அவள் 16
Published:Updated:

வலிக்க வலிக்க அடித்த விதி... வெற்றியை வசப்படுத்திய ஃபரிதா!

வலிக்க  வலிக்க  அடித்த விதி... வெற்றியை வசப்படுத்திய ஃபரிதா!
News
வலிக்க வலிக்க அடித்த விதி... வெற்றியை வசப்படுத்திய ஃபரிதா!

வாழ்க்கை

‘‘வாழ்க்கையில் துயரங்களை மட்டுமே கடந்துவந்ததால, இந்த வெற்றியும் சந்தோஷமும் எனக்கு வரமா இருக்கு!’’

- கண்கள் மின்னுகின்றன

ஃபரிதாவுக்கு. விஜய் டி.வி ‘சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சியில் இரண்டாம் இடம் பிடித்த வெற்றியாளர்!

‘‘அப்பா, அம்மா எனக்கு வெச்ச பேர், பிரேமலதா. சிதம்பரத்துல மிடில் கிளாஸ் ஃபேமிலி. மியூசிக் கிளாஸ் எல்லாம் போனதில்லைன்னாலும், கேள்வி ஞானத்தால ஸ்கூல்ல படிக்கும்போதே நல்லா பாடுவேன். மியூசிக் தெரிஞ்ச என் கிளாஸ் டீச்சர் கொஞ்சம் இசை கத்துக்கொடுத்தாங்க. எங்கப்பா முயற்சியால சில கச்சேரிகளில் பாடும் வாய்ப்பும் கிடைச்சது. ப்ளஸ் டூ முடிச்சதும் அண்ணாமலை பல்கலைகழகத்துல அஞ்சு வருஷ டிப்ளோமா இன் மியூசிக் கோர்ஸில் சேர்ந்தேன். அங்க என்கூடப் படிச்ச முகமது இக்பாலும் நானும் காதலிச்சோம். அவர் கீபோர்டு வாசிக்க, நான் பாடன்னு படிக்கும்போதே நிறைய கச்சேரிகளில் கலந்துகிட்டோம். அவர் தனியாவும் நிறைய ஆல்பம் பண்ணினார்.

வலிக்க  வலிக்க  அடித்த விதி... வெற்றியை வசப்படுத்திய ஃபரிதா!

எங்க காதலுக்கு மதத்தை முன்னிறுத்தி ரெண்டு வீட்டிலும் பயங்கர எதிர்ப்பு. ரெஜிஸ்டர் மேரேஜ் செய்தோம். எங்க வீட்டுல ஒருவழியா ஏத்துக்கிட்டாலும், அவர் வீட்டில் கோபம் குறையல. ஒரு வருஷம் கடலூர்ல எங்க அம்மா வீட்ல இருந்தபடியே, ரெண்டு பேரும் கச்சேரிகள் செய்து வாழ்க்கையைப் பார்த்துக்கிட்டோம். பிறகு, நான் ஃபரிதாவா மதம் மாறி, பண்ருட்டியில் இருந்த அவங்க வீட்டில் செட்டில் ஆனோம். குடும்பத்தின் கட்டுப்பாடுகளால நான் கச்சேரிகளில் பாடுறதை நிறுத்திட்டேன்.

எங்களுக்கு ரெண்டு பொண்ணுங்க பிறந்ததும், பொருளாதாரக் காரணங்களுக்காக மீண்டும் கச்சேரிகளில் பாட முடிவெடுத்தேன். பாண்டிச் சேரியில் அதுக்கான வாய்ப்புகள் இருந்ததால, குடும்பத்தோட அங்க போனோம். அங்கதான் என் வாழ்வின் துயரங்கள் ஆரம்பித்தன. ஒரு விபத்துல என் கணவருக்குத் தலையில் அடிபட்டு படுத்த படுக்கை ஆனார். என்னோட வருமானம் மட்டுமே குடும்பத்துக்கு ஆதாரம் என்ற நிலை. அதோட சேர்த்து அவரோட ட்ரீட்மென்ட் செலவுகளும். ஓரளவு குணமானதும் அவரும் கச்சேரிக்கு வந்து கீபோர்டு வாசிச்சாலும், தலையில் அடிபட்டதால அடிக்கடி ஃபிட்ஸ் வர ஆரம்பிச்சது அவருக்கு.

