அவள் 16
Published:Updated:

"இது நம்ம வீட்டு வாழ்க்கை!"

"இது நம்ம வீட்டு வாழ்க்கை!"
பிரீமியம் ஸ்டோரி
News
"இது நம்ம வீட்டு வாழ்க்கை!"

- இளமையான ‘இஎம்ஐ’ டீம்சின்னத்திரை

‘‘ஐஸ்க்ரீம் பார்லர் ஒன்றில் தன் குழந்தைகளுடன் அமர்ந்திருக்கும் இளம்தாய், தான் நல்ல அம்மாவா என்று தன் மகளைப் பார்த்துக் கேட்கிறார். ‘ஆமாம்மா, நீங்க நல்ல அம்மாதான்... எங்களுக்கு ஐஸ்க்ரீம் எல்லாம் வாங்கித் தர்றீங்க!’ என்று மகள் கொஞ்சலாகச் சொல்கிறாள்.

"இது நம்ம வீட்டு வாழ்க்கை!"

கொஞ்சமாய் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு, ‘இன்னிக்கு நான் சமைச்சது உங்களுக்குப் பிடிச்சிருந்ததா?’ என்று மகனைப் பார்த்துக் கேட்க, ‘ரசம் சாதம் நல்லா இருந்துச்சும்மா’ என்று அவன் சொல்ல, ‘அது ரசம் இல்லடா... சாம்பார்...’ என்று சொல்லிவிட்டு, ஓர் ஏக்கப் பார்வையைத் தன் குழந்தைகளிடம் வீசுகிறாள் தாய்.

"இது நம்ம வீட்டு வாழ்க்கை!"

ஒரு தாய், தான் நல்ல அம்மாவா என்று தன் குழந்தைகளிடம் கேட்பது என்பது, அவளின் ஆயிரம் குழப்பங்கள், தயக்கங்களை ஒன்றுதிரட்டிய ஒற்றைக் கேள்வியாக தைக்கிறதுதானே!

இன்றைய இளையதலைமுறையின் மனதை இப்படி நுட்பமாகப் பதிவுசெய்து ஹிட் அடிக்க ஆரம்பித்திருக்கிறது... சன் டி.வி-யில் புதிய வரவாக ஒளிர்ந்து கொண்டிருக்கும் ‘இஎம்ஐ - தவணைமுறை வாழ்க்கை’ சீரியல்!

"இது நம்ம வீட்டு வாழ்க்கை!"

சின்னத்திரை சீரியல்கள் வரலாற்றில், கடந்த 12 ஆண்டுகளாக தொடர்ந்து முதலிடத்தில் இருக்கும் சீரியல்களைத் தயாரித்துவரும் நிறுவனம் என்கிற பெருமை கொண்டது, விகடன் குழுமத்தின் ஓர் அங்கமாக இருக்கும் விகடன் டெலிவிஸ்டாஸ். இந்நிறுவனத்தின் தயாரிப்புகளான `கோலங்கள்', `திருமதி செல்வம்', `தென்றல்', `அழகி', `தெய்வமகள்', `பிரியமானவள்' என்கிற வெற்றி சீரியல்கள் வரிசையில் விருந்து படைக்க வந்திருக்கிறது `இஎம்ஐ'. 

திங்கள் முதல் வெள்ளிவரை தினமும் இரவு 10.30-க்கு ஒளிபரப்பாகும் ‘இஎம்ஐ’ தொடர், `இன்றைய இளைய தலைமுறை எதை நோக்கிப் பயணிக்கிறது என்பதை தினசரி வாழ்க்கையில் இருந்தே தத்ரூபமாகப் படம்பிடித்துக் காட்டுகிறதே?’ என்று கேட்டால்...

