மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நள்ளிரவு வானவில்! - க்ரைம் தொடர் - 25

நள்ளிரவு வானவில் | ராஜேஷ்குமார்
பிரீமியம் ஸ்டோரி
News
நள்ளிரவு வானவில் | ராஜேஷ்குமார் ( நள்ளிரவு வானவில் | ராஜேஷ்குமார் )

ராஜேஷ்குமார், ஓவியங்கள்: அரஸ்

ர்வாங்கமும் அதிர்ந்து போனவனாய் ரூபேஷ், ஞானேஷையே பார்க்க, அவன் தன் கையில் மேக்னம் ரிவால்வருடன் நெருங்கினான்.

‘`போய் கட்டில்ல உட்கார்... உன்னோட செல்போனை சுவிட்ச் ஆஃப் பண்ணு! நான் சொன்னபடி நீ கேட்கலைன்னா, ரெண்டு தோட்டாவை உன்னோட மார்புக்கும், ரெண்டு தோட்டாவை உன்னோட தலைக்கும் கொடுக்க வேண்டியிருக்கும். என் கையில் இருக்கிற இந்த மேக்னம் ரிவால்வர், மெளனயுத்த கில்லாடி.”

ரூபேஷ் விழித்தான்.

“என்ன புரியலையா... இது சைலன்ஸர் பிஸ்டல். இது கர்ப்பம் தாங்கியிருக்கிற தோட்டாக்கள் ஸ்பைரல் ஜாதி. இந்த தோட்டா உன் உடம்புல பாயும்போது, ஒரு பட்டாணி சைஸ் அளவுக்கு ஓட்டை போட்டு... உன் உடம்போட மறுபக்கம் வெளியேறும்போது, அரை கிலோ சதையை அள்ளிக்கிட்டு போயிடும். ஒரு தோட்டாவுக்கே இந்த நிலைமைன்னா, நாலு தோட்டா பாயும்போது எப்படியிருக்கும்? உன் பாதி உடம்பே காணாம போயிருக்கும்!”

நள்ளிரவு வானவில்! - க்ரைம் தொடர் - 25

ரூபேஷ் மிரண்ட விழிகளோடு வியர்வை மழையில் நனைந்தபடி சுற்றும்முற்றும் பார்த்தான்.

“என்ன ரூபேஷ், அப்படிப் பார்க்கறே? போலீஸ் யாராவது உதவிக்கு வருவாங்கன்னு பார்க்கறியா? நீ உள்ளே பத்திரமா இருக்கேனு நினைச்சுட்டு அவங்க வெப்பன்ஸோடு பாதுகாப்புப் பணியில் தன்னோட கடமையைக் கண்ணும் கருத்துமா பண்ணிட்டு இருக்காங்க. நான் இந்த அறைக்குள்ளே வந்து அரை மணி நேரமாச்சு. போலீஸ் கமிஷனர் ராஜகணேஷும் நீயும் பேசிட்டு இருந்ததையெல்லாம் ஒரு வார்த்தைகூட விடாம கேட்டுட்டுத்தான் இருந்தேன். அவர் டியூட்டியைப் பார்த்துட்டு அவர் போயிட்டார். என்னோட டியூட்டியை நான் பார்க்க வேணாமா?”

ரூபேஷ், கட்டிலில் தட்டுத் தடுமாறி உட்கார்ந்தான். கண்களில் மரண பயம்.

“என்னை ஒண்ணும் பண்ணிடாதே... ஞானேஷ்! உனக்கு என்கிட்டயிருந்து என்ன வேண்டும், சொல்லு.”

