அவள் 16
Published:Updated:

மாதவிடாய் காலத்தில் ஏன் கோயிலுக்குப் போகக் கூடாது?!

போர்க்கொடி உயர்த்தும் பெண்கள்சர்ச்சை

கேரள மாநிலம், திருவாங்கூர்-தேவசம் போர்டு தலைவர் பிரயார் கோபாலகிருஷ்ணன், ‘கோயிலுக்குள் ஆயுதங்களுடன் வருபவர்களைக் கண்டுபிடிக்க கருவிகள் உண்டு. அதேபோல கோயிலுக்குள் பெண்கள் மாதவிடாய் நேரத்தில் வருகிறார்களா என்பதை சோதிக்கும் கருவியைக் கண்டுபிடித்த பின், பெண்களை சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனுமதிப்பதைப் பற்றிப் பேசலாம்!’ என சமீபத்தில் கூறியிருந்தார். இந்தக் கருத்துக்கு, பரவலாக கண்டனங்கள் பெருகி வருகின்றன.

மாதவிடாய் காலத்தில் ஏன் கோயிலுக்குப் போகக் கூடாது?!

இதைப்பற்றி, சென்னை பி.ஐ.பி - ஊடக அலுவலரும், `மாதவிடாய்' எனும் ஆவணப்படத்தை இயக்கியவருமான கீதா இளங்கோவனிடம் பேசியபோது, பெண் சமுதாயத்தின் நியாயம், கோபம் பொங்கியது, அவரிடம்... ‘‘வழிபாட்டு உரிமை என்று வரும்போது ஆண் - பெண் இருவரையும் சமமாகத்தானே நடத்த வேண்டும்? எந்த மத நூலும், ‘மாதவிடாயான பெண் தீட்டானவள், அவள் வழிபாட்டுத் தலங்களுக்குள் வரக் கூடாது’ என்று சொல்லவில்லை. ஆனால், இன்று அவர்களைத் தடுப்பவர்கள், எதன் அடிப்படையில் இதைச் சொல்கிறார்கள் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க வேண்டும். காலம் காலமாக இருக்கிற பழக்கம் என்ற பழைய பொய்யையே இந்த ஆணாதிக்க சமுதாயம் பதிலாகச் சொல்லுமே தவிர, இந்த மதத்தின், இந்த புனித நூலில் அதைப் பற்றிய குறிப்பு இருக்கிறது என்று அவர்களால் சொல்ல முடியாது.

அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள காமாக்யா தேவி கோயிலில் பெண் தெய்வத்தின் சிலையானது, காலை விரித்து, மாதவிடாய் ரத்தப்போக்குடன் அமர்ந்திருக்கும். அந்த மாதவிடாய் ரத்தம்தான் குங்கும பிரசாதமாக அங்கு வழங்கப்படுகிறது. இருப்பினும் அந்தக் கோயிலிலேயே பெண்களுக்கு மாதவிடாய் சமயத்தில் அனுமதி இல்லை. தாந்திரிக் வழிபாட்டில் யோனியை வழிபடுவதுடன், மாதவிடாய் ரத்தம் புனிதம் என்று போற்றப் படும். யுகங்கள் கடந்தபோது, மாதவிடாய் தீட்டு என்ற மெய்யில்லாத நம்பிக்கை விதைக்கப்பட்டுவிட்டது.

நம் சமகாலத்தில் எழுந்த மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலில் மாதவிடாயை தீட்டாக நினைப்பதில்லை. அங்கு நாப்கின் டிஸ் போசல் அமைத்து, வரும் பெண் பக்தர்களுக்கு சௌகரியம் ஏற்படுத்தித் தருகிறார்கள். அந்தக் கோயிலின் புனிதம் கெட்டுவிட்டதா என்ன?

