அவள் 16
Published:Updated:

நமக்குள்ளே!

நமக்குள்ளே!
பிரீமியம் ஸ்டோரி
News
நமக்குள்ளே!

நமக்குள்ளே!

எஸ்.எம்.எஸ். செக் செய்ய, `வாட்ஸ்அப்' பார்க்க, ஃபேஸ்புக் பதிவிட, மின்னஞ்சலைப் படிக்க, கேண்டி கிரஷ் விளையாட, செல்ஃபி எடுக்க, ஸ்கைப்பில் பேச, ட்விட்டரில் செய்திகளைப் பதிய, தேவைப்படுபவர்களுடன் பேச... என்று ஒவ்வொரு அமெரிக்கரும் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 110 முறை செல்போனை பயன்படுத்துகிறார்களாம்.

`நம் ஊர் நிலைமை எப்படி?’என்று ஒரு சர்வே எடுக்கலாம் என்றே தோன்றியது... சமீபத்தில் ஒரு ஹோட்டலில், ஒரு குடும்பம் உணவருந்தியக் காட்சியைப் பார்த்தபோது!

நமக்குள்ளே!

அப்பா, அம்மா, மகன், மகள் என நால்வரின் கையிலும் ஸ்மார்ட்போன்; அனைவரின் கண்களும் போனில்; ஃபேஸ்புக், வாட்ஸ்அப், கிரிக்கெட், யூடியூப் என ஒவ்வொரு திரையிலும் ஒவ்வொன்று; நொடிக்கொரு தரம் நோட்டிஃபிகேஷன் சத்தம்!

விக்கல் வந்தால்கூட செல்போன் திரையைப் பார்த்துக்கொண்டே தண்ணீர் அருந்திக்கொண்டிருந்தான் மகன். தட்டில் அரைகுறையாக கை வைத்தபடி செல்போனே கதி என்று உட்கார்ந்திருந்தாள் மகள். அம்மாவும் அப்பாவும் அவரவர் செல்போன் திரையைப் பார்த்துச் சிரித்துக்கொண்டிருந்தார்கள். எதை ஆர்டர் செய்தோம்... சர்வர் எதைக் கொண்டு வந்து வைத்தார்... எதைச் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறோம்... என்று எதிலும் அவர்களுக்குக் கவனமில்லை.

`சாப்பிடும்போது பேசினா, உடம்பில் ஒட்டாது’ என்று அதட்டி மிரட்டிய பாட்டிகள் நினைவில் வந்து போனார்கள்.

சாப்பிடும்போது கவனம் சிதறக்கூடாது. அப்படி சிதறினால், நாம் உண்ணும் உணவில் வேண்டாத பொருட்கள் ஏதாவது கிடந்தால், அப்படியே உள்ளே போய், உயிருக்கேகூட உலை வைக்கலாம் என்கிற அக்கறைதான் பாட்டிகளின் மிரட்டலாக ஒலித்தது!

இப்போதோ... நோட்டிஃபிகேஷன் ஒலிதான் உணவையே தேவாமிர்தமாக மாற்றி உள்ளுக்குள் தள்ளிக்கொண்டிருக்கிறது. குறைந்தபட்சம், `சாப்பிடும்போது செல்போன் யூஸ் பண்ணாதே!’ என்று பிள்ளைகளுக்கு அறிவுரை சொல்லும் தகுதியைக்கூட இழந்துகொண்டிருக்கிறோம்.

டிஜிட்டல் யுகப்புரட்சி நடந்துகொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில், செல்போன்கள் தவிர்க்க முடியாதவையே. கிட்டத்தட்ட ஒவ்வொரு தனி நபரின் அடையாள எண்ணாகவே மாறிக்கொண்டிருக்கின்றன செல்போன் எண்கள்! மருத்துவமனை, ரயில் டிக்கெட், பேருந்து டிக்கெட், வங்கி பரிவர்த்தனை என்று எங்கே சென்றாலும், பெயர்களைவிட செல்போன் எண்கள்தான் முதல் தேவையாக இருக்கிறது.

அதற்காக செல்போனே முழுத்தேவை என்று மூழ்கிப்போவது எந்த அளவுக்கு சரி?!

உரிமையுடன்,

நமக்குள்ளே!

ஆசிரியர்