மற்ற எபிசோடுகள்
Published:Updated:

என் டைரி - 369

என் டைரி - 369

காதலித்து திருமணம் செய்துகொண்ட என் பெற்றோர் கருத்துவேற்றுமையால் பிரிந்து வாழ்கின்றனர். நானும் என் இரண்டு தங்கைகளும் என் அப்பாவுடன் வாழ்கிறோம்.

என் அப்பா டீக்கடை வைத்து நடத்துகிறார். ஓய்வில்லாமல் உழைத்து என்னையும் தங்கைகளையும் படிக்க வைக்கிறார். பாசத்தில் தாயாகவும் இருக்கிறார். தங்கைகளுக்கு அம்மா இல்லை என்ற ஏக்கம் ஏற்பட்டுவிடக் கூடாதே என்று, என்னால் முடிந்த வரை அவர்களுக்கு அம்மாவாகவே நானும் நடந்துகொள்வேன்.

என் டைரி - 369

இந்நிலையில், கல்லூரியில் எனக்கு நல்ல நண்பன் ஒருவன் கிடைத்தான். நாட்கள் செல்லச் செல்ல... நாங்கள் காதலர்கள் ஆனோம். இரண்டு பேருமே மிடில் கிளாஸ் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், `வாழ்வில் செட்டிலான பிறகே திருமணம்’ என்று முடிவு செய்து, போட்டித் தேர்வுகளுக்குப் படிக்க ஆரம்பித்தோம்.

ஆரம்பத்தில் தேர்வுப் பாடங்களில் வேகம் இல்லாமல் இருந்த என்னை, அவன்தான் கண்டித்து, கனிந்து சொல்லி, உற்சாகப்படுத்திப் படிக்க வைத்தான். சில தேர்வுகள், சில தோல்விகள் என்று சென்றது வாழ்க்கை. இரண்டு வருடங்கள் கழித்து, குரூப் 2 தேர்வில் நான் தேர்ச்சியடைந்தேன். அவன் தேர்வாகவில்லை. நான் பணியில் சேர... அவன் தன் சகோதரியின் திருமண வேலைகளால் படிப்பில் கொஞ்சம் வேகம் குறைந்தான். இதற்கிடையில், நான் வேலைக்குச் சேர்ந்து ஒரு வருடம் ஆகியிருக்க, எனக்கு ஒரு நல்ல வரன் வந்தது. என் அப்பாவுக்கு மிகவும் பிடித்துப்போக, நான் அவனைப் பற்றிச் சொன்னேன்.

`‘நீ நல்ல வேலையில இருக்கே; அவன் வேலையே இல்லாம இருக்கான். எப்படிக் கல்யாணம் பண்ணி வைக்கிறது? பரீட்சையில் பாஸாகும் வரை காத்திருந்தாலும், இன்னும் எத்தனை வருஷமோ? உனக்கடுத்து இருக்கிற ரெண்டு தங்கைகளை என்ன பண்ணுறது? அதுமட்டுமில்லாம, காதல் திருமண வாழ்க்கைத் தோல்விக்கு உதாரணமா நானும் உங்கம்மாவும் இருக்கிறது போதும். என்னை மீறி வேணும்னா நீ கல்யாணம் பண்ணிக்கோ!’’ என்று பிடிவாதமாக இருக்கிறார் அப்பா. அவனிடம் சொன்னபோது, `‘அப்பா ஸ்தானத்துல அவர் சொல்றது சரிதான். முடிவு உன்னோடது!’’ என்கிறான், அழுகை புதைத்து. 

தாயுமானவனாக என்னை வளர்த்த அப்பா, வெற்றிப்படிகளில் என்னை ஏற்றிவிட்ட காதலன்... என்ன முடிவெடுக்கட்டும் நான்?!