“எனக்கு சில உண்மைகள் தெரியும். அந்த உண்மைகளோடு நீ சொல்லப் போகிற உண்மைகளையும் ஒப்பிட்டுப் பார்த்து எது உண்மை, எது பொய்னு தெரிஞ்சுட்டு போலாம்னு வந்தேன். உன்னோட ஒத்துழைப்பு எனக்கு சரியான முறையில் கிடைச்சா, இந்த பிஸ்டலுக்கு வேலை கொடுக்க வேண்டியதில்லை. நீ ஒரு பொய் சொன்னாலும் உள்ளேயிருக்கிற தோட்டாவுக்குப் பிடிக்காது.”

ரூபேஷ், நடுங்கும் கரங்களோடு கிட்டத்தட்ட கைகூப்பினான். “எனக்குத் தெரிஞ்ச எல்லா உண்மைகளையும் சொல்லிடறேன். என்னை ஒண்ணும் பண்ணிடாதே!”

ரூபேஷுக்கு எதிரில் ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டுக்கொண்டு உட்கார்ந்தான் ஞானேஷ். குரலைத் தாழ்த்திக்கொண்டு மெல்லிய குரலில் கேட்டான்...

“இந்துவதனாவை உனக்கு எப்படித் தெரியும்?”

“இந்துவதனாவா... யாரது..?”

“என்னோட ‘நள்ளிரவு வானவில்’ ப்ராஜெக்ட்டில், ஆறு பெண்கள் எனக்கு அசிஸ்டென்ட்களா இருந்தாங்க. என்னையும் சேர்த்து ஏழு பேரோட முதல் எழுத்தில் உருவான ‘VIBGYOR’ என்கிற ஆங்கில வார்த்தையில் வர்ற `I' என்கிற எழுத்துக்கு சொந்தக்காரிதான் இந்துவதனா. இப்ப ஞாபகம் வருதா?”

‘’நீ சொல்ற அந்த இந்துவதனாவை எனக்குத் தெரியாது.”

“நிஜமா தெரியாதா..?”

“தெரியாது!”

ஞானேஷ் தன் கையில் வைத்திருந்த மேக்னம் பிஸ்டலை உயர்த்தி, ரூபேஷின் இடது மார்புப் பக்கத்தை குறிபார்த்தான். “நீ உன்னோட பதிலை மாத்திச் சொல்ல உனக்கு பத்து செகண்ட்ஸ் அவகாசம்.”

ரூபேஷ் அவசர அவசரமாய் “எனக்கு இந்துவதனாவைத் தெரியும்” என்றான்.

“எப்படித் தெரியும்?”

“அது வந்து... வந்து...”

“உண்மை... உண்மை! இனியொரு தடவை உன்னோட வாயிலிருந்து பொய் வரக்கூடாது!”

ரூபேஷ் சில விநாடிகள் தயங்கிவிட்டு பேச்சைத்

தொடர்ந்தான்... “இந்துவதனா தன்னோட காலேஜ் படிப்பை முடிச்சதுமே எனக்குச் சொந்தமான ஒரு ஐ.டி. கம்பெனியில்தான் முதன்முதலா வேலை பார்த்தா. அப்ப எனக்கும் அவளுக்கும் பழக்கம் ஏற்பட்டது. அதைக் காதல்னு சொல்ல முடியாது. நான் வெளியூருக்கு டூர் போகும்போதெல்லாம் எனக்கு கம்பெனி குடுப்பா...”

ஞானேஷ் புன்னகைத்தான். “புரியுது... புரியுது... நீ என்ன சொல்ல வர்றேனு புரியுது. அப்புறம் என்ன நடந்ததுன்னு சொல்லு!”

“இந்துவதனா கொஞ்ச நாள்தான் என்னோட கம்பெனியில் வேலை பார்த்தா. அதுக்கப்புறம் டெல்லியில் நீ வேலை செய்யற பயோ-டெக் கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்தா. அதுக்கப்புறமும் எங்க தொடர்பு நீடிச்சது.”

“அந்தத் தொடர்பு நீடிச்சதனாலதான் ‘நள்ளிரவு வானவில்’ ப்ராஜெக்ட் பத்தி உன்கிட்டே சொன்னாளா?”

