மற்ற எபிசோடுகள்
Published:Updated:

அனுபவங்கள் பேசுகின்றன!

ஒவ்வொன்றுக்கும் பரிசு: ரூ.200

`செல்’லம்மாக்கள்... `செல்’லப்பாக்கள் கவனத்துக்கு..!

அனுபவங்கள் பேசுகின்றன!

நான் ஒரு மூத்த குடிமகள். மூட்டுவலி அவஸ்தையும் உண்டு. ஒரு நாள் அதிகாலை ஐந்து மணிக்கு எனக்கு போன் வந்தது. `என்னவோ ஏதோ’ என்று ஓடிப் போய்ப் பார்த்தால்... போன் செய்தது உறவுக்காரப் பெண். அவளுக்கு வீட்டில் வேலை எதுவும் இல்லையாம். என்னைப் பற்றி நினைத்தாளாம். உடனே போன் பண்ணினாளாம்! இதுபோல் இரவு வேலை முடித்து `அப்பாடா’ என்று படுத்தால், சிறிது நேரத்தில் போன் வரும்; முக்கியமான சமாசாரம் எதுவும் இருக்காது. அக்கறையும் அன்பும் நல்லதுதான். ஆனால், விடியற்காலை, நள்ளிரவு நேரங்களில், மிகவும் அவசியம் இருந்தால் மட்டுமே போன் செய்யுங்களேன்... ப்ளீஸ்!

- சாவித்திரி, சென்னை-116

நாகரிகம் பழகுவோமா?!

அனுபவங்கள் பேசுகின்றன!

மருந்தகம் ஒன்றில் நான் மருந்து வாங்கிக் கொண்டிருந்தபோது, எங்கள் ஏரியாவில் இருக்கும் டெய்லர்... உடல்நிலை சரியில்லாத தன் மனைவிக்கு மருந்து வாங்கினார். வாங்கிவிட்டு கிளம்பிய டெய்லரை வழிமறித்த ஒருவர், ``என் டிரெஸ்ஸை தைச்சுட்டீங்களா? நாளைக்கு வந்து வாங்கிக்கட்டுமா?’’ என்று கேட்டார். டெய்லர் கொஞ்சம் தடுமாறி பின் யோசித்துவிட்டு, ``வாங்க’’ என்று கூறி புறப்பட்டார். இதேபோல திருமணங்களில் கலந்துகொள்ள வரும் ஆசிரியர்களிடம் தன் குழந்தையைப் பற்றி `வளவள’ என்று பேசும் பெண்களையும், விசேஷங்களுக்கு வரும் இன்ஷூரன்ஸ் முகவர்களிடம் `பாலிசிக்கு பணம் வாங்கிட்டுப் போனீங்க... ரசீது தரலையே!’ என்று எல்லோர் எதிரிலும் கேட்பவர்களையும் பார்த்திருக்கிறேன்.

தொழில் சார்ந்து நம்மிடம் பழகுபவர்களுக்கும் தனி வாழ்க்கை உண்டு. பொது இடங்களில் அவர்களைச் சந்திக்கும்போது சங்கடப்படுத்தும் பர்சனல் கேள்விகளை தவிர்ப்பதுதான் நாகரிகம்.

- கோமதி பூபாலன், காவேரிப்பாக்கம்

தேங்க்யூ பிரதர்!

அனுபவங்கள் பேசுகின்றன!

சமீபத்தில் வங்கிக்கு சென்றிருந்த நான், என் டோக்கன் அழைப்புக்காக காத்திருந்தேன். அப்போது ஓர் இளைஞன், `சலான்’ பூர்த்தி செய்ய பேனா வேண்டும் என்று என்னிடம் கேட்டான். கொடுத்த ஒரு நிமிடத்துக்குள் பேனாவைத் திருப்பிக் கொடுத்ததோடு, சலானையும் என்னிடம் கொடுத்துவிட்டு, வேகமாக நகர்ந்துவிட்டான். அவன் செய்கையின் காரணம் புரியாமல், அதைப் பிரித்துப் பார்த்தபோது, அதில், `அக்கா... முதுகுப்புறம் உங்கள் உள்ளாடை விலகியுள்ளது. தள்ளிப்போய் சரிசெய்து கொள்ளுங்கள்’ என்று எழுதப்பட்டிருந்தது. ஓரமாகப் போய் சரிசெய்தேன்.

சங்கடமான விஷயத்தை, சகோதரத்துவமாய் சுட்டிக்காட்டிய அந்த இளைஞனுக்கு மனதுக்குள் நன்றி கூறினேன்.

- ராணி, மதுரை