
கேபிள் கலாட்டா!
செம சேஞ்ச் ஓவர் ஜெகன்!

வேட்டி - சட்டை, தூக்கி வாரிய ஹேர்ஸ்டைல், கொஞ்சம் வித்தியாசமான தாடி என சேஞ்ச் ஓவரில் ஜெகன். விஜய் டி.வி-யின் பொங்கல் சிறப்பு நிகழ்ச்சியான ‘விஜய் ஸ்டார்ஸ்’ஸில் இந்த புது `கெட் அப்'பில் ஜெகனைப் பார்த்தவர்கள் ‘அட!’ சொல்ல, அதுபற்றி ஜெகன் என்ன சொல்கிறார்..?!
‘‘உண்மையைச் சொல்லணும்னா நான் ஒரு படத்துல கமிட் ஆகியிருந்தேன். அதில் எனக்கு அரசியல்வாதி ரோல். அதுக்காகத்தான் இந்த கெட்டப் சேஞ்ச். ‘கனெக்ஷன்ஸ் ’ நிகழ்ச்சியிலும் கொஞ்சநாள் இப்படித்தான் சுத்திட்டு இருந்தேன். ஆனா பாருங்க, அந்தப் படத்தோட ஷூட்டிங் தள்ளிப்போயிடுச்சு. `சரி, தாடியாச்சும் மிச்சமா இருக்கே'னு பந்தா காட்டிட்டு இருந்தா, ‘மணல் கயிறு’ படத்துக்காக மறுபடியும் தாடியை எடுக்க வேண்டியதாப் போச்சு. ‘மான் கராத்தே’ படத்தோட காஸ்ட்யூம் டிசைனர் சத்யாதான் என்னோட ஸ்டைலிஸ்ட். டி.வி, சினிமானு அஃபீஷியலா மட்டுமில்லாம என் கல்யாணத்துக்கும் அவர்தான் டிசைனர்.
புதன், சனினு வாரத்துல ரெண்டு நாள் எண்ணெய் தேய்ச்சுக் குளிப்பேன். அப்புறம் யோகா பண்ணுவேன். இதுதான் என் அழகின் ரகசியம்.
என்னது... அதையெல்லாம் நீங்க கேட்கவே இல்லையா?!’’
ஸ்மைலி!
‘‘சந்தானத்துடன் நான்!’’

ஆதித்யா சேனலின் ‘ரகள மச்சி ரகள’ நிகழ்ச்சித் தொகுப்பாளினி ஐஸ்வர்யா, மகள் லயா பிறந்த சந்தோஷம் ஒரு பக்கம், சந்தானம் தந்த சர்ப்ரைஸ் ஒருபக்கம் என டபுள் குஷியில் இருக்கிறார்!
‘‘சன் டி.வி-யில் சந்தானம் சார் கலந்துக்கிட்ட பொங்கல் சிறப்பு நிகழ்ச்சியான ‘சந்தானத்துடன் ஜல்லிக்கட்டு’ ஷோவில், நான் உட்பட நிறையத் தொகுப்பாளர்கள் கலந்துக்கிட்டோம். ‘அத்தை பொண்ணுங்களோட பொங்கல் பண்டிகையைக் கொண்டாடின அனுபவம் இருக்கா?’னு நான் சந்தானம் சாரை கேட்டேன். அவர், ‘எனக்கு அத்தை பசங்க மட்டும்தான் இருக்காங்க. அத்தை பொண்ணுங்க இல்ல. அதனால அந்த அனுபவம் இல்லை’னு சொல்ல, ‘அதனால என்ன, என்னை அத்தை பொண்ணா நினைச்சுக்கோங்க’னு சொன்னதோட, தொடர்ந்து அவரை இம்ப்ரஸ் பண்ற மாதிரி பல கேள்விகளைக் கேட்டேன். அதுல, அவர்கூட நடிக்கிற வாய்ப்பு கிடைக்குமாங்கிற மாதிரி ஒரு கேள்வியையும் கேட்டேன். ‘என் ஜோடியா இந்த வருஷத்துலேயே ஏதாச்சும் ஒரு படத்தில் கண்டிப்பா நடிக்கலாம்’னு சொன்னவர், இறுதியா அவரோட மேனேஜரைக் கூப்பிட்டு, ‘இந்த பொண்ணோட போன் நம்பரை வாங்கிக்கோ. அடுத்த படத்துல நடிக்க வைக்கணும்’னு சொன்னார். செட்டைவிட்டுப் போறப்போ, ‘நிச்சயமா நாம நடிக்கலாம்’னு பலமுறை அஷ்யூரன்ஸ் கொடுத்துட்டுப் போனார். செம ஹேப்பியாகிட்டேன்.
