அவள் 16
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

சங்கடம் தீர்க்கும் சந்நிதிகள்!

சங்கடம் தீர்க்கும் சந்நிதிகள்!
News
சங்கடம் தீர்க்கும் சந்நிதிகள்!

தேர்வுகளில் ஜெயிக்க வைக்கும் கூத்தனூர் தேவி!

ன்னை வந்து தரிசிக்கும் பக்தர்களையும் அவர்களின் குழந்தைகளையும் தன் அருளால் ஆசீர்வதித்து, கல்வி வரம் தந்து, உச்சத்துக்கு உயர்த்தி அழகு பார்க்கிறாள் ஸ்ரீமஹா சரஸ்வதி! மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் செல்லும் வழியில் உள்ள பூந்தோட்டம் எனும் ஊரின்  அருகில் உள்ள கூத்தனூரில்தான், அம்பாளின் இந்த அருளாட்சித் திருத்தலம் அமைந்துள்ளது.
ஒட்டக்கூத்தர் என்பவர் புத்தி சுவாதீனமும், அறிவு வளர்ச்சியும் இல்லாமல் இருந்தார். அந்த ஊர் மக்கள் அனைவரும் அவரைத் திட்டித் தீர்த்தனர். இதனால் மிகுந்த வருத்தமும் கவலையும்கொண்ட அவர், தான் நன்றாகப் பேச வேண்டும், கவிகள் எல்லாம் பாட வேண்டும் என சரஸ்வதி தேவியை நினைத்து தவம் இருந்தார். அவர் கனவில் தோன்றிய சரஸ்வதி, ஒரு தாழம்பூ வனத்தின் நடுவில் நான் இருப்பேன் எனக் கூறி மறைந்தாள்.

 தேவி குறிப்பிட்ட அந்த இடத்தைத் தேடிச் சென்ற ஒட்டக்கூத்தர், அரசலாற்றின் நதிக்கரையில், பூந்தோட்டம் சூழ்ந்த அந்த இடத்தில் சரஸ்வதி தேவி இருப்பதைக் கண்டார். விஜயதசமி தினமான அன்று வண்ணப் புடவையில் தேவி ஒட்டக்கூத்தருக்குக் காட்சி அளிக்க, அவரோ, `‘நீ கனவில் காட்சியளித்த வெண்பட்டில்தான் காட்சி கொடுக்க வேண்டும், அப்போதுதான் இது நீ என நம்புவேன்’' என்றார். மறுநாள் அவர் கேட்டதுபோலவே தாழம்பூ நிற வெண்புடவையில் வீணையுடன் காட்சி தந்தாள் தேவி.

சங்கடம் தீர்க்கும் சந்நிதிகள்!

ஒட்டக்கூத்தர் அங்கேயே தங்கி சரஸ்வதிக்குத் தினமும் பூஜைகள்செய்து வணங்கி அவள் அருளைப் பெற வேண்டினார். ஒருநாள் அவர் முன் தோன்றிய தேவி, `‘உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்’' என்று கூற, `‘ஊரே போற்றும் பெரும் கவிஞனாக வேண்டும்’' என்றார் ஒட்டக்கூத்தர். சரஸ்வதி தன் வாய் உமிழ்நீரை எடுத்து தாம்பூலத்தில் வைத்து, அவரிடம் கொடுத்து மறைந்தாள். அதைத் தன் நாவில் வைத்த அவருக்கு அறிவும், ஞானமும், ஆற்றலும் கிடைக்க, பெரும் கவிஞனாகி, அனைவராலும் பாராட்டப்பட்டார். இதை அறிந்த இரண்டாம் குலோத்துங்க சோழன், தன்னுடைய அவைப் புலவராக ஒட்டக்கூத்தரை நியமித்தான். சரஸ்வதி அந்த இடத்திலேயே நிலைபெற்று இருக்குமாறு ஒட்டக்கூத்தர் வேண்ட, அவளும் இங்கயே இருந்து வேண்டுவோர் அனைவருக்கும் ஞானமளிக்க இசைந்தாள். ஒட்டக்கூத்தர் கேட்டதாலேயே இந்த இடத்துக்கு கூத்தனூர் என்ற பெயர்  என்கிறார்கள்.

அன்று தொடங்கி இன்றுவரை வேண்டுகிற அனைவருக்கும் கல்வி அருள் தந்து, அவர்கள் அறிவை மேம்படுத்துகிறாள் ஸ்ரீமஹா சரஸ்வதி. பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகள் படிப்பில் சிறந்து விளங்க அவர்களை இங்கு அழைத்துவந்து வழிபட்டுச் செல்கிறார்கள். பள்ளிக் குழந்தைகள் முதல் கல்லூரி மாணவர்கள், போட்டித் தேர்வெழுதும் பட்டதாரிகள் வரை நன்றாகப் படிக்கவும், சிறந்த மதிப்பெண்கள் பெறவும் இங்கு வந்து வேண்டிச்செல்கிறார்கள்.

