
ஒவ்வொன்றுக்கும் பரிசு: ரூ 200
ரெக்கார்ட் பண்ணுங்கப்பா..!

ஹாஸ்பிடல் அல்லது கிளினிக்குக்கு செல்லும்போது மருத்துவர்கள் இரண்டு, மூன்று நிமிடங்களே நம்மிடம் பேசுகின்றனர். அதற்குள் நாம் மருத்துவர் சொல்வதை கிரகித்துக்கொள்ள வேண்டும். வயதானவர்கள், ஞாபகசக்தி கொஞ்சம் குறைவாக இருப்பவர்கள்... மருத்துவர் சொல்வதை கவனமாகக் கேட்டு, மிகச்சரியாக நினைவில் வைத்துக்கொள்வது கடினம். மருத்துவர் சொல்வதை உங்கள் கைபேசியில் ரெக்கார்ட் பண்ணிக்கொள்ளுங்கள். வீட்டுக்கு வந்ததும், ஏதாவது சந்தேகம் இருந்தால், அவர் பேசியதை திரும்பவும் கேட்டு தெளிவுபடுத்திக்கொள்ளலாம். அதேபோல, மருத்துவமனைக்கு செல்லும்போது, மருத்துவரிடம் சொல்ல வேண்டிய விஷயங்களை ஒரு பேப்பரில் எழுதி எடுத்துச் சென்று, அங்கு காத்திருக்கும்போது ஒருமுறை படித்துப் பார்ப்பதன் மூலம், எதையும் மறக்காமல் சொல்லிவிடலாம்.
- வி.விஜயராணி, பெரம்பூர்
நிறமா... குணமா?

என் கணவர் சற்று கறுப்பு நிறம். அவர் அந்தக் காலத்திலேயே எம்.ஏ, பி.ஜி.எல் படித்து, மத்திய அரசு பதவி வகித்தவர். வரதட்சணை என்ற வார்த்தையை உச்சரிக்கக்கூட மறுத்தவர். இத்தனையும் என் உறவினர் கண்களுக்குத் தெரியவில்லை. கறுப்புக்கு உதாரணம் என்றால் என் கணவரை எடுத்துக்கொள்வார்கள். காலம் சென்றது; உறவுகளுக்கும் மருமகன்கள் வந்தார்கள். உறவினர் சிலரின் மருமகன்கள் `வரதட்சணை, அது இது’ என்று கேட்கும்போதுதான் என் உறவுகளுக்கு என் கணவரின் அருமை புரிந்தது. என் தந்தையின் பெயரைச் சொல்லி `மருமகன் வாய்த்தால் அவருக்கு வாய்த்த மாப்பிள்ளை போல் இருக்க வேண்டும்’ என்று ஆளாளுக்கு மகுடம் சூட்டினர்.
`நிறமா... குணமா?’ என்ற கேள்விக்கு காலம் பதில் சொல்லிவிட்டது.
- கு.கோப்பெருந்தேவி, சென்னை
சந்தைக்குப் போறீங்களா..

அண்மையில் காய்கறி சந்தைக்குச் சென்றேன். சாயங்கால நேரம்... இருட்டத் தொடங்கிவிட்டது. காய்கறி மற்றும் பல பொருட்கள் வாங்கி வந்து வீட்டில் எடுத்து பார்த்தால் ‘பகீர்’ என்று இருந்தது. காரணம், நான் வாங்கியதில் பாதிக்கு மேல் சொத்தையும், பூச்சியுமாக இருந்தது. இனிமேல் இருட்டும் நேரத்திலேயோ, இரவு நேரத்திலோ சந்தைக்குப் போகக் கூடாது என்ற முடிவுக்கு வந்துவிட்டேன். உங்களை உஷார்படுத்தவே இதைத் தெரிவிக்கிறேன்.
- அ.சந்திரலேகா, மதுரை
எது முக்கியம்..?

சமீபத்தில் ஒரு தோழியின் வீட்டுக்குப் போயிருந்தேன். வேறு சிலரும் அங்கு வந்திருந்தனர். அப்போது என் அருகில் அமர்ந்திருந்த இளம்வயது பெண், ‘`அம்மா... இந்த வீட்டுப் பொண்ணு இந்து லேட்டஸ்ட் ஃபேஷனுக்கு தகுந்த மாதிரி சுடிதார் போடவும், ஹேர் ஸ்டைல் பண்ணிக்கவும் தெரியாம இருந்தாள். எல்லாமே என்னைப் பார்த்துதான் கத்துகிட்டா தெரியுமா?” என்றாள். அதற்கு அவள் அம்மாவோ, ‘`அப்படியா..? நாம் வந்து உட்கார்ந்ததும் ‘வாங்க’னு சொல்லி, ஓடிப் போய், தண்ணி கொண்டு வந்து குடுத்துட்டு, சோபா, டீபாய்ல கிடந்த பொருட்களை எல்லாம் சரிபண்ணி, ‘இருங்க... அம்மாவைக் கூப்பிடுறேன்’னு ஒரு இனிமையான சிரிப்போட உள்ளே போனாளே... அந்த பழக்கத்தையெல்லாம் நீ எப்போ அவகிட்டேயிருந்து கத்துக்கப் போறே?” என்றார். உற்சாகம் குறைந்து, அந்த இளம்பெண் அமைதியாகிவிட்டாள்.
மகள் முகம் வாடக்கூடும் என்றாலும், `எது முக்கியம்’ என்பதை தக்கசமயத்தில் தயங்காமல் எடுத்துரைக்கும் இதுபோன்ற தாய்மார்கள் நம் சமூகத்துக்கு அவசியம் தேவைதானே?!
- ஆர்.பஞ்சவர்ணம், போளூர்