ரூபேஷ் மௌனம் சாதித்தான்.

“சொல்லு... சொன்னாளா இல்லையா?”

“சொன்னா..!”

“உடனே நீ அந்த ப்ராஜெக்ட்டோட சூட்சுமம் சம்பந்தப்பட்ட ஃபைல்ஸோட காப்பியை ஒட்டுமொத்தமா உன்கிட்டே கொண்டுவந்து கொடுக்கச் சொல்லி கேட்டே. அதுக்கு ஒரு ரேட்டும் பேசினே... என்னோட உதவியாளரா இருந்த இந்துவதனா பணத்துக்கு ஆசைப்பட்டு நான் கஷ்டப்பட்டு உருவாக்கின ‘மிட் நைட் ரெயின்போ’ ஃபைலை காப்பி எடுத்துட்டு வந்து, உன்கிட்டே கொடுத்தா. உண்டா இல்லையா..?”

“அது... வந்து...”

“உண்மையா... இல்லையா..?” - ஞானேஷ் குரலை உயர்த்தி உறுமவும் ரூபேஷ் நடுங்கிப்

போனவனாய் தலையாட்டினான். நெற்றி யிலிருந்து வியர்வை சொட்டியது.

“ஆமா... உண்மைதான்!”

“உனக்கு விசுவாசமாதானே அவ நடந்து

கிட்டா... அப்புறம் ஏன் அவளைத் தீர்த்துக்கட்ட முயற்சி பண்ணினே? அப்படி முயற்சி எடுத்த நீ அதுக்கப்புறம் இந்துவதனாவோடு சேர்த்து ஊட்டிக்கு டூர் போன வினயா, யாமினி, பிருந்தா, ஓமனா, ராகவி இந்த அஞ்சு பேரையும் சேர்த்து மலைப்பாதையில் ஒரு வேன் விபத்துல ஏன் சாகடிச்சே?”

ரூபேஷ் விழிகள் தெறிக்க அதிர்ந்து போனவனாய் ஞானேஷையே பார்க்க... அவன் இதழ்க்கோடியில் புன்னகையொன்று உதித்து உடனே மறைந்தது. “என்ன அப்படிப் பார்க்கிறே... `போலீஸ் அதை விபத்துனு சொல்லி ஃபைலை க்ளோஸ் பண்ணிட்டாங்களே... இவன் மட்டும் அது ஒரு கொலைத்திட்டம்னு எப்படிக் கண்டுபிடிச்சான்’னு பார்க்கறியா? எல்லாமே உன்னோட ஆட்கள் கொடுத்த அக்மார்க் வாக்குமூலம்தான்!”

ரூபேஷ், உப்புத்தாளாய் வறண்டுபோன தன்னுடைய உதடுகளை அவசர அவசரமாய் ஈரப்படுத்திக்கொண்டு எச்சில் விழுங்கினான்.

‘எ.... எ... என்னோட ஆட்களா?”

நள்ளிரவு வானவில்! - க்ரைம் தொடர் - 25

“திவாகரும் பூங்கொடியும் உன்னோட ஆட்கள்தானே! கடந்த மூணு நாளா அந்த ரெண்டு பேரும் என்னோட கஸ்டடியில்

தான் இருக்காங்க. என்னோட ஃப்ரெண்ட் மணிகண்டன் கவனிச்ச கவனிப்புல ரெண்டு பேரும் மாத்தி மாத்தி எல்லா உண்மைகளையும் சொல்லிட்டாங்க... அதுல ஒரு உண்மைதான் அந்த ஊட்டி மலைப்பாதை விபத்து. டி.எஸ்.பி. நம்பெருமாள் உனக்கும் உன்னோட அப்பாவுக்

கும் விசுவாசியா இருந்ததால அதை விபத்துன்னு சொல்லி சட்டத்தோட வாயை சாத்த முடிஞ்சுது. என்ன... நான் சொன்னது சரியா இல்லையா..?”

