
மீம்ஸ் மயமான உலகத்திலே..!
`மீம்ஸ்’... நெட்டிசன்களின் கலாட்டா ஆயுதம் இது. சொல்ல வந்த விஷயத்தை படங்களுக்குள் பொருத்தி நகைச்சுவையாகயும் சமயங்களில் சீரியஸாகவும் சிந்திக்க வைப்பதாலேயே மீம்ஸ்கள் இணையத்தில்

வைரல்களாகப் பொங்கிப் பெருகுகின்றன. மீம்ஸ்களை கிரியேட் செய்து பரப்பிக்கொண்டிருக்கும் ’மீம்ஸ்’ மன்னர்களும் டாக் ஆஃப் தி சோஷியல் மீடியாவா கொடிகட்டிப் பறக்கிறார்கள். தற்போது பிரபல மீம்ஸ் பக்க லிஸ்ட்டில் இடம்பிடித்திருக்கிறார்கள் சென்னை மீம்ஸ் பக்கத்தின் அட்மின்கள். இந்தப் பக்கம் தற்போது 2 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் அதிகமான ஃபாலோயர்ஸ்களை கொண்டிருப்பதே இந்தத் தளத்துக்கான வெற்றி.

இப்படி நெட் ஹிட் அடித்துக் கொண்டிருக்கும் சென்னை மீம்ஸ் பக்கத்தை கல்லூரி மாணவர்கள் முதல் ஆபீஸ் கோயர்ஸ் வரை கையில் எடுத்து இயக்குகிறார்கள். சரி... யார் இவர்கள் என்று விசாரித்தால், இவர்களின் சொந்தப் பெயர்களை விட இவர்களின் புனைபெயர்கள்தான் பாப்புலராக இருக்கின்றன. ஜோக்கர் - கவுதம், க்ரிம் - பரத், ரிட்லர் - ஸ்ரீகணேஷ், ஓட்டேரி நரி - கார்த்திகேயன், சாண்டர் - ஜெயகாந்தன், அந்நியன் - சஞ்சய் என இந்த கெத்து கூட்டம் ரொம்பப் பெருசு.

``சிரிக்க மட்டும் அல்ல... சிந்திக்கவும் செய்யணும். இதுதான் எங்கள் மோட்டோ’' என ஆரம்பித்த ’ஓட்டேரி நரி’ என்கிற கார்த்திகேயன்... ``சாதாரணமான மீம்ஸ் பேஜ்கள் போல சினிமா பற்றி மட்டும் மீம்ஸ்கள் போடாமல் ரத்ததானத் தேவை குறித்த அப்டேட்ஸ், சமூகத்தில் பார்க்க கூடிய பல பிரச்னைகளைப் பற்றியும் சிந்திக்கும்படி மீம்கள் போடுவதுதான் எங்களின் தனித்துவம். ஆனா, சதாசர்வகாலமும் கருத்து சொல்லிக்கிட்டே இருந்தா, யாரும் எங்க பக்கத்தை எட்டிக்கூட பார்க்க மாட்டாங்க. அதனால எங்க பக்கத்தோட ரீச் குறையாம பாத்துக்கணும். ரத்தம் தேவைனு போஸ்ட் போட்டா, கொஞ்ச நேரத்தில் வேறொரு கான்செப்ட்டில் மீம் போடுவோம். கொடுங்கையூரில் இருக்கும் குப்பைக் கிடங்கை அகற்ற, கூவம் நதியை மீட்டு எடுக்க என சமூகப் பிரச்னைகளை கையில் எடுத்து விழிப்பு உணர்வு செய்வது ஹைலட்டான விஷயம். வெறும் போட்டோ மீம்கள் தாண்டி தற்போது வீடியோ மீம்களிலும் கலக்கத் தொடங்கிவிட்டோம்’’ என்கிறார் உற்சாகமாக.
``பொதுஜனம் டு அரசியல்வாதிகள் வரை எல்லோரையும் கலாய்க்குறப்ப லைட்டா மிரட்டல் இருக்கத்தான் செய்யும். எங்களுக்கு எந்த கட்சி பாகுபாடும் கிடையாது . ‘சும்மா போட்டுத்தாக்கு’தான் எங்க ஸ்டைல்'' என்கிறார் ரிட்லர் என்கிற கணேஷ்.

``எப்பவும் எல்லோருமே மீம்ஸ்கள் ரெடி பண்ணணும்னு அவசியம் இல்ல. அப்பப்ப நடக்கற விஷயங்களைக் கூர்மையா கவனிச்சுட்டே இருந்து உடனுக்குடன் யாராவது ஒருத்தர் போட்டால் போதும். `வெட்டியா நேரத்தை வேஸ்ட் பண்றீங்க’ன்னு சொன்னவங்ககூட இப்ப ஏதோ உருப்படியா பண்றதா நம்புறாங்க.” என்னும் கவுதமை தொடர்ந்து பேசும் ஜெயகாந்தன்,
``ஷார்ட்ஃபிலிம்மாக இருந்தால்கூட நல்லா இருந்தா மட்டுமே எங்கள் சென்னை மீம்ஸ் பக்கத்தில் போடுவோம். அதேபோல, அங்கீகரிக்கப்படாத பலரை எங்கள் பக்கம் மூலம் பலருக்கு கொண்டு சேர்க்கிறோம். சின்ன தள்ளு வண்டியில் விற்கும் உணவுகூட நல்லாயிருந்தா அதனை மீம்ஸாக போடுவோம். இதுதான் எங்கள் எனர்ஜி சீக்ரெட்’’ என்று சொல்ல, அதை ஆமோதிப்பது போல சிரிக்கிறார் சஞ்சய்!

மீம்ஸ்களை உருவாக்குவது குறித்தும் மீம்ஸ் மூலம் எப்படி சமூக விழிப்புணர்வு கொண்டு வருவது என்பது பற்றியும் சமீபத்தில் வொர்க்ஷாப் நடத்தி இருக்கிறார்கள் இந்த வைரல் டீன் டீம்!
வெல்டன் ஃப்ரெண்ட்ஸ்!
ஐ.மா.கிருத்திகா படம்:தே.அசோக்குமார்