மனித இனப் பெருக்கத்துக்கே அடிப்படை, பெண்ணின் மாதவிடாய் ரத்தம்தானே? இது உடலில் நடக்கும் இயற்கையான மாற்றம். அந்த தேவஸ்தான தலைவரின் கருத்து, முழுக்க கண்டனத்துக்குரியது. பெண்களை இப்படி ஒதுக்கும் வழிபாட்டுத்தலங்களை, பெண்களும் ஒதுக்க வேண்டும். இல்லை, அங்கு செல்ல வேண்டும் என்றால், இந்த அநீதியை எதிர்த்துக் குரல் கொடுக்க வேண்டும்!’’

- கீதாவின் வார்த்தைகளில் வேகம்.

தேவஸ்தான தலைவரின் பேச்சை எதிர்த்து ஃபேஸ்புக்கில் ‘ஹேப்பி டு ப்ளீட்’ (Happy to Bleed) என்று பிரசாரம் செய்துவருகிறார், பஞ்சாப் மாநிலத்தின் ஜலந்தர் நகரத்தைச் சேர்ந்த நிகிதா ஆசாத் என்ற கல்லூரி மாணவி.

‘‘இதற்கு வரவேற்பு பெருகிக்கொண்டே வருகிறது. குறிப்பாக நகர்ப்புற பெண்கள் பெருமளவில் இதில் ஒன்றிணைகிறார்கள். 100 பெண்களுக்கு மேல் மாதவிடாய் பற்றிய ஸ்லோகனை கையில் வைத்தபடி ஃபேஸ்புக்கில் புகைப்படம் போஸ்ட் செய்திருக்கிறார்கள். டிவிட்டரிலும் நிறைய பேர் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.

மாதவிடாய் காலத்தில் ஏன் கோயிலுக்குப் போகக் கூடாது?!

‘ஹேப்பி டு ப்ளீட்’ என்ற வாசகம், மாதவிடாய் பற்றி பரப்பப்பட்டிருக்கும் அசௌகரியம், அவமானம், தீட்டு போன்ற உணர்வுகளை எல்லாம் புறந்தள்ளும் பொருட்டு அமைக்கப்பட்டது. மாதவிடாய் எந்தப் பெண்ணையும் அசுத்தமாக்காது. ஆனால், உலகில் உள்ள இந்து மதக் கோயில்களில் ‘மாதவிடாய் நேரத்தில் பெண்கள் உள்ளே வரக் கூடாது’ என்கிறார்கள். சபரிமலை கோயிலில் அதற்கும் மேலாக, 10 வயதுக்குள், 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களை மட்டுமே உள்ளே அனுமதிப்பதாக கோயிலின் இணையதளம் சொல்கிறது. ஒரு பெண்ணுக்கு எப்போது கோயிலுக்குப் போக வேண்டும் என்று விருப்பமோ, அப்போது செல்லலாம். அது அவளின் உரிமை. பெண்களே... ஹேப்பி டு ப்ளீட்!’’

- இளமையின் துடிப்போடு சொல்கிறார் நிகிதா.

பொய்மையான கட்டுப்பாடுகள் எல்லாம் ஒருநாள் கட்டறுக்கவே செய்யும்!

கே.அபிநயா  படங்கள்:தி.ஹரிஹரன்

அது, விலைமதிப்பில்லாத பொக்கிஷம்!

சென்னையிலும், மதுரையிலும் மாதவிடாய் ரத்த வங்கி செயல்படுகிறது. அங்கு, பெண்ணின் மாதவிடாய் ரத்தத்தில் புற்றுநோய் உட்பட்ட 30-க்கும் அதிகமான நோய்களுக்கு மருந்து கண்டுபிடிக்க முடியும் என்று ஆராய்ச்சி செய்து வருகிறார்கள். ‘இது வெறும் ரத்தம் கிடையாது, உடனடியாக ஓர் உயிர் உருவாகும்போது, அதற்குத் தேவைப்படும் ஆற்றல், சத்து என்று பல அற்புத மூலக்கூறுகள் அடங்கியது. விலைமதிப்பில்லாத பொக்கிஷம்!’ என்கிறது மருத்துவ உலகம்!