அவள் 16
Published:Updated:

கேக் கண்மணி!

கேக் கண்மணி!

புரொபைல்!

பேரு நஜ்வா மக்டூல். போன வருஷம் சென்னை, ஸ்டெல்லா மேரீஸ் காலேஜ்ல பி.ஏ., எகனாமிக்ஸ் பாஸ்டு அவுட் பட்டதாரி. இப்போ ஒரு தனியார் நிறுவனத்தில் அனலிஸ்ட்டா வேலை பார்த்துட்டு இருக்கேன். பார்ட் டைமா ‘தி பாட்டர் ஸ்டோரி’ ஆன்லைன் கேக் ஷாப் நடத்திட்டு இருக்கேன் (https://www.facebook.com/TheBatterStory?fref=ts). அதுதான் இந்தப் பேட்டிக்குக் காரணம். நண்பர்கள், உறவினர்கள்னு இல்லாம ஒரு ரெஸ்டாரன்ட்டுக்கே ரெகுலரா கேக் சப்ளை செய்யும் புரொஃபஷனல் நான்!

கேக் கண்மணி!

‘தி பாட்டர் ஸ்டோரி’பிறந்த கதை!

எங்கம்மா சூப்பரா கேக் பண்ணுவாங்க. நானும் எங்க அக்கா நஃபீஸாவும் அவங்களுக்கு உதவி செய்யும்போது, அந்தப் கைப்பக்குவத்தை அப்படியே எங்களுக்கும் ஃபார்வேர்டு பண்ணிக்கிட்டோம். நான் பண்ணின கேக்கை எங்க காலேஜுக்கு எடுத்துட்டுப் போனா, ‘நம்பவே முடியல! நீ பர்த் டே கேக் செஞ்சு தரலாமே?!’னு ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் கொண்டாடுவாங்க. ஆனா, அதை சீரியஸா எடுத்துக்கல. இருந்தாலும், ஒவ்வொரு முறை நான் செஞ்ச கேக்கை சாப்பிடும்போதும் அவங்க உசுப்பேத்திட்டே இருக்க, வீட்ல கேட்டேன். எங்கக்கா, ‘நான் உனக்கு ஹெல்ப் பண்றேன்!’னு சொன்னது யானை பலமா இருந்தது. இந்த வருஷம் ஜனவரி மாசம்தான் பிசினஸை ஆரம்பிச்சோம். `ஜம்’முனு போகவே, ‘தி பாட்டர் ஸ்டோரி’ ஆன்லைன் ஷாப்பையும் ஆரம்பிச்சுட்டோம்!

விளம்பரம்!

ஃபேஸ்புக், ஸ்நாப்-சாட், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளங்கள்தான் என்னோட முக்கியமான விளம்பர ஏரியா. எக் கேக், எக்லெஸ் கேக், சீஸ் கேக், கப் கேக், மூஸ் கேக், ஜம்போ கேக், ஃபாண்டன்ட் கேக், குக்கி கேக், கார்ட்டூன் கேக், ஐஸ்க்ரீம் கேக்னு செய்ற கேக் வகைகளை எல்லாம் போட்டோ எடுத்து அப்லோடு பண்ணுவேன். எனக்குத் தெரிஞ்சவங்க, அவங்களுக்குத் தெரிஞ்சவங்களுக்கு ஃபார்வேர்டு பண்ண, பிசினஸ் டெவலப் ஆயிருச்சு. சேத்துப்பட்டு, ஹாரிங்டன் ரோட்டில் உள்ள ஒரு ரெஸ்டாரன்ட், ரெகுலர் கப் கேக்கள் ஆர்டர் கொடுத்திருக்காங்க.

படிப்பு அண்ட் பிசினஸ்!

இப்போ படிப்பை முடிச்சுட்டதுனால கொஞ்சம் பிரஷர் கம்மிதான். ஆனா, காலேஜ் படிச்சபோது, சில நேரங்கள்ல ஆர்டர்கள் அதிகமா வரும். அதுவும் எக்ஸாம் சமயத்துல ரெகுலர் கஸ்டமர் கேட்டா முடியாதுன்னும் சொல்ல முடியாது. ஒரு ஸ்பெஷல் கேக் செய்ய குறைஞ்சது மூணு மணி நேரமாவது ஆகும். அப்போ எல்லாம் என் தூக்கத்தைக் குறைச்சுக்கிட்டு வேலை பார்த்ததுண்டு!

சந்தோஷ தருணம்!

எனக்கு ஜார் ஃபுட்னா ரொம்பப் பிடிக்கும். அதனால ஜார் கேக் என்னோட ஃபேவரைட். சீஸ் வெச்சு நான் செஞ்ச முதல் ஜார் கேக்... ஆஸம்! வெளிநாட்டில் இருக்கும் அப்பாவுக்கு போட்டோ எடுத்து அனுப்பினேன். ‘யம்மி!’னு அப்பா சொன்னப்போ, நான் ஹேப்ப்ப்பி!

மெசேஜ்!

பிசினஸ்னாலே ரிஸ்க் எடுக்கத் தயாரா இருக்கணும். எல்லா நாளும் நல்லா இருக்கும்னு சொல்ல முடியாது. ஒரு மாசம் சரியாப் போகலைன்னாலும் தொடர்ந்து ஹார்டுவொர்க் பண்ணினா... அடுத்த மாசமோ, அதுக்கடுத்த மாசமோ நின்னுடலாம். அப்புறம் ஜெயிச்சுடலாம்!

வருமானம்!

ரெட் வெல்வெட் கேக் ஒரு கிலோ 600 - 700 ரூபாய், சாக்லேட் கேக் 700 - 800 ரூபாய்னு, கேக்கோட ஃபிளேவர், அளவு பொறுத்து ரேட் இருக்கும். இந்த மாசம் ஒரே நாளில் 5 ஆயிரம் ரூபாய்க்கான ஆர்டர் ஒன்று இருக்கு. சில மாசங்கள் ஆர்டர் குறைவா இருக்கும். ஆவரேஜா 5,000 - 10,000னு சொல்லலாம். 100% லாபம் உள்ள பிசினஸ் இது என்பது குறிப்பிடத்தக்கது!

பின்குறிப்பு: கேக் செஞ்சுட்டு கிச்சனையே தலைகீழாக்கிப் போட்டுருவோம். அதை கிளீன் செய்ற அம்மாவுக்கு வருமானத்தில் 50% பங்கு கொடுத்துடுவோம்!

பிளான் நெக்ஸ்ட்!

எங்க ஆபீஸ்ல எல்லோரும், ‘நீ வேலையை விட்டுட்டு கேக் பிசினஸ்ல இறங்கிடு!’னு சொல்லிட்டே இருக்காங்க. வேலையில 6, 7 மாசம் சம்பளம் வாங்கிட்டு, அந்தப் பணத்தை எல்லாம் முதலா போட்டு பிசினஸை விரிவுபடுத்துற ஐடியா இருக்கு!

மு.சித்தார்த், தா.நந்திதா படங்கள்:டி.அஷோக் குமார். அ.பார்த்திபன்