சங்கடம் தீர்க்கும் சந்நிதிகள்!

பிள்ளைகளை முதன்முதலில் பள்ளியில் சேர்க்கும் சமயம், பெற்றோர்கள் பலரும் இங்கு வந்து நோட்டு, புத்தகம், சிலேட்டு, பென்சில் என படிப்பு சம்பந்தப்பட்ட பொருட்களை அம்மனின் பாதத்தில் வைத்து வணங்குகிறார்கள். பின்னர் அம்மன் முன் நெல்மணிகளைப் பரப்பி, குழந்தையின் கையைப் பிடித்து அதில் பிள்ளையார் சுழி எழுதவைத்து, முதல் எழுத்தான ‘அ’வையும் எழுதவைத்துச் சென்று, பின்னர் பள்ளியில் சேர்க்கிறார்கள். வருடம் முழுவதும் வேண்டுதல்கள் இங்கு வழக்கம் என்றாலும், விஜயதசமி அன்று பக்கதர்கள் கூட்டத்தால் நிரம்புகிறது கோயில்.

ராஜபாளையத்தில் இருந்து வந்திருந்தார் முத்துமாரி. ‘‘நான் பன்னிரண்டாம் வகுப்புப் படிச்சப்போ இங்க வந்து வேண்டிக்கிட்டேன். நல்ல மார்க் எடுத்தேன். இப்போ எனக்குக் கல்யாணமாகி ரெண்டு குழந்தைகள் இருக்காங்க. ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி என் பையனை ஸ்கூல்ல சேர்க்கும்போது இங்க வந்து வேண்டிக்கிட்டுதான் சேர்ந்தேன். அவன் படிப்பில் படுசுட்டியா இருக்கான். எப்பவும் முதல் மார்க் எடுக்கிறான். வர்ற வருஷம் என் மகளை ஸ்கூல்ல சேர்க்கப் போறேன். அதான் அம்மன்கிட்ட வேண்ட வந்திருக்கேன்’’ என்றார் அனுபவப் பரவசத்துடன்.

சென்னையில் இருந்து தனது குடும்பத்தினருடன் வந்திருந்த பாலசுப்ரமணியன், ‘‘என் பொண்ணு வர்ஷா ப்ளஸ் டூ படிக்கிறா. அவ நிறைய மார்க் வாங்கணும்னு அம்பாளை வேண்டிட்டுப்போக வந்தோம். இங்க வந்து வேண்டிக்கிட்ட எத்தனையோ பேர், படிப்பிலும், எழுதின தேர்வுகளிலும் சிறப்பா வெற்றிபெற்றக் கதையை பரவசத்தோட சொல்றாங்க. எங்க பொண்ணையும் அறிவால உயர்த்தி தேவி அழகு பார்ப்பா. அவளுக்கு நன்றி சொல்ல நிச்சயம் மறுபடியும் வருவோம்’’ என்றார் நம்பிக்கையுடன்.

சங்கடம் தீர்க்கும் சந்நிதிகள்!

கோயில் செயல்அலுவலரான ராஜா சரவணன் கூறும்போது, ‘‘சரஸ்வதி பூஜையன்று, அம்மன் காலை நீட்டி அமர்ந்தவாறு இருக்கும் பாத தரிசனம் அலங்காரத்தில் பக்தர்களுக்கு ஆசீர்வாதம் வழங்கும் அழகு, கண்ணோடும் மனதோடும் நீங்காது நிற்கும். மறுநாள் விஜயதசமி அன்று, பள்ளியில் சேர்க்கவிருக்கும் குழந்தைகளுக்கு அட்சராபியாசம் எனப்படும் நெல்மணிகளைப் பரப்பி, அவர்கள் கைப்பிடித்து பிள்ளையார் சுழி எழுதவைத்து, நாவில் தேன் தடவி, அம்மனை தரிசித்துச் சென்று, பின் பள்ளியில் சேர்ப்பார்கள். தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் அன்று ஏராளமான பக்தர்கள் குழந்தைகளுடன் வருவார்கள். நவராத்திரியின்போது தினமும் ஒரு அலங்காரத்தில் காட்சியளிப்பார் அம்மன். அதைக் காணக் கண்கோடி வேண்டும்!’’ என்றார், அம்மனின் அருளில் உருகி!

 கே.குணசீலன்   படங்கள்: க.சதீஷ்குமார்

எப்படிச் செல்வது?

மயிலாடுதுறை- திருவாரூர் சாலையில் பூந்தோட்டத்தில் இருந்து அரை கிலோ மீட்டர்தான் கூத்தனூர். காலை 7.30 மணி முதல் மதியம் 1 மணி வரையில், மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரையில் கோயில் திறந்திருக்கும்.

தொடர்புக்கு: 04366 - 239909.