
- பயனுள்ள ஒரு வழிகாட்டி... பயணம்
சாந்தகுமாரி சிவகடாட்சம், சுற்றுலா பிரியை. உலகின் 190 நாடுகளுக்கும் மேல் சுற்றுலா சென்றுவந்தவர். கோடை சுற்றுலாவுக்கு பலரும் தயாராகிக்கொண்டிருக்கும் இவ்வேளையில், டூருக்கான விஷயங்களைத் திட்டமிடுவது பற்றிச் சொல்கிறார் இங்கு!
‘‘உலகம் ஒரு திறந்த புத்தகம். பயணம் செய்யாதவர்கள், அப்புத்தகத்தில் ஒரு பக்கத்தை மட்டுமே படித்திருப்பார்கள். எனவே, அனைவரும் அவரவர் வசதிக்கு ஏற்ப சுற்றுலா செல்லுங்கள். முன்பாக, பட்ஜெட், சீஸன், பயண திட்டமிடல், பாதுகாப்பு முறைகள் என்ற இந்த நான்கு அம்சங்களிலும் கவனம் செலுத்த வேண்டும்.
பட்ஜெட்

நம்மால் செலவழிக்க முடிந்த பணத்துக்குள் ஒரு டூரிஸ்ட் ஸ்பாட்டை தேர்ந்தெடுக்க வேண்டும். உள்நாடோ, வெளிநாடோ... விமானம், கப்பல், ரயில், கார், பஸ் என்று பயணத்தில் இருந்து, தங்கும் இடம், சாப்பாடு, எத்தனை நாட்கள் என்று அனைத்தையும் கணக்கில்கொண்டு சுற்றுலாவை முடிவுசெய்ய வேண்டும்.
சீஸன்
இப்போது நமக்குக் கோடை என்பதால், குளிர் பிரதேசங்களுக்குச் செல்வதுதான் சரியான சாய்ஸ். எனவே துபாய், சிங்கப்பூர் போன்ற சம்மர் சீஸன் உள்ள நாடுகளுக்கும், ராஜஸ்தான் போன்ற இந்திய மாநிலங்களுக்கும் டூர் போவது சரியாக இருக்காது. வெளிநாடுகளாக இருப்பின் ஐரோப்பிய நாடுகள், மொரீஷியஸ், ஜெர்மனி, ஃபிரான்ஸ் போன்ற நாடுகளுக்கும், இந்தியாவுக்குள் இமாச்சலபிரதேசம், ஜம்மு - காஷ்மீர், இமயமலை, சிம்லா, மூணார், மணாலி, டார்ஜிலிங், மிசோரி போன்ற பகுதிகளுக்கும், தமிழ்நாட்டில் ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற பகுதிகளுக்கும் செல்லலாம்
பயண திட்டமிடல்

எத்தனை நாள் டூர், எத்தனை நபர்கள் என்பதை ஆறு மாதத்துக்கு முன்பே திட்டமிட்டு டிக்கெட் புக் செய்தால், விமானக் கட்டணம் பெருமளவு குறையும். பொதுவாக, ஒவ்வொரு நாட்டுக்கும் ஒவ்வொரு பாதுகாப்பு விதிமுறை இருக்கும். உதாரணமாக, நியூசிலாந்து நாட்டுக்கு எந்த பழங்களையும், காய்கறிகளையும் கொண்டுசெல்லக் கூடாது. மீறினால் அபராதம் முதல் சிறைதண்டனை வரை விதிப்பார்கள். எனவே, செல்லவிருக்கும் நாட்டின் சுற்றுலா விதிமுறைகளை இணையம் அல்லது டூரிஸ்ட் ஏஜென்ட் மூலம் அறிந்துகொள்ளவும்.
பாதுகாப்பு முறைகள்!
செல்லும் முன்...
வெளிநாடுகளுக்குச் செல்லும்போது, பாஸ்போர்ட், விசா ஆகியவற்றின் நகல் ஒன்றையும் எடுத்துக் கொள்ளவும். ஒரிஜினல் தொலைந்தாலும், நகலைக் காட்டி நாடு திரும்பிவிடலாம். அடிக்கடி வெளிநாடு களுக்குச் செல்பவர்கள் மெடிக்கல் இன்ஷூ ரன்ஸ் எடுத்து அதன் அசல், நகலினை எடுத்துச் செல்லவும். டூர் சென்ற இடத்தில் ஏதாவது உடல்நிலை சரி யில்லாமல் போனால், அந்த இன்ஷூரன்ஸை வைத்து சிகிச்சை பெற முடியும். சுற்றுலா போக வேண்டிய இடத்தில், கொஞ்ச தூரம் நடக்க வேண்டி இருக்கலாம்.

