அவள் 16
Published:Updated:

சங்கடம் தீர்க்கும் சந்நிதிகள்!

தாயாக்கும் தாய்... கர்ப்பரட்சாம்பிகை!

ஞ்சாவூர் மாவட்டம், பாபநாசத்திலிருந்து 6 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருக்கருக்காவூரில் பிள்ளை வரம் தருபவளாக, கரு காக்கும் தெய்வமாக வீற்றிருக்கிறாள் கர்ப்பரட்சாம்பிகை. பெண்களின் கருவைக் காக்கும் நாயகி வீற்றிருப்பதாலேயே இந்தப் பெயர் இவ்வூருக்கு!

சங்கடம் தீர்க்கும் சந்நிதிகள்!

460 அடி நீளமும், 284 அடி அகலமும் கொண்ட இக்கோயிலின் கிழக்கில் ராஜகோபுரமும், தெற்கில் நுழைவு வாயிலும், வடக்கே வசந்த மண்டபமும், பெரிய பிராகாரத்தில் முல்லை வனநாதரும், வடக்கே கர்ப்பரட்சாம்பிகையும் என... ஆலயத்தின் உள்ளே அடி எடுத்து வைத்ததுமே அடிமனம் பரவசம் கொள்கிறது. மூலவராகிய முல்லை வனநாதர் சந்நிதி, கர்ப்பரட்சகி அம்மன் சந்நிதி, இடையில் அமைந்துள்ள ஆறுமுகர் சந்நிதி... இவை மூன்றையும் ஒரே நேரத்தில் தரிசிப்பது பெண்களுக்கு பெரும் பேறாகும் என்று புராணங்கள் கூறுகின்றன. 

சங்கடம் தீர்க்கும் சந்நிதிகள்!

நித்துருவர் என்ற முனிவர், இந்த ஸ்தலத்தில் வசித்து வந்தபோது, கருவுற்றிருந்த தன் மனைவி வேதிகையை அங்கேயே விட்டுவிட்டு வருணன்பால் சென்றிருந்தார். அப்போது அங்கே வந்த முனிவர் ஒருவர், வேதிகையிடம் பசிக்கு உணவு கொடுக்குமாறு கேட்டார். கர்ப்பிணியான வேதிகை எழுந்து வந்து உணவு அளிக்க முடியாததால், முனிவர் கோபமுற்று ராசயட்சு என்னும் நோயினால் வருந்துமாறு அவளைச் சாபமிட்டார். பின்னர், இந்த ஸ்தலத்தில் உள்ள பெருமாள் மற்றும் பெருமாட்டியை வேதிகை சரணடைய, அவள் கரு காக்கப்பட்டது. அந்த வரலாறுதான் இன்று பல லட்சம் பெண்களுக்கு பிள்ளை வரம் அளிக்கும், கரு காக்கும் ஸ்தலமாக இது விளங்கி வரும் சிறப்பு.

கர்ப்பரட்சாம்பிகையை நினைத்து வணங்கினால் கரு உண்டாகிறது, கரு நிலைக்கிறது, சுகப்பிரசவம் நிகழ்கிறது. தமிழகம் மட்டுமல்லாமல் வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து எல்லாம் வழிபடவும், நேர்த்திக்கடனை நிறைவேற்றவும் இங்கே வருகிறார்கள் தம்பதிகள் பலர். மேலும், கருவுற்ற பெண்கள் பலர், பேறுகாலம் வரை இங்கே தங்கி வழிபாடு செய்து, குழந்தையுடன் திரும்பிச் செல்லும் வழக்கமும் உண்டு. மன்னர்களின் காலங்களில் போர் நிகழும் போது, இவ்வூர் கருவுற்ற மகளிர்க்கு அம்மன்

அடைக்கலம் அளிக்கும் இடமாக இருந்ததால், திருக்கருக்காவூரை படைவீரர்கள் நெருங்கு வதில்லை என்கிறது வரலாற்றுச் செய்தி.

கோயம்புத்தூர் மாவட்டம், சூளூர் கௌரிசங்கர் - சரண்யாதேவி தம்பதி, முகம் மலர்ந்த மகிழ்ச்சியுடன் பேசினார்கள்... ‘‘எங்களுக்கு 2009-ல் கல்யாணம் ஆச்சு. எனக்கு ரெண்டு மாதங்கள்தான் கரு தங்கும், அப்புறம் கலைஞ்சுடும். இப்படியே ரெண்டு வருஷமா தொடர்ந்தது. கோயம்புத்தூர்ல பெரிய டாக்டர்கள்கிட்ட ட்ரீட்மென்ட் எடுத்தும், ‘இனி நீங்க சென்னைக்குதான் போகணும்’னு கையை விரிச்சுட்டாங்க. அந்த நேரத்துலதான் எங்களுக்குத் தெரிஞ்ச நண்பர்கள், கர்ப்பரட்சாம்பிகையைப் பற்றிச் சொல்ல, ‘அந்தக் கோயிலுக்கு ஒரு தடவை போயிட்டு அப்புறம் சென்னைக்கு ட்ரீட்மென்டுக்குப் போகலாம்’னு முடிவு பண்ணி இங்க வந்தோம்.

