'வெயிட்'டான மெசேஜ் தரும் 'இஞ்சி இடுப்பழகி'!
‘குண்டான பொண்ணுங்களை ஆம்பளைங்க கல்யாணம் பண்ணிக்கவே மாட்டீங்களா? ஒருவேளை ஒல்லியா இருக்குற பொண்ணுங்கள கல்யாணம் பண்ணிக்கிட்டு கல்யாணத்துக்குப் பிறகு அவ குண்டாயிட்டா டிவோர்ஸ் பண்ணிடுவீங்களா? உங்களைப் போலவே எல்லா பொண்ணுங்களும், ஆம்பளைங்களை ரிஜெக்ட் பண்ண ஆரம்பிச்சா அப்புறம் ஒருத்தனுக்கும் கல்யாணம் ஆகாது. சாமியாராத்தான் போகணும்’ - பொட்டில் அடித்தாற்போல பேசி ஆடியன்ஸின் அப்ளாஸ் அள்ளுகிறார் அனுஷ்கா!

ஆர்யா, அனுஷ்கா ஷெட்டி நடிப்பில் பிரகாஷ் கோவலமுடி இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘இஞ்சி இடுப்பழகி’. ‘சிக்ஸ் பேக்’ காட்டும் நடிகர்களின் சின்சியாரிட்டிக்கு இடையே, இந்தப் படத்துக்காக 20 கிலோ கூடியிருக்கும் அனுஷ்காவின் அசாதாரண தைரியம் மற்றும் டெடிகேஷனுக்காக ஸ்பெஷல் ‘குடோஸ்’ முதலில்!
குண்டுப் பெண்ணான அனுஷ்கா சிறு வயது முதல் வெயிங் மெஷினில் எடை பார்ப்பதை வாடிக்கையாக வைத்திருக்கிறார். ஒவ்வொரு முறையும் அந்த மெஷினில் இருந்து வெளியாகும் வாசகம் அடங்கிய அட்டையையே, தன் வாழ்க்கையின் அடுத்தகட்ட நம்பிக்கையாக எடுத்துக்கொள்கிறார். அனுஷ்கா குண்டாக இருப்பது அவருக்குப் பிரச்னை இல்லை. ஆனால், சுற்றியிருப்பவர்கள் அவரை கேலி கிண்டலுக்கு ஆளாக்கிக்கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு முறையும் தான் குண்டாக இருப்பதை நையாண்டி செய்பவர்களை தன் மனத்திரையில் கொண்டு வந்து வெளுவெளுவென வெளுத்துக் கட்டுகிறார்.
கொழுகொழு மகளுக்கு வரன் அமைய வில்லையே என்பது அனுஷ்காவின் அம்மா ஊர்வசியின் கவலை. சமூக சேவையில் ஈடுபாடு கொண்ட ஆவணப்பட இயக்குநரான ஆர்யா, அனுஷ்காவை பெண் பார்க்க வருகிறார். ஆனால், ஆர்யாவைப் பிடிக்கவில்லை என்று மறுத்துவிடுகிறார், அனுஷ்கா.
அனுஷ்கா, ஆர்யாவை திருமணம் செய்துகொள்ள மறுத்தாலும் இருவரின் நட்பு தொடர்கிறது. இதற்கிடையில் ஆர்யா மீது சோனலுக்கு காதல் மலர்கிறது. சைஸ் ஸீரோ சோனல், தனக்குப் பிடித்த ஆடையை கச்சிதமாக கடையில் தேர்வு செய்துவிடுகிறார். ஆனால், அனுஷ்கா தான் தேர்ந்தெடுத்த ஆடையை அணிய நினைக்கும்போது கடைக்காரர், ‘அந்த டிரெஸ் உங்களுக்கு சரிப்பட்டு வராது... கிழிஞ்சிடும்’ என்று அனைவரின் முன்னிலையில் சொல்ல, கூனிக் குறுகி சமாளிக்கிறார். அந்த ஆடை தன் சைஸுக்கு சரிப்பட்டு வராது என தெரிந்தும் டிரையல் ரூம் கொண்டு சென்று அதை போடாமலேயே கண்கலங்கிவிட்டு வெளியே வருகிறார். அவ்வளவு வலியையும் பொறுத்துக் கொண்டு, ‘இந்த டிரெஸ்ஸை பேக் பண்ணுங்க’ என்று அனுஷ்கா கலங்கும்போது, நம்மையும் கலங்க வைக்கிறார்.