“ச... ச... சரி!”

“அதுலதான் எனக்கு ஒரு விஷயம் புரியலை ரூபேஷ். ‘நள்ளிரவு வானவில்’ ப்ராஜெக்ட் விஷயமா உனக்கு உதவி பண்ணின இந்துவதனா மேல உனக்கு என்ன கோபம்... அவளைத் தீர்த்துக்கட்டறதுக்காக ஒரு வேனையே விபத்துக்குள்ளாக்க வேண்டிய அவசியம் என்ன?”

“அது... வந்து... வந்து...”

“சொல்லு... சொல்லு... இனிமே நீ ஒரு வார்த்தையைக்கூட மறைக்க முடியாது!”

“இந்துவதனா மேல எனக்கு எந்தக் கோபமும் இல்லை. அப்பாவுக்குத்

தான் அவ மேல கோபம். என்கூட அவ

பழகறதைப் பார்த்துட்டு அவளையே கல்யாணம் பண்ணிக்கப் போறே

னோன்னு பயந்தார். எல்லாத்துக்கும் மேல இந்துவதனா ஒரு கட்டத்தில் ‘நள்ளிரவு வானவில்’ ப்ராஜெக்ட் விஷயமா அவ கொண்டுவந்து கொடுத்த ஃபைல் காப்பிக்கு கூடுதலா பத்து லட்ச ரூபாய் கேட்டா. அதனால அப்பா டென்ஷனானார். `அவளுக்குப் பண ஆசை வந்துட்டதால இனிமே அவளை விட்டு வெச்சா காலைச் சுத்தின பாம்பா மாறிடுவா. அவளைப் போட்டுத் தள்ளறதைத் தவிர வேற வழியில்லை’னு சொன்னார். இந்துவதனாவை மட்டும் தனியா தீர்த்துக் கட்டினா போலீஸுக்குச் சந்தேகம் வந்து, அவளோடு தொடர்பு வெச்சுக்கிட்ட நபர்கள் யார் யார்னு என்கொயர் பண்ணும்போது என்னோட பேரும் அடிபடலாம்னு நினைச்சார். அதனால...”

ஞானேஷ் குறுக்கிட்டு சொன்னான். “அதனால இந்துவதனாவோடு வேனில் பயணம் பண்ணின மத்த அஞ்சு பேர்க்கும் சேர்த்து உன்னோட அப்பா கபால மோட்சம் கொடுத்துட்டார். அப்படித்தானே?”

“ஆ... ஆமா!”

“அவர் அப்படி பண்ணினது உனக்குப் பிடிக்கலை. அவர் மேல உனக்கு ஆத்திர ஆத்திரமா வந்தது... சரியா?”

“ஆ... ஆமா!”

“அந்த ஆத்திரத்தைத் தாங்கிக்க முடியாமல்தான் உன்னோட அப்பாவுக்கும், டி.எஸ்.பி. நம்பெருமாளுக்கும் பாய்ஸன் கொடுத்து பரலோகம் அனுப்பினியா?”

திக்கித்துப் போனான் ரூபேஷ்.

ஞானேஷ் சிரித்தான்.

“என்ன ரூபேஷ்... மெயின் ஸ்விட்ச்ல கையை வெச்சுட்டேன்னு ஆடிப் போயிட்டியா? இதை என்கிட்ட சொன்னதும் திவாகர்தான். ஆனா, எனக்கொரு சந்தேகம். அந்த இந்துவதனா கொலை செய்யப்பட்ட காரணத்துக்காக மட்டுமே உனக்கு உன்னோட அப்பா மேல கோபம் வந்திருக்காது. வேற ஏதோ காரணம் இருக்குன்னு நினைக்கிறேன். என்னோட கெஸ் வொர்க் சரியா..?”

