்களா?’ என்பது உட்பட நிறைய எழுதியிருந்தனர்.
அவசர உலகில் நம் மறதி மட்டுமின்றி பாதுகாப்பு விஷயங்கள் பற்றிய அந்த `மெமரி போர்டு’ அர்த்தமுள்ளதாக பட்டது. குடியிருப்பு, அலுவலகங்கள், ஷாப்பிங் மால்களில் இதுபோன்ற வேறு `மெமரி போர்டு’களை வைத்தால், பலரும் பயன்பெறுவார்கள்.
- எஸ்.சிவசித்ரா, சிட்லபாக்கம்
பிளாஸ்டிக் சேர் பயங்கரம்!

சமீபத்தில் ஒரு விசேஷத்துக்கு சென்றிருந்தபோது, அங்கு என் பெரிய மாமனார் பிளாஸ்டிக் சேரில் அமர்ந்தார். சேர் கால் நான்கு பக்கமும் விரிந்து, படாரென்று கீழே விழுந்தார். மண்டையில் அடி. இன்னொரு விழாவில் 75 வயது முதியவர் ஒருவர் பிளாஸ்டிக் சேரில் அமர, அவருக்கும் இதே கதி!
திருமண மண்டபங்களில் வைக்கப்படும் பிளாஸ்டிக் சேர்களில் பலவும் தரமானதாக இருப்பதில்லை. முதியவர்களும், குழந்தைகளும் சமாளிக்க முடியாமல் கீழே விழுகிறார்கள். விழா நடக்கும் மண்டபங்களில் வயதானவர்களுக்கு என்று தனியாக ஓரிரு வரிசை மர சேர்கள் போட்டால் நன்றாக இருக்குமே! செய்வார்களா?
- சங்கீதா, கே.கே.நகர்
பண்டிகை... பண்டமாற்று அல்ல!

நவராத்திரிக்கு எனக்குத் தெரிந்த பெண்மணி அழைத்திருந்தார். அவர் வீட்டுக்குச் சென்றேன். கொலு நன்றாக இருந்தது. பாராட்டிவிட்டு சிறிது நேரத்தில் புறப்பட்டேன். ``என்ன அவசரம்?’’ என்று கேட்டார். என் தோழியின் பெயரைச் சொல்லி ``அவள் வீட்டு கொலுவுக்கு கூப்பிட்டிருக்கிறாள். அங்கு போக வேண்டும்’’ என்றேன். உடனே அந்தப் பெண்மணி ``அவள் வெறும் வெற்றிலை - பாக்குதான் தருவாள். ஒரு ரூபாய் காசுகூட வைக்க மாட்டாள். நேற்று நான் போயிருந்தேன்” என்று கூறவும் அதிர்ச்சியடைந்தேன்.
நவராத்திரி சமயத்தில் கொலு பார்க்க வருகிறவர்களுக்கு பரிசுப் பொருட்கள் கொடுப்பது என்பது அவரவர்கள் வசதியையும் விருப்பத்தையும் பொறுத்தது. கடந்த சில வருடங்களாக நவராத்திரியை பண்டம் மாற்றும் நிகழ்ச்சியாக மாற்றிவிட்டார்கள். `நவராத்திரிக்கு வருபவர்களுக்கு தாம்பூலம், கொடுப்பதுதான் முக்கியம்... பரிசுப் பொருள் அல்ல’ என்பதை அனைவரும் உணர வேண்டும்.
- சரோஜா ஸ்ரீதர், சென்னை-75