அவள் 16
Published:Updated:

பூவார்... மினி சொர்க்கம்!

பூவார்... மினி சொர்க்கம்!
பிரீமியம் ஸ்டோரி
News
பூவார்... மினி சொர்க்கம்!

சுற்றுலா

ரு நாள் திருவனந்த புரத்திலிருந்து எங்கள் நண்பர் பிரசாந்த் அழைக்கிறார். ‘ஒரு வித்தியாச மான அனுபவம் வேண்டுமா? பூவார் தீவுக்கு வாருங்கள். திருவந்தன புரத்தின் தெற்கு நுனியின் சிறுமுனையில் யாரும் அறியாத சொர்க்கத்தை காட்டுகிறேன்" என்று ஆசை கூட்டுகிறார். ஓர் இனிய நாளில் ஆரம்பித்தது எங்கள் பயணம்.

நெய்யாடிங்கராவில் (திருவனந்தபுரத்துக்கு முன் வரும் கடைசி ஸ்டேஷன்) இறங்குகிறோம். அங்கிருந்து 40 நிமிட கார் பயணம் சிறிய படகுத்துறை முன்னே நின்றது. படகு வர, ஏறுகிறோம். ஒரு கேமரா க்ளிக்கூட இடையூறாகிவிடும் எனுமளவுக்கு அமைதியான சூழல். நெய்யாற்றை வெட்டிக்கொண்டு செல்கிறது படகு. இருமருங்கிலும் அடர்ந்த மரங்கள், காற்றில் அணிவகுக்கும் நாரைகள், இரையைத் தேடி தண்ணீரில் பாயும் மீன்கொத்திப் பறவைகள் என மனதை ரம்மியமாக்குகின்றன காட்சிகள்.

பூவார்... மினி சொர்க்கம்!

குறுகலாக இருந்த தண்ணீர், ஒரு வளைவைத் தாண்டியவுடன் பிரமாண்டமாகிறது, தூரத்தில் தங்கமென மிளிரும் மணற்பட்டை. அதன் முன்னே சலசலவென ஏரி. அதைத் தாண்டி பொங்கும் நுரையுடன் கடல். கடவுளர்கள் கேரளாவை தங்கள் சொந்த நாடாகத் தேர்வு செய்த காரணம் புரிந்தது.

பூவாரை அடைந்துவிட்டோம். கரையில் இறங்கிய உடனேயே மற்றொரு சிறிய படகைப் பிடித்து தீவுக்கு எதிரே உள்ள மணல்மேட்டுக்குச் செல்கிறோம். பீச் சாந்தமாகவும் குப்பை இல்லாத பகுதியாகவும் இருந்தது.  பூவார்... ஏரி, கடல், நதி என்ற மூன்றும் சேருமிடத்தில் உள்ளது. கடலில் நதி கலக்குமிடம் வெகு அருகில் தெரிகிறது. நதியின் முகத்துவாரம் வரை நடந்து செல்கிறோம். இந்த மணற்பரப்பின் வீச்சு, இத்துடன் முடிந்துவிடவில்லை. 12 கி.மீ. தொலைவிலுள்ள சொவ்வரா வரை நீள்கிறது.

பூவார்... மினி சொர்க்கம்!

முழுவதும் மரத்தால் அமைக்கப் பட்ட மிதக்கும் காட்டேஜுக்குள் நுழைகிறோம். இருள் கவியத் துவங்க, வானத்து விண்மீண்கள் சாட்சியாக சாப்பிட்ட அதி அற்புத உணவை பற்றி விவரிக்க கம்பன், `வேர்ட்ஸ்வொர்த்' வர வேண்டும்.

விடிந்ததும் வெண்ணிற பீச் மணலுக்கு விரைகிறோம். ஜாலியான கட்டுமர சவாரி, புதுவித அனுபவம். ரிசார்ட்டுக்குத் திரும்பியவுடன் நீச்சல் குளத்தில் முங்கிவிட்டு மற்றொரு ரிசார்ட்டுக்கு செல்கிறோம். இது பூவாரின் மற்றொரு பகுதி. முதலில் வருவது விழிஞ்ஞம் என்ற மீனவ குடியிருப்பு (கோவளத்துக்கு அருகில்). இங்கு எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த புராதன கோயிலில் தட்சிணாமூர்த்தி உருவமும், வெளிப்புறத்தில் முற்றுப்பெறாத நிலையில் சிவன் - பார்வதி உருவங்களும் பாறையில் வடிக்கப்பட்டுள்ளன. கேரள அரசர்களின் பண்டைய துறைமுக நகராக இருந்தது விழிஞ்ஞம் என்கிறது வரலாறு. சோழர்களின் பிடியிலும் இருந்திருக்கிறது இந்த துறைமுகம்.

