
ஒரு டஜன் யோசனைகள்!
எகிறும் மின்கட்டணம்... குறைக்கும் வழிகள்!
கோடை காலத்தில் பொதுவாக எல்லா வீடுகளிலும் மின்சாரக் கட்டணம் எக்கச்சக்கமாக எகிறும். மின்சாதனப் பொருட்களை முறையாகவும், அவசியம் சார்ந்தும் பயன்படுத்தி, மின் சிக்கனம் செய்ய உதவும் ஆலோசனைகள் இந்த இதழ் `ஒரு டஜன் யோசனைகள்’ பகுதியில் இடம்பெறுகின்றன.
1. கம்ப்யூட்டரில் கவனம்!

பெரும்பாலானவர்கள் கம்ப்யூட்டரைப் பயன் படுத்திய பிறகு `சிபியூ’-வை மட்டும் அணைத்துவிட்டு, மானிட்டரை அணைப்ப தில்லை. இதனால் மின்சாரம் பயன்பாட்டிலேயேதான் இருக்கும். பயன்பாடு முடிந்தபின் மட்டுமல்லாமல், இடையில் ஏதேனும் வேலையாக எழுந்து 15 நிமிடத்துக்கு மேல் கணினியைப் பயன்படுத்தாத பட்சத்திலும், மானிட்ட ரையும் `சிபியூ’-வையும் ஒரு சேர அணைப்பது நல்லது.
2. வீட்டைவிட்டுக் கிளம்பும் முன்...

சில நேரங்களில் பவர்கட் ஏற்பட்டிருக்கும்போது, ஆன் செய்திருக்கும் மின்சாதனங்கள் பற்றிய கவனமின்றி வீட்டிலிருந்து வெளியேறிவிட்டால், பின்னர் பவர் வந்ததும் அனைத்து சாதனங்களும் செயல்பட ஆரம்பித்துவிடும். வேலைக்குச் செல்பவர்கள் வீட்டைவிட்டுக் கிளம்பும் முன், எல்லா சுவிட்ச்களும் ஆஃப் செய்யப்பட்டிருக்கிறதா என்பதை `செக்’ செய்துவிடவும். ஊருக்குச் செல்பவர்கள் மெயினை அணைத்துவிட்டுச் செல்வது இன்னும் சிறப்பு.
3. ஏ.சி... டென்ஷன் ஏற்றாமல் இருக்க!

அறையின் அளவைப் பொறுத்து ஏ.சி-யின் கொள்ளளவைத் தேர்ந்தெடுக்கவும். ஏ.சி பயன்படுத்தும்போது அறை மூடப்பட்டிருந் தால் குளிரும் மின்சாரமும் வீணாகாமல் இருக்கும். அறையின் மேற்புறம் தெர்மாகோல் கூரையைப் பயன் படுத்தினால், அதிக நேரம் குளிர்ச்சியைத் தாங்கும். ஏ.சி-யை அதிக குளிர்நிலையிலும், மிகக்குறைந்த குளிர் நிலையிலும் இல்லாமல் எப்போதும் ஒரே டெம்ப்பரேச்சரில் பயன்படுத்தவும். குறிப்பிட்ட கால இடைவெளியில் ஏ.சி மெஷினை சர்வீஸ் செய்துகொண்டால், அறை சீக்கிரமே குளிர்விக்கப்படும்; மின் பயன்பாடு குறையும்.
4. பிளக் பாயின்ட் சுவிட்ச்!

டி.வி, மிக்ஸி, கிரைண் டர், ஏ.சி போன்றவற்றைப் பயன்படுத்திய பிறகு அவற்றை சாதனத்தில் உள்ள சுவிட்ச்சில் அல்லது ரிமோட்டில் மட்டுமே அணைப்பதால், மின்சார நுகர்வு நிறுத்தப்படாது. எனவே, பிளக் பாயின்ட் சுவிட்சையும்் மறக்காமல், சோம்பேறித்தனப்படாமல் அணைத்து மின்சாரப் பயன்பாட்டை முழுமை யாக நிறுத்தவும்.
5. ஃப்ரிட்ஜில் சூடான உணவுகள்... நோ!

ஃப்ரிட்ஜில் உணவுப் பொருட்களை சூடாக இருக்கும்போது வைத்தால், அவற்றை குளிரூட்ட அதிக மின்சாரம் செலவாகும். எனவே, ஆறிய பின்னரே வைக்கவும். ஃப்ரிட்ஜை அடிக்கடி அணைத்து வைத்தால் மீண்டும் குளிர்ச்சி அடையவும், அடிக்கடி திறந்து மூடும்போது குளிர்நிலை வெளியேறி மீண்டும் குளிரூட்டவும் மின்சாரம் வீணாகச் செலவழிக்கப் படும். தேவையான கொள்ளளவைவிட பெரிய அளவிலான ஃப்ரிட்ஜை வாங்கிப் பயன்படுத்து வதைத் தவிர்க்கவும். ஃப்ரிட்ஜை வெயில்படும் இடத்திலும், சுவரை ஒட்டியும் வைக்காமல் கொஞ்சம் காற்றோட்ட மாக வைப்பது சிறந்தது.
6. குட்டி இறக்கைகள் கொண்ட மின்விசிறி!

