அவள் 16
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

"எனக்கு நானே தூண்டுகோல்!” - ‘சூப்பர் சிங்கர்’ மேக் ஓவர் பெண்

"எனக்கு நானே தூண்டுகோல்!” - ‘சூப்பர் சிங்கர்’ மேக் ஓவர் பெண்
பிரீமியம் ஸ்டோரி
News
"எனக்கு நானே தூண்டுகோல்!” - ‘சூப்பர் சிங்கர்’ மேக் ஓவர் பெண்

அழகுக் கலை

விஜய் டி.வி. ‘சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சியில் ஆரம்ப எபிசோடு களில் இருந்து அடுத்தடுத்த எபிசோடுகளில் போட்டியாளர்கள் எல்லோரும் ஸ்டார்கள்போல தோற்றத்தில் மெருகேறி வருவதைக் கவனித்திருப்போம். மேக்கப், ஹேர்ஸ்டைல் என அசத்தலாக அவர்களைப் பிரசன்ட் செய்பவர், சென்னை, ‘வோக் சலூன்’னின் நிறுவனர் அனிதா என்ற ஆனி.

‘‘21 வருஷத்துக்கு முன்னாடி, கணவரை வேலைக்கும், குழந்தைகளை ஸ்கூலுக்கும் அனுப்பிட்டு, வீட்டு வேலைகளை முடிச்சுட்டு ரெஸ்ட் எடுத்திட்டிருந்த இல்லத்தரசிதான் நானும்!’’

- சிநேகமாக ஆரம்பித்தார், ஆனி...

‘‘ஒருமுறை ஒரு நிறுவனத்தோட பியூட்டி கோர்ஸ் பற்றிய அறிவிப்பைப் பார்த்துட்டு, நானும் என் தோழியும் விண்ணப்பிச்சோம். மூன்று மாதக் கோர்ஸுக்கு மாதம் 2,500 ரூபாய் கட்டணம். அப்போ இது ரொம்பப் பெரிய தொகை. கோர்ஸ் முடிச்சுட்டு சில பார்லர்களில் வேலை பார்த்தேன். இந்தத் துறையில் என் ஆர்வம் அதிகமாக, லண்டனில் உள்ள ‘மாரீஸ் ஸ்கூல் ஆஃப் காஸ்மெட்டாலஜி அண்ட் ஹேர்ஸ்டைல் அகாடமி’ல் பியூட்டி கோர்ஸ் முடிச்சேன். இன்று இந்தியாவின் டாப் பியூட்டீஷியன்களில் ஒருவரான வித்யா ரஹத்துங்கா, அப்போ அங்க எனக்குப் பயிற்சியாளர். கோர்ஸ் முடிச்சாலும்... பார்லரோ, டிரெயினிங் அகாடமியோ வைக்காம, வீட்டிலேயே தெரிஞ்சவங்களுக்கு மட்டும் பியூட்டி சர்வீசஸ் செய்துட்டு இருந்தேன். சிம்ரன், அனுஹாசன், மோகன்பாபு மனைவினு அப்படி என் வீட்டுக்கு வர்றவங்க எல்லோரும், ‘நீங்க ஏன் ஒரு பியூட்டி சலூன் வைக்கக்கூடாது?’னு கேட்டுட்டே இருப்பாங்க.

"எனக்கு நானே தூண்டுகோல்!” - ‘சூப்பர் சிங்கர்’ மேக் ஓவர் பெண்

ஒருவழியா 1996-ல், ஜி.என்.செட்டி ரோடு சன் பிளாசாவில் ‘வோக் சலூன்' (Vogue Saloon) என்ற பெயரில் என் பார்லரைத் தொடங்கினேன். ‘ஓக்’ என்பதற்கு ஆங்கிலத்தில் ‘இன்றைய ட்ரெண்ட்’னு அர்த்தம். என் கஸ்டமர்ஸ் பலரும், ‘எங்களை இங்க விட்டுட்டு, எங்க ஹஸ்பண்ட் மென்’ஸ் சலூனுக்குப் போயிருக்காங்க. ரெண்டும் அருகருகில் இருந்தால் பரவாயில்லை’னு எனக்கு ஐடியா கொடுக்க, அடுத்த வருஷமே தமிழ்நாட்டிலேயே முதன் முறையா இருபாலருக்குமான யுனிசெக்ஸ் சலூனா என் பார்லரை மாற்றினேன்’’ என்றவர், விஜய் டி.வி. வாய்ப்பு பற்றிச் சொன்னார்.

‘‘2010-ல் விஜய் டி.வி-யில் நிகழ்ச்சி செய்துட்டு இருந்த என் க்ளையன்ட் ஒருத்தவங்க, ‘டும்டும்டும்’ நிகழ்ச்சிக்கு வர்ற பிரைடை, மேக் ஓவர் பண்ணச் சொல்லிக் கேட்டாங்க. அதில் திருப்தியான விஜய் டி.வி. தரப்பு, அடுத்து ‘சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சி வாய்ப்பைக் கொடுத்தாங்க. முதன்முதலா ‘சூப்பர் சிங்கர் - 2’ தொகுப்பாளினி, பாடகி சின்மயிக்கு மேக் ஓவர் செய்தேன். பிறகு நிகழ்ச்சியின் நடுவர்கள், டாப் 30-ல் இருந்து போட்டியாளர்கள், சிறப்பு விருந்தினர்கள்னு எல்லோருக்கும் மேக்கப் மற்றும் ஹேர் ஸ்டைல் என் பொறுப்பானது. இதுவரைக்கும் அது சுமுகமாத் தொடருது. இந்த நிகழ்ச்சி மட்டுமில்லாம, ‘ஜோடி நம்பர் -1’ மற்றும் விஜய் டி.வி ஸ்பான்சர் செய்யும் எல்லா முக்கிய நிகழ்ச்சிகளுக்கும் நானும் மேக் ஓவர் உமனாக இருக்கிறேன்’’ என்றவர், இதில் தன் அனுபவங்களை சொன்னார்...