பூவார்... மினி சொர்க்கம்!

இவ்விடம் சர்வதேச கடல் வழிக்கு அருகில் உள்ளதால் இங்கே மிகப்பெரிய நவீன துறைமுகம் வர உள்ளது. அங்கிருந்த பீச், அசைந்தாடும் படகுகள், அழகிய மசூதியின் ஸ்தூபிகளை பார்த்த பிறகு நெய்யாறு கரையோரமாக பயணம். அங்கு அழகான ஒரு கிருஷ்ணர் கோயில்.

பூவார்... மினி சொர்க்கம்!

மதிய உணவுக்குப் பிறகு நாலரை மணிக்கு, ‘கேனோ (துடுப்பு படகு) சவாரி’ செய்கிறோம். இது பூவாரின் முக்கிய ஈர்ப்புகளில் ஒன்று. படகோட்டி ‘தமியாளத்தில்’ அரட்டை அடிக்கிறார். துடுப்பு தண்ணீரில் விழும்போது வரும் ‘ப்ளக்’ ஒலி... ஒரு சில்லிட்ட அனுபவம் தருகிறது. மரங்கள் போர்த்திய தண்ணீர் சாலைகளாக இங்கிருக்கும் சிறிதும் பெரிதுமான கால்வாய்கள், எழில் ஓவியங்கள்! தாவரங்கள் பச்சைப் பந்தலாக, அதனூடே ஒளிந்து ஒளிந்து நகர்கிறான் ஆதவன். திடீரென தூற ஆரம்பிக்க, தென்னைமரத் தோப்பில் தஞ்சம் புகுந்தோம். அந்த இயற்கைச் சூழலில் மேனி நனைத்த ஒவ்வொரு துளியும் பேரனுபவமாக இருந்தது.

பூவார்... மினி சொர்க்கம்!
பூவார்... மினி சொர்க்கம்!

மொத்தத்தில் பூவார், இயற்கையின் கடைக்குட்டி. நீரினால் சூழப்பட்டு கடல் மற்றும் பொன்போன்ற கடற்கரையுடன் விளங்கும் கனவுலகம். இங்கு வந்து ஓய்வெடுங்கள். சூழலியல் மந்திரத்தில் உங்கள் இதயத்தைச் செலுத்துங்கள். மனதை தளர்த்திக்கொள்ளுங்கள். மசாஜ், டி.வி என எதுவும் வேண்டாம்; மொபைலைகூட ஸ்விட்ச் ஆஃப் செய்துவிடுங்கள். பூக்களுடன் கூடிய இந்தப் பசுமை பிரதேசத்தில் உலாவுங்கள். படகுச் சவாரி செய்யுங்கள். அல்லது... எதுவுமே செய்ய வேண்டாம். அமர்ந்து ஓடையின் முணுமுணுப்பையும் தூரத்திலிருந்து தாலாட்டும் அலை ஓசையையும் பறவைகளின் கானத்தையும் காதுகுளிரக் கேளுங்கள். மனம் புதுவித புத்துணர்ச்சி பெற்றுத் திரும்புவது உறுதி!

பிருந்தா

பத்மநாபர் தரிசனம்! 

திருவனந்தபுரத்துக்கு விஜயம் செய்பவர்கள் பத்மநாபரை தரிசிக்காவிட்டால் அது பூரணமாகாது என்பர். இறுதியாக, அனந்தனை சேவிக்கச் சென்றோம். மூன்று வாயில்கள் வழியாக அவரைத் தரிசிக்கும் அனுபவமே அலாதி. அரச குடும்பத்தினரால் நிர்வகிக்கப்படும் இந்தக் கலைநயம் வாய்ந்த கோயில், அனைவரையும் வசீகரிக்கும். ஒரு கோயில் எப்படி பராமரிக்கப்பட வேண்டும் என்பதை இங்கு கற்றுக்கொள்ளலாம்.

ஆற்றில் விரிந்திருந்த பூக்களின் கம்பளம்!  

பூவாருக்கு ஒரு சரித்திரம் உண்டு. கேரளா அரசர்களில் முக்கியமானவர் மார்த்தாண்ட வர்மா. அவர் படை திரட்டுவதற்காக இங்கு வந்து தங்கியிருந்தார். அவர் படகில் சென்றுகொண்டிருந்தபோது காலையில் மரத்திலிருந்து உதிர்ந்த வண்ண மலர்கள் தண்ணீர் மீது நிரம்பி கம்பளம்போல இருந்ததாம். பரவசமடைந்த மன்னர் இதை ‘பூ ஆறு’ என்று அழைத்தாராம். பின்னால் இதுவே பூவார் என்றாகி, அதுவே ஊரின் பெயராக நிலைத்துவிட்டது.