காற்றோட்டமான வீடு எனில், ஒரே அறையில் இரண்டு, மூன்று ஃபேன்களைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து ஜன்னல்களைத் திறந்து வைக்கலாம். சராசரியைவிட நீளம் குறைந்த இறக்கைகள்கொண்ட மின்விசிறிகள் மின்சார சிக்கனத்துக்கு உதவும். சமைக்கும்போதும் அயர்ன் செய்யும்போதும் ஃபேனை ஆன் செய்வதைத் தவிர்க்கவும்.
7. வாட்டர் ஹீட்டர்... உபயோகியுங்கள் இப்படி!
தேவையான அளவு தண்ணீரை, தேவையான அளவு சூட்டில் கொதிக்கவைக்கவும். அதிகளவு நீர், கொதிக்கக் கொதிக்க வெப்பநிலை என்று மின்சாரத்தை வீணாக்க வேண்டாம். ஒருவர் குளித்து முடித்து அடுத்தவர் செல்லும்வரை ஹீட்டரை `ஆன்’ செய்தே வைக்காமல், அணைத்துவிட்டுப் பின்னர் பயன்படுத்தவும். ஹீட்டிங் ராட் பயன்படுத்தும்போது, பெரிய வாளியில் கால் பக்கெட் தண்ணீர் மட்டும் வைத்து, ஹீட்டரின் கால் பாகம் மட்டுமே அதில் மூழ்கியிருந்தால், மீதம் முக்கால் பாகத்தின் வெப்பமும் அதற்குச் செலவாகும் மின்சாரமும் வீணாகும். ஹீட்டரின் அளவுக்கு ஏற்ற பக்கெட்/டப்களை பயன்படுத்தவும். ராடு குறிப்பிட்ட அளவு மூழ்கும் வரை பக்கெட்டில் தண்ணீர் நிரப்பி பயன்படுத்தவும்.
8. வாஷிங் மெஷின்... ஹாட் வாட்டர் ஆப்ஷன்!

வாஷிங் மெஷினின் கொள்ளளவைவிட துணி குறைவாக இருந்தால், இரண்டு நாட்களுக்கு ஒருமுறை துவைக்க லாம். ஹாட் வாட்டர் ஆப்ஷன் அதிக மின்சாரம் நுகரும் என்பதால் கூடுமானவரை தவிர்க்கலாம். துவைக்கத் தேவைப்படும் அதே அளவு மின்சாரம் டிரையருக்கும் தேவைப்படும். இது வெயில் காலம்தான் என்பதால், டிரையர் பயன்பாட்டைத் தவிர்க்கலாம்.
9. மிக்ஸி, கிரைண்டர்... பெல்ட், பிளேடு!
வீட்டு உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கிரைண்டர், மிக்ஸியின் கொள்ளளவைத் தேர்ந்தெடுக்கவும். கிரைண்டரில் பெல்ட் தேய்ந்துபோனாலோ, மிக்ஸியில் பிளேடு சரியில்லாமல் போனாலோ தேவைக்கும் அதிகமான மின்சாரத்தைச் சாப்பிடும் என்பதால், இவற்றில் ஏதேனும் பிரச்னை எனில் உடனடியாகச் சரிசெய்துகொள்ளவும்.
10. புது டெக்னாலஜிக்கு மாறுவோம்!
பழைய CRT (Cathode Ray Tube) டைப் டி.வி, மானிட்டருக்கு `டாட்டா’ சொல்லிவிட்டு, மின்சாரத்தை பெருமளவு சேமிக்கவல்ல புதிய LCD (Liquid Crystal Display) டைப் டிவி, மானிட்டருக்கு மாறவும். மேலும் கதிர் வீச்சு தொடர்பான பிரச்னைகளும் இதில் இல்லை. விலை கொஞ்சம் அதிக மானாலும் LED (Light emitting Diode) வகை டிவி, மானிட்டர்கள் LCD மானிட்டர்களைவிட பல மடங்கு குறைந்த மின்சக்தியில் இயங்கவல்லவை. அதேபோல, குண்டு பல்புகளுக்கு பதிலாக சி.எஃப்.எல் பல்புகளைப் பயன் படுத்தலாம்.
11. விளக்குகளைக் குறைக்கலாம்!
சமையலறை, உண வருந்தும் அறை, பாத்ரூம்களில் அதிக வெளிச்சம் தேவைப்பட்டாலும், படுக்கை அறை, பூஜை அறையில் லோ வாட்ஸ் விளக்குகள் போதும். அலங்கார விளக்குகள் பார்வைக்காக மட்டும் இருக்கட்டும், தேவை யில்லாத போது தவிர்க்கவும்.
12. வீடு கட்டும்போதே...

வீடு கட்டும்போதே காற்றோட்டமும் வெளிச் சமும் வரும் வகையில் கதவு, ஜன்னல்களை அமைத்துவிட்டால் மின்சார செலவைப் பாதிக்குப் பாதி குறைக் கலாம். படுக்கை அறையில் லைட், ஃபேன் சுவிட்சுகளை படுக்கைக்கு அருகிலேயே திட்ட மிட்டு அமைத்தால், எழுந்து அணைக்கும் சோம்பேறித்தனத்தால் வீணாகும் மின்சாரம் தவிர்க்கப்படும்.
சு.சூர்யா கோமதி