ரூபேஷ் தலையைக் குனிந்துகொண்டு மௌனமாக இருந்தான். ஞானேஷின் கையில் இருந்த மேக்னம் பிஸ்டல் லேசாக உயர்ந்தது.

“நான் வந்த வேலையை முடிச்சுட்டுப் போகட்டுமா?”

சட்டென்று முழந்தாளிட்டு உட்கார்ந்தான் ரூபேஷ்.

“என்னை ஒண்ணும் பண்ணிடாதே! நான் எல்லா உண்மைகளையும் சொல்லிடறேன். என்னோட அப்பா வழக்கமா சாப்பிடற விஸ்கியில் ‘ஸ்டெப் மதர் பாய்ஸன்’ என்கிற, மெதுவா உயிரை எடுக்கிற விஷத்தைக் கலந்தது நான்தான். அவர்மேல எனக்கு ஆத்திரம் வரக் காரணம் இந்துவதனா கொலை செய்யப்பட்டது அல்ல.”

“அப்புறம்?”

“அப்பா அடிக்கடி பிசினஸ் விஷயமா தாய்லாந்து போயிட்டு வந்தார். அந்த சமயத்துல பாங்காங் ஹோட்டலில் ரிசப்ஷனிஸ்டா இருந்த ‘கிளாடியா’ என்கிற பெண்ணுக்கும் அவருக்கும் தொடர்பு ஏற்பட்டு, ஒருநாள் அந்த கிளாடியாவோட போட்டோவைக் காட்டி `இந்தப் பொண்ணும் நானும் ஒருத்தரையொருத்தர் விரும்பறோம். இவ உனக்கு சித்தியா வர்றதுல உனக்கு ஏதாவது ஆட்சேபனை உண்டா?'னு கேட்டார். அப்பா அப்படிக் கேட்டது எனக்கு அதிர்ச்சியா இருந்தாலும் அதை வெளிக்காட்டிக்காம அப்பாவோட கையைப் பற்றிக் குலுக்கி `மோஸ்ட் வெல்கம்’னு சொல்லி சிரிச்சு வெச்சேன். அப்பாவும் சிரிச்சுக்கிட்டே `கிளாடியாவை உடனடியா நான் கல்யாணம் பண்ணிக்க முடியாது. அவ கல்யாணமானவள். அவளுக்கு கோர்ட் மூலமா முறைப்படி டிவோர்ஸ் கிடைக்க ஒரு வருஷமாவது ஆகும். அதுக்கப்புறம்தான் கல்யாணம்'னு சொன்னார். என் அப்பாவுக்குப் பின்னாடி கோடிக்

கணக்கான சொத்து பூராவும் எனக்குத்தான்னு நினைச்சுட்டிருந்த என்னோட நினைப்புல மண் விழுந்த மாதிரியான உணர்வு. கிளாடியாவை அப்பா கைப்பிடிக்கிறதுக்கு முன்னாடி அவரை ஒரு கைப்பிடி சாம்பலாக்கணும்ன்னு நினைச்சேன். என்கிட்டயிருந்த ஒரு வித்தியாசமான விஷத்தை வெச்சு முடிச்சேன். அப்பாவோட கதையை முடிச்ச பின்னாடி டி.எஸ்.பி. நம்பெருமாள் என்னை நம்பாத பார்வை பார்த்துக்கொண்டே இருந்தார். ஏன்னா,

அவருக்கும் கிளாடியா விஷயம் தெரியும். நம்பெருமாள் என்னிக்காவது ஒருநாள் உண்மையைக் கண்டுபிடிச்சுடுவார் என்கிற பயத்துல அவர் குடிக்கிற மினரல் வாட்டர் பாட்டிலில் அப்பாவுக்கு கொடுத்த அதே பாய்ஸனைக் கலந்தேன்.”

மூச்சுவாங்க நீளமாய் பேசி முடித்த ரூபேஷ், இரண்டு கைகளையும் குவித்து ஞானேஷைக் கும்பிட்டான்.

