மற்ற எபிசோடுகள்
Published:Updated:

அனுபவங்கள் பேசுகின்றன!

அனுபவங்கள் பேசுகின்றன!
பிரீமியம் ஸ்டோரி
News
அனுபவங்கள் பேசுகின்றன!

ஒவ்வொன்றுக்கும் பரிசு: ரூ.200

ஸ்பெஷல் டானிக்!

அனுபவங்கள் பேசுகின்றன!

காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார் என் தோழியின் தந்தை. அவரைப் பார்க்க மருத்துவமனைக்குச் சென்றேன். அப்போது அவரைப் பரிசோதித்த டாக்டர், ``கவலைப்படாதீங்க... சிறிய எலும்புமுறிவுதான்; சீக்கிரம் குணமாகிவிடும்’’ என்று கூறினார். பின்னர் டாக்டர் அறைக்குச் சென்றபோது, ``என்ன டாக்டர், அப்பா இத்தனை வலியில் துடிக்கும்போது, சாதாரண எலும்புமுறிவுதான் என்கிறீர்களே!’’ என்று கேட்டாள் என் தோழி. அதற்கு அவர் ``நீங்க சொல்ற மாதிரி பலமான எலும்புமுறிவுதான். ஆனால், நான் சொன்ன அந்த வார்த்தைகள் அவருக்கு ஆறுதலாக இருக்கும். மருத்துவர்கள் நோயாளிகளுக்கு தரும் முதல் மருந்தே, நம்பிக்கையான வார்த்தைகள்தான். அதிலேயே அவங்களுக்கு பாதி நோய் குணமாகிவிடும்’’ என்றார். டாக்டர் கூறியதைப் போல அடுத்து வந்த நாட்களில் தன் தந்தை அழுவதை நிறுத்தி சகஜமாகப் பேசினார் என்று தோழி கூறினாள்.

மருத்துவர்களின் கனிவான பேச்சுகள், நோயாளிகளுக்கு ஒரு ஸ்பெஷல் டானிக்தானே!

- எஸ்.சிவசித்ரா, சிட்லபாக்கம்

ஃபார் யுவர் கைண்ட் அட்டென்ஷன்...

அனுபவங்கள் பேசுகின்றன!

கர்நாடகா மாநில தலைநகர் பெங்களூரில் பேருந்தின் முன்பாதியில் ஆண்களும், பின்பாதியில் பெண்களும் அமரும் பழக்கம் இருக்கிறது. இதனால், நின்றுகொண்டு பயணம் செய்ய நேரிடும்போது... நெருக்கமாக, உரசிக்கொண்டு போகவேண்டிய நிலை ஏற்படும் சமயத்திலும் அதிக சங்கடம் இல்லாமல் பயணிக்க முடிகிறது. தமிழ்நாடு போன்ற மற்ற மாநிலங்களிலும் இந்த வழக்கத்தை நடைமுறைக்கு கொண்டுவந்தால், பேருந்தில் பயணம் செய்யும் பெண்களுக்கு பெரிய ரிலீஃபாக இருக்கும்.

யோசிப்பார்களா..?

- எம்.ஜெயந்தி, பெங்களூரு

பூனைக்கு மணிகட்டுங்கள்... ப்ளீஸ்

அனுபவங்கள் பேசுகின்றன!

நான் சில வருடங்களுக்கு முன்பு வரை மார்க்கெட்டிங் துறையில் பணிபுரிந்தேன். கிராமம் முதல் நகரம் வரை விற்பனைக்காக, ஆண் விற்பனை பிரதிநிதிகளுடன் ஜீப்பில் செல்வேன். காலையில் 8 மணிக்கு புறப்பட்டால் இரவு 9 மணிக்கு மேல்தான் திரும்புவேன். வாரத்தில் 3-4 நாட்கள் நகரங்களில் உள்ள லாட்ஜ்களில் தங்க வேண்டி வரும். ஒவ்வொரு நாளும் அவஸ்தையே! சிறுநீர் வரக் கூடாது என்பதற்காக தண்ணீர் சாப்பிட மாட்டேன். குறிப்பிட்ட ரூட்டில் பாத்ரூம் வசதியுடன் இருக்கும் நல்ல ஹோட்டல் அல்லது எங்கள் நிறுவன டீலர் வீடு இருக்கும் என்றால் மட்டுமே அன்றைய தினம் தண்ணீர் குடிப்பேன். அதுவும் மாதவிடாய்க் காலம் என்றால் மிகக் கஷ்டம். அதனால் யூரினரி இன்ஃபெக்‌ஷன் ஏற்பட்டு மிகவும் தவிக்கிறேன். இவ்வளவு தூரம் படித்து, பணிபுரியும் நாம் இப்போதுதான் வெளிப்படையாக நம் பிரச்னைகளை கூறத் துவங்கி உள்ளோம். ஆனால், தீர்வு எப்போது வரும்..?

நம் தமிழகத்தில் பெண்கள் சுயஉதவிக் குழுக்கள் ஓரளவு நன்றாகவே செயல்படுகின்றன. எண்ணிக்கையும் அதிகம். இந்தக் குழுக்களில் உள்ளவர்கள் ஏரியாவுக்கு ஒன்று, இரண்டு என கழிப்பறைகள் அமைத்து கட்டணம் நிர்ணயித்து செயல்படலாமே! பெண்களுக்கான கழிவறை, குளியலறையை பராமரிப்பதோடு... நாப்கின், சோப், பேஸ்ட் என பொருட்கள் விற்பனை செய்யலாமே! பூனைக்கு யாராவது மணி கட்டுங்கள்... ப்ளீஸ்!

- எஸ்.விஜயலட்சுமி, சென்னை

`ட்ரபிள் ஃப்ரீ’ காபி!

அனுபவங்கள் பேசுகின்றன!

திருமண விருந்தில் எங்கும் மொத்தமாகத் தயாரித்த சர்க்கரை கலந்த காபியையே பரிமாறுகிறார்கள். சுகர் பிராப்ளம் உள்ளவர்கள் 2 நாட்களில் தவிர்க்க முடியாமல் 5, 6 கப் காபி அருந்தி கவலையுடன் திரும்புகிறார்கள். சமீபத்தில் ஒரு திருமணத்துக்கு நான் சென்றிருந்தபோது, அங்கு காபி பரிமாறிய முறை பாராட்டத்தக்கதாக இருந்தது. ஹாலின் ஒரு பக்கத்தில் டிரம்மில் சர்க்கரை இல்லாத காபியை நிரப்பி ஒருவர் அதை மட்டுமே அளித்தார். அடுத்து ஒருவர் அவரவர் தேவை அறிந்து குறைந்த அல்லது நிறைவான சர்க்கரையை வழங்கினார். சுகர்ஃப்ரீ மாத்திரைகளும் அது தேவைப்படுபவர்களுக்கு வழங்கப்பட்டன. தேநீர் அல்லது பால் கேட்பவர் களுக்கும் அவை வழங்கப்பட்டன. சர்க்கரை நோய் பாதிப்புக்குள்ளானவர்கள் இரண்டு நாட்களும் வீட்டில் அருந்துவது போலவே மண்டபத்திலும் காபி அருந்தி மகிழ்ச்சியுடன் திரும்பினார்கள்.

இனிவரும் திருமணங்களில் மற்றவர்களும் இந்த முறையைப்  பின்பற்றலாமே!

- எஸ்.சரோஜினி, பெங்களூரு