‘‘ஒவ்வொரு முறையும் மேக்கப், ஹேர்ஸ்டைலில் வித்தியாசம் காட்டணும். அது அவங்க போட்டிருக்கிற டிரெஸ், மெலடி, பீட் சாங்ஸ்னு நடந்திட்டு இருக்கிற ரவுண்டு, மேடையோட லைட்டிங்னு எல்லாத்துக்கும் பொருந்திப் போகணும். பொதுவா, எங்க டீம் செட்டுக்குப் போனபின்தான் கான்செப்ட்டே தெரியவரும். அதுக்கப்புறம் அதுக்கேற்ற மாதிரி மேக்கப் முடிச்சு எல்லோரையும் மேடை ஏற்றுவோம். போட்டியாளர்கள் மட்டுமில்ல, திவ்யா, மால்குடி சுபா, பேபி ஷாலினி, சுதா ரகுநாதன், சுஜாதா, அனந்த் வைத்தியநாதன், ஹரிஹரன், சௌமியா, ஜானகி அம்மா, எஸ்.பி.பி., வைரமுத்துனு நடுவர்கள், சிறப்பு விருந்தினர்கள்னு எல்லோருக்கும் வொர்க் செய்திருக்கேன்’’ என்றவர்,‘‘என் டீம்தான் என் பலம். சலூனில் எங்கிட்ட வேலை பார்க்கிற பெண்களை பெர்சனலாவும் கவனிச்சுப்பேன். 14 வருஷத்துக்கு முன்னாடி, ஒரு ஹோட்டலில் பாத்திரம் துலக்கும் பெண்மணியோட மகள் எங்கிட்ட வேலைக்கு வந்தா. அஞ்சாவதுதான் படிச்சிருந்தா. ‘இன்னா மேடம் பண்ணோணும்’னு ஸ்லாங்கில் பேசுவா. அவளுக்குப் பேச்சில் இருந்து தொழில்வரைக்கும் எல்லாத்தையும் கற்றுக்கொடுத்தேன். ஒரு வருஷத்துக்கு முன்னாடி திருமணம் முடிந்து அவ என் பார்லரில் இருந்து போனப்போ, கிட்டத்தட்ட 20 ஆயிரம் சம்பளம் வாங்கிட்டு இருந்தா. ‘மூணு லட்சத்துக்கு வீடு வாங்கி, லீஸுக்கு விட்டு, எங்கம்மாவைப் பார்த்துக்கிட்டு... எல்லாம் உங்களாலதான். தேங்ஸ் மேடம்!’னு அடிக்கடி சொல்லிட்டு இருப்பா. இந்த பிணைப்புதான் என் டீமை பலமாக்கிற விஷயம்!’’ எனும் ஆனியின் ஸ்டார் கஸ்டமர்கள் லிஸ்ட்... தேவதர்ஷினி, பாடகி சுஜாதாவின் குடும்பத்தினர், திவ்யா, திவ்யதர்ஷினி, ‘கோலங்கள்’ ஆதி, டைரக்டர் பாலாவின் மனைவி, நடிகர் விக்ரமின் மனைவி, நடிகர் ஜெயராமின் மனைவி, நடிகர் பிரகாஷ் ராஜின் தங்கை என நீள்கிறது.

"எனக்கு நானே தூண்டுகோல்!” - ‘சூப்பர் சிங்கர்’ மேக் ஓவர் பெண்

‘‘எனக்கு ஒரு பொண்ணு, ஒரு பையன். ரெண்டு பேருமே செட்டில் ஆகிட்டதால எந்தப் பிரஷரும் இல்லாம புரொஃபஷன் நகர்ந்துட்டு இருக்கு. 21 வருஷத்துக்கு முன்னாடி, சென்னையில் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவுகே இங்கொன்றும் அங்கொன்றுமா பார்லர்கள் இருந்தன. ஆனா, இன்னிக்குத் தெருமுக்குப் பார்லர்கள்வரை பிராண்ட்கள் வரை பெருகிக் கிடக்கு. போட்டியில் வெற்றிபெற, கஸ்டமர்களின் திருப்தி என்பதுதான் என் முதல் கொள்கை. லேட்டஸ்ட் ஃபேஷன் அப்டேட்களை உடனுக்குடன் அரவணைக்கிறது, என் பார்லரின் பலம். என் குடும்பத்துல ஃபேஷன் லைன்ல யாருமே இல்லாதப்போ, நான் இவ்வளவு படிகள் இதில் வெற்றிகரமா ஏறி வந்திருக்கக் காரணம்... நானேதான். எனக்கு நான்தான் மோட்டிவேட்டர்...

தூண்டுகோல்!’’

- பளிச் எனச் சிரிக்கிறார், ஆனி!

- வே.கிருஷ்ணவேணி