“என்னை ஒண்ணும் பண்ணிடாதே ஞானேஷ். நான் எல்லா உண்மைகளையும் சொல்லிட்டேன். அந்த ‘மிட்நைட் ரெயின்போ’ ப்ராஜெக்ட்டை நீ வெற்றிகரமா செய்து முடிக்க நான் எவ்வளவு பணம் வேணும்னாலும் தர்றேன்.”

“அஞ்சு கோடி வேணும். தருவியா?”

“தர்றேன்...”

“உன்னை எப்படி நம்பறது?”

“இதோ பார் ஞானேஷ்! நீ என்னை கார்னர் பண்ணிட்டே. இனிமே நான் உன்னை ஏமாத்த நினைச்சா மாட்டிக்கப் போறது நான்தான். என்னை நீ நம்பு!”

“சரி! எனக்கு ஒரு சந்தேகம். ஒரே நேரத்துல பெங்களூர்ல எஸ்.பி சந்திர கவுடாவையும், சென்னையில போலீஸ் இன்ஃபார்மர் இரண்டாம் நாரதனையும் தீர்த்துக்கட்டினது நீதானே?''

``ஆமாம்!''

``அப்படியே இன்னொரு சந்தேகத்தையும் கேட்டுடறேன்! உன்னோட ஆட்களான திவாகரையும் பூங்கொடியையும் ரிதன்யா வீட்டுக்கு அனுப்பி, ரிதன்யாவை ஹவுஸ் அரெஸ்ட் பண்ணி ‘நள்ளிரவு வானவில்’ பற்றி கேட்டு டார்ச்சர் பண்ண வெச்சியே... அது எதுக்கு?”

“இந்துவதனா கொண்டுவந்து கொடுத்த ‘நள்ளிரவு வானவில்’ ஃபைலில் போதுமான விவரங்கள் இல்லைன்னு அப்பா சொன்னார். அதுக்கு  டி.எஸ்.பி. நம்பெருமாள் சைபர் க்ரைம் பிராஞ்ச் ஆபீஸர் ரிதன்யாவுக்கு ‘நள்ளிரவு வானவில்’ பற்றிய கூடுதல் விவரங்கள் தெரிஞ்சிருக்க வாய்ப்பு இருக்குன்னு சொன்னார். அதனால்தான் என்னோட ஆட்களான திவாகரையும், பூங்கொடியையும் ரிதன்யாகிட்டே அனுப்பி வெச்சேன். ஆனா, ரிதன்யாவுக்கு நள்ளிரவு வானவில் பற்றின எந்த விவரமும் தெரியாததனால மேற்கொண்டு அவளை விசாரிக்க முடியாதுன்னு திவாகர் சொன்னான். நான் உடனே திவாகர்கிட்டே ரிதன்யாவை ஒயிட்ஃபீல்டில் உள்ள ப்ளஸன்ட் ஓஷன் ஹோட்டலுக்குக் கூட்டிட்டு வரும்படி சொன்னேன். அதுக்குக் காரணம், ரிதன்யா இங்கே என்னை பார்க்க வரும்போது என் அப்பாவோட மரணம் நடந்தா யாருக்கும் என் மீது சந்தேகம் வராதுனு நினைச்சேன்.”

ஞானேஷ் உதடு பிரியாமல் மெள்ளச் சிரித்தான்.

