மற்ற எபிசோடுகள்
Published:Updated:

என் டைரி - 376

என் டைரி - 376
பிரீமியம் ஸ்டோரி
News
என் டைரி - 376

என் டைரி - 376

தனிமரமாய் மகள்...  மெழுகுவத்தியாய் மகன்கள்!

ங்களுக்கு நான்கு மகன்கள், ஒரே மகள். எனவே, அவள் மீது மொத்தக் குடும்பமும் பிரியத்தைக் கொட்டி

என் டைரி - 376

  வளர்த்தோம். வறுமையான சூழலில், இரண்டு மகன்களும் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு சொற்ப சம்பளத்தில் வேலைக்குச் செல்ல ஆரம்பித்தார்கள்... தங்கையை நல்லபடியாக திருமணம் செய்துகொடுப்பதற்காக!  அதன்படியே, அவள் திருமணத்தை எங்களால் முடிந்தளவுக்குச் சிறப்பாக முடித்துவைத்தோம்.

என் டைரி - 376

திருமணமான எட்டே நாளில், கண்ணீருடன் பிறந்த வீடு திரும்பினாள் மகள். கணவன் குடிகாரன், குடித்துவிட்டு சிகரெட்டால் சுடுகிறான், கழுத்தில், காதில் உள்ள நகைகளை எல்லாம் பறித்துச் சென்று குடிக்கிறான் என்று அவள் சொன்னபோது, மொத்தக் குடும்பமும் பரிதவித்துப் போனோம். பேச்சுவார்த்தை நடத்தி, அவளை மீண்டும் புகுந்த வீட்டுக்கு அனுப்பியும், கொடுமை தாங்காமல் இரண்டே மாதங்களில் எங்களிடம் வந்து சேர்ந்தாள் மகள். அவள் கதறலைத் தாங்கமுடியாமல், அவள் கேட்டபடியே கணவனிடம் இருந்து விவாகரத்து பெற்றுக்கொடுத்தோம்.

ஓர் ஆண்டுக்குப் பின், எங்களைப் பற்றி முழுமையாக அறிந்த உறவினர் வீட்டில், எங்கள் பெண்ணை அவர்கள் மகனுக்குத் திருமணம் முடிக்கக் கேட்டார்கள். நாங்களும் என் மகளின் திருமணத்தை முடிப்பதில் மிகவும் முனைப்புடனே இருந்தோம். மேலும், அவளுக்கு வாழ்க்கை சீரான பின்தான், மகன்களின் வாழ்க்கையைப் பற்றி யோசிக்க முடியும் என்பதும் காரணம்.  

மறுமண வாழ்க்கையில் சந்தோஷமாக இருந்தாள் மகள். ஆனால், சில வருடங்களிலேயே அந்த மாப்பிள்ளையும் கொஞ்சம் கொஞ்சமாக குடிக்கு அடிமையானார். இடையில் என் மகளுக்கு இரண்டு குழந்தைகள் பிறக்க... குடிகாரக் கணவன், குழந்தைகள் என்று நகர்ந்தது அவள் வாழ்க்கை. ஆனால், பத்தாண்டுகள் கழித்த நிலையில், ஒருகட்டத்தில் பொறுக்கமுடியாத சூழலில், பள்ளி செல்லும் தன் குழந்தைகளை அழைத்துக்கொண்டு எங்கள் வீட்டுக்கே வந்துவிட்டாள். ‘இங்கேயே இருக்கேன், உங்களுக்குப் பாரமா இருந்தா சொல்லுங்க குழந்தைகளோட சாகிறேன்’ என்கிறாள்.

இப்போது மகளின் வாழ்க்கை பற்றிய துயரம் ஒரு பக்கம் என்றால், என் மகன்களின் வாழ்க்கை பற்றிய தவிப்பு இன்னொரு பக்கம். இந்த பத்தாண்டு காலத்தில் என் இரண்டு மகன்களுக்குத் திருமணம் முடிந்துவிட்டது. மனைவி, குழந்தை என்றாகிவிட்ட அவர்களுக்கு, அவர்களின் குடும்ப ஓட்டமே பெரிய சவாலாக இருக்கும்போது, என் மகளுக்குப் பொருளாதார ரீதியாக உதவ முடியாத சூழல். இந்நிலையைப் பார்த்த என் மற்ற இரண்டு மகன்களும், ‘நாங்களும் கல்யாணம் செய்துகிட்டா தங்கச்சி தனிமரமா ஆயிடும். கடைசிவரைக்கும் அதுக்கு அண்ணனா மட்டும், அதுக்காக மட்டும் இருந்துடறோம்’ என்கிறார்கள்.

எனக்கும், என் கணவருக்கும், ‘அதெல்லாம் இல்ல... நீங்க கல்யாணத்தைப் பண்ணி செட்டில் ஆகுங்கடா’ என்று சொல்ல மனம் வரவில்லை. மகள் மீதுள்ள பாசத்தால், மகன்களின் வாழ்க்கையை சூனியமாக்குகிறோம் என்கிற குற்ற  உணர்ச்சி பாடய்ப்படுத்துகிறது.

இதற்கு விமோசனம் என்ன... சொல்லுங்கள் தோழிகளே..!

