
ஃபிஃபா ரெஃப்ரி ரூபாதேவி!
பெண்கள் கால்பதிக்காத துறை எதுவுமே இல்லை. அதில் சமீபத்திய சந்தோஷச் செய்தி, சர்வதேச கால்பந்துப் போட்டிகளில் நடுவராகச் செயல்பட சர்வதேச கால்பந்து சம்மேளனம் (FIFA - Federation Internationale de Football Association) மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார், திண்டுக்கல்லைச் சேர்ந்த ரூபாதேவி. 24 வயதே ஆகும் ரூபாதேவி இந்த அங்கீகாரத்தைப் பெறும் தமிழகத்தின் முதல் பெண். தகவல் வெளியானபோது, மத்தியப்பிரதேச மாநிலம் ஜபல்பூரில் தேசிய சீனியர் பெண்கள் கால்பந்துப் போட்டியில் நடுவராகப் பொறுப்பேற்று இருந்தார் ரூபாதேவி. திண்டுக்கல் திரும்பியவருக்கு வாழ்த்துகள் சொன்னோம்.

“திண்டுக்கல் செயின்ட் ஜோசப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கும்போது என் சீனியர்ஸ் விளையாடுவதைப் பார்த்துதான் எனக்கு ஃபுட்பாலில் ஆர்வம் வந்தது. அப்போது நடந்த போட்டி ஒன்றில் வெற்றி பெற்றது, ஆர்வத்தை அதிகமாக்கியது. என்னோட பயிற்சியாளர் ஜஸ்டின் ஆரோக்கியராஜ் சார், என்னை ஊக்கப்படுத்தி நிறையப் பயிற்சிகள் கொடுத்தார். ஸ்கூல் படிக்கும்போது திண்டுக்கல் டீம் சார்பாக மாவட்டப் போட்டிகளில் விளையாட ஆரம்பித்தேன்’’ - மகிழ்ச்சி பொங்கப் பேச ஆரம்பித்தார் ரூபாதேவி.
ஆரம்பத்தில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக அணி மற்றும் திண்டுக்கல் கால்பந்துக்கழக அணிக்காக விளையாடிய ரூபாதேவி, பின்னர் மாநில மற்றும் தேசிய அணிகளுக்குத் தேர்வாகி பல்வேறு போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.
“திண்டுக்கல் ஜி.டி.என் காலேஜில் பி.எஸ்ஸி., கெமிஸ்ட்ரி படித்தேன். அந்த நேரத்தில் நிறையப் போட்டிகளில் கலந்துகொண்டதோடு, 2007-ல் நடுவருக்கான தேர்வு எழுதினேன். 2002-ல் நடந்த உலகக் கோப்பை கால்பந்துப் போட்டிகளில் நடுவராகப் பணியாற்றிய சங்கர் கோமலீஸ்வரன் சார்தான் அப்போது எனக்கு எக்ஸாமினராக வந்தார். தேர்வுக்கு வந்தவர்களில் நான் மட்டுமே பெண் என்பதால் சங்கர் சார் எனக்கு நிறைய ஊக்கமும் நம்பிக்கையும் கொடுத்தார். திண்டுக்கல் மாவட்டக் கால்பந்தாட்டக் கழகத் தலைவர் சண்முகம் போட்டிகளுக்குச் செல்வதற்கான உதவிகளைச் செய்தார்” என்றபோது அவர் குரலில் நன்றி.
வெளிநாடுகளில் நடந்த சர்வதேச போட்டிகளில் நடுவராகப் பணியாற்றியது பற்றிக் கூறும் ரூபாதேவி, “2012-ல் ‘புராஜெக்ட் ஃப்யூச்சர்’ என்று ஒரு திட்டம் ஆசிய கால்பந்து சம்மேளனம் மூலமாக கொண்டுவரப்பட்டது. 25 வயதுக்குக் கீழ் இருக்கும் ஆண்-பெண்களுக்கு நடுவர் பயிற்சி அளித்து போட்டிகளுக்கு அனுப்பும் அந்தத் திட்டத்தில் இந்தியா முழுவதிலும் இருந்து தேர்வான 140 பேரில் நானும் மேற்குவங்கத்தைச் சேர்ந்த மோனிகாவும் மட்டுமே பெண்கள். இருவருமே இப்போது சர்வதேச கால்பந்துப் போட்டிகளில் நடுவராகப் பணியாற்றுகிறோம். இலங்கையில் நடந்த 14 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான போட்டியில் பணியாற்றியதே நான் வெளிநாட்டில் நடுவராகப் பணியாற்றிய முதல் அனுபவம். பிறகு கத்தார், பஹ்ரைன், மலேசியா, நேபாளம், மாலத்தீவு போன்ற நாடுகளில் நடுவராகப் பணியாற்றியிருக்கிறேன்” என்று கூறும் ரூபாதேவி, 2013-ல் இருந்து இந்தியா முழுவதும் நடந்த பல்வேறு போட்டிகளில் நடுவராகப் பணியாற்றி இருக்கிறார்.

சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்றிருந் தாலும், ரூபாதேவிக்கு இன்னும் அரசு வேலை கிடைக்கவில்லை என்பது வருத்தத்துக்கு உரிய விஷயம். பெற்றோர் இறந்து விட்டதால் அக்காவின் வீட்டில் வசிக்கும் ரூபாதேவி ஆரம்பத்தில் ஒரு பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றியிருக்கிறார். சம்பளம் குறைவு, போட்டிகளுக்குச் செல்ல அனுமதி இல்லை போன்ற காரணங்களால் வேலையை விட்டுவிட்டார். ‘‘காந்திகிராம பல்கலைக்கழகத்தில் சுகாதார ஆய்வாளர் பட்டம் பெற்றேன். ஆனாலும் வேலை கிடைக்கவில்லை. அதுதான் பெரிய கவலையாக இருக்கிறது’’ எனும் ரூபாவதி, வரும் பிப்ரவரி 5-ம் தேதி ஷில்லாங்கில் ஆரம்பிக்கவிருக்கும் தெற்காசியப் போட்டிகளில் ஃபிஃபா பேட்ஜுடன் நடுவராகப் பணியாற்றவிருக்கிறார்.
வெற்றிகள் ஒருபக்கம், வேலையின்மை ஒருபக்கம். ரூபாவதியின் சாதனைப் பயணம் தொடர்கிறது!
சு.அருண்பிரசாத் படங்கள்:வீ.சிவக்குமார்