
ஒவ்வொன்றுக்கும் பரிசு: ரூ 200ஓவியம்:ராமமூர்த்தி
தவிக்கவிட்ட தோழி!

என் தோழி ஒருத்தி அவசரத் தேவைக்கு 20,000 ரூபாய் கேட்டாள். மாதம் 1,000 ரூபாய் கொடுத்துவிடுவதாக சொன்னாள். நானும் மகளிர் மன்றத்தில் இருந்து பணம் எடுத்துக் கொடுத்தேன். ஒரு மாதம் மட்டும் 1,000 ரூபாயும் வட்டியும் கொடுத்தாள். பிறகு ‘என்னால் இப்போது கட்ட முடியாது’ என்று சொல்லிவிட்டாள். மீதமுள்ள 19 மாதத்துக்கான பணத்தை வட்டியுடன் கஷ்டப்பட்டு கட்டி முடித்தேன். தற்போது போன் செய்தாலும் அவள் எடுப்பதில்லை. நேரில் சென்று கேட்டாலும் பலனில்லை.
நம்மால் முடிந்த உதவியை மட்டும் பிறருக்கு செய்ய வேண்டும் என்பதை உணர்ந்துகொண்டேன். இதேபோன்ற சூழ்நிலை வரும்போது நன்றாக யோசித்த பிறகே உதவிக்கரம் நீட்டுங்கள் தோழிகளே..!
- சு.கண்ணகி, மிட்டூர்
அழகு வாங்கப் போனோம்... அதிர்ச்சி வாங்கி வந்தோம்!
என் சகோதரிக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தார்கள். மாப்பிள்ளை வீட்டில் போட்டோ கேட்டால் காட்ட வேண்டுமே என்பதால், போட்டோ எடுத்து அனுப்புவதற்கு முன் அவளை மேக்கப் செய்து போட்டோ எடுத்தால் நன்றாக இருக்கும் என்று பியூட்டி பார்லருக்கு அழைத்துச் சென்றேன். மேக்கப் முடிந்ததும் சகோதரியின் தலையை சீவுவதற்காக அந்த அழகு நிலையத்தில் இருந்த பெண்ணிடம் சீப்பு கேட்டேன். அவளும் எடுத்துக் கொடுத்தாள். அந்த சீப்பை பார்த்ததும் அதிர்ச்சியடைந்தேன்... அதில் அவ்வளவு அழுக்கு!

ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களே வீட்டில் தனித்தனி சோப்பு, டூத்பேஸ்ட், பிரஷ், துண்டு உபயோகிக்க வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரை செய்கின்றனர். பொது இடமான பியூட்டி பார்லரில் சீப்பு இவ்வளவு அசுத்தமாக இருந்தால் எப்படி? பியூட்டி பார்லர் நடத்துபவர்கள் கட்டாயம் தூய்மையைக் கடைப்பிடிக்க வேண்டும்!
- க.கலா, தஞ்சாவூர்
சங்கடம் தவிருங்கள்!
பெரிய பதவியிலிருக்கும் என் தோழியைப் பார்க்க அவள் அலுவலகம் சென்றிருந்தேன். நிமிடத்துக்கு நிமிடம் போன் வந்துகொண்டும், அலுவலகப் பணியாளர்கள் பணி தொடர்பாக குறுக்கிட்டுக்கொண்டும் இருந்தார்கள். எனவே, என்னைக் காத்திருக்கச் சொல்லிவிட்டு, அவளது அலுவல்களைக் கவனிக்க ஆரம்பித்தாள். நீண்ட நேரம் காத்திருந்தது எனக்கும் சிரமமாக இருந்தது; என்னை காத்திருக்க வைத்தது குறித்து அவளும் வருத்தப்பட்டாள்.

பணிபுரியும் தோழிகளையோ, நண்பர்களையோ பார்க்க செல்பவர்கள், அலுவலக நேரம் முடிந்த பிறகு சந்திப்பதுதான் சிறந்தது. இது, அவர்களுக்கும் உங்களுக்கும் சங்கடம் நேர்வதைத் தவிர்க்கும்.
- ஆர்.வனஜா, போளூர்
ஆஹா... இதுவன்றோ ஆலய நிர்வாகம்!
எங்கள் வீட்டுக்கு அருகே பிரசித்தி பெற்ற முருகன் கோயில் உள்ளது. நாள்தோறும் லவுட்ஸ்பீக்கரில் பக்திப் பாடல்கள் ஒலிக்கும். அவற்றைக் கேட்டபடியே வீட்டு வேலைகளைச் செய்வேன். நடுவில் சில வாரங்கள் பாடல்கள் கேட்கவில்லை. இதைப் பற்றி பூசாரியிடம் விசாரித்தபோது, ‘’பத்தாம் வகுப்பு, ப்ளஸ் டூ மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெறுவதையொட்டி, அவர்கள் படிப்புக்கு தடங்கல் ஏற்படாமல் இருக்க, பாடல்கள் போடுவதை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருக்கிறோம். இது கோயில் நிர்வாகத்தினர் உத்தரவு’’ என்றார்.

ஆன்மிகத்துடன், சமூக அக்கறையும் கொண்ட அந்தக் கோயில் நிர்வாகத்தினரை மற்றவர்களும் பின்பற்றலாமே..!
- பி.ரமணி, சேலம்