- குழப்பத்தில் தவிக்கும் ஒரு குடும்பத்தலைவி

என் டைரி 375-ன் சுருக்கம்

என் டைரி - 376

``நான் ப்ளஸ் டூ படிக்கும்போது, என் தூரத்து அத்தையின் மகன் என்னை விரும்புவதாகக் கூறினார். எனக்கும் அவரைப் பிடித்திருந்தது. இருவரும் காதலித்தோம். ஆனால், நான் பள்ளிப்படிப்பை முடித்து கல்லூரியில் சேர்ந்தபோது, டிரெஸ் போடுவதில் ஆரம்பித்து, ஹேர்ஸ்டைல் வரை எனக்குப் பல கட்டுப்பாடுகள் விதித்தார். எங்கு சென்றாலும், அங்கு வந்து கண்காணித்தார். இதனால் எங்களுக்குள் சண்டைகள் பெருகின. காதல் கசக்க, ‘நீயும் வேண்டாம்... உன் லவ்வும் வேண்டாம்’ என்று அவரிடம் இருந்து விலகினேன். என்னை விடாமல் துரத்தினார். வழிமறித்து தகராறு செய்தார். ஒருகட்டத்தில் சமாளிக்க முடியாமல் விஷயத்தை நான் என் அப்பாவிடம் சொன்னேன். அவர் அத்தை குடும்பத்திடமே நேரடியாக இதுகுறித்துப் பேசி, பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

இப்போது நான் படிப்பை முடித்து நல்ல வேலையில் இருக்கிறேன். என் அலுவலகத்தில் நண்பராகப் பழகிய ஒருவர், என்னைக் காதலிப்பதாகச் சொல்கிறார். எனக்கும் அவரைப் பிடித்திருக்கிறது என்றாலும், பழைய காதல் தந்த அனுபவம் அச்சம்கொள்ளச் செய்கிறது. `இவரும் ஒரு `சைக்கோ’வாக இருந்தால் என்ன செய்வது? ஒருவேளை நல்லவராகவே இருந்தாலும், என் முந்தைய காதலும் பிரச்னைகளும் தெரியவந்தால் எப்படி எடுத்துக்கொள்வார்? வீட்டில் பார்க்கும் வரனைத் திருமணம் செய்துகொண்டாலும், என் பழைய காதல் தெரியவந்தால் என்ன செய்வது?' என்ற சிந்தனையால், ஆண்கள் என்றாலே என் மனம் பயத்தில் பரிதவிக்கிறது. என்ன செய்யட்டும் தோழிகளே..?''

வாசகிகள் ரியாக்‌ஷன்

ஒவ்வொன்றுக்கும் பரிசு: ரூ 100

பெற்றோரே பாதுகாப்பு கவசம்!

நீ காதலிப்பதை விட்டுவிட்டு, பெற்றோர் பார்த்து முடித்து வைக்கும் மாப்பிள்ளையை மணந்துகொள். உனது பயத்தை பெற்றோரிடம் முன்பே கூறிவிட்டால், அவர்கள் அதற்கேற்ப பக்குவமாக கையாண்டு, மாப்பிள்ளையை பற்றி நன்கு விசாரித்து மணமுடித்து வைப்பர். அப்படியே ஏதாவது பிரச்னை ஏற்பட்டாலும், முன்நின்று உனக்கு உதவுவர். இது நிச்சயம்!

- ராதா ரமேஷ், சென்னை-4

மனம்விட்டு பேசு!

எல்லா ஆண்களும் `சைக்கோ' என்று எடைபோட்டு உன் வாழ்க்கையை வீணாக்கிவிடாதே. படித்து வேலை பார்க்கும் நீ பயத்தை விட்டொழித்து, இப்போது உன்னை விரும்புபவரிடம் உன் கடந்த காலத்தைப் பற்றிய உண்மையைச் சொல்வதுதான் நல்லது. உங்கள் காதல் உண்மையாக இருக்கும் பட்சத்தில் உன்னைக் காதலிப்பவர் இதை ஏற்றுக்கொள்வார். மனம்விட்டு பேசி, மணம் புரிந்து கொண்டு மகிழ்ச்சியோடு வாழ வாழ்த்துகிறேன் தங்கையே!

- எஸ்.அனுராதா, திருச்சி

பயத்தைக் கைவிடு!

எந்த ஆணையும் வாழ்க்கையில் திருமணம் செய்துகொள்வதை நினைக்கும்போதே உனக்கு பயம் ஏற்படுவது தவறு. உன் அத்தை மகனைப் போன்றவர்கள்  மிகவும் குறைவுதான்.  அதனால் நீ பயப்பட வேண்டியதில்லை. அன்னப்பறவை, பாலையும் நீரையும் பிரித்து அறிவது போல் நீயும், பாகுபடுத்தத் தெரிந்த தெளிவான மனதுடன், உன் பெற்றோரின் துணையோடும் ஆசியோடும் நல்லவர் ஒருவரைக் கைப்பிடித்து சிறந்த வாழ்க்கையை வாழ முடியும் என்கிற உறுதிகொள். உன் மனதை அறிந்த நல்லவன் உனக்குக் கணவனாக அமைவான்.

- ஏ.விஜயலட்சுமி, தர்மபுரி