அவள் 16
Published:Updated:

காரைக்குடி பெண்... கனடாவின் நீதிபதி!

காரைக்குடி பெண்... கனடாவின் நீதிபதி!
பிரீமியம் ஸ்டோரி
News
காரைக்குடி பெண்... கனடாவின் நீதிபதி!

சச்சஸ் ஸ்டோரி

“கல்யாணமாகி 15 வருஷம் கழிச்சு, சட்டம் படிக்க ஆசைப்பட்டேன். படிச்சேன். வழக்கறிஞர் ஆனேன். தொடர்ந்து நீதிபதியாகிட்டேன்... கனடாவில்!’’

- எளிமையாக அறிமுகமாகிறார், வள்ளியம்மை. காரைக்குடியில் பிறந்து வளர்ந்து, தற்போது கனடா நாட்டில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தின் உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டிருக்கும் இவர், தென் ஆசியாவில் இருந்து இந்தப் பெருமையைப் பெறும் முதல் நபர் என்பது, தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல... இந்தியாவுக்கே பெருமை. பெர்சனல் விஷயமாக காரைக்குடி வந்திருந்தவரைச் சந்தித்தோம்.

‘‘காரைக்குடிதான் பிறந்த மண். பள்ளியில படிச்சப்போ அப்பாவோட வேலை காரணமா கனடாவில் எங்க குடும்பம் குடியேறினோம். காரைக்குடி, அருணாச்சலம் - சிகப்பி ஆச்சியோட பையன் காந்தி அருணாச்சலத்துக்கும் எனக்கும் 1974-ம் வருஷம் கல்யாணமாச்சு. கணவரும் கனடாவில் வேலையில் இருந்ததால, அங்க வான்கூவர் நகரில் குடியேறினோம். எங்ககூட வந்த என் மாமியார் அம்மாவா இருந்து, ‘உனக்கு என்ன விருப்பம்?’னு ஒவ்வொண்ணையும் பார்த்துப் பார்த்து செய்தாங்க.

கல்யாணத்துக்கு அப்புறம், ஒரு லா ஃபர்ம்ல வேலை பார்த்தப்போ, நிறைய புக்ஸ் படிக்கிற வாய்ப்பு கிடைச்சது. அப்போ கனடாவில் நடக்கிற இனப்பிரச்னைகள் கவலை தருவதா இருக்கும். பெண்கள் சேலை கட்டிட்டு வேலைக்குப் போகக்கூடாது என்பதில் ஆரம்பிச்சு பல கட்டுப்பாடுகள். அதை மாற்ற ஏதாச்சும் செய்யணும்னு தோணுச்சு. ஆனா, தனி மனுஷியா எதுவும் செய்ய முடியாதே? அதுக்கு எனக்கு ஓர் ஆயுதம் தேவைப்பட்டது.  வழக்கறிஞர்கள் நினைச்சா மாற்றத்தை உருவாக்கலாம் என்ற அவங்களோட பவரை, லா ஃபர்ம்ல வேலைபார்த்தப்போ தெரிஞ்சுக்கிட்டேன். லா படிக்க ஆசைப்பட்டேன். ஆனா, கல்யாணமாகி 15 வருஷம் கழிச்சி படிக்கிறதானு சின்னத் தயக்கம் தலைதூக்கினப்போ, மாமியார் ‘உன்னால் முடியும்’னு ஊக்கப்படுத்தினாங்க.

காரைக்குடி பெண்... கனடாவின் நீதிபதி!

நாலு வருஷம் இளங்கலை பட்டம், சட்டப்படிப்பு ஒரு வருஷம், ஆர்டிகிள்ஸ் சப்மிட் பண்ண ஒரு வருஷம்னு எட்டு வருஷம் படிக்கணும் கனடாவில். ஆர்வம் குறையாமல் படிப்பை முடிச்சேன். அப்புறம் ஒரு வருஷம் நீதிமன்றத்தில் இன்டர்ன்ஷிப் போனேன். அந்த ஒரு வருஷமும், அங்க இருக்கிற சுப்ரீம் கோர்ட் ஜட்ஜுக்கு லா ரிசர்ச் அசிஸ்டன்ட்டா வேலை பார்த்தேன்.

மிகுந்த சிரமத்துக்கு அப்புறம்தான் இன்டர்ஷிப்ல தேர்வானேன். ஒரு வழியா வழக்கறிஞர் லைசன்ஸ் என் கைகளில் கிடைச்சப்போ, இனம்புரியாத பெருமையும் சந்தோஷமும் எனக்கு’’ எனும் வள்ளியம்மை, நீதிபதிவரை உயர்ந்த கதை சொன்னார்...