ஆகவே, டூர் செல்லும் முன்பாகவே, ஒரு வாரத்துக்காவது நடந்து பழகிக்கொள்ளவும். புதிதாக நடப்பவர்கள், கால் வலி ஏற்பட்டு தொடர்ந்து நடக்க முடியாமல் அவதிப் படுவார்கள். பின்னர் சுற்றுலாவில் ஓய்வுதான் எடுக்க முடியும்.
சென்ற இடத்தில்...
• எந்த வாகனத்தில் ஏறினாலும் சரி, முதலில் ஆண்கள் ஏறிவிட்டுத்தான், பெண்களை ஏற்ற வேண்டும். இறங்கும்போதும், பெண்களை இறக்கிவிட்டுவிட்டுதான் ஆண்கள் இறங்க வேண்டும். முதலில் பெண்களை ஏற்றிவிட்டால், தீயவர்கள் வண்டியை வேகமாக இயக்கி, பெண் களை கடத்திச் சென்றுவிட வாய்ப்பு உண்டு.

• முடிந்தவரை குறைவான நகைகளையே அணிந்து செல்லவும். கொண்டு செல்லும் பணத்தை மூன்று பகுதிகளாகப் பிரித்து, பாஸ்போர்ட் மற்றும் பெரிய தொகையை தங்கியிருக்கும் ரூம் லாக்கரில் வைத்துப் பூட்டியும், ஷாப்பிங் செய்ய தேவைப்படும் பணத்தில் சட்டையின் நடுவில் வயிற்றுப் பகுதி அருகில் சேஃப்டி பர்ஸ் ஒன்றில் அதிகமாகவும், குறைந்த தொகையை பாக்கெட்/பர்ஸ்களிலும் வைத்துக்கொள்ளலாம்.
• பை அல்லது பணத்தை யாராவது திருடிக்கொண்டு ஓடினால், நாம் துரத்திச் செல்லும்போது யாருமே இல்லாத இடங்களில் நம்மை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிவிடுவார்கள். எனவே, அருகில் இருக்கும் காவல் நிலையங்களில் புகார் அளிக்கலாம். இழந்த பணம் மிகவும் குறைவாக இருந்தால், விட்டுவிடலாம்.
• பணம் அதிகமாக செலவாகிறதே என டூர் சென்ற இடத்தில் மோசமான பகுதியில் ரூம் எடுக்கக் கூடாது.
• யாரையுமே நல்லவர் என நம்பி, நம்மைப் பற்றிய எந்த தகவல்களையும் சொல்லக்கூடாது, யாரிடமும் உணவுப் பொருட்கள் வாங்கிச் சாப்பிடக்கூடாது.

• விமான நிலையம், ரயில் நிலையம், பேருந்து நிலையம், வணிக வளாகங்கள் என செல்லும் இடங்களில் ஏதேனும் அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டிருக்கிறதா என நாலாபுறமும் பார்த்துச் செல்லவும். நாம் தெரியாமல் செய்யும் செயல்கள், அந்நாட்டினருக்கு பெரிய குற்றமாக இருக்கலாம்.
• மொத்தத்தில், டூர் என்பது ரிலாக்ஸ் செய்யத்தான். மேலே சொன்னவற்றைப் பின்பற்றினால் டென்ஷன் இல்லாமல், நிம்மதியாக அனுபவிக்கலாம் சுற்றுலாவை!’’
- தன் அனுபவங்களைப் பாடங்களாகச் சொல்லிமுடித்தார் சாந்தகுமாரி சிவகடாட்சம்.
கு.ஆனந்தராஜ் படங்கள்: எம்.உசேன்