மற்ற எபிசோடுகள்
Published:Updated:

அனுபவங்கள் பேசுகின்றன!

ஒவ்வொன்றுக்கும் பரிசு: ரூ.200

இதுவல்லவோ நாகரிகம்!

அனுபவங்கள் பேசுகின்றன!

சில நாட்களுக்கு முன் எங்கள் வீட்டுக்கு அருகிலிருந்த நிலத்தில் ஒரு தம்பதியர் வீடு கட்டும்

அனுபவங்கள் பேசுகின்றன!

பணிகளைத் தொடங்கினர். அப்போது எங்கள் வீட்டுக் கதவைத் தட்டியவர்கள், ``நாங்கள் நாளை போர்வெல் போடப் போகிறோம். உங்கள் வீட்டில் யாராவது பரீட்சைக்கு படித்துக் கொண்டிருக்கிறார்களா? நோயாளிகள், வயதானவர்கள் யாராவது இருக்கிறார்களா?” எனக் கேட்டனர். நான், ``என்னுடைய மகளுக்கு நாளை மறுநாள் ஒரு தேர்வும், அதன் பிறகு ஒரு நாள் விட்டு கடைசி தேர்வும் உள்ளது’’ எனக் கூறினேன். உடனே அவர்கள் போர்வெல் போடும் எண்ணத்தைத் தள்ளிப்போட்டு, என் மகளுக்கு தேர்வு முடிந்த அன்றே போர்வெல் பணியைத் துவங்கினார்கள். அடுத்தவர்களின் உணர்வுகளை, சௌகரியங்களை மதிக்கும் அவர்களின் நாகரிகத்தைக் கண்டு வியந்த நான், அவர்களை மனதார பாராட்டினேன்.

- ஆர்.மீனாட்சி, சென்னை-116

கொஞ்சம் யோசிங்க டாக்டர்!

அனுபவங்கள் பேசுகின்றன!

ண்மையில் மதுரையில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக காலை 10 மணிக்கு சென்றிருந்தேன். டாக்டர் வரும் நேரம் 11 மணி என்று அங்கிருந்த ஊழியர்கள் சொன்னார்கள். ஆனால், 12 மணி வரைக்கும் டாக்டர் வரவேயில்லை. நானும் பிற நோயாளிகளும் பொறுமையிழந்து சத்தம் போட்டோம். பிறகு, ஆடி அசைந்து மெதுவாக வந்து சேர்ந்தார் டாக்டர். இதனால் நோயாளிகள் பட்ட பாட்டை சொல்லி மாளாது!

சாதாரணமாகவே ஒருவருக்காக நீண்ட நேரம் காத்திருப்பது, அவஸ்தையாக இருக்கும். பல்வேறு உடல் உபாதைகளால் சிரமப்படுபவர்களை மணிக்கணக்கில் காக்கவைப்பது எத்தனை பெரிய கொடுமை! சம்பந்தப்பட்டவர்களே... கொஞ்சம் சிந்தியுங்கள்.

- அ.சந்திரலேகா, மதுரை

அமைதிக்கு ஒரு ஐடியா!

அனுபவங்கள் பேசுகின்றன!

ங்களுக்கு நெருக்கமான குடும்பத்தில் நிகழ்ந்த பெண்பார்க்கும் நிகழ்ச்சியில் நாங்கள் கலந்துகொண்டோம். சென்னையில் இருந்து பெண் பார்க்க வந்திருந்த குடும்பம் முதல் பார்வையிலேயே நல்ல எண்ணத்தை ஏற்படுத்தியது. மாப்பிள்ளையையும் அனைவருக்கும் பிடித்தது. மாப்பிள்ளையின் தந்தை, பெண்ணைத் தேர்ந்தெடுப்பதில் ஒரு பகுதியாக, தன் இரண்டு பெண்களையும் அழைத்து வந்து, பார்க்க வந்த பெண்ணிடம் இயல்பாக பழகவிட்டார். 

‘நாத்தனாராக இருப்பவர்களுக்கும் அண்ணியாக இருப்பவருக்கும் பொதுவாக ஆவதில்லை. அதனால் ‘தனிக்குடித்தனம்’ என்ற அளவுக்கு நிலைமை முற்றிவிடுகிறது. இப்போதே மூவரும் நெருங்கிய தோழிகளாகிவிட்டார்கள்’ என்று அந்தக் குடும்பத் தலைவர் விளக்கம் கொடுத்தார். இது பின்பற்றத்தக்க நல்ல யோசனையாகவே பட்டது!

அண்ணியாக நாத்தனார்களாக ஆகப்போகிறவர்கள், திருமணத்துக்கு முன்பே தோழிகளானால், குடும்பத்தில் அமைதி நிலவுமே! 

- மலர்விழி முத்துவிநாயகம், தஞ்சாவூர்

வம்பு தேடி அலையாதீர்!

அனுபவங்கள் பேசுகின்றன!

மீபத்தில் என் தோழியின் தங்கை நிச்சயதார்த்தத்துக்குச் சென்றிருந்தேன். சீர் செய்யும் நிகழ்ச்சி நடந்துகொண்டிருந்தபோது கரன்ட் கட்டானது. சிறிது நேரத்திலேயே ஜெனரேட்டர் போட...  நிகழ்ச்சிகள் மீண்டும் தொடர்ந்தன. அங்கு வந்திருந்த சிலர், ‘சீர் நடக்கும்போது அபசகுனம் மாதிரி லைட் அணைஞ்சிருச்சு... என்ன நடக்குமோ தெரியலையே..!’ என்கிற ரீதியில் பேச ஆரம்பித்தார்கள். ‘இந்த ஏரியாவில், இந்த டைம்ல கரன்ட் கட்டாவது சகஜம்தான். அதுக்கும் பொண்ணுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. மணமக்கள் நூறு வருஷம் சந்தோஷமா வாழப் போறாங்க’ என்று நான் சொன்னதைக் கேட்டு அந்த உறவினர்கள் திருந்தினார்களா என்று தெரியவில்லை... அப்போதைக்கு `கப்சிப்’ என்றாகிவிட்டார்கள்.

சந்தோஷமான தருணங்களில், சங்கடம் தேடி அலைந்து வம்பு பேசும் இதுபோன்ற சிலர் தங்கள் போக்கை மாற்றிகொள்ள வேண்டியது அவசியம்.

- ஆர்.வசந்தி, போளூர்