‘‘ஆமாம்... இளமைதான் இந்த சீரியலோட முழு பலம். இளைஞர்களோட வாழ்க்கையைப் பற்றிய இந்த சீரியல்ல, திரையில நடிக்கிறவங்க மட்டுமில்லாம கதை, திரைக்கதை, வசனம், பாடல்னு திரைக்குப் பின்னாலும் இளைஞர்கள்தான் நிறையவே இருக்காங்க. பொதுவா இந்தக்கால இளைஞர்கள் பொறுப்பில்லாதவங்க... அவங்களுக்கு எது மேலயும் அக்கறை இருக்காது இப்படித்தான் பலரும் பேசிட்டிருக்காங்க. ஆனா, இது முழுக்க முழுக்க பொய்யான கற்பிதம்கிறத இந்த `இஎம்ஐ' டீம் இளைஞர்கள் நிரூபிச்சுட்டிருக்காங்க. ஒரு சீரியலை உருவாக்குறதுக்குப் பின்னாடி கடுமையான உழைப்பை கொட்ட வேண்டியிருக் கும். ஒரு வாரத்துக்கு குறைந்தபட்சம் 100 ஸீன் தேவைப்படும். இதையெல்லாம் மனசுல வெச்சுக்கிட்டு இந்த டீம் தேனீக்கள் மாதிரி சுறுசுறுனு சுழலறதை பார்க்கும்போது... இதுதான் யங் இந்தியாவோட அடையாளம்னே எனக்குச் சொல்லத் தோணும். அந்த அளவுக்கு அவங்க அர்ப்பணிப்போட வேலை பார்க்கிறாங்க’’ என்று அதையே தங்கள் வெற்றிக்கு துருப்புச்சீட்டாகக் குறிப்பிடுகிறார், தொடரின் தயாரிப்பாளர் ராதிகா சீனிவாசன்.

"இது நம்ம வீட்டு வாழ்க்கை!"

‘‘நம்ம வாழ்க்கையில சந்தோஷமோ கவலையோ எப்பவும் ஒரே மாதிரி இருக்கிறதில்ல, தவணை முறையில் மாறிமாறித்தான் வந்துபோகும். அப்படி நிலையில்லாத இந்த ரெண்டு விஷயங்களையும் ஏத்துக்கிட்டு சமநிலையோட வாழக் கத்துக்கணும். இதைத்தான் இந்த தொடர்ல உணர்வுகூட்டி சொல்றோம்’’ என்று சொல்லும் போது ராதிகாவின் கண்கள் விரிகின்றன.

``நகரத்தில் வேலை வேலைனு வாழ்க்கையைக் கரைக்கும் இளைஞர்களின் கதை இது. ‘ஐ.டி வேலையா, அவங்களுக்கு என்ன கவலை?’னுதான் இங்க பலரும் நினைப்பாங்க. ஆனா, ‘எந்த நொடியும் வேலையில் இருந்து வெளியில துரத்திடுவாங்க’னு நிரந்தரமற்ற அந்த வேலை, எப்பவும் அவங்களை ஒரு பாதுகாப்பற்ற உணர்வோடதான் வெச்சிருக்கு. குடும்பம், குழந்தைனு வாழ்க் கையைத் தொடங்கும்போது, ஒருத்தனுக்கு வேலைபோனா அவன் நிலைமை என்ன ஆகும்? இந்தச் சமூகம் அவனை எப்படி புண்படுத்தும்? இதையெல்லாம் உண்மைக்கு மிக நெருக்கமா இந்த ‘இஎம்ஐ’ உங்களுக்குக் காட்டும்.

இன்னொரு பக்கம், இந்த இளைஞர்கள் எப்பவும் வேலை வேலைன்னே ஓடுறதால, அவங்க வீடுகளில் குழந்தைகளில் ஆரம்பித்து பெரியவர்கள்வரை எல்லாரோட உணர்வுகளும் பேச வாய்ப்பில்லாம நிசப்தமா இருக்கும். அந்த உணர்வுகளுக்கும் ‘இஎம்ஐ’ அழகா மொழி கொடுக்கும். சினிமாவில் காட்டுவதுபோல துணை அமையலைனு புலம்பும் மனங்களுக்கு எதார்த்தமான காதல் வாழ்க்கை எப்படி இருக்கும்கிறதை இந்த `இஎம்ஐ’ உங்களுக்கு பாடமாவே காட்டும். கதையில் தேவைக்கு தகுந்த மாதிரி ஹியூமர், எமோஷன் ரெண்டுமே இருக்கு.