‘வாணி ராணி’, ‘கல்யாணப் பரிசு’னு ரெண்டு சீரியல்ல நடிச்சுட்டு இருந்தேன். நாலு மாசத்துக்கு முன்னால என் பொண்ணு லயா பிறந்தப்போ, சீரியலை பிரேக் பண்ணிக்கிட்டேன். இப்போ மீண்டும் சீரியல், சீனிமா வாய்ப்புகளுக்கு வெயிட்டிங். தவிர, நான் 18 வருஷமா சிங்கரா இருக்கேன். நிறைய நிகழ்ச்சிகளிலும், சினிமாவில் ஸ்ரீகாந்த் தேவா சார் இசையில் சில பாடல்களும் பாடியிருக்கேன். ஆனாலும் ஹிட் சாங்ஸ் எதுவும் அமையல. காத்திருப்போம்!’’
லயாவுக்குத் தேன் தாலாட்டுதானா?!
``பெரிய அரசியல் கட்சியில் பேச்சாளராகணும்!’’

‘‘காஞ்சிபுரம் மாவட்டத்துல ஒரு கிராமம்தான் சொந்த ஊர். விவசாயக் குடும்பத்துல பிறந்து சென்னையில பி.காம் முடிச்சேன். கொஞ்சநாள் மார்க்கெட்டிங் வேலை. ஆனாலும் காம்பியரிங்தான் கனவு. எடுத்த முயற்சிகளுக்கு, ராஜ் டி.வி-யில வாய்ப்பு கிடைச்சது. அங்க நாலு வருஷம் வேலை பார்த்துட்டு, இப்ப ஜெயா டி.வி-யில நிகழ்ச்சித் தொகுப்பாளரா உங்களைச் சந்திக்கிறேன்!’’
- படபடவெனப் பேசுகிறார் இளவேனில். `ஜெயா மேக்ஸ்’ஸில் தினமும் காலை 8 மணி முதல் 9 மணிவரை ‘இனிய வாழ்த்துகள்’, 9 மணி முதல் 10 மணிவரை ‘துள்ளுவதோ இளமை’ என்று தொடர்ந்து இரண்டு மணிநேர லைவ் ஷோவில் இவர் ராஜ்ஜியம்தான்.
‘‘தினமும் நிகழ்ச்சியை ஆரம்பிக்கும்போதும், நிறைவுசெய்யும்போதும் ஒரு கவிதை சொல்றதும், ஆங்கில வார்த்தைகள் கலக்காம நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குறதும் என்னோட காம்பியரிங் கொள்கை. ‘இனிய வாழ்த்துகள்’ நிகழ்ச்சியில் பிறந்தநாள் வாழ்த்துகள், ‘துள்ளுவதோ இளமை’ நிகழ்ச்சியில் ஒவ்வொரு நாளும் ஒரு தன்னம்பிக்கை தலைப்போட காலர்ஸ்கிட்ட பேசுறதுனு தொடர்ந்து ரெண்டு மணி நேரம் லைவ் ஷோ செய்றது புதுமையான அனுபவம். சிறப்பு தினங்களில் ஜெயா டி.வி-யிலும் நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்குறேன்.
என்னோட பேருக்கு ஒரு ஃப்ளாஷ்பேக் சொல்லட்டுமா? அப்பா, எம்.ஜி.ஆர் அபிமானி. ஒருமுறை எம்.ஜி.ஆரை சந்திச்சப்போ, ‘எனக்குப் பிறக்கப்போற குழந்தைகளுக்குப் பெயர் சொல்லுங்க’னு கேட்க... இளம்பிறை, இளவேனில், கனிமொழி, கார்முகில்னு நாலு பெயர்களைச் சொல்லியிருக்கார் எம்.ஜி.ஆர். அவர் வாய்முகூர்த்தம்போலவே எங்க வீட்டுல ரெண்டு பசங்க, ரெண்டு பொண்ணுங்க பிறக்க, அப்பா எங்க எல்லாருக்கும் சந்தோஷமா அந்தப் பெயர்களை வெச்சுட்டார். எம்.ஜி.ஆர். பேர் வேச்ச ராசியோ என்னமோ... ஒரு பெரிய அரசியல் கட்சியில நட்சத்திரப் பேச்சாளர் ஆகணும் என்பதுதான் என் லட்சியம்!’’