இந்தப் பிரச்னைகளோட சேர்ந்து, அவருக்கு மஞ்சள்காமாலையும் வர, அது முற்றி, மறுபடியும் படுத்த படுக்கையாயிட்டார். பண்ருட்டியில அவங்க அம்மா வீட்டுக்கே போயிட்டோம். அவரோட ஒருநாள் மருத்துவ செலவு பத்தாயிரம்னு ஆச்சு. கிடைக்கிற கச்சேரிகளில் எல்லாம், கிறிஸ்தவ ஆலயங்கள்ல கோரஸ் சிங்கர் உட்பட ராப்பகலா பாடியும், அந்தப் பணம் போதுமானதா இல்ல.

ஒவ்வொரு நாளும் தவிப்பும் துயரமுமா விடிய ஆரம்பிச்ச காலம் அது. கச்சேரியில் இருக்கும்போது, அவருக்கு ஃபிட்ஸ் வந்துட்டதா போன் வரும். பதறி அடிச்சு ஓடிவந்தா, என் பொண்ணுங்க ரெண்டு பேரும் அழுதுட்டு இருப்பாங்க. நிகழ்காலம் கண்ணீரோடயும், எதிர்காலம் பயமுறுத்துவதாவும் இருந்தது. ஒருகட்டத்துல டாக்டர் அவரைக் காப்பாத்த முடியாதுனு சொன்ன பிறகும், நம்பிக்கை இழக்காம அவருக்கு வைத்தியம் பார்த்தேன். ஆனா, விதிதான் வென்றது. மூணு வருஷத்துக்கு முன்னாடி அவர் இறந்துட்டார். ஆசையோட ஆரம்பிச்ச வாழ்க்கை, அவசரமா அஸ்தமனம் ஆயிடுச்சு.

கச்சேரி வாய்ப்புகளை மனசில் வெச்சு, பாண்டிச்சேரிக்கே மீண்டும் வந்தேன். இதுக்கு இடையில் என் அப்பாவும் இறந்துட்டதால என் பொண்ணுங்களோட, என் அம்மா, தம்பிக்கான பொறுப்பையும் ஏத்துக்கிட்டேன். மீண்டும் கச்சேரிகளில் பாட ஆரம்பிச்சேன். ஆனா, இம்முறையும் விதி என்னை வலிக்க வலிக்க அடிச்சது.

என் தொண்டையில் பிரச்னை ஏற்பட்டு, என்னால பாட முடியாத நிலை. என்னோட ஒரே மூலதனம் குரல்தான். அதுவும் இல்லாமப் போனா, என்னை நம்பி இருக்கிற நாலு பேரை எப்படிக் காப்பாத்துவேன்..? எந்த டாக்டர்கிட்டயும் போயும் பலனில்ல. அழுதழுதாலும் பிரச்னை தீராதே..! ஒருகட்டத்துல விரக்தியில என் குழந்தைகளைக் கொன்னுட்டு, நானும் செத்துப்போயிடலாம்னு நினைச்சேன். ஆனா, குழந்தைகளைக் கொல்ல மனசில்லாததால, தற்கொலைக்கு முயற்சி பண்ணினேன். அதுவும் நடக்கல.

தெரிஞ்சவங்க ஒருத்தர், ‘வெயிட்டை குறைச்சுப் பாரு, குரல் சரியாகும்’னு சொன்னாங்க. அதையும் செஞ்சேன். குரல் சரியானது. ஆனா, வெயிட்டைக் குறைக்க எடுத்துக்கிட்ட மருந்து, மாத்திரைகள் என் உடம்பை நடக்கக்கூட முடியாத அளவுக்கு மோசமாக்கிடுச்சு. பலரும் எனக்கு மனநிலை சரியில்லைன்னு சொல்ல, மனநல மருத்துவர்கள்கிட்ட சிகிச்சை எடுத்தேன். பலனில்ல. துளியும் தூக்கம் வராது. சாவை நெருங்கிற மாதிரி என் உடம்பு என்னை நினைக்க வெச்சுச்சு. அப்போ, என் உடம்புக்குள்ள ஆவி புகுந்ததா எல்லாரும் சொல்ல, எங்கம்மா என்னை மசூதி மசூதியா கூட்டிட்டுப் போனாங்க. தொடர்ந்து நமாஸ் செஞ்சு, கொஞ்சம் கொஞ்சமா குணமானேன்.

