
என் டைரி - 377
ஒரு காதல்... சில குழப்பங்கள்!
சிறுவயதிலேயே அப்பாவை இழந்தவள் நான். என் தாய்மாமாவுக்கு குழந்தை இல்லை என்பதால், அவர்தான் என்னை மகளைப்போல வளர்த்தார். என்னைப் பற்றி யாரும் தவறாகப் பேசிவிடக்கூடாது என்று எண்ணி, சிறு வயதில் இருந்தே கொஞ்சம் எக்ஸ்ட்ரா கண்டிப்புடன்தான் இருப்பார்.

பள்ளிப் படிப்பை முடித்து எங்கள் ஊர் இருபாலர் கல்லூரியில் நான் சேர்ந்தபோது, ‘மாமா வளர்ப்பை தப்புன்னு சொல்ல வெச்சிடாதம்மா...’ என்று வேண்டி, எச்சரித்துதான் அனுப்பிவைத்தார். கல்லூரியின் முதல் ஆண்டில் நண்பனாக இருந்த ஒருவன், இரண்டாம் ஆண்டில் தன் காதலைச் சொன்னான். எனக்கும் அவனைப் பிடித்திருந்தது. என்னதான் மாமாவின் வார்த்தைகள் மனதில் ஓடிக்கொண்டே இருந்தாலும், என் காதலை மறைக்க முடியவில்லை. இருவரும் காதலித்தோம்.
மூன்றாம் ஆண்டில், என் மீது முழு உரிமை எடுத்துக்கொண்ட அவன், நான் படிக்கும் எக்ஸ்ட்ரா கம்ப்யூட்டர் கோர்ஸில் இருந்து நான் பழகும் நட்புவட்டம் வரை அவனே தீர்மானிப்பவனாக மாறினான். எனக்கும் அந்த அக்கறை பிடித்திருந்தது. வெகு சீக்கிரமே என் காதல் விவகாரம் என் மாமாவுக்குத் தெரியவர, மாமா எனக்கு மாப்பிள்ளை பார்ப்பதாகக் கூற, என் அம்மாவும் அதையே சொன்னார். அந்நேரத்தில், அவன் தன் அம்மாவுடன் என்னைப் பெண் கேட்டு எங்கள் வீட்டுக்கு வந்தான். அவர்களை அவமானப்படுத்தி அனுப்பிவிட்டார் என் மாமா.
கல்லூரிக்குச் செல்லவிடாமல் 15 நாட்கள் என்னை என் வீட்டில் சிறைவைத்தபோது, அவனிடம் போனில்கூடப் பேசமுடியவில்லை. அவன் அம்மாவுக்கு ஏற்பட்ட அவமானத்தாலும், வீட்டினர் பேச்சைக்கேட்டு அவனைவிட்டு நான் ஒதுங்கிவிட்டதாக நினைத்தும், நான் அவனுடன் கழித்த பொழுதுகளை எல்லாம் கல்லூரியில் அனைவரிடமும் சொல்லி, ‘இப்போ ஏமாத்திட்டுப் போயிட்டா’ என்று அவதூறாகப் பேசியிருக்கிறான். மாமாவிடம் மன்றாடி அனுமதி வாங்கி, நான் கல்லூரி சென்றபோது... என் தோழிகள் அதையெல்லாம் என்னிடம் கூற, அதிர்ந்துவிட்டேன். தான் நேசித்த ஒரு பெண்ணைப் பற்றி எப்படி அவனால் இப்படி கீழ்த்தரமாகப் பேச முடிந்தது என்று சுக்குநூறாகிப் போனேன். அவனுக்கு ஒரு `குட்பை' சொல்லிவிட்டு, என் மாமாவிடம் மனதார மன்னிப்பு கேட்டேன்.
ஆகிவிட்டன இரண்டு ஆண்டுகள். இப்போது வீட்டில் எனக்குத் திருமண ஏற்பாடு செய்கிறார்கள். சமீபத்தில் தற்செயலாக அவனை நான் சந்திக்க, ‘நீ என்னைவிட்டுப் போயிட்டியோனு பித்துப் பிடிச்சதுபோல ஆனதுல, புத்தி பேதலிச்சுப் பேசிட்டேன்... மன்னிச்சிடு... நீ எனக்கு வேணும்’ என்று கெஞ்சினான். இப்போது மீண்டும் போனில் அழைத்துக்கொண்டே இருக்கிறான். என் மனமும் கொஞ்சம் கொஞ்சமாக ஊசலாட ஆரம்பித்திருக்கிறது.
என்ன செய்யட்டும் நான்...?
- பெயர் வெளியிட விரும்பாத வாசகி
என் டைரி 376-ன் சுருக்கம்
``எங்களுக்கு நான்கு மகன்கள், ஒரே மகள். வறுமையான சூழலில், இரண்டு மகன்களும் பள்ளிப்படிப்பு முடித்ததும் வேலைக்குச் சென்றார்கள். அவர்கள் சம்பாத்தியத்தில், மகள் திருமணத்தை நடத்தினோம். அவளுடைய கணவன் குடித்துவிட்டு கொடுமைப்படுத்தியதால், திருமணமான எட்டே நாளில், பிறந்த வீட்டுக்கு வந்தாள். பேச்சுவார்த்தை நடத்தி அவளைப் புகுந்த வீட்டுக்கு அனுப்பினோம். கணவன் கொடுமை தொடர்ந்ததால், மீண்டும் சில மாதங்களில் எங்களிடம் வந்து சேர்ந்தாள். அவள் கதறலைத் தாங்கமுடியாமல், விவாகரத்து பெற்றுக்கொடுத்தோம்.