- பெயர் வெளியிட விரும்பாத வாசகி

என் டைரி 368-ன் சுருக்கம்

என் டைரி - 369

``கிராமத்துப் பெண்ணான எனக்கு, டெல்லியில் மிக உயரிய பதவியில் இருப்பவர் கணவராகக் கிடைத்தார். திருமணமாகி டெல்லி சென்றதும், கொடுமைப்படுத்தும் புகுந்த வீட்டினர், சுயபுத்தியின்றி சொல்வார் பேச்சைக் கேட்கும் கணவர் என்று நான் படாத கஷ்டம் இல்லை. இதற்கிடையே எனக்கு மகன் பிறந்தான். ஆனால், அவனுக்கு அரிய வகை நோய் இருப்பது தெரிந்ததும், என்னை என் அம்மா வீட்டில் விட்டுவிட்டார் கணவர்! பட்டதாரியான நான், வேலைக்குச் சென்று, சிகிச்சை, பள்ளி என்று என் பையனை வைத்துக்கொண்டு சிரமப்பட்டேன். கணவர், அவ்வப்போது எங்களை பார்த்துவிட்டுச் செல்வார். அடுத்தது ஒரு மகள் பிறந்த நிலையில் என் பெயரில் பெங்களூரில் வீடு வாங்கினார். `குடும்பமாக நாங்கள் இணைந்தோம்’ என்று நினைத்தபோது, அம்மா வீட்டாரின் பேச்சைக்கேட்டு எனக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பினார். விவாகரத்துக்குச் சம்மதிக்கச் சொல்லி மாமியார், நாத்தனார் என்று அனைவரும் தொலைபேசியில் வற்புறுத்தினர். கைப்பாவை கணவர் என்றாலும் அவர் எனக்கு வேண்டும் என்று தோன்றும். ஆனால், இம்முறை என் பொறுமை, சகிப்புத்தன்மை, அன்பு வற்றிவிட்டது.  பிஹெச்.டி முடித்துள்ள நான், தற்போது தனியார் கல்லூரியில் பேராசிரியையாக இருக்கிறேன். ‘இத்துடன் தொலைந்து போ’ என்று கணவரைத் தலைமுழுகவா, அவர் உறவில் இருந்து... என் பெயரில் வாங்கியிருக்கும் வீடு வரை உரிமைப் போராட்டத்தை முன்னெடுக்கவா?’’

வாசகிகள் ரியாக்‌ஷன்

ஒவ்வொன்றுக்கும் பரிசு: ரூ 100

பொறுமையோடு இருந்தால்புதுவசந்தம்!

`சுயபுத்தி இல்லாத கணவர்’ என்பது அவருடைய அம்மா, அதாவது உன் மாமியார் உயிரோடு இருக்கும்வரைதானே? அம்மா காலத்துக்குப் பிறகு உன்னிடம் சரணடைவார். இன்னும் கொஞ்சகாலத் துக்கு பொறுமை, சகிப்புத் தன்மையைக் கடைப்பிடி. பொறுமையோடு இருந்தால் உன் வாழ்வில் புதுவசந்தம் வீசும்.

- கீதா மூர்த்தி, ஓசூர்

உரிமைகளை விட்டுத்தராதே!

நீ மட்டும் தனியாளாக இருந்தால் நிம்மதி தராத உறவை தலைமுழுகி விடலாம். ஆனால், உடல்நிலை சரியில்லாத பிள்ளையையும், பெண்ணையும் வைத்துக்கொண்டு உன் உரிமை களை விட்டுத்தராதே. சட்டப்பூர்வ போராட்டத்துக்கு முன் உன் தரப்பு நியாயங்களை விளக்கி அவர் அலுவலக முகவரிக்கு கடிதம் எழுது. அவரின் நல்ல நண்பர்கள் மூலம் உன் நியாயங்களை விளக்கு. சொல்புத்தி கேட்பவர், யார் சொல் பேச்சும் கேட்பார்... உன் பேச்சையும்கூட!

- மல்லிகா குரு, சென்னை-33

தலைமுழுகுங்கள்... தலைநிமிர்ந்து வாழுங்கள்!

நல்லவேளையாக நல்ல உத்யோகத்தில் இருக்கிறீர்கள். தன் உறவினர்களின் துர்போதனையால் மனைவியை விவாகரத்து செய்யத் துணிந்த உங்கள் கணவரை நீங்கள் பிரிவதே உசிதம். பிள்ளைகளுக்கு அவர்கள் தந்தை சரியில்லை என உணர்த்துவதைவிட, அவரை விவாகரத்து செய்துவிட்டேன் எனக் கூறுவது எளிது. சுயபுத்தி இல்லாத உங்கள் கணவரை தலைமுழுகுங்கள். தலைநிமிர்ந்து வாழுங்கள். துணிவும் பிள்ளைகளின் சம்மதமும் இருந்தால், விவாகரத்து பெற்றவுடன் வேறு ஒருவரை துணைவராக்க முயலுங்கள்.

- சுலோசனா சம்பத், ஸ்ரீரங்கம்