கர்ப்பரட்சாம்பிகையை அவ சந்நிதியில் நெய்யினால் படிமெழுகி, கோலமிட்டு, காணிக்கை செலுத்தி வழிபட்டோம். அம்மன் பாதத்தில் வைத்து பூஜை செஞ்சு கொடுத்த நெய்யை, அர்ச்சகர் சொன்ன மாதிரியே 48 நாட்கள் அம்மனை நினச்சு நானும், என் கணவரும் சாப்பிட்டோம். பிரார்த்தனை ஸ்லோகங்களும் சொல்லி இரவில் படுப்போம். ரெண்டு மாசத்தில் உண்டான கரு, இந்த முறை கலையலை. சென்னைக்கு ட்ரீட்மென்டுக்கும் போகலை. 10 மாசத்துல அழகான ஆண் குழந்தை பிறக்க, இந்த கோயில் பெரிய பிராகாரத்தில் உள்ள சிவனை நினைச்சு ‘ஆகாஷ்’னு பேர் வெச்சோம். குழந்தை பிறந்ததும் வந்து தங்கத் தட்டில் வெச்சு வழிபடுறோம்னு வேண்டிக் கிட்டதை நிறைவேற்ற முடியல. ஏன்னா, அடுத்ததா எங்களுக்கு பெண் குழந்தையும் பிறந்துருச்சு. அன்னிக்கு ஒரு குழந்தைக்காக ஏங்கி வேண்டிக்கிட்ட எங்க கையில, இன்னிக்கு ரெண்டு குழந்தைகளைக் கொடுத்து தன்கிட்ட வர வெச்சிருக்கா ஆத்தா!’’ - பூரிப்பும் பரவசமும் சரண்யா குரலில்.

சங்கடம் தீர்க்கும் சந்நிதிகள்!

திருச்சியைச் சேர்ந்த ராஜா - வளர்மதி தம்பதி, ‘‘எங்களுக்குக் குழந்தைப் பேறு தள்ளிப்போய்கிட்டே இருந்தது. இந்தக் கோயிலுக்குப் போகச் சொல்லி பலரும் சொல்ல, கிளம்பி வந்தோம். அம்மன் சந்நிதியில் படிமெழுகி காணிக்கை செலுத்தி வேண்டிக்கிட்டோம். 48 நாட்கள் நெய் சாப்பிட்டு வந்தோம். அடுத்த வருஷமே என் மகன் சதீஷ்குமார் பிறந்தான். அதிலிருந்து வருஷம்

தவறாம இந்தக் கோயிலுக்கு வந்து கர்ப்பரட்சாம்பிகையை கும்பிட்டுப் போனாதாங்க, அந்த வருடம் முழுக்க நிம்மதியா இருக்கும்!’’ என்று பக்தியில் உருகினார்கள்.

பாலச்சந்தர் குருக்கள், அம்பாளின் அருளை லயித்து நமக்கு சொன்னார் ‘‘கரு பிரச்னை, டெஸ்ட் டியூப் பேபிக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கவல்லது இந்தத் தலம். குழந்தை பாக்கியம் இல்லாதவங்க, தள்ளிப் போறவங்க, நிலைக்காதவங்க இங்கு வந்து படிமெழுகி வேண்டிக்கிட்டு, நாங்க கொடுக்கிற நெய்யினை 48 நாட்கள் இரவு நேரத்தில் தூங்கப் போறதுக்கு முன்னாடி ஸ்லோகங்களை சொல்லி கணவன், மனைவி ரெண்டு பேரும் சாப்பிட்டு வந்தா... நிச்சயம் வீட்டில் சீக்கிரமே தொட்டில் ஆடும். மாதவிடாய்க் காலங்களில் மட்டும் நெய்யினைச் சாப்பிடக்கூடாது.

திருமணமாகாதவர்கள் இங்கு வந்து வழிபட்டா நிச்சயம் திருமணம் நடக்கும். கர்ப்பிணி பெண்கள் அம்மன் சந்நிதியிலிருந்து கொடுக்கப்படும் விளக்கெண்ணெயை ஐந்தாவது மாதத்தில் இருந்து வலி ஏற்படும் போதெல்லாம் வயிற்றில் தடவி வந்தா, நிச்சயம் சுகப்பிரசவம் நிகழும்!’’ என்று அன்னை பெண்களின் காவல் தெய்வமாக வீற்றிருப்பதைச் சொன்னவர்,

சங்கடம் தீர்க்கும் சந்நிதிகள்!

‘‘இந்துக்கள் மட்டுமில்லாம குழந்தை இல்லாத இஸ்லாமிய, கிறிஸ்தவப் பெண்களும் இங்க வந்து வழிபட்டு தாய்மை பாக்கியம் அடைஞ்சிருக்காங்க. சீன நாட்டைச் சேர்ந்த ஒரு கர்ப்பிணி பெண் இங்க வந்து வழிபட்டு, ஆரோக்கியமான குழந்தை பிறந்திருக்கு. சீன மருத்துவர்களே ஆச்சர்யப்பட்டாங்கன்றதை எனக்கு தகவலா தெரிவிச்சு, நம்ம அம்மனை நினைச்சு நெகிழ்ந்தாங்க அந்தப் பொண்ணு. கர்ப்பரட்சாம்பிகை... பேருக்கேத்த பெரும் சக்தி அவ!’’

- மெய்சிலிர்க்கச் சொன்னார் குருக்கள்.

- தரிசிப்போம்...

ஏ.ராம்   படங்கள்:கே.குணசீலன்