வலிக்க  வலிக்க  அடித்த விதி... வெற்றியை வசப்படுத்திய ஃபரிதா!

மீண்டும் கச்சேரிகளில் வாய்ப்பு கேட்டுப் போனேன். என் கதையெல்லாம் சொல்லி கெஞ்சுவேன். ஆனா, பார்க்க ‘லுக்கா’ இருக்கணும்னு ஓபனா சொல்லி வாய்ப்பில்லைனு அனுப்பிடுவாங்க. என்னோட நண்பரான பாடகர் முகேஷ் மற்றும் என்னோட ஆர்கெஸ்ட்ரா நண்பர்கள் உதவியால வாய்ப்புகள் மறுபடியும் கிடைக்க ஆரம்பிச்சது. வீட்டுல பாட்டு கிளாஸும் எடுத்தேன். கொஞ்சம் பெரிய கச்சேரிகளில் பாட வாய்ப்புக்கேட்டுப் போகும்போது, ‘ஏதாச்சும் டி.வி ஷோல பாடியிருக்கியா?’னு கேட்பாங்க. அதுக்காகத்தான் விஜய் டிவி ‘சூப்பர் சிங்கர்’ ஆடிஷனில் கலந்துக்கிட்டேன்.

தேர்வானதும், என் குடும்பத்தையும், ரெண்டு பொண்ணுங்களையும் கரைசேர்க்க, இதை பெரிய வாய்ப்பா எடுத்துக்கிட்டு, கடின உழைப்பு, அர்ப்பணிப்புனு அதில் முன்னேறினேன். வாழ்க்கையில் எத்தனையோ போராட்டங்களைக் கடந்து வந்த அனுபவத்தால, நிகழ்ச்சியின் ஒவ்வொரு சுற்றையும் இதையும் நிச்சயமா கடப்போம்னு நம்பிக்கையோட பாடினேன். ஃபைனல்ஸ்வரை வந்து இரண்டாம் பரிசு வென்றது... இதுவரை துயரங்களை மட்டுமே கொடுத்த விதியை நான் வென்று நின்று காட்டிய தருணம்!’’

- அதுவரை தொடர் மழையென வார்த்தைகளைப் பொழிந்தவருக்கு, இக்கணம் ஈரமாகின்றன விழிகள்!

வெற்றிகள் தொடர்கதை ஆகட்டும் ஃபரிதாவுக்கு! 

கு.ஆனந்தராஜ்

படங்கள்: எம்.உசேன், அ.குரூஸ்தனம்

‘‘கஷ்டமான பாடல்களா தேர்ந்தெடுத்துப் பாடுவேன்!’’

‘சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சி அனுபவம் பற்றிச் சொன்ன ஃபரிதா, ‘‘ சூப்பர் சிங்கர்ல பாட ஆரம்பிச்சதும், கச்சேரிகளில் பாட முடியாம வருமானம் நின்னுபோச்சு. கடன்லதான் வாழ்க்கையை நடத்தினேன். குழந்தைங்க பிரியமா எது கேட்டாலும், ‘இப்போ அம்மாகிட்ட காசில்ல. ஃபைனல்ல ஜெயிச்சு நீங்க ஆசைப்பட்டதை எல்லாம் வாங்கித் தர்றேன்’னு சொல்லியே ஒரு வருஷத்தை நகர்த்திட்டேன். இந்த ஒரு வருஷமும் என் பிள்ளைங்களைக்கூட முன்னைப்போல என்னால கவனிக்க முடியல. எப்பவும் பரீட்சைக்குப் படிக்கிற மாதிரி, பாடல்களைக் கேட்டு மனப்பாடம் பண்ணி, எழுதி பார்த்துட்டு இருப்பேன். கடின உழைப்பு என்னைச் சோர்வாக்கும்போதெல்லாம், என் பொண்ணுங்களோட எதிர்காலத்தை ஒருகணம் நினைச்சு, எழுந்து உட்கார்ந்துடுவேன். என் திறமையை நிரூபிக்க யாருமே பாடாத, கஷ்டமான பாடல்களைத் தேர்ந்தெடுத்துப் பாடுவேன். ஃபைனல்ஸில் ஜெயிச்சப்போ, என் கணவர் கூட இல்லாததுதான் ஆற்றமுடியாத வருத்தமா இருந்தது!’’