
சோகம்
‘நூறாண்டு காலம் வாழ்க... நோய் நோடி இல்லாமல் வளர்க...’ - காலம் கடந்தும் நிற்கும் பாடல் இது. அதைப் பாடியவர், பழம்பெரும் பின்னணிப் பாடகி சரளா. தன் 13 வயதில், எம்.ஆர்.ராதாவின் ‘ரத்தக்கண்ணீ’ர்’, ‘தூக்குமேடை’ நாடகங்களில் பின்னணிப் பாடகியாக தன் இசை வாழ்க்கையைத் துவங்கியவர். அதன் பின், சினிமாவில் பின்னணிப் பாடகியாக வளர்ந்தார். தபேலா இசைக் கலைஞர் ‘அம்பி’ சுவாமிநாதனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இப்போது 76 வயதாகும் சரளா, தன் அடையாளத்தை இழந்து, சென்னை போரூர் அருகே கோவூர் என்ற இடத்தில் ஒரு சின்ன வீட்டில், அன்றாட செலவுக்கே திண்டாடும் வாழ்க்கையில் திணறிக்கொண்டிருக்கிறார்.

“என் பூர்வீகம் சென்னை. அம்மா, அப்பாவுக்கு என்னோட சேர்த்து 10 பிள்ளைங்க. நான் ஒன்பதாவது பிள்ளை. நானும், எனக்கு அடுத்த தங்கச்சியும் மட்டும்தான் இப்போ உயிரோட இருக்கோம். என் கணவர் இறந்ததுக்கு அப்புறம், நான் கச்சேரியில் பாடுறதைக் குறைக்க ஆரம்பிச்சேன். சினிமாவில் பாடும் வாய்ப்புகள் தானே குறைய ஆரம்பிச்சுடுச்சு. அங்க ஆரம்பிச்ச வறுமை இன்னமும் தொடருது.
எனக்கு ரெண்டு பெண் பிள்ளைங்க. அவங்க கல்யாணம் பண்ணிக்காம சந்நியாசி ஆகிட்டாங்க. காரணம், வறுமைதான். என் பொண்ணுங்கதான் என்னைக் கவனிச்சுக்கிறாங்க. கடந்த ரெண்டு வருஷமா அரசு எங்க மூணு பேருக்கு மாசம் தலா ஆயிரம் ரூபாய் தர்றாங்க. வீட்டு வாடகை 1,500 ரூபாய் போக மீதம் இருக்கும் 1,500 ரூபாயை வெச்சு வாழ்க்கையை ஓட்டிட்டு இருக்கோம். எனக்கு ரத்தக்கொதிப்பு இருக்கு. அதுக்கு மாத்திரை வாங்கவே ரொம்ப சிரமமா இருக்கு.

இப்போ நடிகர் விஷால், அவரோட ‘தேவி அறக்கட்டளை’ மூலம் மாதம் 5,000 ரூபாயும், எங்க மூணு பேருக்கான மருத்துவ உதவியும் செய்து தர்றதா சொல்லியிருக்கிறது ரொம்ப ஆறுதலாவும், உதவியாவும் இருக்கு. எனக்கு சுசீலாவோட குரலும், இளையராஜா இசையும் ரொம்பப் பிடிக்கும். ஆனா, இப்போ பாட்டு எல்லாம் எங்க கேட்கிறது? ஆன்மிகப் புத்தகங்கள் கிடைச்சா படிப்பேன்..!’’
- அமுதான அந்தக் குரலை வறுமை பல ஆண்டுகளாகப் பீடித்திருக்கிறது.
கே.அபிநயா படங்கள்:எம்.உசேன்