மற்ற எபிசோடுகள்
Published:Updated:

என் டைரி - 371

என் டைரி - 371

ப்பா, அம்மா, அண்ணன், நான்... அழகான குடும்பம். அண்ணனையும், என்னையும் அவ்வளவு

என் டைரி - 371

செல்லமாக வளர்த்தனர் பெற்றோர். நான் பத்தாவது படிக்கும்போது, விதி எங்கள் வாழ்க்கையைத் திருப்பிப் போட்டது.

என் டைரி - 371

என் அம்மா தற்கொலை செய்துகொண்டார். என் அப்பா - அம்மாவுக்கு இடையில் நடந்த சண்டைதான் தற்கொலை வரை தள்ளிவிட்டது என்று பேசினார்கள், துக்க வீட்டில். ‘புருஷன் பொண்டாட்டி அடிச்சுக்கிறது, சேர்ந்துக்கிறது இல்லையா? இப்படி என் குடும்பத்தையே தவிக்க விட்டுட்டுப் போயிட்டாளே...’ என்று கதறிய என் அப்பாவின் கண்ணீர், கரிசனத்தையே கொடுத்தது எனக்கு!

அண்ணனுக்கும், எனக்கும் தெரிந்தவரை உயிரை மாய்த்துக்கொள்ளும் அளவுக்குப் பிரச்னை எதுவும் இல்லை எங்கள் பெற்றோருக்கு இடையில். என் அப்பா குற்றவாளியாகவே இருந்தாலும், தண்டனையை எங்களுக்கும் சேர்த்துத் தந்துவிட்ட போன அம்மாவின் முடிவை, மன்னிக்க முடியவில்லை என்னால்.

இந்நிலையில், என் அம்மாவின் பிறந்த வீட்டினர், என் அப்பாவின் மீது கோபத்தில் இருந்தனர். அப்பாவை மட்டுமல்ல... என்னையும், அண்ணனையும்கூட பார்க்கும் இடங்களில் எல்லாம் சபித்தார்கள். இன்னொரு பக்கம், தாயுமானவனாகி எங்களை பார்த்துக்கொண்டார் அப்பா. பன்னிரண்டாம் வகுப்போடு படிப்பை நிறுத்திக்கொண்ட நான், வீட்டில் அப்பாவின் வேலைச்சுமைகளைக் குறைத்தேன்.

சில வருடங்கள் உருண்டோட, என் தாய் மாமன் மகனுக்கு பெண் பார்த்துக்கொண்டிருந்தார்கள். சில உறவினர்கள், என்னை மணமுடித்துவைக்க வேண்டி, இருபக்கமும் அதற்கான முயற்சிகளை எடுத்தார்கள். ‘தாயில்லாத பிள்ளை. நாளைக்கு நாம பார்க்கிற மாப்பிள்ளை வீட்டில் ஏதாச்சும் பிரச்னைன்னா, தாங்கவே முடியாது. அதுக்கு அவங்க மாமா வீட்டுக்கே போனா, அவங்க வீட்டுப் பொண்ணா பார்த்துப்பாங்க’ என்று என் அப்பாவுக்கும் இதில் முழு விருப்பம். நானும், விட்டுப்போன உறவுகள் சேர இது வழிவகுக்கும் என்று பிரியப்பட்டேன். முரண்டு பிடித்த மாமா வீட்டையும், எல்லோரும் பேசி சம்மதிக்க வைத்தனர். முடிந்தது என் திருமணம்.

என் மாமா, அத்தை, கணவர் என்னை மனமார ஏற்கவில்லை என்பது, புகுந்த வீட்டுக்குப் போன சில நாட்களில் புரிந்தது. அவர்கள் தூக்கி வளர்த்த பிள்ளை நான். ஆனாலும் ‘கொலைகாரன் மகள்’ என்பதுதான் அங்கு எனக்குப் பெயர். என் அப்பா, அண்ணன் இங்கு வரக்கூடாது, நான் என் பிறந்த வீட்டுக்குப் போகக்கூடாது என்பது அவர்களின் கட்டுப்பாடு. ‘பரவாயில்ல... நீ நல்லாயிருந்தா போதும்’ என்று ஒதுங்கியிருக்கும் என் அப்பாவுக்கு, புகுந்த வீட்டில் நான் அனுபவிக்கும் கொடுமை முழுவதுமாக தெரியாது. நானும் அவர்களின் மனது மாறும் என்று காத்திருந்து இரண்டு வருடங்கள் ஓடிவிட்டன. இன்னும் என்னை அவர்கள் ஏற்கவேயில்லை. என் அம்மா எடுத்த முடிவையே நானும் எடுக்க நினைக்கும் அளவுக்கு, என்னை நோகடிக்கின்றனர்.