‘‘வக்கீல் ஆனவுடன், மாற்றுத்திறனாளி களுக்கும், பெண்களின் முன்னேற்றத்துக்கும் உதவ ஆரம்பிச்சேன். கனடாவில் பிற நாட்டைச் சேர்ந்தவங்களை மைனாரிட்டீஸ்னுதான் குறிப்பாங்க. குடியுரிமை வெச்சிருந்தாலும் கூட, விசிபிள் மைனாரிட்டீஸ் என்ற பார்வையில்தான் நம்மைப் பார்ப்பாங்க. நம்மை சமமா நடத்தணும்னு பல பொது நிகழ்ச்சிகளின் மூலமா வலியுறுத்தினதோட, அங்க வசிச்ச தமிழர்களுக்கு ஏதாச்சும் சிக்கல்னா, என்னால் முடிஞ்ச சட்ட உதவிகளை செஞ்சேன்.

தமிழர் என்பதால், க்ளையன்ட்ஸ் கிடைக்கிறதே கஷ்டமா இருக்கும். மேலும், பொதுவாவே அங்க சட்டத்துறை பெண்கள் பணிபுரிய ரொம்பக் கடினமானதா இருக்கும். லா காலேஜ்ல 50:50 ஆக இருக்கும் மாணவர்கள், மாணவிகள் அட்மிஷன். ஆனா, பிராக்டீஸ் ஆரம்பிச்ச பிறகு தாக்குப்பிடிக்க முடியாம நிறையப் பெண்கள் இந்த லைனைவிட்டுப் போயிடுவாங்க. சீனியர் அட்வகேட் லெவலுக்கு வரும்போது ரொம்பவே குறைஞ்சுபோற விகிதம், ஜட்ஜ் லெவலில் ஒரு சதவிகிதம் அளவுக்குச் சுருங்கிடும். அந்த இறுதிக்கோட்டை, கனடாவில் நீதிபதியான முதல் தென் ஆசியர் என்ற அந்த வெற்றிக்கோட்டை நான் தொட்டதில் என் கணவருக்கும், மாமியாருக்கும் பங்குண்டு’’ என்ற வள்ளியம்மை, தன் பணி பற்றி சொன்ன போது,

‘‘கனடாவில் நீதிபதிகள் வழங்கின தீர்ப்பில் உடன்பாடில்லாம சவால், மிரட்டலில் இருந்து துப்பாக்கியால் சுடுறதுவரை நடந்திருக்கு. அந்தச் சூழ்நிலை இதுவரை எனக்கு வந்ததில்லை என்றாலும், வராது என்பது நிச்சயமில்ல. ஆனா, அதைச் சந்திக்கிற தைரியமும் திறமையும் எனக்கிருக்கு. இப்போ நான் பணிபுரியும் கோர்ட்ல க்ரைம் கேஸ்கள்தான் அதிகமா வரும்’’ என்றவரின் பேச்சை கனடாவில் இருந்து காரைக்குடிக்குத் திருப்பினோம்.

‘‘இங்க இருக்கிற குழந்தைகள்கிட்ட பேசினேன். ‘தமிழ் தெரியாது’னு சொல்றாங்க. ஆங்கில மொழிக்கல்வி எனக்கு அதிர்ச்சியா இருக்கு. ஜப்பான், சீனா உள்ளிட்ட நாடுகளில் அவங்க தாய்மொழிக்குதான் முன்னுரிமை. அப்புறம்தான் பள்ளிகளில் குழந்தைகளுக்கு பிற மொழிகளை பயிற்றுவிப்பாங்க. ஒரு குழந்தை, தன்னோட தாய்மொழியிலதான் வளமா சிந் திக்கவும், சிந்தனையை வெளிப்படுத்தவும் முடியும்’’ என்றவர், இந்தியாவில் தான் கவனித்த இன்னொரு குறையையும் பதிவு செய்தார்.

‘‘இங்க வழக்குகள் முடிக்கப்பட ஆண்டுகள் ஆகும்னு சொல்றாங்க. ஆனா, அங்க அவ்வளவு காலம் எடுத்துக்கமாட்டோம். ஏன்னா, காலத்தில் கொடுக்கப்படும் நீதியே சிறந்த நீதி. காலம்கடந்து கொடுக்கப்படும் நீதி, நீதியின் வழியில் இருக்காது’’ என்றவரிடம், அவரின் ரோல் மாடல் யார் எனக் கேட்டோம்.

‘‘உங்களுக்கு தெரிஞ்சவங்கதான்... என் மாமியார்!’’

- காரைக்குடி வாஞ்சை அந்த கனடா நீதிபதியின் புன்னகையில்!

ர.நந்தகுமார் 

படங்கள்: எஸ்.சாய்தர்மராஜ்