அவள் 16
Published:Updated:

ஒரு டஜன் யோசனைகள்!

குளிர்காலம் Vs வயதானவர்கள்!

குளிர்காலத்துக்கு ஏற்ற உணவு முறைகள், அன்றாட பழக்கவழக்கங்களில் கவனம் செலுத்துவதன் மூலம், உங்கள் வீட்டுப் பெரியவர்களின் ஆரோக்கியத்தைக் காப்பதற்கு உதவும் பயனுள்ள ஒரு டஜன் யோசனைகளை வழங்குகிறார், சென்னையைச் சேர்ந்த டயட்டீஷியன் எஸ்.பூங்கோதை.

ஒரு டஜன் யோசனைகள்!

•  குளிர்காலத்தில் வயதான வர்களுக்கு ஜீரணசக்தி குறையும். எனவே, ஜீரணசக்தியை அளிக்கக் கூடிய இஞ்சி, பூண்டு, சீரகம், மஞ்சள்தூள் ஆகியவற்றை உணவில் அதிகமாகச் சேர்க்கவும். மேலும் இவை ஜலதோஷம், காய்ச்சல் போன்ற குளிர்கால நோய்களுக்கு நல்ல மருந்தாவதோடு நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும். நெய் சேர்க்காத வெண்பொங்கல், சூப் போன்றவை நல்ல சாய்ஸ்.

ஒரு டஜன் யோசனைகள்!

•  பால், தயிரில் அதிக கொழுப்பு இருப்பதால், குளிர்காலத்தில் வயதானவர்களுக்கு அது வேண்டாம். இஞ்சி டீ அல்லது சுக்குமல்லி காபி குடிக்கலாம். இது ரத்த ஓட்டத்தை சீராக வைக்க உதவும். பாலைத் தவிர்க்க முடியவில்லை என்பவர்கள் காய்ச்சிய பாலில் மிளகுத்தூள், மஞ்சள்தூள் சேர்த்துக் குடிப்பது சிறந்தது. அதேபோல தயிரைத் தவிர்த்து மோராக எடுத்துக் கொள்ளலாம்.

ஒரு டஜன் யோசனைகள்!

•  குளிர்காலத்தில் உடல் அதிகம் வியர்ப்பதில்லை. எனவே, உணவில் அதிக உப்பு வேண்டாம். பேரிக்காய், பிளம்ஸ், ஆப்பிள், சாத்துக்குடி, ஆரஞ்சு போன்ற பழங்களைச் சாப்பிடலாம்; நீர்ச்சத்து நிறைந்த தர்பூசணி, முலாம்பழம், திராட்சை போன்றவற்றைத் தவிர்க்கலாம். மலச்சிக்கல் உள்ளவர்களுக்கு தினம் ஒரு வாழைப்பழம் கொடுக்கலாம்.

ஒரு டஜன் யோசனைகள்!

•  வயதானவர்களின் மூட்டுவலி, கால்வலி எல்லாம் குளிர்காலத்தில் ஜில்லாகிக் கிடக்கும் டைல்ஸ், மார்பிள் தரைகளில் நடக்க நடக்க அதிகரிக்கவே செய்யும். ‘ஹோம் செப்பல்ஸ்’ பயன்படுத்தலாம். மிளகு, வெந்தயம், புதினா, ஒமம் போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். குளிர் காலத்தில் வயதானவர்களுக்கு ஏற்படும் கால் மதமதப்புக்கு மிளகு, சீரகம், ஓமம் ஆகியவற்றைப் பொடித்து தண்ணீருடன் கொதிக்கவைத்து வடிகட்டிக் குடிப்பது நல்ல நிவாரணம் தரும்; கால்வலி காணாமல் போகும்.

ஒரு டஜன் யோசனைகள்!

•  உடலுக்குத் தேவையான சக்தியை அளித்து குளிர்காலத்தை சமாளிக்க உதவவல்ல காய்கறிகளை நிறைய எடுத்துக்கொள்ள வேண்டும். எளிதில் செரிக்கும் காய்களான சுரைக்காய், பூசணி, புடலை, பீர்க்கங்காயை அதிகம் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். அதிக குளிர்ச்சி, ஜலதோஷம் பிடிக்கவைக்கும் என நினைப் பவர்கள், இந்தக் காய்களை கூட்டாக செய்யாமல், பொரியலாக அல்லது மிளகு சேர்த்து சூப் செய்து சாப்பிடலாம். செரிப்பதற்கு அதிக நேரம் எடுக்கும் உருளைக்கிழங்கு, வாழைக்காய் போன்றவற்றைத் தவிர்த்து கீரை, கேரட் மற்றும் பீட்ரூட் போன்ற காய்களை அதிகம் சாப்பிடுவது நல்லது.