பொதுவா சினிமா, சீரியல்னாவே ஆக்டிங்குக்கு குட்லுக்கிங் கேர்ள்ஸா சிரமப்பட்டு தேடிக் கண்டுபிடிப்பாங்க. ஆனா, ஆடிஷன்ல பெண்களைவிட, ஆண்களைத் தேர்ந்தெடுக்கத்தான் நாங்க ரொம்பவே சிரமப்பட்டோம்’’ என்று சொல்லி குலுங்கிக் குலுங்கிச் சிரித்த ராதிகா, சீரியலின் கதை, திரைக்கதை ஆசிரியர் ஜோதிஷ்னாவை அறிமுகப்படுத்தினார்.

‘‘இந்தக் கதையைக் கிட்டத்தட்ட ஒரு வருஷமா நாங்க வளர்த்தெடுத்தோம். அந்த உழைப்புக்கான பலனாதான், திரையைத் தொட்டதுமே ஹிட் ஆகியிருக்கு சீரியல். எதார்த்தம் எனும்போது நடிப்பிலும், ஆடையிலும் மட்டும் அதை கொண்டுவர முடியாது. சூழலும் அவசியம். அப்படி தொடரில் வரும் ஆபீஸில் இருந்து, ஒவ்வொரு கேரக்டரின் வீடுவரை எல்லாமே ரொம்ப இயல்பா, நிஜமா, கதை ஓட்டத்துக்குப் பொருத்தமா இருக்கும். அழகுக்காக ஆடம்பரம் சேர்த்தா, சீரியல் ரசிகர்களின் மனசோட சேராது. பொதுவா ரொமான்ஸ்னாலே அதைப் பத்தி வயசானவங்க எழுறதுதான் இங்க வழக்கமா இருக்கு. அதையும்கூட இளைஞர்கள் மனசுல என்ன இருக்குங்கிறத இந்த இளமையான டீமே இப்ப எழுதிக்கிட்டிருக்கோம் இப்படி ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்துப் பார்த்து செய்றதுதான் எங்க டீமின் சக்சஸ் சீக்ரெட்’’ என்று ரசிக்க ரசிக்கப் பேசினார் ஜோதிஷ்னா.

"இது நம்ம வீட்டு வாழ்க்கை!"

தொடரின் நிர்வாகத் தயாரிப்பாளர் ஆண்ட்ரூ ஜுவான், ‘‘சீரியல்களுக்குனே வழக்கமா இருக்கிற விஷயங்கள்ல இருந்து மாறுபட்ட கோணத்தில் பயணிக்கிற ஒரு சீரியல்தான் `இஎம்ஐ’. எதார்த்தத்தை மீறின வில்லி, குரலை உயர்த்திப் பேசுறது, அதுக்கு பயங்கரமான பின்னணி இசை கொடுக்கிறதுனு எதுவும் இதுல இல்ல. ஒளிப்பதிவுக்கு ரொம்ப மெனக்கெட்டிருக்கோம். கேமராமேன் தமிழ்ச்செல்வன், புது டெக்னாலஜியைப் பயன்படுத்தி இருக்கார். இளசுகளோட மனசை படிச்சவரா, இந்த சீரியல்ல டைட்டில் சாங் பாடியிருக்காங்க ஹர்ஷா ஐயர்’’ என்று சீரியலின் புதுமை அம்சங்களைப் பேசினார்.

‘‘ஒரு வரியில சொல்லணும்னா, நம்ம வீட்டுக் கதவை திறந்துப் பார்த்தா அங்க என்னவெல்லாம் நடந்திட்டு இருக்குமோ அதுதான் இங்க சீரியல்லயும் நடக்கும். சீரியல் பார்க்கும்போது, அந்த கேரக்டர்ஸ் எல்லாம் உங்க மனசோட டயலாக்கைதான் பேசிட்டு இருப்பாங்க. ‘இது நம்ம வீட்டுக் கதையால்ல இருக்கு..!’னு ஒவ்வொரு ஸீனையும் ஒவ்வொரு குடும்பமும் ரசிக்கும்!’’ என்று லயித்துச் சொல்கிறார் சீரியலின் இயக்குநர், இனியன் தினேஷ்.

வெல்டன் டீம்!

பொன்.விமலா எம்.உசேன், சொ.பாலசுப்ரமணியன்