எல்லோரும் அனுஷ்காவை ‘குண்டு’ என கேலி செய்யும்போது, திருமண நிகழ்ச்சி ஒன்றில் அவரைப் பார்த்து எதார்த்தமா ‘அழகு’ என்று ஆர்யா சொல்லிவிட, அனுஷ்காவுக்கு ஆர்யா மீது ‘சொல்லாமலே’ ஒரு காதல் பரிணமிக்கிறது. வழக்கம் போல எடை காட்டும் மெஷினில் அனுஷ்கா ஏறி நிற்க, அது ‘நீங்கள் எண்ணிய வாழ்க்கை நிறைவேறும்’ என்று வாசக கார்டு தர, ஸ்வீட் எடுத்துக் கொண்டாடுகிறார் அனுஷ்கா. ஆனால், எதிர்பாராத விதமாக ஆர்யாவும் சோனலும் நெருங்கிப் பழகுவதைப் பார்க்கும் அனுஷ்கா, தன் ஒட்டுமொத்தக் கனவும் கலைந்தவளாய் வெயிங் மெஷினை போட்டு உடைக்கும் காட்சி... அனுஷின் தார்மிகக் கோபத்தின் கட்டுப்படுத்த முடியாத வெளிப்பாடு. அனுஷின் அம்மா, மகளுக்கு திருமணம் ஆகவில்லை என்பதே தன் பிரச்னை என்று சொல்லும்போது, ‘அப்போ நான் உனக்குப் பிரச்னைதானே?’ என்று கேள்வி கேட்டு நெகிழவைக்கிறார்.
அதுவரை எடை குறைப்புக்காக எந்த முயற்சியும் எடுக்காத அனுஷ்கா, பிரகாஷ்ராஜ் நடத்தும் ‘சைஸ் ஸீரோ’ ஃபிட்னெஸ் கிளினிக்கில் சேர்ந்து எடை குறைப்பு முயற்சிகளில் ஈடுபடுகிறார். இதற்கு முன்னதாகவே அனுஷ்காவின் தோழி அந்த கிளினிக்கில் பயிற்சி எடுத்துக்கொண்டிருக்க, திடீரென ஒரு நாள் மயங்கி விழுகிறார் தோழி. ஃபிட்னெஸ் சென்டரில் கொழுப்பு குறைவதற்காக கொடுக்கப்பட்ட மருந்துகள் அவரின் சிறுநீரகத்தை செயலிழக்க வைத்துள்ளது தெரிய வர, ஆர்யாவும் அனுஷ்காவும் தன் தோழிக்காக பிரகாஷ்ராஜை பழிவாங்குவதோடு மற்றவர்களுக்கும் எப்படி சமூக விழிப்பு உணர்வைக் கடத்துகிறார்கள் என்பதே மீதிக் கதை.
குண்டுப் பெண்களை மற்றவர்கள் கேலி செய்வதில் ஆரம்பித்து, திருமணச்சந்தையில் அவர்களை நடத்தும் விதம், ஆண்களின் பார்வை எனத் தொடர்ந்து, அதை எப்படி குண்டுப் பெண்கள் சமாளித்துக்கொண்டிருக்கிறார்கள் என்பது வரை அழகாய் பதிய வைத்திருக்கிறார் இயக்குநர். `இயல்பாக இருப்பதே அழகு! `அழகு’ என்கிற பெயரில் தேவையற்ற விபரீதங்களில் ஈடுபட்டு உடல்நலனை கெடுத்துக் கொள்ளாதீர்கள்’ என மெசேஜ் சொல்கிறாள் இந்த ‘இஞ்சி இடுப்பழகி’!
பொன்.விமலா