குயிக் லாபம் தரும் தொடர்!
சூப்பர் லுக் க்வில்லிங் ஜிமிக்கி!
‘‘ஒட்டுறது, தைக்கிறதுனு அக்காவோட கிராஃப்ட் வொர்க்ஸுக்கு ஹெல்ப் பண்ணப் போய், எனக்கும் கிராஃப்ட்டில் ஆர்வமாச்சு. தோழிகள், உறவினர்களுக்கு நானே செஞ்ச கிராஃப்ட் அயிட்டங்களைப் பரிசளிக்கிற அளவுக்கு இதில் எக்ஸ்பர்ட் ஆனேன். இப்போ ஓய்வு நேரத்தில் கிராஃப்ட், கிராஃப்ட் பயிற்சி வகுப்புகள், ஆன்லைன் கிராஃப்ட் ஆர்டர்னு நான் பிஸி. இப்போ, அட்டகாசமான க்வில்லிங் ஜிமிக்கி செய்யும் விதத்தை ஸ்டெப் பை ஸ்டெப்பா விளக்க நான் ரெடி... கத்துக்க நீங்க ரெடியா?!’’

- படபடவெனப் பேசும், சென்னை, தரமணியைச் சேர்ந்த அனுஷ லட்சுமி, அடிப்படையில் ஒரு வழக்கறிஞர்!
முதலில் அடிப்படை உருவங்கள் செஞ்சுக்கலாம்...

படம் 1: இரண்டு க்வில்லிங் பேப்பர்களை எடுத்து ஒரு பேப்பரின் முனையில் ஃபெவிக்கால் தடவி மற்றொன்றோடு ஒட்டி அதன் நீளத்தை அதிகரித்துக் கொஞ்சம் காயவிடவும்.
படம் 2: காய்ந்ததும் க்வில்லிங் ஊசியில் இருக்கும் துளையில் க்வில்லிங் பேப்பரை நுழைத்து சற்று டைட்டான காயில் போன்று சுற்றவும்.
படம் 3: சுற்றிய பேப்பர் உருவிவிடாதவாறு காயிலின் மையத்தில் பிடித்துக்கொண்டு ஊசியில் இருந்து மெதுவாகக் கழற்றவும்.

படம் 4: ஊசியிலிருந்து எடுத்த காயிலின் இறுதி முனையில் ஃபெவிக்கால் தடவி காயிலுடன் ஒட்டிக் காயவிடவும்.
படம் 5: காயில் ரெடி.
இனி, ஜிமிக்கி செய்யலாம்!
தேவையானவை:

5 mm க்வில்லிங் பேப்பர் - 8 (கறுப்பு நிறம்), க்வில்லிங் ஊசி, இயர் பேஸ் - 2, கோல்டன் பால் செயின் - ஒரு மீட்டர், ஐ-பின் - 2, கோல்டன் பால் - 2, ஃபெவிக்கால்/க்ளூ, கட்டர், பிளேயர், ஜிமிக்கி ஃபிளவர் கேப் - 2, கத்தரிக்கோல்.
செய்முறை:
படம் 1: ஜிமிக்கியின் மேல் பகுதி செய்ய ஒரு க்வில்லிங் பேப்பரும், கீழ்ப் பகுதி செய்ய 3 க்வில்லிங்

பேப்பர்களும் எடுக்கவும்.
படம் 2: ஜிமிக்கியின் கீழ்ப் பகுதிக்கான 3 க்வில்லிங் பேப்பர்களை ஒன்றோடு ஒன்று ஒட்டி ஒரு பெரிய டைட் காயில் செய்து, ஃபெவிக்கால் தடவி ஒட்டி, சிறிது நேரம் காயவிடவும்.
படம் 3: காய்ந்ததும், ஜிமிக்கி மோல்டில் உள்ள 5-வது குழியில் வைத்து ஒருமுறை அழுத்தி எடுக்க, ஜிமிக்கி பேஸ் கிடைக்கும்.
படம் 4: ஜிமிக்கி பேஸ் உருவிவிடாமல் இருக்க அதன் உட்புறம் ஃபெவிக்கால் தடவி சிறிது நேரம் காயவிடவும்.

படம் 5: ஜிமிக்கி பேஸின் உட்புறம் வழியாக ஐ-பின்னை படத்தில் காட்டியபடி கீழிருந்து மேலாகக் கோக்கவும்.
படம் 6: கோத்த ஐ-பின்னில் ஜிமிக்கி கேப், 2 கோல்டன் பால்களையும் கோக்கவும்.
படம் 7 : பிறகு ஐ-பின்னை கட்டரால் வளைத்துவிடவும்.
படம்.8 : ஜிமிக்கியின் அடிப்பகுதியில் ஃபெவிக்கால் தடவி கோல்டன் பால் செயினை ஒட்டி சிறிது நேரம் காயவிடவும்.
படம் 9: இப்போது அலங்கரிக்கப்பட்ட ஜிமிக்கி பேஸ் ரெடி.
படம் 10: ஜிமிக்கியின் மேல் பகுதி செய்ய ஒரு க்வில்லிங் பேப்பரை எடுத்து ஒரு சிறிய டைட் காயில் செய்து காயவிடவும்.
படம் 11: காயிலின் ஒருபுறம் இயர் பேஸை ஃபெவிக்கால் தடவி ஒட்டிக்கொள்ளவும்.

படம் 12: காயிலின் மற்றொரு புறம் கோல்டன் பால்களை விரும்பும் வடிவில் ஒட்டிக்கொள்ளவும்.
படம் 13: ஜிமிக்கியின் மேல் பகுதி ரெடி.
படம் 14: இப்போது ஜிமிக்கியின் மேல் பகுதியையும், கீழ் பகுதியையும் ஏற்கெனவே வளைத்து வைத்துள்ள ஐ-பின்னால் ஒன்றோடு ஒன்று படத்தில் காட்டியுள்ளது போல் கோக்கவும்.
படம் 15: காதோரம் லோலாக்கு... கறுப்பு ஜிமிக்கி ரெடி! இதேபோன்று மற்றொரு ஜிமிக்கி செய்துகொள்ளவும். விரும்பினால் வார்னிஷ் அடித்துப் பயன்படுத்தலாம்.
``ஜிமிக்கி செய்யும் அடிப்படை இதுதான். கற்பனை, டெகரேஷனைப் பொறுத்து 100 ரூபாயில் இருந்து 500 ரூபாய் வரை விலை வைத்து விற்கலாம்... க்வில்லிங் ஜிமிக்கியை!’’ - உற்சாகத்துடன் கூறினார் அனுஷ லட்சுமி.
- க்வில்லிங் கிளாஸ் தொடரும்...
சு.சூர்யா கோமதி, படங்கள்:எம்.உசேன்