ஓர் ஆண்டுக்குப் பின், எங்களைப் பற்றி முழுமையாக அறிந்த உறவினர் எங்கள் பெண்ணை அவர்கள் மகனுக்குத் திருமணம் முடிக்கக் கேட்டார்கள்; செய்துகொடுத்தோம். ஆனால், மறுமணமான சில வருடங்களிலேயே அந்த மாப்பிள்ளையும் குடிக்கு அடிமையானார். இடையில் என் மகளுக்கு இரண்டு குழந்தைகள் பிறக்க... குடிகாரக் கணவன், குழந்தைகள் என்று நகர்ந்தது அவள் வாழ்க்கை. பத்தாண்டுகள் கழித்த நிலையில், பள்ளி செல்லும் தன் குழந்தைகளை அழைத்துக்கொண்டு எங்கள் வீட்டுக்கே வந்துவிட்டாள். இந்தப் பத்தாண்டு காலத்தில் என் இரண்டு மகன்களுக்குத் திருமணம் முடிந்துவிட்டது. அவர்களின் குடும்ப ஓட்டமே பெரிய சவாலாக இருக்கும்போது, தங்கைக்கு உதவ முடியாத சூழல். இந்நிலையைப் பார்த்த என் மற்ற இரண்டு மகன்களும், ‘நாங்களும் கல்யாணம் செய்துகிட்டா தங்கச்சி தனிமரமா ஆயிடும்’ என்று சொல்லி திருமணம் முடிக்காமல் இருக்கிறார்கள்.
மகள் மீதுள்ள பாசத்தால், மகன்களின் வாழ்க்கையை சூனியமாக்குகிறோம் என்கிற குற்ற உணர்ச்சி பாடய்ப்படுத்துகிறது. என்ன செய்யலாம் தோழிகளே..?’’
வாசகிகள் ரியாக்ஷன்
ஒவ்வொன்றுக்கும் பரிசு: ரூ 100
வழிகள் ஏராளம்!
வாழ்க்கையில் உங்கள் மகள் இரண்டு முறை தோல்வி அடைந்ததை எண்ணிக் கலங்க வேண்டாம். மகளின் எதிர்கால வாழ்வும், மகன்களின் திருமண வாழ்க்கையும் நன்றாக இருக்க ஏராளமான வழிகள் இருக்கின்றன. மகளுக்கு இரு குழந்தைகள் என்கிற பிடிப்பும் பற்றுக்கோடும் இருக்கிறது. அனைத்து உயிர்களுக்கும் வாழ்வதற்கான உரிமையும் வாய்ப்பும் இருக்கிறது. பெண் கல்வி முக்கியமானது என்பதை உணர்ந்திருப்பீர்கள். கணவனால் கைவிடப்பட்டவர்களுக்கு அரசு சலுகைகள் உள்ளன. விவரம் கேட்டு உங்கள் மகளின் வாழ்வு செம்மையுற வழிகளை செய்யுங்கள்.
- ஜி.ஸ்ரீநிதி, காரைக்கால்
ஆதரவு போதும்.. தியாகம் வேண்டாம்!
மெழுகுவர்த்தி உருகுவதற்குள் ஒளியூட்டுவதே அதன் சிறப்பு. தங்கைமீது பாசம் கொண்ட அண்ணன்களுக்கு இதை புரிய வைப்பதோடு... இனி, தன்னம்பிக்கையோடு குழந்தைகளை வளர்க்க உங்களின் மகளுக்கும் கற்றுக்கொடுங்கள். இந்த பூமியில் ஆதரவின்றி குழந்தைகளை வளர்த்து ஆளாக்கிய தாய்கள் ஏராளமாக இருக்கும் நிலையில்... அண்ணன்கள் ஆதரவாக இருந்தால் மட்டும் போதும்; தியாகம் எதுவும் செய்யத் தேவையில்லை.
- எம்.ராஜம், மதுரை
சொந்தக்காலில் நிற்க பழக்குங்கள்!
இரண்டு முறை மணமுடித்தும் வாழ்க்கையில் முறையாக செட்டில் ஆகாத நிலையில். தோப்பாகிவிட்ட மகளுக்காக மகன்களை தனிமரமாக்க நினைப்பது எந்தவிதத்திலும் நியாயமாகாது. கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொண்டு சொந்தக்காலில் நிற்க மகளைப் பழக்குங்கள். திரும்பிப் பார்ப்பதற்குள் பிள்ளைகள் வளர்ந்து அவளுக்கு பெரிய பக்க பலமாக இருப்பார்கள். இதற்கிடையே மகன்களின் திருமண ஏற்பாட்டை உடனடியாக செய்யுங்கள், எல்லாம் நலமாக முடியும்.
- எஸ்.ஜெயகாந்தி, பாலவாக்கம்