ஒரு டஜன் யோசனைகள்!

•  `ஒமேகா 3’ கொழுப்பு அமிலங்கள் குளிர்காலத்தில் நம் உடலுக்குத் தேவை. மீனில் அதிகளவில் `ஒமேகா 3’ கொழுப்பு அமிலங்கள் உள்ளன. மேலும் மீன்களில் ஜிங்க் (zinc) நிறைந்துள்ளதால் உடலில்

ஒரு டஜன் யோசனைகள்!

உள்ள வெள்ளை ரத்த அணுக்களின் செயல்திறனை அதிகரிக்க உதவும். இதனால் நோய் எதிர்ப்புசக்தி அதிகரித்து பெரியவர்களை, நோய் களிடம் இருந்து காப்பாற்றலாம்.

•  மழை, குளிர்காலத்தில் நெய், வெண்ணெயில் செய்த இனிப்பு வகைகள், எண்ணெயில் பொரித்தெடுத்த உணவுகள் வேண்டாம். ஆவியில் வேகவைக்கும் இட்லி, புட்டு போன்றவை பெஸ்ட். இரவில் கேழ்வரகு, கம்பு உணவுகளைத் தவிர்த்து எளிதில் செரிமானம் ஆகும் பார்லி, ஓட்ஸ் கஞ்சி சாப்பிடலாம்.

•  குளிர்காலத்தில் ஃப்ரிட்ஜில் மாவு, காய்கறிகள், தயிர், பால் போன்றவற்றை அதிக நாள் வைத்துப் பயன்படுத்துவது கட்டாயம் கூடாது. வெப்பத்தின் அளவு குறைவாக இருப்பதால், எளிதில் ஈஸ்ட் தொற்றுக்கு வாய்ப்பு உண்டாகும். இதனால் குடல் சம்பந்தமான நோய்கள் வரும்.

ஒரு டஜன் யோசனைகள்!

•  மீன், சிக்கன் போன்ற அசைவ உணவுகளை சேர்த்துக்கொள்ளலாம். ஆனால், அதிக மசாலா கலந்து பொரித்து சாப்பிடுவதைத் தவிர்த்து, வேகவைத்து அல்லது சூப் செய்து சாப்பிடவும். நட்ஸ் சாப்பிடலாம், முட்டையில் மஞ்சள் கருவைத் தவிர்த்துவிடலாம்.

•  குளிர்காலத்தில் உடலுக்கு புரோட்டீன் அதிகம் தேவை என்ப தால் வேகவைத்த பருப்புகள், முளைகட்டிய தானியங்கள் போன்றவை உணவில் கட்டாயம் இருக்கட்டும்.

ஒரு டஜன் யோசனைகள்!

•  தேன்... ஜீரண சக்தி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்பதால், குளிர்காலத்தில் அதை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். சர்க்கரை நோயாளிகள் தவிர்க்கவும்.

•  குளிர்காற்றில் இருக்கும் வைரஸ் கிருமிகள் நம் உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி செல்களைப் பாதிப்பதே நோய்த்தொற்று ஏற்படக் காரணம். மேலும், இக்காலத்தில் வைரஸ் கிருமிகள் அதிக ஆயுளுடன், உதாரணமாக நமது கைகளில் சுமார் 3 மணி நேரம் உயிருடன் இருக்கும். இதனால் இது மற்றவர்களுக்குப் பரவும் அபாயமும் உள்ளது. குளிர்கால நோய்களைத் தவிர்க்க... அவ்வப்போது கை கழுவவும். மற்றவர்களைத் தொட்டுப் பேசுவதைத் தவிர்க்கவும்.

ஒரு டஜன் யோசனைகள்!

கொதிக்க வைத்த நீரையே குடிக்கப் பயன்படுத்தவும். பாக்டீரியா எதிர்ப்பு சோப்புகள் பயன்படுத்தலாம். மருத்துவ ஆலோசனைப்படி நோய் எதிர்ப்பு மருந்துகளை எடுத்துக் கொள்ளலாம்.

வெளியில் செல்லும்போது காதுகளில் பஞ்சு அடைத்துக் கொள்ளலாம் அல்லது குல்லா, மஃப்ளர் பயன்படுத்தலாம். காட்டன் உடைகளைத் தவிர்த்து உல்லன் ஸ்வெட்டர் பயன்படுத்தலாம்.

ஆஸ்துமா பிரச்னை உள்ளவர்கள் இன்ஹேலர் பயன்படுத்தலாம்.

 - சு.சூர்யா கோமதி