வாழ்வு விடியுமா தோழிகளே?!

- பெயர் வெளியிட விரும்பாத வாசகி

என் டைரி 370-ன் சுருக்கம்

என் டைரி - 371

``கார், பங்களா என்று எங்கள் கூட்டுக் குடும்பத்துக்கு எந்தக் குறையும் இல்லை. ஆனால், எனக்கும் கணவருக்கும் வீட்டில் மரியாதை இல்லை. காரணம், என் மாமனார். ஒரே பையனான என் கணவருக்குத் தொழிலில் எந்தப் பொறுப்பும் தராமல், ‘உதவி’யாக வைத்திருக்கிறார். மாமியாரும், நாத்தனார்களும், என்னையும் என் கணவரையும் மதிப்பதில்லை. எல்லா செலவுக்கும் மாமனாரிடம்தான் பணம் கேட்க வேண்டும். ‘இது நான் உழைச்சு சம்பாதிச்சு காசு’ என்ற அடிக்கோடு இன்றி கொடுக்க மாட்டார் மாமனார். `நீ உங்கப்பா நிழல்லதான் நிக்கணும்னு உன் ஜாதகத்திலேயே இருக்கு’ என்பது போன்ற சாமர்த்தியமான பேச்சுகளால், என் கணவரின் தன்னம்பிக்கையை அவர் வீட்டினர் தகர்த்து, சுயமுயற்சியற்றவராக வைத்திருக்கிறார்கள். சொத்துக்காகவே நாங்கள் அவர்கள் காலடியில் கிடப்பது போலவும் பேசுகிறார்கள்.

`அவங்க சொத்தே வேண்டாம், விட்டுட்டு வாங்க... ரெண்டு பேரும் வேலைக்குப் போவோம். இந்த அடிமை வாழ்க்கையைத் தொடர முடியாது’ என்றால்... மனம் ரணமாகி இருந்தாலும், மகன் என்ற கடமையை மீற முடியாமல் தவிக்கிறார் கணவர்.  இந்தத் தங்க கூண்டில் இருந்து விடுதலை பெறுவது எப்படி?’’

வாசகிகள் ரியாக்‌ஷன்

ஒவ்வொன்றுக்கும் பரிசு: ரூ 100

காலம்... காயம் ஆற்றும்!

முதலில் நீங்கள் இருவரும் நல்ல வேலையைத் தேடிக்கொள்ளுங்கள். பிறகு குடும்பத்திலுள்ள பெரியவர்களிடம் சுமுகமாகச் சொல்லி நல்லவிதமாக தனிக்குடித்தனத்தை ஆரம்பியுங்கள். நல்லநாள் கிழமைகளில் அவர்களுடன் சேர்ந்து கொண்டாடுங்கள். மனஸ்தாபங்கள் விலகும். நிச்சயம் காலப்போக்கில் நல்ல மாறுதல்கள் ஏற்படும்.

- டி.நிர்மலா தேவி, பம்மல்

அடிமை வாழ்க்கை வேண்டாம்!

இது தன்மானப் பிரச்னை. அடிமையாக வாழ்வது வாழ்க்கையல்ல. எந்த ஓர் அடிப்படைத் தேவைக்கும் அவர்களை எதிர்பார்த்து இருப்பது என்பது நடக்காத காரியம். இன்றைய சூழ்நிலைக்கேற்ப நல்ல பிசினஸ் தொடங்கி உழைத்து முன்னேறி ஜாதகக் கணிப்பை பொய்யாக்கி காட்டுங்கள்.

- நளினி ஸ்ரீதரன், மதுரை

பக்குவம் கரை சேர்க்கும்!

கணவரின் அனுமதியோடு நீ வேலைக்குப் போ, உன் கணவர், மகன் என்ற கடமையை மீறாமல், உழைத்த காசை சேமித்து வைப்பதும், இனி தன் அப்பா உதவியை நாடாமலிருத்தலுமே நல்லது. அப்படி இருந்தால், அவர் அப்பாவே மெச்சிடுவார். எல்லாவற்றையும் பக்குவமாய் எடுத்துக் கூறி, உன் பக்கம் கணவரை திருப்பினால் போதும்... வாழ்க்கை விடுதலை மட்டும் அல்ல, வசந்தமும் உங்களைத் தொடும்; மூடுபனி நிச்சயம் உருகி விலகும்.

- இல.வள்ளிமயில், திருநகர்