
இனி யாராச்சும் லைக் போடுவீங்க?!
‘லைக்காஃபோபியா' (Likeaphobia) பற்றி கேள்விப்பட்டதுண்டா? பத்தில் ஒன்பது பேருக்கு இந்த ஃபோபியா நிச்சயம் இருப்பதாக ஆய்வு முடிவுகள் நெற்றிப்பொட்டில் அறைகின்றன. குறிப்பாக, தி கிரேட் யூத்ஸுக்கு இந்த ஃபோபியா இருக்க வாய்ப்புகள் அமோகம்!

‘பொட்டு வைத்திருக்கிறேன்’ என்பதிலிருந்து ‘புது ஜீன்ஸ் வாங்கியிருக்கிறேன்’ என்பதுவரை எல்லாவற்றையும் ஸ்டேட்டஸாகவும் போட்டோவாகவும் போட்டுவிட்டு, லைக் வந்திருக்கா என நிமிடத்துக்கு ஒருமுறை இருப்புக்கொள்ளாமல் பார்ப்பவர்களே... நீங்கள்தான் இந்த லைக்காஃபோபியாகாரர்கள்.
லைக்குகளை எதிர்பார்ப்பவர்கள் ஒருபுறமிருக்க, ‘பிடிக்குதோ பிடிக்கவில்லையோ... போட்டுவிடுவோம்

ஒரு லைக்’ என்று பெரிய மனதுடன் லைக்குபவர்கள், அந்த லைக்குகளே அவர்கள் ஸ்கேமர்களிடம் (Scammers) மாட்டிக்கொள்வதற்கான வழியாக அமையும் என்பதை அறிவீர்களா?!
யார் அந்த ஸ்கேமர்ஸ்?
இணையவெளியில் மோசமான வணிகத் திட்டங்களை வகுப்பவர்கள், ஸ்கேமர்ஸ்.

அதாவது, சோஷியல் மீடியாவில் மக்களின் தகவல்களைத் திருடுவது, வைரஸ்களைப் பரப்புவது, தவறான அல்லது போலியான தகவல்களைப் பரப்புவது போன்ற வேலைகளைச் செய்பவர்கள். பொதுவாக ஃபேஸ்புக்கில் உலவும் ஸ்கேமர்கள் ஆரம்பத்தில் கவனம் ஈர்க்கும் மற்றும் அதிகம் ஷேர் ஆகும்படியான நல்ல போஸ்ட்களையே பதிவிடுவார்கள். அந்த போஸ்ட்டுக்கு அவர்கள் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும்வரை காத்திருப்பார்கள். பின்னர், அதனுள் தீங்கிழைக்கும் உள்ளடக்கத்தை திணித்து, அதன் மூலம் உங்களைப் பற்றிய விவரங்களை எளிதாகத் திருடிக்கொள்வார்கள்.
உதாரணமாக, ஏதேனும் ஒரு குறிப்பிட்ட பொருள் குறித்த விளம்பரங்களை அங்கு பதிவிட்டு அந்தப் பொருளை வாங்கச்சொல்லி தூண்டலாம், அல்லது பணம் செலுத்தும் வகையிலான ‘பேவால்' (Paywall) போன்றவற்றை உருவாக்கி கிரெடிட் கார்டு தகவல்களை எடுத்துக்கொள்ளலாம். இவர்களின் இலக்கு, உங்களின் ‘லைக்ஸ்’தான்.
இனி கண்ணில் பட்டதையெல்லாம் லைக் செய்வீர்களா டியூட்ஸ்?!
ச.ஆனந்தப்பிரியா