“ரூபேஷ்! நீ தப்புத் தப்பா பல கணக்குகளைப் போட்டே. ஆனா, நான் ஒரே ஒரு கணக்கை சரியாப் போட்டேன். ‘நள்ளிரவு வானவில்’ ப்ராஜெக்ட் தொடர்பான விஷயத்தில் சம்பந்தப்பட்ட அந்த ஆறு பெண்களோட மரணத்தைத் தொடர்ந்து நானும் இறந்துட்டதா ஒரு அலிபியை ஏற்படுத்திட்டு தலைமறைவாயிட்டேன். சென்னையில் மூணு நாள், பெங்களூரில் நாலு நாள் என்னோட உருவ அமைப்பை மாத்திகிட்டு எல்லாருடைய நடவடிக்கைகளையும் கண்காணிக்க ஆரம்பிச்சேன். இந்த விஷயத்துல ரிதன்யா எனக்குப் பெரிய அளவுல ஒத்துழைப்பு கொடுத்தாங்க. ரெண்டாவதா என்னோட ஃப்ரெண்ட் மணிகண்டன். உன்னோட ஆட்களான திவாகரையும், பூங்கொடியையும் ஒயிட்ஃபீல்டில் காரில் காத்திருந்தபோது மடக்கி தன்னோட கஸ்டடியில் கொண்டுபோய் வெச்சுகிட்டது மணிகண்டன்தான். மொதல்ல உண்மைகளைச் சொல்ல மறுத்த திவாகர் அதுக்கப்புறமா போலீஸ் கமிஷனர் ராஜகணேஷ், அவருக்கே உரித்தான பாணியில் விசாரிச்ச பிறகுதான் உன்னைப் பத்தின எல்லா உண்மைகளையும் சொல்ல ஆரம்பிச்சான்.”

ரூபேஷ் வெகுவாக முகம் மாறி திக்கென்று விழிக்க, ஞானேஷ் மெதுவாக நடந்துவந்து அவனுடைய தோளில் கையை வைத்தான்.

“என்ன ரூபேஷ் அப்படிப் பார்க்கிறே... இந்த விஷயத்துல சென்னை போலீஸ் கமிஷனர் ராஜகணேஷ் எப்படிச் சம்பந்தப்படறார்னு கேட்கறியா? எக்ஸ்டர்னல் அஃபேர்ஸ் மினிஸ்டர் அதாவது வெளியுறவுத்துறை அமைச்சர் ஆதர்ஷ் பாண்டே எனக்குப் பக்கபலமா இருந்து, ‘நள்ளிரவு வானவில்’ ப்ராஜெக்ட்டை இந்திய தொழில்நுட்பக் கழகத்துக்கு அர்ப்பணிக்கும் பொறுப்பை கொடுத்திருக்கார். இந்த ப்ராஜெக்ட்டை மேன்மேலும் மேம்படுத்த ஜோர்டான் நாட்டு தொழில்நுட்ப நிறுவனமும் நம்ம அரசோடு இணைந்திருக்கு. அதுக்கான பேச்சு வார்த்தைகளையும் ஜோர்டான் நாட்டு வெளியுறவுத் தூதுவர்களோடு நடத்திட்டேன். இந்த விஷயத்துல வல்லரசு நாடுகளை நம்ப இந்தியா தயாராயில்லை. நம்ம இந்திய அரசு எனக்குப் பின்பலமா இருக்கும்போது சென்னை போலீஸ் கமிஷனர் எனக்கு உதவி பண்ணமாட்டாரா என்ன? அவர் உதவி பண்ணப் போய்த்தான் இந்த ரூமுக்குள்ளே அரை மணி நேரமா ‘வார்ட் ரோப்’புக்குள் இருந்தேன்.”

ஞானேஷ் சொல்லிக்கொண்டிருக்கும்போதே ரூபேஷுக்குப் பின்னால் காலடிச் சத்தங்கள் கேட்டன. திரும்பிப் பார்த்தான்.

ராஜகணேஷும், ரிதன்யாவும் புன்முறுவல் பூத்த முகங்களோடு வந்துகொண்டிருந்தார்கள்.

ரிதன்யா கேட்டாள்... ‘’என்ன ஞானேஷ்... எல்லா உண்மைகளையும் ரூபேஷ்கிட்டயிருந்து வாங்கிட்டீங்களா?”

“சுபம்” என்றான் ஞானேஷ்.

முற்றும்