மழை
சினிமாக்களிலும் நாடகங்களிலும் நொடிப் பொழுதில் காட்சிகள் மாறுவதுபோல, நிஜ வாழ்விலும் காட்சிகள் மாறுகின்றன. சில நாட் களுக்கு முன், கடலூர் வெள்ள நிலவரத்தை, பட்டாணியைக் கொறித்தபடி டி.வி-யில் பார்த்துக்கொண்டிருந்த நான், கொஞ்சம்கூட நினைத்தும் பார்க்கவில்லை, எங்கள் பகுதிக்கும் இப்படியொரு நிலைமை வருமென்று!

கனமழையால் சென்னையில் உள்ள முடிச்சூர் ரோடு, பாரதி நகரில் உள்ள எங்கள் வீட்டைச் சுற்றி இடுப்பளவு தண்ணீர். வீட்டுக்குள் முழங்கால் அளவு தண்ணீர். மாடியில் தஞ்சமடைந்தோம். மூன்று நாட்களாக கரன்ட் கிடையாது. வீட்டுக்குள் மழைநீர் தேங்கிக்கிடந்தாலும், குடிக்கத் தண்ணீர் கிடையாது. மழைநீரைப் பிடித்துக் குடித்தோம்.
ஹெலிகாப்டர் கண்ணில் பட்டபோதெல்லாம், ‘தண்ணீர்... தண்ணீர்...’ என்று நாங்கள் கத்தியும், சைகை செய்தும் பலனில்லை. பக்கத்து வீட்டின் மொட்டை மாடியிலிருந்த ஒருவர், ‘நீங்க தண்ணீர் என்று சைகை செய்வதை அவர்கள் சாப்பாடு என்று நினைத்து அந்த பாக்கெட்டை போட்டுவிடப் போகிறார்கள். தண்ணீர் பாட்டிலை கையில் வைத்துக்கொண்டு தூக்கிக் காட்டுங்கள்’ என்று யோசனை சொன்னார். குளிரிலும் வறண்டு போயிருந்த தொண்டையை நனைக்க, பெரும் தவிப்போடு அப்படியே செய்தோம். பலனில்லை. அவர்கள் கவனத்துக்கு நாங்கள் செல்லவில்லை.
தோழிகளோடு வெளியிடங்களுக்குச் செல்லும்போது என்னிடம் மட்டும், ‘அது வேண்டுமா... இது வேண்டுமா?’ என்று விழுந்து விழுந்து உபசரிப்பார்கள். சிலர், ‘அதென்ன அவங்களுக்கு மட்டும் ஸ்பெஷல் உபசரிப்பு?’ என்றால், ‘நாம வேணும்ங்கிறதை கேட்டு வாங்கிச் சாப்பிடுவோம். அவங்க கேட்க மாட்டாங்க. கூச்சப்படுவாங்க’ என்பார்கள் என் தோழிகள். ‘தண்ணீர்... தண்ணீர்...’ என்று கத்தியபடி, ஒரு பாட்டில் தண்ணீர் கிடைக்காதா என்று வான்நோக்கி நான் நின்றிருந்தபோது, அது நினைவுக்கு வந்தது.
பால் வண்டி வர முடியாததால் பால், தயிர் கிடையாது. என்னைப் பற்றி கவலையில்லை. 90 வயதைத் தாண்டிய அம்மா, இட்லி தோசைக்கும், சாதத்துக்கும் தயிரை மட்டுமே கேட்பார். ஆனால், நிலைமையைப் புரிந்துகொண்டு ‘இட்லி மிளகாய்ப் பொடிக்கு எண்ணெயே போதும்’ என்று அவர் சொன்னபோது பாவமாக இருந்தது.

சென்னையில் சுனாமி பாதித்தபோது நானும் என் சகோதரியும், புடவை, துணிமணி, குறைந்தது 100 பிஸ்கட் பாக்கெட், பன் என்று கலெக்ட் செய்துகொண்டு சென்றோம். நாங்கள் ஆட்டோவிலிருந்து இறங்கும் முன் பாகவே சிலர் ஓடி வந்து, எங்கள் கையிலிருந்த துணிகளைப் பறித்துச் சென்றது மனதை கனக்கச் செய்தது. நேற்று வரை நல்ல நிலையில் இருந்து, இயற்கையின் சீற்றத்தால் பாதிக்கப்பட்டு மீட்புக் குழுவினர் உணவுப் பொட்டலங்களை வீச, மக்கள் அதை ஓடி ஓடிப் பிடிப்பதை டி.வி-யில் பார்க்கும் போது, பணக்காரர்களையும் காலம் ஒரு நொடிப்
பொழுதில் பிச்சைக்காரன் ஆக்கி வேடிக்கை பார்க்கும் நிலைமை குறித்து அச்சமும் ஆற்றாமையும் பொங்கியது.
எங்கள் பகுதிக்கு படகு வந்து விருப்பப்பட் டவர்களை வெளியிடத்துக்குக் கூட்டிச் செல்ல,
பரிதாபமாக அதில் சென்றவர்களைப் பார்த்த போது உணர்ச்சி மிகுதியில், குறைந்தது 10 பேரையாவது என் வீட்டில் வைத்துப் பராமரிக்க மனம் எண்ணியது. ஆனால்,
நாங்களே நாக்கு வறண்டு மொட்டை மாடியில் இருக்கும்போது, அவர்களுக்கு என்ன கொடுப்பது? ஏதாவது முகாமுக்குப்
போனால், இவர்களுக்கு யாராவது ஒரு நல் உள்ளம் வழங்கும் சாப்பாடு கிடைக்கும் என்று சமாதானம் ஆனேன்.
சிறைவாசத்தின் மூன்றாவது நாள், ஒரு லாரியில் பால் பாக்கெட்டுகளை கொண்டு வந்து இலவசமாகக் கொடுத்தார்கள். பாலையே பிரதான உணவாகக்கொண்டிருந்த தன் ஏழு மாதக் குழந்தை, இரண்டு நாட்களாக அரைப் பட்டினியில் கிடந்ததில் மனம் வலியாகிப் போகியிருந்த அந்த அம்மா, தன் கையில் பால் பாக்கெட்டை வாங்கியபோது, யாரோ கோடி கோடியாகக் காசுகளைக் கொட்டியது போன்ற ஒரு உணர்வில் அவர் கண்கள் நீர் தளும்பி மிளிர்ந்தன.
தற்காலிகமான இந்த நிலைக்கே நாம் சுய பச்சாதாபம் அடைகிறோமே... எல்லாம் இருந்தும் ஏதோ ஒரு காரணத்துக்காக அகதிகளாக வேறோர் இடத்தில் தஞ்சம் அடைந்து, எது நிரந்தரம் என தெரியாமல் தவிப்பவர்களின் மனநிலை எப்படி இருக்கும் என்பதை நினைத்துப் பார்க்கும்போது துயரம் மேலோங்குகிறது!
அருணா எஸ்.சண்முகம்