மேடை, மைக் எங்கப்பா?!
ரிமோட் ரீட்டா
வாசகிகள் விமர்சனம்
ஒவ்வொன்றுக்கும் பரிசு:ரூ.150
ஆங்கிலம் தவிர்க்கலாமே..!
``ஜெயா டி.வி-யில் ஒளிபரப்பான மார்கழி மகா உத்ஸவம் கச்சேரிகள் அருமையிலும் அருமை! என்னைப் போன்ற வயதானவர்கள் வீட்டிலேயே கண்டுகளிக்கக் கொடுத்து வைத்திருக்கிறோம். ஆனால், ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு வித்வான்கள், வித்வாம்சினிகள் பலர் ஆங்கிலத்திலேயே பதிலளிக்கிறார்கள். ரசிகர்கள் எல்லோருக்கும் ஆங்கிலம் நன்றாக தெரிந்திருக்குமா? சந்தேகங்களுக்கு பதில் என்ன என்று ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்க்க மாட்டார்களா? இனியாவது இந்த விஷயத்தை கச்சேரி செய்பவர்கள் கவனிக்க வேண்டும்’’ என்று கோரிக்கை வைக்கிறார் சென்னை, கொரட்டூரில் இருந்து ஆர்.பார்வதி.
மனதை வருடும் விளம்பரம்!
``தொலைகாட்சி தொடர்களுக்கிடையே மனதை வருடும் சில விளம்பரங்கள் அத்தி பூத்தாற்போல் அருமையாக அமைகின்றன! அவற்றில் ஒன்று... அக்கா ஏதோ வேலையாக இருக்க, தங்கை ``அக்கா’’ என அழைத்து முகப்பருவுக்கு என்ன செய்ய எனக் கேட்க... ``எப்பவும் குண்டம்மா... இப்போ மட்டும் அக்காவா?’’ என தங்கையை பரிகசித்து போட்டோ எடுக்க முனைவதும், ‘’ஓ... அக்கா பிம்பிளோடு நோ போட்டோ” என தங்கை தடுமாறி முகத்தை மறைத்து ஓடுகையில், அக்காவின் அன்புப் பரிசாக அந்த க்ரீமை பார்ப்பதும், முகம் சரியானதும் மீண்டும் `’குண்டம்மா’’ எனக் கழுத்தைக் கட்டிக்கொள்வதும் ரசிக்க வைக்கிறது. அக்கா - தங்கை இடையேயான அன்பையும், அந்நியோன்யத்தையும் அத்தனை அழகாகக் காட்டுகிறது இந்த சூப்பர் விளம்பரம்!’’ என சிலாகிக்கிறார் சென்னை, மந்தைவெளியில் இருந்து ஷியமளா ரங்கன்.
கரும்பு தின்ன கூலி!
`` ‘பெப்பர்ஸ்’ டி-வி-யில் வாரந்தோறும் சனிக்கிழமையன்று ஒளிபரப்பாகும் ‘கலக்கல் கேம்பஸ்’ நிகழ்ச்சி இளைய தலைமுறைகளின் எதிர்காலத்துக்கு நல்ல பிளாட்ஃபார்ம் ஆக விளங்குகிறது. கல்லூரி மாணவ மாணவிகளின் கலை, விளையாட்டு தனித்திறன்களை வெளிப்படுத்த உதவுவதோடு, ‘கரும்பு தின்ன கூலி’ போல பரிகளும் வழங்கப்படுகின்றன’’ என்று மகிழ்ச்சியுடன் குறிப்பிடுகிறார் மதுரை, ஞான ஒளிவுபுரத்தில் இருந்து ராணி மகாலிங்கம்.